மிக்ஜாம் புயல் சென்னைக்கு சொல்லிச் சென்றுள்ள பாடம்

“சூப்பர் எல்-நினோ/எல்-நினோ ஆண்டுகள் என்பதால் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்

வங்கக் கடலில் உருவான மிக்ஜாங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்படுத்திவிட்டு ஆந்திராவின் நெல்லூருக்கு அருகே கரையைக் கடந்துள்ளது. இப்புயலால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் பெய்த பெருமழையால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மக்களுக்கு பெரிய அளவில் இடரை ஏற்படுத்தி ஆந்திராவில் கரையை கடந்த புயல், நெல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் இருந்த நெற்பயிர்களை அழித்து உள்ளது.

 மிக்ஜாங் புயலின் தாக்கம்:-

இப்புயலின் தாக்கத்தால் சென்னையின் பல்வேறு இடங்களும் 3 மற்றும் 4 தேதிகளில் 24 மணி நேரத்தில் 30 செ.மீ. மழைப்பொழிவைப் பெற்றன. குறிப்பாக 30 மணி நேரத்தில் மீனம்பாக்கம் 38 செ.,இமீ, நுங்கம்பாக்கம் 36 செ.மீ மழைப்பொழிவைப் பதிவு செய்தது. 3ஆம் தேதி காலை 8.30 மணி தொடங்கி 4ஆம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருங்குடியில் 29 செ.மீ., ஆவடியில் 28 செ.மீ.  மழைப்பொழிவும் 4ஆம் தேதி காலை 8.30 மணி தொடங்கி 5ஆம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பூந்தமல்லியில் 34 செ.மீ., ஆவடியில் 28 செ.மீ. மழைப்பொழிவும் பதிவானது.

 

இந்த மழையும் சென்னையின் மேற்குப் பகுதியில் பெய்து கூவம், அடையாறு வழியாக வந்த மழைநீரும் சேர்ந்து நகரின் தாழ்வான பகுதிகளை வெள்ளக்காடாக்கின. புயலின் தாக்காதால் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக உயர்ந்த கடல், ஆற்றில் வந்த தண்ணீரை வாங்கிக்கொள்ளவில்லை. இதன் விளைவாகத்தான் தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, தரமணி, காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் 2 நாட்களுக்கும் மேலாக நீர் வடியாமல் உள்ளது.

நமக்கு ஆறுதல் அளித்த விஷயம் என்னவென்றால் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும், மீனவ அமைப்புகள், குடிமை சமூக அமைப்புகள், அனைத்து அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் கடந்த 3 நாட்களாக களத்தில் இருந்து செயல்படுவதுதான். கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால் நகரின் பிரதான சாலைகளில் மழைவிட்ட பின்னர் வெள்ளநீர் வடிந்து போக்குவரத்து சீரானது.

ஆனால், வழக்கமாக மழை நீர் தேங்கும் இடங்களை மழை நீர் வடிகால்களால் காப்பாற்ற முடியவில்லை என்பதே உண்மை.   கடந்த 2015 தீவிர மழைப்பொழிவு ஏற்பட்ட ஆண்டில் சூப்பர் எல்நினோ வின் தாக்கம் இருந்தது, அதைப்போலவே இந்த 3 மூன்று ஆண்டுகளும்(2023-2025) எல்-நினோ ஆண்டுகள், இந்த அளவிற்கு பெரிய மழையை நாம் எதிர்பார்த்து, இன்னும் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்திருக்க வேண்டும், அதை எடுக்காமல்  இந்தளவிற்கான மழைக்கு தயாராகாமல் போனதுதான் தற்போது சென்னை சந்தித்துள்ள துயரத்திற்குக்  காரணாமாகியுள்ளது.

2015ல் ஏற்பட்ட அதே பிரச்சனையான தாழ்வான பகுதிகளின் துயரம் இன்றும் தொடர்வது வேதனைக்குரியது. மழை நின்ற பிறகும் தண்ணீர் வடியாமல், மின்சாரம் இல்லாமல், உணவு இல்லாமல் மக்கள் படும் பாடுகள் சொல்லில் வரையறுக்க முடியாது. கடந்த சில மாதங்களாகவே சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால் எவ்வித பாதிப்பு வந்தாலும் சமாளித்து விடலாம் என தொடர்ச்சியாக முதல்வர், அமைச்சர்கள், மேயர் என ஆளுங்கட்சியினர் தெரிவித்த கூற்றைப் பொய்யாக்கியுள்ளது மிக்ஜாங் புயல்.

இன்றைய சென்னை நகரம் என்பது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மீனவ கிராமமாகவும் பல பாக்கங்களாகவும், தாங்கல்களாகவும் இருந்து இன்றைய சென்னை மாநகரமாக மாறியுள்ளது. சென்னையின் வளர்ச்சி தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியது உண்மைதான் என்றாலும், சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை அது ஒரு திட்டமிடப்படாத வளர்ச்சியாகவே இருந்தது. நகரில் இயற்கையாகவே அமைந்திருந்த ஏரிகள், குளங்கள், கால்வாய்களின் அழிப்பே இப்பேரிடர் கால வெள்ளப் பாதிப்பிற்கு காரணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை, நீர்நிலைகளை அழித்து உருவானதுதான் இன்றைய சென்னை.

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை 2015 சென்னை வெள்ளத்திற்குப் பின்பு வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

20 ஆண்டுகளுக்கான CMDAவின் முதல் பெருந்திட்டம்(FMP- First Master Plan) 1976ல் அமலுக்கு வந்தது. வேளாண் நிலம் மற்றும் திறந்தவெளி நிலம் ஆகியன கருதப்பட்ட அளவைவிட குறைந்ததால், நில பயன்பாட்டு மாற்றத்தின் அளவை தக்க வைக்க CMDA தவறியது. 36,510 ஹெக்டேர் குறையும் என கருதப்பட்ட வேளாண் நிலம், 61,120 ஹெக்டேர் குறைந்தது; 2,556, ஹெக்டேர் அதிகரிக்கும் என கருதப்பட்ட திறந்தவெளி நிலம் உள்ளபடியாக 5,176 ஹெக்டேர் குறைந்தது. வேளாண் மற்றும் திறந்தவெளி நிலங்கள், வசிப்பிடம், வணிகம், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை போன்ற பிற பயன்பாடுகளுக்கு மாற்றப்பட்டதால், அவற்றின் பரப்பு குறைந்தது. இவ்வாறாக, FMPஐ மீறியதால், மாநகரின் ஒழுங்குமுறையற்ற வளர்ச்சி ஏற்பட்டு, நெரிசல், சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு மற்றும் வெள்ளம் ஆகிய எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டன.

வேளாண் நிலப்பரப்பு 1973க்கும் 2006க்கும் இடையே 73,689 ஹெக்டேரிலிருந்து 12,569 ஹெக்டேர், அதாவது மொத்த பரப்பில் 60 சதவீதம் என்பதிலிருந்து 10 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்தது. அதே காலகட்டத்தில் திறந்தவெளி 5,742 ஹெக்டேரிலிருந்து 566 ஹெக்டேர், அதாவது மொத்த பரப்பில் ஐந்து சதவீதம் என்பதிலிருந்து 0.5 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்தது. வெள்ளத்தை மட்டுப்படுத்தும் வேளாண்மை மற்றும் திறந்தவெளி வகை பகுதிகள், பெருந்திட்டங்களில் கருதப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் குறைந்தன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

FMP மற்றும் SMP(இரண்டாம் பெருந்திட்டம்) இரண்டும் சேர்ந்து 1976 மற்றும் 2026க்கும் இடையே உள்ள 50 ஆண்டுகளில் கட்டுமான பரப்பில் ஒட்டுமொத்த உயர்வு 330.58 சதுர கிலோமீட்டர் (33,058 ஹெக்டேர்) என்ற அளவிற்கு இருக்கும் என கருதப்பட்டதற்கு எதிராக, 1979 மற்றும் 2016க்கும் இடையே உள்ள 37 ஆண்டுகளில் கட்டுமான பரப்பில் இருந்த, செயற்கைக்கோள் புகைப்படங்களை கொண்டு கணக்கிடப்பட்ட, உள்ளபடியான உயர்வு 450.26 சதுர கிலோமீட்டர் ஆகும். இவ்வாறாக, உண்மையான கள நிலவரத்தை காட்டும் செயற்கைக்கோள் தகவல்கள், CMDA தனது பெருந்திட்டங்களில் கணக்கிட்டு ஒப்புதல் அளித்ததைவிட அதிகமான அளவில் கட்டுமான நடவடிக்கை நடைபெற்றது என்பதை சுட்டிக்காட்டின. இது, பின்வரும் பத்தி 2.1.2ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பெருமளவில் சட்டப்புறம்பான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதை கட்டிக்காட்டுகிறது. இவற்றின் உடனிகழ்வாக, நீர்நிலைகள் இருந்த பரப்பு 1979 மற்றும் 2016க்கும் இடையே உள்ள காலகட்டத்தில் 9.67 சதுர கிலோமீட்டர் குறைந்தது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது சென்னையில் ஒரு ச.கி.மீ. பரப்பில் 28,000 மக்கள் வாழ்கிறோம், திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நியூயார்க் நகரத்தின் ஒரு ச.கி.மீ பரப்பில் வெறும் 11,000 பேர் மட்டுமே வாழ்கிறார்கள்.  2015ஆம் ஆண்டில் பெருமழை மற்றும் அப்போதைய அதிமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட பாதிப்பு நமக்குப் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதில் முக்கியமான பாடம் என்பது காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் நமது நகரத்தைக் கட்டமைக்க வேண்டியது அவசியம் என்கிற பாடம்தான். இதனைக் கருத்தில்கொண்டுதான் பெருமழைக்கான தீர்வுகளை மட்டுமே யோசிக்காமல் தீவிர காலநிலை பேரிடருக்குத் தயாராகும் வகையில் திட்டங்களை உருவாகுமாறு தொடர்ச்சியாக பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்தி வந்தோம்.

100 ஆண்டிற்கு ஒருமுறை வரும் அதிதீவிர பேரிடர்களெல்லாம் இனி ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடும் என காலநிலை மாற்றத்துக்கான நாடுகளுக்கிடையேயான குழுவான ‘IPCC’ எச்சரித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் ‘Climate Studio’ வின் கணிப்புப்படி சென்னையின் வருடாந்திர சராசரி மழைப்பொழிவு 20% அதிகரிக்கும், குறிப்பாக அதிதீவிர மழை நாட்கள் (6.5 cm+) இரண்டு மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டிற்கு ஒரு முறை வரக்கூடிய வெள்ளத்தால்   சென்னையின் 46% பகுதிகள் மூழ்கும் என சென்னை காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பல்வேறு ஆய்வறிக்கைகளும் வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் தீவிரத்தன்மை அதிக்கரிப்பதையும், அரபிக்கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளன. புவி வெப்பமயமாதலால் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வட இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அதிகரிப்பதே இதன் காரணம் என நிறுவப்பட்டுள்ளது.

இப்படிப் பல்வேறு ஆய்வுகளும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் சென்னையில் தீவிரமடையப் போவதை உறுதி செய்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட நகரங்களையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  உள்ளிட்ட மாவட்டங்களையும் புயல்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்ற தகவமைப்புத் திறனை அதிகரிக்க வேண்டும். இப்பகுதிகளின் நிலப் பயன்பாட்டை மறு வரையறை செய்வது மிக மிக அவசியமாகும்.

கடந்த 7-8 ஆண்டுகளில், குறிப்பாக 2015 ம் ஆண்டு தீவிர வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளான தாழ்நிலப் பகுதிகளிலேயே புதியதாக ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன (இவற்றில் பெரும்பாக்கம் அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உட்பட அரசு கட்டுமானங்களும் அடங்கும்) இது எல்லா தரப்பிலுமே பேரிடர்களுக்கு தகவமைவதில் இருக்கும் மெத்தனப்போக்கையும் அலட்சியத்தையுமே நமக்குக் காட்டுகின்றன.

பல்வேறு உலகளாவிய ஆய்வறிக்கைகள் சுட்டுவதுபோன்று இனிவரும் காலங்களில் பேரிடர்களின் தீவிரமும் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்ற சூழலில் தொடர்ச்சியாக பல்வேறு தொழிற் திட்டங்களையும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலே திட்டமிடுவது மேலும் சென்னைக்கான வெள்ள அபாயத்தையே அதிகரிக்கும் என்பதால் பரந்தூர் விமான நிலையம், சென்னையின் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை அரசு நிச்சயமாக மறு ஆய்வு செய்ய வேண்டும். பரந்தூர் விமானநிலைய விரிவாக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டப் பகுதியானது தற்போதைய வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட கால அளவில் நகரையே ஒட்டுமொத்தமாக முடக்கிப்போடும் பேரிடர்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பேரிடரிலிருந்து மீள்வதற்கு அரசின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் பணியாற்றி முடிப்பதற்குள் அடுத்த பேரிடரைச் சந்திக்கும் நிலையிலும், ஒரே சமயத்தில் இருவேறு பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையிலும் நாம் வாழ்ந்து வருகிறோம்.  சென்னையில் 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட பெரிய பேரிடராக மாறியுள்ளது மிக்ஜாங் புயல். புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், ஏகனாபுரம் பகுதிகள் ஓராண்டிற்கு முன்புதான் மண்டோஸ் புயலால் பாதிப்படைந்தன. இப்போது மிக்ஜாங் புயலிலும் அப்பகுதி விளைநிலங்கள் பாதிப்படைந்துள்ளன.

பேரிடர்களில் தீவிரமான மீட்பு நடவடிக்கைகளின்மூலம் மனித உயிர்களைக் காப்பாற்றிவிட முடிந்தாலும்கூட அவற்றின் பொருளாதாரத் தாக்கங்களை எளிதில் கடந்துவிட முடியாது. பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு சூழலில் செய்யக்கூடிய சிறிய சிறிய சமரசங்கள் அதே பொருளாதாரத்திலேயே பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றன என்பதை நாம் பார்த்து வருகிறோம்.  கடந்தகால இயற்கை சீற்றங்களில் உடைமைகளையும் வாழ்வாதாரத்தை இழந்து இன்னும் அவற்றின் துயரிலிருந்து மீளாதவர்களை நாம் அறிவோம். இந்த சூழலில் அரசின் வெளிப்படைத்தன்மையுடைய நடவடிக்கைகள் அத்தியாவசியமானதாக இருக்கின்றன.

சென்னையின் வெள்ள பாதிப்புகளைக் குறைக்க ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளையும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளையும் உடனடியாக தமிழ் நாடு அரசு பொதுவில் வெளியிட்டு மக்களின் கருத்துகளைக் கோர வேண்டும்.

பெரும் எண்ணிக்கையிலான மக்களைப் பாதிக்கும் இந்த விஷயத்தில் மக்களின் கருத்துக்களோடு மீட்புத் திட்டங்களை வடிவமைத்தால் மட்டுமே அது பலனிக்கக் கூடியதாக அமையும். தீவிர காலநிலை பேரிடரான பெருமழையை மழைநீர் வடிகால் திட்டங்களால் மட்டுமே சமாளித்து விடமுடியாது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 12ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாநிலங்களில் சென்னைக்கு 7ஆம் இடம். வெள்ளம் மட்டுமின்றி வறட்சி பாதிப்பையும் எதிர்கொள்ளும் நகரமாக உள்ளது சென்னை. அந்த வகையில் சென்னையின் பாதுகாப்பான எதிர்காலத்தை வடிவமைக்க அனைவரும் சேர்ந்தே திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது.

 சென்னையை ‘காலநிலை மீள்திறன்’ கொண்ட நகரமாக்க என்ன செய்யவேண்டும் ? 

1. சென்னைப் பெருநகரத்தின் விரிவாக்கம் கைவிடப்பட வேண்டும் இரண்டாவது மாஸ்டர் பிளானில் எவையெல்லாம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு செய்யாமல் விடப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யவேண்டும். 

2. சென்னை நகரம், சென்னை பெருநகரப் பகுதி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணத்தின் ஒரு தாலுகா ஆகியவற்றில் உள்ள கோவில் குளங்கள், பாசனக் குளங்கள் உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் குறித்த ஒரு முழுமையான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். அவற்றின் தற்போதைய நிலை, எந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது, எந்த அளவுக்கு சகதியும் மண்ணும் சேர்ந்து தூர்ந்து போயிருக்கிறது என்பதும் கணக்கிடப்பட வேண்டும். மேடு-பள்ளம் குறித்த ஆய்வை நடத்தி, அவற்றை வரைபடமாக்க வேண்டும். இந்தப் பகுதியில் இருக்கும் ஆறுகள், ஓடைகள், வடிகால் அமைப்புகள் ஆகியவை குறித்த வரைபடத்தை உருவாக்க வேண்டும். இந்தப் பகுதியில் இருக்கும் தாழ்வான பகுதிகள், சூழலியல் ரீதியில் முக்கியமான இடங்களை வரைபடமாக்க வேண்டும். பருவமழை மாதங்களில் ஆக்கிரமிப்புகளுடன் – ஆக்கிரமிப்புகள் இல்லாமல் என உபரி நீர் பாய்வது குறித்து செயற்கை ஒத்திகை மேற்கொள்ள வேண்டும். 

3. இந்தப் பிராந்தியத்தில் மக்கள் தொகை அடர்த்தி, பொருளாதார நடவடிக்கை குறித்த வரைபடத்தை உருவாக்க வேண்டும்.  இந்தப் பகுதியில் வெள்ளம், வறட்சி ஆகியவை ஏற்பட்டால் என்ன மாதிரியான தாக்கம் இருக்கும்; அம்மாதிரி பாதிப்பு இல்லா விட்டால் அப்பகுதிகள் எப்படி இருக்கும் என தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளச் சமவெளிகள் நீரியல் ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் மிகவும் எளிதில் பாதிப்படையக்கூடியவை. இப்பகுதியில் மனித ஆக்கிரமிப்புகள் எந்த அளவுக்கு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். எல்லாவிதமான ஆக்கிரமிப்புகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஆனால், அகற்றப்படும் ஏழைகளை (பெரும்பாக்கம் செம்மஞ்சேரி போன்ற தாழ்நிலங்களில் குடியமர்த்தாமல்) அவர்கள் வாழ்விடத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திற்குள் மறுகுடியமர்த்தல் செய்ய வேண்டும்.  

4.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய மாவட்டங்கள் முழுவதையும் சூழலியல் ரீதியாக மிக முக்கியமான, எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியம் என அறிவிக்க வேண்டியது மிக மிக முக்கியம். மாபெரும் நீர்வழிப்பாதையாக இந்தப் பிராந்தியத்தைக் குறிக்க வேண்டும். இங்கிருக்கும் நீர்நிலைகளையும் (சுமார் 4,000) வெள்ளச் சமவெளிகளையும் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து ஆழப்படுத்த வேண்டும், இதுவே கிட்டத்தட்ட 125 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும், சென்னையை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும். 

5. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சில நீர்நிலைகளை முடிந்த அளவிற்கு ஆழப்படுத்தவேண்டும்.  

6. சென்னைக்கு என்று “mesoscale” அளவில் காலநிலை மாதிரிகளை உருவாக்கவேண்டும், இவை சரியாக துல்லியமாக கணிப்பதற்கு காலம் ஆகலாம்,  ஆனால் அதற்கான வடிவமைப்புகளை உருவாக்கவேண்டும். 

7. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள “climate studio” வை மேம்படுத்தி பல வல்லுநர்களை கொண்டு தமிழ்நாட்டிற்கான முழுமையான காலநிலை ஆய்வு நிறுவனம் ஆக்க வேண்டும். 

8. பள்ளிக்கரணையை ஆக்கிரமித்துள்ள  பெரிய கட்டிடங்களை எதையாவது அகற்றினால்தான் தென் சென்னையை காப்பாற்ற முடியுமெனில் அதைச் செய்யவேண்டும். 

9. “நிகழ்நேர வெள்ள” முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்கி மக்களுக்கு அறிவிப்புகளை வெளியிடவேண்டும் . 

10. சென்னையின் முக்கியமான பகுதியில் நிலப்பரப்பிற்கு கீழ் நீர்த்தேக்கங்கள் அமைக்க எதுவாக உள்ள இடங்களை கண்டறிந்து அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். 

11. அனைத்து அதிகாரிகள், சமூக இயக்கங்கள், பொது மக்கள், மாணவர்கள்  என  அனைவருக்கும் பேரிடர் பயிற்சி அளிக்கவேண்டும். 

12. சென்னையை வெள்ளத்தில் இருந்து மீட்க குழு அமைத்தது போல், சென்னையை காலநிலை திறன்மிகு நகரமாக மாற்ற வல்லுநர்களை கொண்டு குழு அமைத்து, அது தரும் யோசனைகளை அமல்படுத்தவேண்டும். 

சென்னை, தாய் தமிழ்நிலத்தின் தலைநகரம், உலகத்தில் உள்ள தமிழர்களின் குவி நகரம், அதனை “காலநிலை திறன் மிக்க நகரமாக” மாற்றுவதுதான் இன்று நம்முன் உள்ள முக்கியமான செயல், அதை எல்லோருமாக இணைந்து மேற்கொள்வோம்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments