நியாயமான கனவு காண்போம் வாருங்கள்!

உலகின் பெரும்பாலான உழைக்கும் வர்க்கத்தினர், நுகர்பொருட்களின் உற்பத்தி மற்றும் அவற்றின் விநியோகம் சார்ந்த தொழில்களிலேயே அதிகம் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த உற்பத்திப் பொருட்களின் பட்டியலில் அத்தியாவசியப் பொருட்களான உணவு, உடை போன்றவை முதலாய் ஆடம்பரப் பொருட்களான சொகுசு வாகனங்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் வரையிலும் அத்தனையும் அடங்கும். இந்த நுகர்பொருட்களின் வரைமுறையற்ற உற்பத்திப் பெருக்கமே ஒருபுறம் சூழல் சீர்கேடுகளின் மூலமாக இருக்கிறது என்றால் இன்னொருபுறம் அதுவே பலரின் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. இந்த நிலையில்தான் இன்றைய சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கான முதன்மைத் தீர்வாக நம் பொருளாதார உற்பத்தியமைப்பை மாற்றியமைப்பது, அதாவது நம்உற்பத்தியை இலாபத்துக்கான உற்பத்தியிலிருந்து தேவைக்கான உற்பத்தியாக மாற்றுவது முன்மொழியப்படுகிறது.

சூழல் நலனைக் கருத்தில்கொண்டு நம் உற்பத்தியமைப்பு மாற்றியமைக்கப்படும்போது அல்லது சுருக்கப்படும்போது அதனால் உருவாகும் வேலையிழப்புகள், பொருளாதார வீழ்ச்சி போன்றவை மேற்கண்ட உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்வது இங்கு அவசியமானதாக இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள, இந்தச் சந்தைப் பொருளாதார உற்பத்தியிலிருந்து நம்மை விடுவிக்கும் அரசியல் மாற்றங்களையும் சேர்த்து நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவேதான் இன்றையத் தேவை,‘அரசியல் – பொருளாதார மாற்றம்’ என்று இரண்டையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம். இந்த மாற்றங்கள் காலங்காலமாக நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் சந்தைப் பொருளாதார விழுமியங்களை உடைத்து நொறுக்குவதையும் சமூகப் பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்துவதையும் கூட உள்ளடக்கியவையே.

பொருளுற்பத்தியைத் தம் கைக்குள் வைத்திருக்கும் சக்திகள், அரசுகளைத் தம் பொருளாதாரக் கைப்பாவைகள் போல ஆட்டுவிக்கின்றன என்பது இங்கொன்றும் இரகசியமில்லை. மேலும், இங்குப் பொருளுற்பத்தியைக் கட்டுப்படுத்துவது அல்லது மாற்றியமைப்பது என்பது நேரடியாகவே சந்தையை இயக்கும் முதலாளித்துவ சக்திகளைக் கட்டுப்படுத்துவதாகவே இருக்கிறது என்பதை உணர முடியும். மக்கள் நலனுக்குமுன் மற்ற ‘தயவு’களைத் துச்சமாகக் கருதும் அரசால் மட்டுமே இது செய்யக்கூடியது என்பதையும் இதற்கு அசாத்திய அரசியல் துணிவு அவசியமென்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். இந்த அரசியல் துணிவை எட்டுவதன் சாத்தியங்களையும் அதற்கான வழிமுறைகளையும் குறித்து சிந்திப்பதைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, ஒருநாள் அத்தகையத் துணிவு எட்டப்பட்டு‘நிகழ வேண்டிய மாற்றங்கள் நிகழும்போதுஇந்த உலகம் எப்படியாக இருக்கும் என்பதை ஒரு கனவுபோல சிந்திப்போமா?

ஆம்! கனவுதான்.

பல வழமையான கனவுகளை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அம்பானிகளின் வரலாற்றுக் காவியமான ‘குரு’ திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் புல்லரிக்கும் உச்சஸ்த்தாயி இசையில் கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் “ஒரே கனா என் கண்ணிலே அதை நெஞ்சில் வைத்திருந்தேன்” என்று விரியுமே ஒரு தொழில் சாம்ராஜ்யத்தின் கனா? நாம் சொல்வது அந்தக் கனவல்ல. ஏவுகணைகளையும் அணுவாயுதங்களையும் தன் கக்கத்தில் மாட்டியபடி சாந்த சொரூபியாய் சிறு குழந்தைகளிடம் கொஞ்சிக் குலாவிய வல்லரசு நாயகர் கண்ட கனவுமல்ல இது. இந்த வழக்கமான கனவுகள் மனிதர்கள் அல்லது தேசங்களின் பொருளாதார உச்சநிலையை நோக்கியே அரசையும் சமூகத்தையும் நகர்த்துகின்றன. இந்த உச்சநிலைகளே ஒட்டுமொத்தப் புவியின் சாபக்கேடு என்ற அளவில் நாம் காணப்போகும் கனவு அத்தகையது அல்ல. உண்மையில் அதற்கு நேர் மாறான கனவு இது.

இது தூரத்திலிருக்கும் வெற்றிக் கனியை எவ்வளவு வேகமாக ஓடிக் கைப்பற்றி – யார் முதலில் சுவைப்பது என்பதற்கான கனவு அல்ல. மாறாக ஒருரோடு ஒருவர் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு,தோளோடு தோள் சாய்த்தபடி அளவளாவிக் கொண்டே, மெல்ல மெல்ல நடைபோட்டு- கிடைக்கும் சிறு கனியைப் பறித்து- அதை எல்லோருக்குமாய் கிடைக்கும்படி எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று சிந்திக்கும் கனவு; செல்லும் வழியில் எதிர்ப்படும் ஒரு சின்னஞ்சிறு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பையும் கூட புறக்கணித்து விடாதபடி பதிவு செய்துகொண்டே நடக்கும் கனவு; தவளைகளின் சத்தத்தையும் எறும்புகளின் ஸ்பரிசத்தையும் கூட உணரக் கோரும் கனவு; முந்தையக் கனவைப்போல இது ஒருவரை மூச்சிரைக்க ஓடச் செய்வதில்லை; முந்தைய கனவின் ஆன்மாவாகத் தனி நபரின் வெற்றி  வேட்கை இருந்தது. இந்தக் கனவின் ஆன்மாவாக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான அன்பே இருக்கிறது. இந்தப் பயணம் மெதுவாய் இருப்பதால் சாகசப் பிரியர்கள் பொதுவாக இதை விரும்புவதில்லை; பெயரளவில் சில தேசங்கள் இக்கனவைத் தாங்கியிருந்தாலும்கூட உண்மையில் எந்த ஜனநாயகம் விளைந்த நிலமும் அந்தக் கனவின் ஆன்மாவைச் சுதந்திரமாய் விடுவிக்கவில்லை.

பழைய கனவில், பந்தையத்தில் ஓடும் ஒவ்வொருவருக்கும் வெற்றி தோல்வி குறித்த பதட்டமும் பயமுமே மேலோங்கி இருக்கும். வெற்றிக்காக எந்த இழி செயலையும்கூட அந்தக் கனவு ராஜதந்திரம்போல் சித்தரித்து முன்னெடுக்கும். ஏனெனில் அது வாழ்வுக்கும் சாவுக்குமானப் போராட்டம். வெற்றிக் கனியைத் தொடாத ஒருவரை, அந்தக் கொடுங்கனவு காறி உமிழ்ந்து தோல்விகரமானவராய் சித்தரித்து ஆட்டத்திலிருந்து வெளியேற்றிவிடும். பிந்தையக் கனவு அப்படியானதல்ல. இந்தப் பயணத்தில் மகிழ்ச்சியும் நிறைவும் மேலோங்கியிருக்கும். அந்தப் பயணம் வழியில் சோர்ந்து போனோரைத் தன் கைகளில் தாங்கிக்கொள்ளும்; முடங்கிக் கிடப்போரை வாரி அரவணைத்துக்கொள்ளும்; முதியவரைக் கொண்டாடும்; இங்கு போட்டிகளற்ற விளையாட்டுகள் இருக்கும்; இந்த எல்லையற்றப் பயணம் எவருக்கும் களைப்பைத் தராது; இந்தப் பயணமானது பின்மாலை நேரத்தில் நம் அன்புக்குரியோருடன் ஒன்றாய்ச் சேர்ந்து சமைத்த உணவை, மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் உண்பதைப் போலவே ரம்மியமானதாய் இருக்கும். இப்படியே வாழ்வு தொடர்ந்துவிடாதா என்று ஒவ்வொவொருவரையும் ஏங்கச் செய்யும்.

நாம் முன்பு கண்ட ‘வல்லரசு’ கனவுகளும் ‘தொழிலதிபர்’ கனவுகளும் தம்மளவிலும் மானுட சமூகத்துக்கும் அழிவையே கொணர்கின்றன. மாறாக, குழந்தை உள்ளத்திலிருந்து பிறக்கும் கனவுகளோ சகமனிதரோடான ஒன்றித் தழைக்கும் மகிழ்ச்சியையும் அதன்மூலமாய்ப் பெறப்படும் நிறைவையும் நோக்கியதாய் இருக்கின்றன. இந்தக் கனவுகளில் மலரும் கனவு தேசம் மனிதர்மீது புறவயமாகத் திணிக்கப்படும் சிந்தனைகளாலும் மதிப்பீடுகளாலும் கட்டப்படுவதல்ல. மாறாக அகத்திலிருந்து தற்சார்பாய் எழும் இயல்பூக்கமிக்க அன்பால் மலர்வது.

நம்கனவு தேசத்தில்,‘மனிதர்கள்’ மனிதராக அன்றி அவர்களின் ஆடை அலங்காரங்களாலோ ஆபரணங்களாலோ வங்கி இருப்புகளாலோ மதிப்பிடப்பட மாட்டார்கள். ஆகையால், அங்கு ஆண்மையை அதிகரிக்கும் வாசனைத் திரவியங்கள் மற்றும் பெண்மையைப் பிரதிபலிக்கும் பொன்னகைகளும் உதட்டுச் சாயங்களும் உற்பத்தி செய்யப்படாது. எல்லோருடைய பசியையும் பூர்த்தி செய்வது அதன் முதன்மை நோக்காக இருப்பதால் சர்க்கரைத் தண்ணீர், உருளைக்கிழங்கு சிப்ஸ்களுக்கான உற்பத்தியும்கூட நடைபெறாது. முழுமையான ஊட்டச்சத்துமிக்க உணவே அங்கு முதன்மையான அத்தியாவசியத் தேவையாகக் கருதப்படுமாதலால் ‘மொறு மொறு’ கோழிக்கறிக் கடைகளோ அல்லது ‘யம்மி – கிரீமி கேக்’ கடைகளோ செயல்படாது. தானியங்களை அதிவுயர் எந்திரச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தி அவற்றை விற்பனைப் பண்டங்களாக்கிப் பின் வாடிக்கையாளரின் புலன்களை ஈர்க்க வேதிச் சாயங்களும் அரோமாக்களும் அங்கு சேர்க்கப்படாது.சொகுசு வாகனங்களோ ஸ்மார்ட் வாட்ச்களோ விற்பனை செய்யப்படாது. மாறாகத் தரமான உணவும் பசுமை எரிபொருளால் இயங்கு வசதியான இலவசப் பொதுப்போக்குவரத்தும் அத்தனை மனிதருக்கும் சாத்தியமாகியிருக்கும்.

நுகர்பொருட்களும் சேவைகளும் அவற்றின் அவசியத்தைப் பொறுத்து அத்தியாவசியமானவை ஆடம்பரமானவை என வகைப்படுத்தப்படும். ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தி முழுமையாக முடிவுக்கு வந்திருக்கும். கைவிடப்படும் தொழிற்சாலைகள் பொதுமக்கள் பயன்பாடுகளுக்கு மடைமாற்றப்படும். தன் சொந்தக் குடிகளை ஒடுக்குவதற்கும் சகமனிதர்களைக் கொல்வதற்குமான ஆயுதங்களின் உற்பத்தி ஒழிக்கப்படும். கொல்லும் கருவிகளிலும் போர்த்தந்திரங்களிலும் தம் மூளையைக் கசக்கி ஆய்வுகளில் ஈடுபடுவோர் கல்வி, மருத்துவம், விவசாயம் போன்றவற்றிற்கான உட்கட்டமைப்புகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள். அனைவருக்கும் சமமான தரமான இலவசமான கல்வி, மருத்துவம் போன்றவற்றை அரசின் வழிகாட்டுதலுடன் சமூகமே முன்னெடுக்கும்.

ஒருபுறம் நாசகாரத் தொழிற்சாலைகளிலிருந்து பெருவாரியான உழைக்கும் வர்க்கத்தினர் விடுவிக்கப்படும்  அதே வேளையில் அனைவருக்கும் வீடு, தூய்மையான பாதுகாக்கப்பட்ட இலவசக் குடிநீர், பொதுப் பூங்காக்கள், பசுமைப் பரப்புகள் போன்றவற்றுக்காக கட்டமைப்புகளை உருவாக்குவதில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அனைத்து நுகர்பொருளின் உற்பத்தியும் சமூகங்களின் உடைமையாய் இருக்கும். தம் பகுதியின் வளங்களை எப்படி எவ்வளவு பயன்படுத்த வேண்டுமென்பதை அந்த நிலத்தின் குடிகளே அரசின் வழிகாட்டு நெறிகளுக்கு உட்பட்டு முடிவு செய்வார்கள். ஒவ்வொரு முடிவுகளையும் எடுப்பதிலும் திட்டமிடுதலிலும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒவ்வொருவரின் ஜனநாயகப் பங்கேற்பும் இருக்கும்.

எவருடைய கஜானவையோ நிறைப்பதற்குப் பதிலாக மனிதர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டும் உழைப்பார்கள். ஆகவே, அவர்கள் ஏராளம் ஓய்வைப் பெறுவார்கள். இங்கு எட்டு மணி நேரம் வேலையென்ற விதி உடைக்கப்பட்டிருக்கும். ஒரு மீனவன் எப்போது தனது கூடை நிறைந்ததும் தன் கலத்தைக் கரைக்குத் திருப்பிவிடுவானோ அதேப்போன்று ஆசைக்கன்றி தேவைக்கு மட்டுமேயான உழைப்பைக் கொடுத்ததும் மனிதர்கள் தங்கள் அன்புக்குரியோருடன் இணைந்து வாழ்வைக் கொண்டாடுவார்கள். அந்தக் கொண்டாட்டங்கள் கையடக்க டிஜிட்டல் திரைகளுக்கு வெளியே நிஜமான வாழ்வைத் தொட்டு உணர்வதாய் இருக்கும்.

எனினும் அது முன்னோரின் தேசமல்ல. அங்கு வாழப்படுவது ‘மரபு’ வாழ்க்கையுமல்ல. அங்கே ரோபோக்கள் இருக்கும்; அவை சீமான்களுக்குப் பண்ணைவேலை செய்வதற்குப் பதிலாக மலக்குழிகளில் இறங்கி அடைப்பெடுக்கும். அங்கே கணிப்பொறிகள் இருக்கும். அவை கடைக்கோடி குடிமகனுக்கும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தப் புள்ளி விபரங்களைப் பரிசீலிக்கும். ஆங்கே இழிவான தொழிலென்று எதுவும் இராது; முதுகொடிக்கும் வேலையென்றும் எவையும் இராது; மலைக்கும் மடுவுக்குமான ஊதிய வேறுபாடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கும்; அங்கே சேரிகள் இராது; கோபுரங்களும் இராது; உற்சாகம் இருக்கும் எனினும் எந்த உற்சாக பானத்தையும் அரசு குப்பியில் அடைத்து விற்காது. தேவைப்படின் மரங்களிலிருந்து அவை நேரடியாய்த் தருவிக்கப்படும்.

அடிப்படைத் தேவைகள் முழுதையும் அரசும் சமூகமும் முழுக்க முழுக்க இலவசமாய் நிறைவேற்றிக் கொடுக்க பணத்துக்கான தேவை வெகுவாய் குறைந்திருக்கும். நுகர்பொருட்களின் உற்பத்தி அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். கழிவுநீக்கம் செய்யப்படாத – சூழலைப் பாதிக்கும் எந்த பொருளும் உற்பத்தி செய்யப்படாது. சில மணி நேர மனிதத்தன்மைமிக்க உழைப்பில் பெறப்படும் நிறைவான ஊதியம் அத்தியாவசிய நுகர்பொருட்களை அனைவரும் பெறப் போதுமானதாய் இருக்கும். வேலையற்றோர்களுக்கும் வேலை செய்ய முடியாதோருக்கும் அரசு உதவித்தொகை வழங்கும்; படிப்பதற்கு படிப்பதற்கான ஆசையைத் தவிர ‘எந்தத் தகுதியும்’ தேவைப்படாது.நஞ்சில்லா உணவும், நிறைவான ஓய்வும், அடிமைத்தனமற்ற வேலைகள் கொடுக்கும் அமைதியும், வாழ்வியல் நோய்களை ஓட ஓட விரட்டும். இவற்றை மீறியெழும் நோய்களை, சிறப்பாய்க் கட்டமைக்கப்பட்ட ‘மரபும் நவீனமும் ஒருங்கிணைந்த’ மருத்துவ உட்கட்டமைப்புப் பார்த்துக்கொள்ளும்.

ஆலை முதலாளிகளுக்கு இனி சலுகைகள் இல்லை; மானியங்கள் இல்லை; கடன் தள்ளுபடிகள் இல்லை; ஆயுத உற்பத்தியும் ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புக்கானத் தேவையும் அவற்றுக்காய் கஜானாவைக் காலியாக்க வேண்டியதும் இல்லை; நம் கனவு தேசத்தில் பிரம்மாண்ட நினைவுச் சின்னங்களோ, கோபுரங்களோ, அலங்கார வளைவுகளோ அமைக்கப்படுவதில்லை. மாறாக, இவற்றுக்கான மொத்த தொகையும் மக்கள் நலனுக்காய் செலவிடப்படும். தேவையற்ற செலவுகளின் தவிர்ப்பு குடிகளை வதைக்கும் வரிகளைக் குறைக்கும்.

இனியும் எவரோ ஒருவரின் நாவை இனிப்பாக்கக் கரும்புகள் தம்மைத்தாமே ஆலையின் பற்சக்கரங்களுக்குள் திணித்துக்கொள்ளாது. ஓ கரும்புத் தோட்டக் காவல்காரர்களே! கரும்புகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவற்றை வெட்டி ஆலையிலேற்றும்படியாய் உங்கள் சட்டங்களையும் தத்துவங்களையும் நீங்கள் கட்டமைத்திருக்கிறீர்கள்; உங்கள் கைகளிலிருக்கும் அரிவாள்களைத் தூக்கியெறியுங்கள்; இல்லையெனில் விரைவில் கரும்புகளால் தூக்கியெறியப்படுவீர்கள். ஓ ஆலை முதலாளிகளே! உங்கள் சர்க்கரை ஆலைகளை இழுத்து மூடுங்கள். உங்கள் களஞ்சியம் பொங்கி வழிந்தால் தங்கள் வாழ்வும் இனிக்குமென்று இங்கு இனியும் ஒரு புல்லும்கூட நம்பாது. மாறாக நீங்கள் இதுகாறும் சுரண்டி நிறைத்த உங்கள் களஞ்சியங்களைப் கைப்பற்றிப் தமக்குள் பகிர்ந்துகொண்டு அவை தம் வாழ்வைத் தாமே இனிப்பாக்கிக் கொள்ளும். கரும்புகளின் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் குறித்து நீங்கள் எவரும் இனியும் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம். இத்தனை நூற்றாண்டுகளாய் ஆலைகளில் பிழியப்பட்ட அவை இனியேனும் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும். கரும்புகள் வாழ்வதற்குத் தேவையானதெல்லாம் நல்விளைச்சலுக்காய் வானில் ஒரு சூரியனும்,மழையும், மண்ணும் மட்டும்தான். நீங்கள் ஒதுங்கிக்கொண்டால் அவை தாமே பிழைத்துக்கொள்ளும்.

வாருங்கள் கனவு காண்போம்; நம் கனவுகள் இனியும் மற்றவரை ஒதுக்கி உதைத்து முன்னேறும் ஓட்டப் பந்தையமாய் இருக்க வேண்டாம்; ஓட்டப் பந்தையங்கள் ஒருவருக்கு மட்டுமே வெற்றியைக் கொடுக்கும்; நம் கனவுகள் கூட்டமான நடைப் பயிற்சியாய் இருக்கட்டும்; அதுவே நியாயமும் நேர்மையும் நிரம்பியதாகவும் அனைவருக்குமான நலனை உறுதி செய்வதாகவும் இதுவரை காணப்பட்டக் கனவுகளையும் அவை செய்த நாசங்களையும் சரிசெய்வதாகவும் இருக்கும்.

  • ஜீயோ டாமின்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments