சூழலியல் அறிவை பறைசாற்றும் சங்க இலக்கியங்கள்

நவீன சமூகம் விலங்கியல், தாவரவியல், பறவையியல், உயிரியல் என பல்துறைகளின் வழியாக கற்றுக் கொள்ளும் பல தகவல்களை போகிற போக்கில் இயல்பாக பதிவு செய்கிறது சங்க இலக்கியம். வலசைபோகும் பறவைகள், இரையை அடித்து புதருக்குள் ஒளித்து வைக்கும் புலி, மரப்பட்டையை உரித்து உண்ணும் யானை என உயிர்கள் பற்றிய பல நுட்பமான செய்திகளை உவமைகளாக பதிவு செய்து விடுகிறது.

ஆந்தைகள் குறித்த பேரறிவு

நற்றிணையில் வரும் ஒரு பாடல், பெண் ஒருத்தியின் காதல் உணர்வை பதிவு செய்யும் பொழுது கூடவே ஆந்தை என்ற பறவை இனத்தை பற்றிய அனைத்து செய்திகளையும் பட்டியலிட்டு விடுகிறது, எலிகளிடம் இருந்து நம் உணவுப் பொருட்களை காப்பாற்றித் தரும் மிகப்பெரும் உதவியை செய்பவை ஆந்தைகள் தான் ஆனால், பொதுவாக ஆந்தைகள் குறித்த அறிவோ விழிப்புணர்வோ நம்மிடையே பரவலாக இல்லை.

சங்கத்தமிழர்கள் அது குறித்த அறிவைக் கொண்டு இருந்துள்ளனர். “எலி வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடிய தன்மையுடையது, ஓர் இணை எலி ஒரு சமயத்தில் 6 முதல் 8 குட்டிகளை ஈனும், அந்த எலிகள் ஒரு ஆண்டின் முடிவில் 880 எலிகளாக பெருகும், இதே வேகத்தில் சென்றால் 5 ஆண்டுகள் முடிவில் பல லட்சம் எலிகளாக பெருகிவிடும்.

இந்த நிலை நீடித்தால் மனித இனம் உற்பத்தி செய்யும் உணவு அனைத்தும் எலிகளுக்கே போதாதது மட்டுமல்ல எலிகளால் உருவாகும் நோய்களும் பெருகிவிடும். ஆனால், இயற்கை அதை அனுமதிப்பதில்லை, எலிகள் எவ்வளவு வேகமாக பெருகுகின்றதோ, அதே அளவு வேகமாக அதை கட்டுப்படுத்துபவை ஆந்தைகள்.

ஆந்தைகளின் பிரதான உணவு எலிகள் என்பதால் எலிகள் பெருகிவிடாமல் இயற்கை சமநிலையை நிலைநிறுத்தும் வேலைகளை அப்பறவைகள் செய்கின்றன எனவே, நம் உண்ணும் உணவிற்கு பின்னால் ஆந்தையின் உழைப்பும் இருக்கிறது” என பறவையியலாளர் சலிம் அலி தனது The book of Indian birds என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய

கடவுள் முதுமரத்து, உடன் உறை பழகிய

தேயா வளைவாய், தெண் கண் , கூர் உகிர்,

வாய்ப்பறை அசா அம் , வலிமுந்து கூகை

மை ஊன்  தெரிந்த நெய் வெண் புழுக்கல்

எலி வான் சூட்டோடு மலிய பேணுதும்

எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசை இத்

துஞ்சாது அலமாரி பொழுதின்

அஞ்சு வராகி கடுங்குரல் பயிற்றாதீமே  ”

நற்றிணைப் பாடலில் தலைவி, ஒரு முதிர்ந்த பெரிய மரத்தின் அருகில் சென்று, அந்த மரத்தில் அமர்ந்து இருக்கும் ஆந்தையை பார்த்து, ஏ ஆந்தையே, வளைந்த அலகும் , கூரிய நகங்களும் உடைய நீ இரவில்தான் விழித்துக் கொண்டிருப்பாய் என எனக்கு தெரியும்; மேலும், மெல்லிய பறை ஒலி எழுப்புவது போல சத்தம் போடுவாய்; ஆனால், இன்றைக்கு இரவு என் காதலன் என்னை சந்திக்க வருகிறான்; நாங்கள் இந்த மரத்தின் அடியில்தான் நின்று பேசுவோம், அப்படி நாங்கள் சந்திக்கும் பொழுது சத்தம் போட்டு எங்களை காட்டிக் கொடுத்து விடாதே.

அப்படி மட்டும் நீ சத்தம் போடாமல் இருந்தால் எலிக்கறியை சமைத்து , வெண் சோற்றில் இட்டு, நெய் ஊற்றி பிசைந்து உனக்கு உண்ண தருகிறேன், எனக் கூறுகிறாள்.

தன் காதலை பற்றி பேசும் இந்த இடத்தில், ஆந்தைகளுக்கு பிடித்த உணவு எலிக்கறி என்பதை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், ஆந்தையின் வாழ்விடம் எது, அதன் உருவ அமைப்பு எப்படி இருக்கும், அது எப்படி குரல் எழுப்பும், என பறவையியலில் ஒரு பறவை குறித்துக் கற்றுக் கொள்ள வேண்டியதாக பட்டியலிடப்படும் கூறுகளை எல்லாம், காதலை சொல்லும் இடத்தில் பதிவு செய்து விடுவதுதான் தமிழர்களின் சிறப்பு.

ஆறுகள் உருவாகும் அறிவியல்

 பனிமலைகள் உள்ள வட இந்தியாவில் பனிமலைகள் உருகி ஆறுகள் உருவாகும், பனிமலைகளே இல்லாத தென்னிந்தியாவில் எப்படி ஆறுகள் உருவாகும் என்ற நவீன சமுகம் எழுப்பும் கேள்விக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதில் எழுதி வைத்தவர்கள் தமிழர்கள்.

” சூருடை நனந்தலைச் சுனை நீர் மல்க

பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப

கல் அழைத்து இழிதரும் கடுவரற் கான்யாற்றுக் …….” என்ற நற்றிணை பாடலில், குறிஞ்சி நிலத்தின் உச்சிப் பகுதிகள் மழை நீரை தேக்கி வைத்துக் கொள்கிறது. பின்னர் அந்த நீர் கசிந்து அங்கு உள்ள சுனைகள் நிறைகின்றன, சுனைகளில் உள்ள நீர் சேர்ந்து அருவியாக வீழ்ந்து, காட்டாறாக பெருக்கெடுத்து ஓடுகின்றன என்று ஆறுகள் உருவாகும் அறிவியலை நுட்பமாக பதிவு செய்துள்ளது.

பழங்காலத் தமிழரின் அறிவு நெறிமை

 இயற்கையை தமிழ் சமூகம் அளவிற்கு புரிந்து கொண்டவர்கள் வேறு எவரும் இல்லை என்கிறார் திணைக் கோட்பாட்டு ஆய்வாளர் பாமயன். உலகில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. சிந்து சமவெளி நாகரிகம், நைல் நாகரிகம், சுமேரிய நாகரிகம்,என்று பண்டை நாகரிகங்களைப் பற்றி பல்வேறு செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன.

இந்த நாகரிகத்தில் மக்கள் கூட்டத்தை இயக்குகின்ற கூறுகளாக இருப்பது சடங்குகளும், பூசனைகளும்தான். உலகின் பல்வேறு நாகரிகங்கள் பூசாரியத்தோடு தோன்றி வளர்ந்து பின்னர் பல்வேறு திரிபுகளை எட்டிய போது, தமிழ் அறிவுலகம் தனக்கென தனியானதொரு பூசாரியம் அல்லாத ஒரு வாழ்வியலைக் கைக்கொண்டிருந்தது.

தமிழ் அறிவு நெறிமையின் தனித் தன்மை என்னெவெனில், அது தன்னை சுற்றியுள்ள இயற்கை சூழலை அச்சத்துடன் பார்க்காமல் , தோழமையுடன் பார்த்தது. அதற்கு எடுத்துக்காட்டுகள் சங்கப்பாடல்கள்தான்.

உலகம் என்பதை யாரோ ஒருவர் படைத்தார் என்றல்லாது ஐம்பூதங்களின் சேர்க்கைதான் உலகம் என்பதை “நிலம்தீ நீர் விளி விசும்பொடைந்தும் கலந்த மயக்கம் உலகம,” என்று கூறியது தொல்காப்பியம். இதை இன்னும் விளக்கமாக “மண் திரிந்த நிலனும்” என்ற புற நானூற்றுப் பாடல் விளக்குகின்றது.

பகுத்துப்பார்ப்பதும் தொகுத்துப்பார்ப்பதும் அறிவியல் உலகம் கண்டறிந்த மிகப்பிரிய ஆய்வலசல் கருவிகள், ஒரு மரத்தை கட்டைத் துண்டாகவும், சில்லித் துணுக்குகளாகவும், பகுத்துக் கொண்டே சென்று கடைசியில் ஒன்றும் இல்லை என்று பொருள் வடிவில் முடிக்கிறது அறிவியல் மனம்.

ஆனால், ஒரு மரத்தைத் தனது உடன் பிறப்பாக, இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் தோழனாகப் போற்றுகிறது தமிழர் திணையியல் மனம். “மரம் சா மருந்துங் கொளார் ” என்பதுதான் தமிழரின் பெருமை என்கிறார் பாமயன். பரிணாம வளர்ச்சியின் பிற்பகுதிகளில் புவியில் தோன்றிய சிற்றினமாகிய மனித இனம், இயற்கையின் மீது வரையறையற்ற ஆதிக்கத்தை செலுத்தியதன் விளைவாக எதிர்வினைகளை சந்திக்கத் தொடங்கியுள்ளது.

மனிதனின் பிரம்மாண்டங்களை எல்லாம் இயற்கை ஒரு நுண் கிருமியை படைத்து கலங்கடித்து விட்டதை பார்த்து அதிர்ந்து கிடக்கிறது மனித இனம். சூழலியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நின்று நவீன சமூகம் கற்றுக் கொள்ள விழையும் பாடத்தை, பல ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை வரியில் ” மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்” என்று எளிமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர் என்கிறார்.

மேலும், vulture என்ற பறவையை நாம் பிணந்திண்ணிக் கழுகு என்று அழைக்கிறோம். ஆனால், சங்க இலக்கியத்தில் இப்பறவைக்கு “எருவை” என்ற அழகிய பெயர் உள்ளது. பொதுவாக கழுகு இனம் வேட்டையாடும் தன்மை உடையது.

ஆனால், இப்பறவைகள் வேட்டையாடுவதில்லை, இறந்து கிடக்கும் உயிரினங்களை, புலி போன்ற விலங்குகள் வேட்டையாடி சாப்பிட்ட பின்பு விட்டுச் செல்லும் எச்சங்களை சாப்பிட்டு அவற்றை மட்கச்செய்பவை, இப்பறவைகள்தான் காட்டின் தூய்மையாளர்கள் என்று அறிவியல் பதிவு செய்கிறது.

இந்த செயலை தமிழர்கள் அறிந்து இருந்தனர் என்பதை இப்பெயரிலேயே புரிந்து கொள்ள முடியும். காட்டில் கிடக்கும் எச்சங்களை உண்டு மட்கவைத்து எருவாக மாற உதவும் பறவை என்பதால் “எருவை” என்ற பெயரிட்டுள்ளனர். இப்படி சங்க இலக்கியத்தில் உள்ள உயிரினங்களின் பெயர்களை etymology அடிப்படையில் ஆய்வு செய்தால் இயற்கை குறித்த தமிழ் அறிவு மரபு நம்மை வியப்புறச் செய்யும்.

[email protected]

  • அகிலா செழியன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments