நெகிழியை அறிதல்!

அறியாமை ஒரு வரம் என்பார்கள்.

கசங்காத – சுருங்காகாத, எத்தனை சலவைக்குப் பிறகும் நிறம் மாறாத, அணிவதற்கு மென்மையான, எப்படியான உடலசைவுகளுக்கும் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய – நான் விரும்பி அணியும் ‘டீ ஷர்ட்கள்’ நெகிழியால் ஆனவை என்பது தெரியவந்தபோதுதான் அறியாமை எவ்வளவு பெரிய வரம் என்பதை உணர்ந்தேன்.

நாம் அறிந்தோ அறியாமலோ நம் பிறப்புமுதல் இறப்பு வரை ஏதேனும் ஒருவகையில் நெகிழியால் பொதியப்பட்டிருக்கிறோம். இதை நாம் முழுமையாக உணராததால்தானோ என்னவோ நெகிழிப் பைகளின்மீது நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும் வெறுப்பு, பச்சிளம் குழந்தைக்குப் பால்கொடுக்கும் நெகிழிப் புட்டியின்மீதோ, அல்லது சமையலறையில் பயன்படுத்தும் எண்ணெற்ற நெகிழித் தட்டுமுட்டு சாமான்கள்மீதோ, படுக்கையறையில் நம் தலையணைக்குள் திணிக்கப்பட்டிருக்கும் நெகிழிப் பஞ்சின்மீதோ நமக்கு ஏற்படுவதில்லை. இந்த அறிதலை நாம் ஏற்படுத்திக்கொள்வது மிகுந்த சங்கடத்தை உருவாக்கக்கூடியது.

உங்கள் குழந்தை மார்போடு கட்டி அணைத்துத் தூங்கும் கரடி பொம்மையானது நுண்ணெகிழி இழைகளாலான குறைசுழற்சி செய்யப்பட்ட நெகிழி என்பதை அறியும்போது ஏற்படும் அசவுகரிய உணர்வு உண்மையிலேயே கொடுமையானது. ‘ஒட்டாத’ பூச்சுகொண்ட பாத்திரங்களை உலகுக்குக் கொடையாக அளித்த ‘DuPont’ நிறுவனத்தின் மோசடிகளையும் ‘Teflan’ நெகிழிப் பூச்சின் கடுமையான சூழல் தாக்கங்களையும் அம்பலப்படுத்தும் “The Devil we know” ஆவணப்படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் வீட்டின் ‘நான்ஸ்டிக் தவா’வைப் பார்த்தபோதும் நான் இத்தகைய துயரத்தை உணர்ந்தேன்.

நெகிழி என்ற உற்பத்திப் பொருளின் பின்னிருக்கும் அறிவியலையும் வரலாற்றையும் வணிகத்தையும் தெரிந்துகொள்ளாமல் நம்மால் நெகிழி ஒழிப்பிற்கான நியாயத்தை முழுமையாகப் பெற முடியாது. அதன் அறிவியலானது நெகிழியின் நச்சுத்தன்மை உடலிலும் சூழலிலும் ஏற்படுத்தும் தாக்கத்தை  உணர்த்தக்கூடியது என்றால் அதன் வணிகத்தை அறிவது நமது கோபத்தை சாலையில் நெகிழிப் பையில் பூ விற்கும் பெண்ணிடமிருந்து பெட்ரோகெமிக்கல் ஜாம்பவான்களின் பக்கம் திருப்பக்கூடியது.

முழுவாழ்க்கை சுழற்சியிலும் நெகிழியின் தாக்கங்கள் குறித்த அறிதலின் பயணத்தை நாம் தொடங்க வேண்டிய இடம் பெட்ரோலிய அகழ்வுதான். அடிப்படையில் நெகிழி ஒரு பெட்ரோலிய விளைபொருள்; ‘எப்படி வேண்டுமானாலும் வார்த்தெடுக்கக்கூடிய’ என்ற பொருள் தரக்கூடிய ‘Plastic’ என்ற சொல்லிலிருந்தே அதற்கு ஈடான சொல்லான ‘நெகிழ்’வுத்தன்மையுடைய பொருள் என்ற அர்த்தத்தில் பிளாஸ்டிக் தமிழில் நெகிழியாகிறது.

கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களை முதன்மையாகக் கொண்ட கரிமவேதிப்பொருளான ‘மோனோமர்’ (Monomer) மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று சங்கிலியாகப் பிணைந்து ‘பாலிமர்’ (Polymer) எனப்படும் பெரிய மூலக்கூறுகளைப் பகுதிப் பொருட்களாகக்கொண்ட நெகிழியை உருவாக்குகின்றன. இந்தப் பாலிமர்கள் இயற்கையானதாகவோ (எகா, இயற்கை இரப்பர், பட்டுநூல், டிஎன்ஏ போன்றவை) அல்லது செயற்கையானதாகவோ (எகா, நைலான், ரேயான் போன்றவை) இருக்கலாம்.

நெகிழிப் பாலிமர்களை உருவாக்குவதில் பெட்ரோலியமும் இயற்கை எரிவாயுவும் மிக அடிப்படையான இரு மூலப்பொருட்கள்; இவற்றோடு சிறிய அளவில் நிலக்கரியும் பயன்படுத்தப்படுகின்றது. ஆக, முழுக்க முழுக்க புதைபடிம எரிபொருட்களைக் கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தும் நெகிழி தயாரிக்கப்படுகிறது.

புவியின் ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவானது பல்வேறு வேதிப்பொருட்கள் மற்றும் கசடுகளால் மாசுபட்டதாக இருக்கும். அதனை சுத்திகரிப்பு நிலையங்களில் (Refineries) வடிகட்டி சுத்திகரித்து பின்னர் (மண்ணெண்ணெய், டீசல் போன்ற) பல்வேறு பெட்ரோலியப் பொருட்களாக பிரித்தெடுப்பார்கள். இந்த பிரித்தெடுத்தலிலேயே நெகிழிக்கான அடிப்படைப் பொருளான மோனோமர்கள் பெறப்படுகின்றன.  சுத்திகரிப்பு செயல்முறையானது உலையில் கச்சா எண்ணெயை கொதிக்கச் செய்து ஆவியாக்கி, வடிகட்டி வெவ்வேறு எளிய பெட்ரோலியப் பொருட்களாக அதனைப் பிரித்தலையும் உள்ளடக்கியிருக்கிறது. அடுத்து ‘Cracking’ எனப்படும் செயல் முறையின்மூலம் பெரிய மூலக்கூறுகள் பல்வேறு பயன்பாடுகளுக்குரிய எளிய மோனோமர் மூலக்கூறுகளாக உடைக்கப்படுகின்றன.

மோனோமர்களை மிக அதிக வெப்பம் அல்லது அழுத்தத்துக்கு உட்படுத்தியோ அல்லது வினையூக்கிகளைச் (Catalist) சேர்த்தோ தொடர் சங்கிகிலிகளான சக மோனோமர்களோடு இணைத்துப் பாலிமர்கள் உருவாக்கப்படுகின்றன. இச்செயல்முறை ‘பாலிமரைசேஷன்’ எனப்படுகிறது. பயன்படுத்தப்படும் மோனோமரைப் பொறுத்து பாலித்தீன், பாலிஸ்டிரீன், பாலியெஸ்டர், பாலிவினைல் குளோரைடு, நைலான் போன்ற பல்வேறு வகையானப் பாலிமர்கள் இவ்வாறு  உருவாக்கப்படுகின்றன.

தொடர்ந்து, உருக்கப்பட்ட பாலிமரோடு இயற்கை எரிவாயுவைப் (மீத்தேன்) பயன்படுத்தி வேறுபட்ட நெகிழிப் பாலிமர்களுக்கு அவற்றுக்கே உரிய சிறப்பியல்புகளை உருவாக்கும் வகையிலான வேதிப்பொருட்கள், சேர்க்கப்படுகின்றன. இறுதியாக, மாத்திரை வடிவிலான வெவ்வேறு நிறங்கள் அளவுகள் கொண்ட நெகிழிப் பெல்லட்டுகள் உருவாக்கப்படுகின்றன. கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படுவதைப் போலவே இயற்கை எரிவாயுவை சுத்திகரித்து கிராக்கிங் மற்றும் பாலிமரைசேஷன் செயல்முறைகளுக்கு உட்படுத்தியும் நெகிழி உருவாக்கப்படுகிறது.

அடிப்படையிலேயே கச்சா எண்ணெயிலிருந்து நெகிழி உருவாக்கப்படுவதால் மீண்டும் பாலிமர்களை மோனோமர்களாக உடைத்து கச்சா எண்ணெயைப் பெற முடியும். ஆனால், இவ்வாறு பெறப்படும் எண்ணெய் மிகவும் தரம் குறைந்தது என்பதோடு இதற்கான தொழில்நுட்பம் (பைராலிசிஸ் எனப்படும் வேதி மறுசுழற்சி) அதிகச் செலவுபிடிக்கக்கூடியதும்கூட.

புதைபடிம எரிபொருட்களிலிருந்தே நெகிழி பெறப்படுகிறது என்பதிலிருந்து அது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மட்கிய தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றும் புரிந்துகொள்ளலாம். மாற்றாக, நெகிழியை இன்று வாழும் தாவரங்களிலிருந்தும் உருவாக்க முடியும். தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் மட்டும் ஒரு பொருள் பாதுகாப்பானதாக மாறிவிடாது என்பதை இங்கு நாம் உணர முடியும். மட்கும் நெகிழி எனப்படும் மோசடிக்கான பின்னணியும் இந்த ‘தாவர மூலப்பொருள்’ பின்னணியிலேயே இருக்கிறது.

பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளை விட்டு நெகிழித் தொழிற்சாலைகளை அடையும் பெல்லெட்டுகள் உருக்கி வார்க்கப்பட்டு நம் தேவைக்கேற்ப நெகிழிப் பொருட்களாக உருவாக்கப்படுகின்றன. ஒரு நெகிழிப் பொருளானது எந்தவகையான பாலிமர் ரெசினால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த நெகிழிப் பொருளில் மறுசுழற்சி அம்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் குறிப்பிடுகிறது. இதற்கும் அந்தப் பொருளின் மறுசுழற்சி செய்யத்தக்கத் தன்மைக்கும் தொடர்பில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  (நெகிழி ரெசின்களின் வகைகளும் அவற்றின் பண்புகளை பெட்டிச் செய்தியில் சுருக்கமாகப் பார்க்கலாம்)

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள படிம எரிபொருட்களை நாம் கைவிட்டே ஆகவேண்டிய சூழலில் பெட்ரோலிய நிறுவனங்கள் தமது வணிகத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை நெகிழியை ‘தவிர்க்க இயலாத அத்தியாவசியப் பொருளாக மாற்றி’ திணிப்பதன்மூம சரிகட்டவும் பலமடங்காய் பெருக்கவும் திட்டமிட்டு மிகத்தீவிரமாய் செயல்படுகின்றன.

நெகிழியின் சூழல் தாக்கம் அதன் மூலப்பொருட்களின் அகழ்விலிருந்தே தொடங்கிவிடுகிறது. பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகள் இப்புவியை நீரையும் நிலத்தையும் காற்றையும் இவற்றை வாழ்வாதராமாகக்கொண்ட மனிதர் உட்பட அத்தனை உயிரினங்களையும் எப்படி சீரழிக்கும் என்பதற்கு தமிழ்நாட்டின் வடசென்னைப் பகுதியே சாட்சி.

நெகிழியே தன்னளவில் ஒரு நச்சுப்பொருளாக இருக்கிறது. 2021 இல் கனடா அரசானது நெகிழியைத் தன்னுடைய சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஒரு நச்சுப்பொருளாக வகைப்படுத்தியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.  குளோரின் சேர்க்கப்பட்ட எந்தவொரு பொருளும் எரிக்கப்படும்போது டயாக்சின் (நிரூபிக்கப்பட்ட புற்றுநோய்க் காரணி) வாயு வெளிவரும் என்பது அறிவியல். பிவிசி போன்ற குளோரினை அடிப்படையாகக் கொண்ட நெகிழிப் பொருட்கள் எரிக்கப்படும்போது டயாக்சின்கள் மற்றும் பியூரான்கள்போன்ற நச்சு வாயுக்கள் வெளிவருகின்றன. இதற்காகவே, சமீபத்தில் டெல்லி குப்பை எரிவுலைக்கு பசுமைத்தீர்ப்பாயம் பல இலட்சம் அபராதம் விதித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

‘UNWARPPED’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையானது 12,000 வகையான வேதிப்பொருட்கள் நெகிழி உற்பத்தியில் நெகிழியோடு சேர்க்கப்படுவதாகக் குறிப்பிடுகிறது. மேலும், இவற்றில் பல்வேறு வேதிப்பொருட்கள் குறிப்பிட்ட நெகிழியால் பொதியப்பட்டிருக்கும் உணவுப்பொருளில் கசியக்கூடியவை என்றும் அவை புற்றுநோய், இதயநோய்கள், சர்க்கரைநோய் உள்ளிட்ட பல நோய்களை உருவாக்கவல்லவை என்றும் நூற்றுக்கணக்கான ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.

இங்கே பெரும்பாலான வேதிப்பொருட்கள் இதுவரையிலும் அவற்றின் சூழல் தாக்கம் குறித்து சோதிக்கப்பட்டதே இல்லை என்பதோடு பெரும்பாலான நெகிழிப் பொருட்களில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களை அவற்றின் உற்பத்தியாளர்கள் வெளியிடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெரிந்தே சேர்க்கப்படும் நச்சுப்பொருட்கள் ஒருபுறமிருக்க பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், நச்சுத் தெளிப்பான்கள்,  மருந்துகள் போன்ற பல்வேறு பொருட்களைப் பொட்டலமாக்கப் பயன்படுத்திய நெகிழிப் புட்டிகள், சாக்கடைகள் போன்ற நச்சுச் சூழலிலிருக்கும் நெகிழிக் குப்பைகள் போன்றவை மறுசுழற்சி செய்யப்படும்போது அவற்றிலிருக்கும் பல்வேறுவகையான வேதி எச்சங்கள் நெகிழியிலும் கலக்கின்றன.

மிகவும் பாதுகாப்பானதாகவும் முழுமையாக மறுசுழற்சி செய்யத்தக்கதாகவும் சொல்லப்படும் PET புட்டிகளிலேயே Antimony, Cobalt, Phthalate, Bromine போன்ற நச்சுக்கள் புட்டியிலிருந்து தண்ணீரில் கசிவது கண்டறியப்பட்டிருக்கிறது.

அலானா இன்ஸ்டியூட் வெளியிட்ட ‘Plasticized childhood’ என்ற அறிக்கையானது எப்படி பெருநிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை குறிப்பாக நெகிழி விளையாட்டுப் பொருட்களை விற்பதற்கான  சந்தையைக் குழந்தைகளிடம் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதையும் நெகிழி விளையாட்டுச் சாதனங்களிலிருக்கும் ஆபத்துகளையும் பட்டியலிடுகிறது.

அறிதலே வாழ்தலின் தொடக்கம்!

நெகிழி குறித்த முழுமையான புரிதலே நாம் அதிலிருந்து விடுபடுதலுக்கு நம்மை அழைத்துச் செல்ல உதவும். வெறுமனே அதனை ஒரு கழிவுப் பொருளாக பார்க்கும் மனநிலையானது, அதனை உற்பத்தியில் கட்டுப்படுத்த முயலாத போலித்தீர்வுகளுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டால்தான் பிழைத்திருக்க முடியுமென்ற சூழலில் அதனை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு நச்சு சேர்மானங்களோடு நம்மையும் நம் சூழலையும் தனது வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் உற்பத்திப் பொருளான நெகிழியைக் கைவிடும் நேரம் நெருங்கிவிட்டிருக்கிறது.

  • ஜீயோ டாமின்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments