விறைப்பான எந்திரங்களுக்கு உயிர்கொடுப்போம்

என் வீட்டின் அருகில் இருசக்கர வாகன ‘மெக்கானிக்’ ஒருவர் பழுதுபார்ப்பு நிலையம் ஒன்று நடத்தி வருகிறார். என்னுடைய இருசக்கர வாகனத்தை அவரிடம் சிறிய பழுதுகளுக்காக விடுவதுண்டு. ஆள் திறமையானவர்தான். வயது 30-35 இருக்கலாம். மிகச்சிறிய கடை; பெரும்பாலான வேலைகள் தெருவிலேயேதான் நடக்கும். அவருடைய வேலை நேர்த்தியில் எப்போதும் எனக்கு எந்தப் புகாரும் இருந்ததில்லை. என்றாலும், அவரிடம் வண்டியைக் கொடுப்பதில் எனக்கு ஒரு ஒவ்வாமை இருந்தது.

பெருநிறுவனங்களின் பழுதுபார்ப்பு நிலையங்கள் எல்லாம் காலை 7 மணிக்கோ அதற்கு முன்போகூட சேவைக்காக வண்டிகளைப் பெறத்தொடங்கிவிடும் நிலையில், இவரோ 9:00 மணிக்கு மேலேதான் வருவார். அடுத்து மாலை இவர் எப்போது கடையைச் சாத்துவார் என்பது எவருக்கும் தெரியாது. பெரும்பாலான பகல் நேரங்களில் இவரைக் கடையில் பார்க்க முடியாது. அப்படியே இருந்தாலும் இவருடைய நண்பர்கள் புடைசூழ அரட்டையடித்தபடியே வேலை செய்துகொண்டிருப்பார். இவர் கடையில் இல்லையென்றால் அருகேயிருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்று தாராளமாய் அடித்துச் சொல்லலாம்.

மிகக்கறாரான நேரமேலாண்மையோடு ஒரு நாளைக்குப் பத்து மணிநேரங்களுக்குமேல் கடுமையாக வேலை செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்த எனக்கு, அந்த நபர்மீது கடும் வெறுப்பும் எரிச்சலுமே மேலோங்கி இருந்தது. வேலையில் பொறுப்பற்றவராயும் விளையாட்டிலும் கேளிக்கையிலும் ஆர்வமிக்கவராயும் நண்பர்களோடு எந்நேரமும் அரட்டையடிப்பவருமாகவே அவர் குறித்த சித்திரம் என்னுள் பதிவாகியிருந்தது. ஆனால், இத்தகைய உணர்வு எனக்குள் நீண்டநாள் நீடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு உத்வேகமும் பணமும் அள்ளித்தந்த வேலையானது வெறுமையையும் சோர்வையுமே பரிசளித்தபோது எனக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்தன.

அந்த நாட்களில், உழைப்புமீதும் வேலைகள் குறித்துமான என்னுடய நம்பிக்கைகளில் பெரிய உடைப்பை ஏற்படுத்தியது ‘உழைப்பை ஒழித்தல்’ என்ற சிறிய புத்தகம்தான். மார்க்சின் காலகட்டத்தில் எழுதப்பட்ட ‘உழைப்பை ஒழித்தல்’ (Abolition of work), ‘சோம்பியிருப்பதற்கான உரிமை’ (Right to be lazy) மற்றும் மார்க்சின் ‘அந்நியமாக்கப்பட்ட உழைப்பு’ என்ற மூன்று முக்கியமான கட்டுரைகள் அந்த சிறிய புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. எனக்குள் எழுந்திருந்த கேள்விகளும், எனது வாசிப்பும் எந்திரத்தனமான உழைப்பின்மீதான என்னுடைய பார்வையை வெகுவாய் பின்னாட்களில் மாற்றத் தொடங்கியிருந்தன.

இப்போது நான் அந்த மெக்கானிக்கை மானசீகமாய் இரசிக்கத் தொடங்கியிருந்தேன். ஒரு நாள் காலையில், ஐந்து வயது மதிக்கத்தக்கத் தன் பெண் குழந்தையை பள்ளியில் விடுவதற்காய் அவர் கையைப்பிடித்து அளவளாவியபடியே அழைத்துச் சென்றதைப் பார்த்தபோது என்னுள்ளிருந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்து ஜில்லென்ற உணர்வு ஏற்பட்டது. கடையில் வேலை நேரத்தில் சத்தமாய் சிரித்துப்பேசி அரட்டையடிக்கும் அவருடைய நண்பர்களும்கூட அவருக்கு ஒத்தாசையாய் வேலை செய்வதைப் பார்க்கும்போது என்னுடைய இறுக்கம் மேலும் தளர்ந்தது.

ஒருமுறை என்னுடைய வண்டியை கடையில் விட்டுவிட்டு மாலையில் திரும்ப எடுக்கச் சென்றபோது அவர் கடையில் இல்லை; தொலைபேசியில் திரும்பத்திரும்பத் தொடர்பு கொண்டாலும் அழைப்பை எடுக்கவில்லை. “என்னடா மனுசன் இவன்” என்று கடும் எரிச்சல் மேலிட தூரத்தில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த என் வண்டியை நெருங்கியபோது வண்டியின் ‘பெட்ரோல் டேங்கு’க்கு மேலேயே சர்வீசுக்கான பில்லும் சாவியும் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். ‘Gpay’ இல் அந்தத் தொகையைச் செலுத்தி வண்டியை எடுத்துவிட்டு அந்த மைதானத்தின் வழியாகக் கடந்து சென்றபோது தன் நண்பர்கள் புடைசூழ – உற்சாக வெள்ளத்தில் – கிரிக்கெட் பேட்டை பிடித்து பேட்டிங் செய்துகொண்டிருந்தார் அவர். இப்போதுவரையிலும் எந்த காரணமுமின்றி கிரிக்கெட் விளையாட்டின்மீது எனக்குக் கடும் வெறுப்பு இருந்தாலும்கூட அந்த நொடியில் என் மனதுக்குள் இனம்புரியாத ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் என் கண்கள் ஈரமாகின.

என்ன அழகான வாழ்க்கை இல்லையா இது? இப்படி அழகாய் வாழ்வதற்குத்தானே நாம் ஒவ்வொருவரும் நாயாய் பேயாய் உழைத்துக் கொட்டுகிறோம்? என்னுடைய அசுரத்தனமான வேலைகள் எனக்குக் கொடுத்த அழுத்தங்களைப்போலவே அந்த மெக்கானிக்கும் வேலைகளிலேயே செத்தொழிய வேண்டுமென்பது நான் எதிர்பார்த்தது எத்தனைபெரிய அநீதி?

தனக்குப் பிடித்த ஒரு விளையாட்டை விளையாட முடியாத ஒரு வேலை – தனது பிள்ளையை பள்ளிக்குக் கொண்டுவிட தன்னை அனுமதிக்காத வேலை – தன் நண்பர்களுடன் உறவாடுதலை ஒருவருக்குத் தடை செய்யும் வேலை – எத்தனை அதிகாரமும் பணமும் புகழும் கொடுப்பதானாலும் நரகம்தானே? 12 மணிநேரம் ஸ்பேனரும் கையுமாக கிரீஸ் தோய்ந்த அழுக்கு உடையுடன் ஒருவன் கடைத்தெருவில் உழலவேண்டுமென எப்படி நான் எதிர்பார்க்க முடியும்? அது எவ்வளவு பெரிய வன்முறை?

இங்கே எனக்கு மிகவும் ஆர்வமூட்டிய விஷயம் என்னவென்றால், என்னைப்போன்ற கல்வியோ, வாசிப்போ இல்லையென்றாலும்கூட அவற்றின் தேவையின்றியே, ‘வாழ்க்கை என்பது வேலை அல்ல’ என்பதை அந்த மெக்கானிக் உணர்ந்து வைத்திந்திருக்கிறார். மட்டுமின்றி இங்கு எனக்கு மானசீக ஆசானாகவுமே மாறியிருக்கிறார். இத்தகைய மோசமான  வேலைக்காரர்களை பெருநிறுவனங்களிலும்கூட நாம் பார்க்க முடியும். “உலகமே அழிஞ்சாலும் அவன் திரும்பிப்பாக்காம டான்ணு ஆறு மணிக்குலாம் பையத் தூக்கிட்டு நடையக் கட்டிடுவான்” என்று வசைபாடப்படும் சக ஊழியர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். தன் அத்தியாவசியத் தேவைகளைவிட அதிகமாய் இம்மியளவும் உழைக்காத சுயதொழில் முனைவோரைப் பார்த்திருப்போம். “அவன் கடையில எத்தனை அண்டா பிரியாணி போட்டாலும் விக்கும்; ஆனா, எத்தன பேரு வரிசையில நின்னாலும் ஒத்த அரிசிகூட கூடுதலா ஆக்க மாட்டான்” என்று சொல்லப்படும் ஒரு பிரபல பிரியாணிக் கடைக்காரரை நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் இப்படியாகக் கறாராக வாழும் பலரைப் பார்த்திருப்பீர்கள்.

“எப்படி சொகமா வாழுறான்பாரு?”, “சோம்பேறி நாயி”, “பொழைக்கத் தெரியாதவன்” இப்படியான எள்ளல்களுக்கும் வசைகளுக்கும் நடுவே இவர்கள் தங்கள் வாழ்வானது வேலைகளில் கரைந்துபோகக்கூடாது என்பதையும் வாழ்வதற்குத்தான் வேலையேதவிர வேலைக்காக வாழவில்லை என்பதையும் புரிந்து வைத்திருக்கின்றனர்.

 

 

கெடுவாய்ப்பாக, இத்தகைய வாய்ப்புகள் வேகவேகமாய் ஒழிந்து வருகின்றன. சந்தைப் பொருளாதாரத்தின்கீழான உலகம் இப்படியான மனிதர்களை வரலாற்றில் சுவடேயின்றி துடைத்து அழித்துவிடக்கூடியது. எந்திரமயமான உற்பத்திக்கு எந்திரமயமான மனிதர்கள் மட்டுமே தேவை. ஓய்வின்றி, எந்த எதிர்ப்போ கேள்விகளோயின்றி உழைக்கும் மனிதர்கள் அதற்குத் தேவைப்படுகிறார்கள். இத்தகைய எந்திரத்தனமான வேலைக்காரர்கள் சந்தையில் அணிவகுத்துத் தயாராகவும் இருக்கின்றார்கள்.

இவர்கள், பகல் முழுதும் ஒரு கடையில் வேலை பார்ப்பார்கள் – மாலை முதல் நடுநிசிவரையிலும் ‘ராப்பிடோ பைக் டாக்சி’ ஓட்டுவார்கள்; பகலில் தொழிற்சாலையில் வேலை பார்ப்பார்கள் – மாலையில் கொரியர் டெலிவரி செய்வார்கள்; பகலில் அலுவலகத்தில் வேலை செய்வார்கள் – மாலையில் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பார்கள்; பகலில் ஒரு அலுவலகத்தில் எடுபிடி வேலை செய்வார்கள் – இரவில் அதே அலுவலகத்துக்கு காவலாளி ஆகிவிடுவார்கள். பகுதிநேர வேலை; வீட்டிலிருந்தபடியே மாதம் 8000 சம்பாதிக்கலாமென்ற பிட் நோட்டீஸ்களுக்குப் பின்னே அலையும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

இந்தப் பின்னணியில், மக்கள் வேலை செய்யவும் உழைக்கவும் பொருளீட்டவும் எப்போதும் தயாராயிருக்கிறார்கள் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. உண்மையில் இங்கு வாழ்க்கை நரகமாய் மாறியிருக்கிறது என்பதே இதன் பொருள்! உழைப்புச் சந்தையில் எப்போது வேண்டுமானாலும் எத்தனை மணிநேரமானாலும் உழைத்துக்கொட்ட ஒருவன் தயாராக இருக்கிறானென்றால் அவனுடைய வேலைக்கு சரியான ஊதியம் தரப்படவில்லையென்பதே பொருள்; அவன் சுரண்டப்படுகிறான் என்பது பொருள். அவன் தன் அத்தியாவசியத் தேவைகளுக்காக தன் ஒரே வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் பணயம் வைத்திருக்கிறான் என்பது பொருள்.

உண்மையில், ஒரு ‘ஓலா‘ ஆட்டோக்காரரை நீங்கள் எந்த நடுச் சாமத்திலும் அழைத்துவிட முடியுமென்பதன் பொருள் அவர் குடும்பம் பசியோடு இருக்கிறது என்பதே. ‘ஓலா’, ‘ஊபர்’ காலத்துக்கு முன்பு டாக்சிகளும் ஆட்டோக்களும் இன்றுபோல மலிவானதாய் இல்லை. இதன் பொருள் அந்த வேலைகள் அப்போது அத்தனை மலிவானதாய் இல்லை. அந்த வேலைக்காரர்கள் சுபிட்சமாய் வாழவில்லையென்றாலும் வாழ்க்கை இத்தனை மோசமானதாய் இல்லை. எப்போது சுயதொழிலான ஆட்டோ ஓட்டுதல், பெருநிறுவனத்தின்கீழான அடிமை வேலையாய் மாறிப்போனதோ அப்போதே தொழிலாளியின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் வியர்வையிலும் குறிப்பிட்ட சதவீதம் நிறுவனத்துக்கான இலாபமாக பங்குபோடப்படுகிறது. டாக்சிகளும் ஆட்டோக்களும் மலிவானதாய் மாறிவருவதாய் குதூகலிக்கும் நுகர்வோராகிய நாமும் இந்தச் சுரண்டலின் பங்குதாரர்களாகவே இருக்கிறோம்.

 

 

எப்போது இந்தப் பெருநிறுவனங்கள் தம் நயவஞ்சக வலையை நுகர்வோரின்மீதும் தற்சார்பானத் தொழில்புரிந்தோரின்மீதும் வீசித் தம்வயப்படுத்திக்கொண்டனவோ அதன்பிறகு அதிலிருந்து மீள்தல் இல்லை. இப்போது ஓலாவையோ ஊபரையோ புறக்கணித்து ஒரு ஓட்டுநர் சுயதொழில் செய்ய முயல்வது தர்கொலைக்குச் சமம். இந்தத் தற்கொலைச் சூழல் எங்கும் பரவிடும்போது பெருநிறுவனங்களில் கைகளில் முழுக் கட்டுப்பாடும் வந்திருக்கும். அவை வசூலிக்கும் கட்டணம்கூட பகற் கொள்ளையாகிவிட்டிருக்கும். அப்போது நாம் விழித்துக்கொள்வதால் எந்த பலனுமிருக்காது.

இவ்வுலகும் அதன் தொழிலாளர் கூட்டமும் பெருநிறுவனங்களின் எந்திரங்களாய் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த பைக் மெக்கானிக்கும்கூட இன்னும் நீண்ட நாள் இப்படியே அழகாய் வாழ்ந்திவிட முடியாது என்பதை நான் முற்றிலும் உணர்ந்திருக்கிறேன். பெருமுதலீடுகளில் மிகக்கவர்ச்சிகரமான விளம்பரங்களோடும் தள்ளுபடி சலுகைகளோடும் தொடங்கப்படும்  நவீன பழுதுபார்ப்பு நிலையங்களுக்குமுன்பு இவன் தொழில் விரைவில் முற்று பெற்றுவிடும். அது முடிந்துவிடும்போது அப்படியான ஒரு நவீன பழுதுபார்ப்பு நிலையத்தில் ஸ்பேனருடன் 12 மணிநேர எழுதப்படாத சட்டத்தின்கீழ் அவன் வேலை செய்துகொண்டிருப்பான். அவனுக்குக் குழி பறிக்கவும், அவன் செய்யாத தவறுக்கு அவனைப் பலியாக்கவும் அங்கே அவனது சக ஊழியர்களே காத்துக்கொண்டிருப்பார்கள். அப்பெருநிறுவனம் பிற நிறுவனங்களுக்கு மட்டுமின்றி தன் ஊழியர்களையே ஒருவருக்கொருவர் போட்டியாளராய் நிறுத்தும். போட்டியும் ஓயாத ஓட்டமுமே வாழ்வின் நோக்கமென்று கற்பிக்கும். விரைவில் இவன் விறைப்பான எந்திரமாகிவிடுவான்.

தொழிலாளர்கள் ஓரணியில் ஒன்றுபட்டு, தம்மை ஒடுக்கும் சந்தைப் பொருளாதார அமைப்பை எதிர்கொள்வார்கள் என்ற மாபெரும் வரலாற்றுக் கனவு கானல் நீராகிவருகிறது பாட்டாளிவர்க்கம் தமக்குள்ளேயே அடித்துக்கொள்ள வெகுசாமர்த்தியமாய் இங்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள், தம்மைப்போலவே சுரண்டப்படும் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக செய்துவரும் கிளர்ச்சியை இதற்கு உதாரணமாகக்கொள்ள முடியும். அலுவலகங்களிலோ அல்லது தொழிற்சாலைகளிலோகூட ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளிக்குப் போட்டியாகவே நிறுத்தப்படுகிறான்.

மனிதர்கள் கொத்தடிமைகளாகவும் எந்திரங்களாகவும் மாறிவிடும்போது தம் வேலைகளிலிருந்து அந்நியமாகிவிடுகிறார்கள். அவர்கள் புன்முறுவல் பூப்பதில்லை; ஒருவேளை ஒரு நவீன உணவகத்தின் வரவேற்பாளர் உங்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தால் அது நீங்கள் கொடுக்கவிருக்கும் ‘Star Rating’ க்குகாக அன்றி அவர் உள்ளத்திலிருந்து எழுந்ததாயிருக்கும் வாய்ப்பு மிகக்குறைவே. தியாகராயநகர் கடைவீதிகளின் சித்திரவதை முகாம்கள்போன்ற கடைகளில் ரோபோக்கள்போல எந்த உணர்ச்சியுமின்றி – சிலநேரங்களில் காதுகேளாதோர்போல வினையாற்றும் வேலையாட்களை நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள்.

போட்டியும், பொறாமையும், வஞ்சகமும், சூழ்ச்சியும், ஏமாற்றுதலும் வேலைகளுக்கான நியதிகளாய் இன்று மாற்றப்பட்டிருக்கின்றன. என்னதான் ‘அறம்’ பேசினாலும்கூட ‘போட்டி’ என்பதே உண்மையில் தன் போட்டி நிறுவனத்தை அதன் ஊழியர்களோடு ஒழித்துக்கட்டுவதாகவே இங்கு இருக்கிறது. இதற்காகவே ஊழியர்கள் உழைக்க வைக்கப்படுகிறார்கள்; போட்டிக்காகவே நாம் பொருளுற்பத்தியைப் பெருக்குகிறோம்; இந்த அமைப்பு அந்த போட்டிக்காகவே பெருநுகர்வுக்குத் தீனிபோடுகிறது; நாமோ உற்பத்தி செய்தவற்றை நுகர்வதற்காய் மேலும் அதிகப் பொருளீட்ட இன்னும் வேகவேகமாய் உழைக்கிறோம்.

இன்னொரு புறமோ நம் ஒவ்வொரு துளி வியர்வையும் நம்மீதான சுரண்டலாக மட்டுமின்றி, இயற்கை வளங்களின்மீதான சுரண்டலாகவும், கார்பன் உமிழ்வாகவும் வெளிப்படுகிறது. உலகெங்கும் சூழல் நெருக்கடிகளுக்கான ஒரே தீர்வாய் இன்று ‘மட்டுறு வளர்ச்சி’யானது (Degrowth) பேசப்படும் நிலையில் நம் உழைத்துக் கொட்டும் வேலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெருநிறுவனங்களின் இலாபத்தைப் பெருக்க நாள் முழுதும் உற்பத்தி செய்து குவிப்பதை நிறுத்தி, தேவைக்கு மட்டுமேயான உழைப்பை நோக்கியும் உற்பத்தி செய்தவற்றை சமத்துவமாய் பங்கீடு செய்வதை நோக்கியும் நாம் நகர வேண்டியிருக்கிறது.

நம் உழைப்பின் வேகத்தையும் நேரத்தையும் சமூக நீதியின்பாலும் மனிதரின் வாழ்வுமீதான அக்கறையைத் தாண்டி சூழல் நெருக்கடிகளின் தீர்வுகளையுமே கருத்தில்கொண்டு கணிசமாய் குறைக்க வேண்டியிருக்கிறது. இது உற்பத்தித் துறைக்கு மட்டுமல்ல; பெரும்பாலான சேவைத் துறைகளும்கூட உற்பத்தித் துறைக்கே சேவகம் செய்வதாயிருக்கையில் சேவைத்துறையுமே தன் வேகத்தை வெகுவாய் மட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது. நம் ஓய்வு நேரத்தைப் பெருக்க வேண்டியிருக்கிறது. 16 மணிநேர வேலை எழுதப்படாத விதியாக இருந்த நாட்களில் 8 மணி நேர வேலை புரட்சிகரமாகப் பார்க்கப்பட்டது. இனி நாம் இன்னுமொரு புரட்சியாக 8 மணி நேரவேலையிலிருந்து புரட்சிகரமான 4 மணிநேர வேலை இலக்கை நோக்கி நகரவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். (இதன் பொருளாதாரத் தாக்கங்களை எதிர்கொள்வது குறித்து விவரிக்க இக்கட்டுரையில் இடமில்லாததால் தவிர்க்கிறேன். கூடுதலாய், வாசிக்க விரும்புபவர்கள் என்னுடைய “வளங்குன்றா வளர்ச்சியல்ல; தேவை, மட்டுறு வளர்ச்சி” புத்தகத்தை வாசிக்கலாம்.)

 

மனிதன் விலங்குகளைப்போல உழைக்கிறான் என்று சொன்னாலும்கூட எந்த விலங்கும் உண்மையில் மனிதனைப்போல உழைப்பதில்லை. வெறுமனே அவை உணவு, இணை, உறைவிடம் தேடி அலைகின்றன, அவ்வளவுதான். நாம் விலங்குகளைப்போல உணவுதேடி இனப்பெருக்கம் செய்து செத்துப்போகும் நிலைக்கு இறங்க வேண்டியதில்லையென்றாலும், நம்முடைய அசுரத்தனமான உழைப்பு உண்மையில் நமக்கு என்ன தந்திருக்கிறது என்பதையும் அவை யாருக்கு பலன்களை அள்ளித்தந்திருக்கின்றன என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நாம் சமூகமாய் ஒன்றிணைந்து வேலை என்ற பெயரில் மனிதர் மீது திணிக்கப்படும் வன்முறையைத் தூக்கியெறிவதைக் குறித்து சிந்திக்க காலநிலை மாற்ற நெருக்கடி நமக்கு அறைகூவல் விடுக்கிறது. இவை காலநிலை மாற்றத்தை முடுக்கிவிடும் தொழிற்சாலைகளின் எந்திரமான மனிதருக்கான விடுதலையாக மட்டுமல்லாமல் நம் வீடுகள் முதல் தெருக்கள் வரையிலும் கூட்டிப்பெருக்கும் எளிய மனிதருக்கான விடுதலையாகவும் இருக்க வேண்டும். உடலுழைப்பு இரண்டாம் தரமானதாகப் பார்க்கப்பட்டு மலிவானதாக கூலி நிர்ணயிக்கப்படுதல் அநீதியானதாக மாற வேண்டும். எந்த உழைப்பாயினும் ஒரே கூலியென்பதே சமத்துவமான சமூகத்தை உருவாக்கும். குறைந்தபட்சம் ஊதிய வேறுபாடுகளைக் குறைப்பதற்கேனும் நாம் விரைவாய் செயலாற்ற வேண்டியிருக்கிறது.

தனிமனிதரின் வாழ்க்கைத் தரம், மனநலன், உடல்நலன், குடும்ப – சமூக நலன் இவற்றோடு மட்டுமின்றி காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளோடும் நம் வேலைகள் பிண்ணிப் பிணைந்திருக்கின்றன. விறைப்பான எந்திரங்களாய் மாறிப்போன மனிதர்களை, அவர்களின் வேலைகளிலிருந்து விடுவித்து – இதுவரையிலும் அவர்கள் சுரண்டப்பட்டதற்கான பிரயாசித்தமாக – பொருளாதார பலன்களையும் ஓய்வையும் அளிப்பதை, காலநிலை மாற்ற செயல்திட்டத்தின் அங்கமாக்கவேண்டியதே ஒரு முற்போக்கான சமூகத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். பனிரெண்டு மணிநேர உழைப்பிற்கான எதிர்ப்பு அதன் தொடக்கமாக இருக்கட்டும்.

  • ஜீயோ டாமின்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments