தமிழக முதல்வருக்கு பூவுலகின் நண்பர்களிடமிருந்து ஒரு மனம் திறந்த மடல்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியிருந்தது அ.தி.மு.க.
30 வருடங்களாக எந்தவொரு கட்சியும் தொடர்ச் சியாக இரண்டாம் முறை ஆட்சி அமைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்கிற நிலையை மாற்றி இரண்டாம் முறையும் தேர்தலில் வெற்றி பெற்றது. மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று அவர்கள் கொண்ட நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி அது. மக்கள் எதிர்ப்பை கண்ட பல திட்டங்களை அவை எந்த நிலையில் இருந் தாலும் நிறுத்திய பெருமை உங்களுக்கு உண்டு. கெயில், மீத்தேன் போன்ற திட்டங்களை பல அழுத்தங்கள் தாண்டி நீங்கள் நிறுத்தி மக்கள் போராட்டத்துக்கு ஆதரவான ஒரு நிலைப் பாட்டை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். 2007ல் நிமிட்ஸ் என்கிற அமெரிக்காவைச் சேர்ந்த அணுசக்தியினால் இயங்க கூடிய விமானம் தாங்கி கப்பல் சென்னைக்குள் வருவிருந்தபோது அதை பாதுகாப்பு காரணங் களுக்காக கடுமையாக எதிர்த்தவர் நீங்கள். அந்த கப்பலிலிருந்து வரக் கூடிய அணு கதிர் வீச்சு ஒட்டு மொத்த சென்னையை அழிக்க வல்லது என்று அன்று நீங்கள் எடுத்த நிலைப்பாடு மிக முக்கியமானது. 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்களோடு மக்களாக நிற்பேன் என்று நீங்கள் உறுதியாக சொன்னதையும் இது போன்ற மக்கள் நலன் சார்ந்த அக்கறைகளின் தொடர்ச்சியாகவே பார்த்தோம். இந்த நிலையில்தான் கூடங்குளம் அணு உலை அலகு ஒன்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் நீங்கள் பங்கேற்று பேசியிருக்கிறீர்கள். அந்த நிகழ்வில் நீங்கள் சொன்ன விஷயங்களை, தெரிவித்த தகவல்களை பார்க்கும்போது உங்களிடம் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது. அணு உலைகள் பழுது அடைந்து நிற்றல் என்கிற சம்பவம் பொதுவாக உலகில் உள்ள எல்லா அணுவுலைகளிலும் இரண்டு வருடங் களுக்கு ஒரு முறை நடக்கும். ஆனால் கூடங் குளத்தில் அமைந்திருக்கும் அலகு ஒன்றில் கடந்த இரு வருடங்களில் 32 முறை அணு உலை பழுதடைந்து நின்றிருக்கிறது என்கிற தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 32 முறை பழுதாகி நின்ற அணுவுலையைதான் பாதுகாப்பான சிறப்பான அணுவுலை என்று சொல்லி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. உலகில் எங்கும் ஓடாத அணு உலைகள் ரஷ்யாவுடனான நட்புக்கு தரப்படும் விலையாக தமிழகத்தின் தலையில் கட்டப்பட்டிருக்கிறது. ரஷ்யா அணு உலையை ஒப்படைத்த பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பொறுப்புறுதி காலத்தில் கூட வெறும் 33 சதவிகிதம் நாட்களில்தான் அணு உலை முழு சக்தியில் இயங்கியிருக்கிறது. இந்த 521 நாட்களில் 222 நாட்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது. திட்டமிடப்படாத, அவசரமாக அணு உலை மூடப்பட்ட சம்பவங்கள் குறைந்தது ஐந்து முறை யாவது நிகழ்ந்திருக்கிறது.

இது போல தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வரும் ஒரு அணு உலையைத்தான் பாதுகாப்பானது என்று சொல்லி நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறீர்கள். நிமிட்ஸ் கப்பலை சென்னைக்குள் அனுமதிப்பதில் உள்ள சிக்கல்களை கதிரியக்கம் பற்றிய தெளிவுடன் முன் வைத்த நீங்கள் அதை விட ஆபத்தான அணு உலைகள் பற்றி ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்பது குழப்பமாகவே இருக்கிறது. கூடங்குளம் அணுகி கழிவுகளை எங்கு வைப்பது என்பதில் கூட இன்னமும் எந்த தெளிவும் உருவாகாத நிலையில் அந்த அணு உலை எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது தான் அந்த மக்கள் கேட்கும் கேள்வி. உண்மையில் அதற்கு என்ன பதில் இருக்கிறது? புகுஷிமாவில் நடந்த விபத்து அப்போது ஜப்பானின் பிரதமராகவும் அணு சக்தி ஆதர வாளராகவும் இருந்த நவோடா கான் அவர்களை அணு சக்தி எதிர்ப்பாளராக மாற்றியது. அணு சக்தியின் ஆபத்துகளை, தீமைகளை அறிய ஒரு விபத்து நேரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டுமோ என்கிற அச்சம் எங்களுக்கு இருக்கிறது.

கூடங்குளம் அணு உலை அலகு ஒன்றை நாட்டுக்கு அர்ப்பணிப்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த பிரதமர் நரேந்திர மோடியால் ஏன் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள மிதிர்விர்தியில் அந்த அணு உலையை தொடங்க முடியவில்லை? மிதிர்விர்தி மக்கள் எதிர்ப்பை விட தொடர்ச்சியானதும் பல மடங்கு வீரியமானதும்தானே இடிந்தகரை மக்களின் எதிர்ப்பும்? மிதிர்விர்தியில் அணு உலை அமைக்கப்படாததில், அங்கு நடந்த மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த நீதியில் உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சிதான். அணு சக்தியின் தீமைகள் குறித்து தொடர்ந்து பேசி வரும் எங்களைப் போன்றவர்கள் அதை மகத்தான வெற்றியாகதான் பார்க்கிறோம். ஆனால் மிதிர்விர்திக்கு ஒரு நீதி இடிந்த கரைக்கு ஒரு நீதி என்று செயல்பட மோடி குஜராத்தின் பிரதமர் மட்டும்தானா என்ன? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ ஹரிப்பூரில் அணு உலை அமைக்கவிருக்கும் திட்டத்தை தடுத்து விட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லா அழுத்தங்களையும் தாண்டி ஹரிப்பூரில் திட்டத்தை நிறுத்த முடியுமென்றால் கூடங்குளத்தில் ஏன் முடியாது என்று அந்த மக்கள் உண்மையிலேயே குழம்புகிறார்கள். மக்களின் இந்த எளிமையான கேள்விகளை அறியாமை, பாமரத்தனம் என்று யாரும் புறம்தள்ளிவிட முடியாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எனில் தேர்தலில் வாக்களிக்கும் போது அவர்கள் காட்டுவது தெளிவு என்று நம்பினால் அதை விட கூடுதல் கவனத்தையும் தெளிவையும் அவர்கள் தங்கள் பாதுகாப்பு, வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னைகளிலும் காட்டுவார்கள் என்பதை மறுக்க முடியாது. பிரதமர் மோடி வேண்டுமானால் குஜராத் துக்கு மட்டும் பிரதமராக செயல்படலாம். ஆனால் நீங்கள் சென்னைக்கு மட்டுமல்ல இடிந்தகரைக்கும் முதல்வர். கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலையால் பாதிக்கப்பட இருக்கும் அனைவருக்கும் நீங்கள் முதல்வர். அவர்களது பாதுகாப்பும் நலனும் இன்று உங்கள் கைகளிலேயே இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு உங்களை சந்திக்க வந்த அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் எஸ்.பி.உதயகுமாரிடமும் ஊர் மக்களிடமும் ஹரிப்பூர் பற்றிய கேள்விக்கு நீங்கள் தந்த பதில் ஹரிப்பூரில் திட்டம் ஆரம்ப கட்டத்திலேயே நின்றுவிட்டது என்பதுதான். இன்று கூடங்குளம் அலகு 3,4ம் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. மக்கள் நலன், பாதுகாப்பு கருதி நீங்கள் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று உங்களை வேண்டுகிறோம். மக்கள் நலனில் காட்டப்படும் அக்கறை மட்டுமே மேலும் பல சாதனைகளை முறியடிக்கும் வல்லமையை அரசியல் வாதிகளுக்கு தரும் என்பதை அறியாதவர் அல்ல நீங்கள். உங்களுடன் இருப்பேன் என்ற உங்களது வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அதை நீங்கள் நிறை வேற்றுவீர்கள் என்கிற நம்பிக்கையில்…

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு….

இப்படிக்கு

பூவுலகின் நண்பர்கள்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments