ஆர்க்டிக் பனியும் கனமழையில் மூழ்கிய சென்னையும்!

chennai rainfall pattalam
Image: Nirmalraj Lakshmanan

2021-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்ட அதிதீவிர கனமழைக்குக் காரணம் என்ன?

இந்தியாவிற்கு மழையைத் தருவிக்கும் இரண்டு வானிலை அமைப்புகள் உள்ளன. ஒன்று, வங்காள விரிகுடாவில் உருவாகி வடஇந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் தருவிக்கும். மற்றொன்று, அரபிக் கடலிலிருந்து இந்தியாவின் மேற்கு மாநிலங்களுக்கு மழையைக் கொடுக்கும். இந்த இரண்டு அமைப்புகளும் செயலில் இல்லாதபோதும் இந்த மழைப்பொழிவு எப்படி நிகழ்ந்தது என்கிற கேள்விதான் வானிலை ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை அக்டோபர் 6-ம் தேதி விலகிக்கொள்ளத் தொடங்கியது. அக்டோபர் 15-ம் தேதியுடன் முழுமையாக விடைபெற்றிருக்க வேண்டிய பருவமழை, அக்டோபர் 26 வரை நீடித்தது, இந்தக் காலகட்டத்தில் காற்று அமைப்பு (wind system) வலுவிழந்து இருந்தது. தென்மேற்குப் பருவமழை விலகுவதற்குத் தாமதம் ஆனதால், வடகிழக்குப் பருவமழையின் தொடக்கமும் தாமதமானது. வடகிழக்குப் பருவமழைதான் தென்னிந்தியாவிற்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவைத் தரும். பிறகு ஏன் நிகழ்ந்தது தீவிர மழைப்பொழிவு?

வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகமாக இருந்த காலகட்டத்தில் நிலைபெற்று இருந்த சில தனித்துவமான வானிலை நிகழ்வுகளுக்குள் தொடர்பு ஏற்பட்டு நிகழ்ந்த வினைபுரிதலே (interplay) இந்தத் தீவிர மழைப்பொழிவிற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

தென்மேற்குப் பருவமழை தாமதமாக விடைபெறுதலும் லா நீனா விளைவும்:

“சைபீரியாவைத் தவிர வடக்கு அரைக்கோளத்தின் (Northern Hemisphere) நிலப்பரப்பும் கடல்களும் ஜனவரி முதல் அக்டோபர் வரை அதிக வெப்பத்துடன் இருந்தன” என்கிறார் ரகு முர்ட்டுகுடே. இவர் அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக காலநிலை விஞ்ஞானி. அதிக வெப்பம், ஆர்க்டிக்கில் பனி உருகுவதை அதிகரித்தது. அது மேற்கு ஐரோப்பா மற்றும் வடகிழக்குச் சீனப் பகுதியில் ‘கடல் மட்ட அழுத்தம்’ (sea level pressure) அதிகரிப்பதற்குக் காரணமாக இருந்தது. இந்த அதிக கடல் மட்ட அழுத்தம், பொதுவாகக் கிழக்கு நோக்கிச் செல்லும் ‘கிரக அலைகளை’ (planetary waves அல்லது Rossby waves) தென்கிழக்காகத் திசை திருப்பியது. வளிமண்டலத்தின் மேலடுக்கில் ‘சுழற்சி முரண்களை’ (circulation anomolies) ஏற்படுத்தும் இந்தக் கிரக அலைகள், பருவமழைக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தன. இதனால்தான் தென்மேற்குப் பருவமழை விடைபெறுவது தாமதமானது.

இதே காலகட்டத்தில் அக்டோபர் 14-ம் தேதி லா நீனா விளைவு ஏற்படத் தொடங்கியது, இது எல் நீனோவிற்கு எதிர்மறையானது. எல் நீனோ-தெற்கத்திய அலைவின் (ENSO- El Nino Southern Oscillation) குளிர்விக்கும் காலத்தினால், கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் கடல் மேற்பரப்பின் வெப்பம் சராசரியைவிடக் குறைவாக இருக்கும். லா நீனா விளைவு, காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் உருவாக்கத்தைத் தூண்டிவிடும், இதனால் மழைப் பொழிவு அதிகமாகும்.

வளிமண்டலத்தில் அதிகமான ஈரப்பதம் உள்ள நேரத்தில் லா நீனா விளைவு ஏற்பட, அதிக காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் உருவாகி, அதிக எண்ணிக்கையில் தீவிர மழைப்பொழிவு ஏற்படுவதற்கு உகந்த சூழல் ஏற்பட்டுவிட்டது.

அதிகரிக்கும் காற்றழுத்தத் தாழ்வுநிலைகளும் வராமல்போன புயல்களும்:

இந்திய வானிலை அமைப்பின் தரவுகளை ஆராய்ந்தால், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 1 வரையிலான காலகட்டத்தில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் எட்டுக் காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் உருவாகின. அவற்றில் ஐந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களாக வலுப்பெற்றன. சராசரியாக மூன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களை இந்தியா இந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ளும். கடந்த 120 ஆண்டுகளில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இப்படி அதிகமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் 10 ஆண்டுகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இப்படி அதிகமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவானதன் விளைவாக, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவின் பல மாவட்டங்கள் கடுமழையில் தத்தளித்தன.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியப் பெருங்கடலில் இரண்டு புயல்களாவது உருவாகியிருக்கும். புயல்கள் பெருங்கடலின் ‘திரள் வெப்பத்தை’ (accumulated heat) சிதறடித்து, காற்றழுத்தத் தாழ்வுத் தொடர்ச் சங்கிலியை உடைத்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு எந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலையும் புயலாக மாறவில்லை. அதிக எண்ணிக்கையில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலைகளே, புயல்கள் உருவாவதற்கு எதிரான சுய தடுப்பான்களாகச் செயல்பட்டன. இன்னொரு சிக்கலும் ஏற்பட்டது. அடிக்கடி ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள், ஈரப்பதத்தை இரண்டு மாதங்கள் தக்கவைத்தன.

அதிகரித்த அரபிக் கடலின் வெப்பம்!

அரபிக் கடலின் வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகரித்ததும் தீவிரமான மழைப்பொழிவிற்கு மற்றுமொரு காரணம். அதிகமான வெப்பம் அதிக நீராவியை ஏற்படுத்தும். அதுவே காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.

‘‘காலங்காலமாக அரபிக் கடலின் வெப்பம் வங்காள விரிகுடாவின் வெப்பத்தைவிட 1.5-2 சதவிகிதம் வரை குறைவாக இருக்கும், ஆனால் இப்போது வெப்பம் அதிகரித்துவிட்டது’’ என்கிறார் கொச்சி பல்கலைக் கழகத்தின் வளிமண்டல அறிவியல் துறையின் டாக்டர் அபிலாஷ் எஸ். வெப்பம் அதிகரித்ததே அரபிக்கடலில் மூன்று காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் உருவாவதற்குக் காரணம். இதன் விளைவாக இந்த வருடம் இந்தியப் பெருங்கடல் வடபகுதியில் காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் ஜோடிகளாக உருவாயின, ஒன்று வங்காள விரிகுடாவிலும் மற்றொன்று அரபிக் கடலிலும். இதைப்போல் அக்டோபர் 1-க்கும் டிசம்பர் 1-க்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று முறை, ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதில் ஒருமுறை ஜோடியாக உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் (low pressure trough) இந்திய நிலப்பரப்பின் மீது நீண்டு அதிகமான இடங்களில் மழை பொழிவதற்குக் காரணமானது.

 

காற்றழுத்தத் தாழ்வு நிலையும் மேற்கத்திய இடையூறும்:

வழக்கத்தைவிட அதிகமான மழைப்பொழிவிற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வுநிலை வடக்கு நோக்கி நகர்ந்து ‘மேற்கத்திய இடையூறுடன்’ (Western disturbance) தொடர்பு ஏற்பட்டு விளைந்த வானிலை முரண் இது. மத்திய தரைக்கடல் பகுதியின் வளிமண்டல மேலடுக்கில், வெப்பமண்டலத்திற்கு வெளியே உருவாகும் புயல் காற்றையே மேற்கத்திய இடையூறு என்பார்கள். இதுவே வட மற்றும் வடமேற்கு இந்தியாவில் மழை/பனிப்பொழிவிற்குக் காரணம்.

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை, வடக்கு நோக்கி நகர்ந்து பீகாரின் மீது நிலை கொண்டது. இந்தக் காற்று அமைப்பிற்குப் பஞ்சாபின் மேற்பகுதியில் மேற்கத்திய இடையூறுடன் தொடர்பு ஏற்பட்டு, அது வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தீவிர மழைப்பொழிவை ஏற்படுத்தியது. இதன் விளைவாக உத்தரகாண்டில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. மேற்கத்திய இடையூறு என்பது பொதுவாக ஆப்கானிஸ்தான் மற்றும் வடக்கு பாகிஸ்தானிற்கு மேற்புறத்தில்தான் உருவாகும். ஆனால் இந்த முறை பஞ்சாபின் மீது தாழ்வாக உருவாகியது. இந்தப் பிறழ்விற்கான காரணிகள் இன்னும் தெரியவில்லை.

இதைப்போலவே டிசம்பர் ஒன்றாம் தேதி மகாராஷ்டிர மாநிலக் கரையோரத்தில் உருவான தாழ்வுநிலை வடக்கு நோக்கி நகர்ந்து மேற்கத்திய இடையூறுடன் தொடர்பு கொண்டதால் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர மழைப்பொழிவு ஏற்பட்டது.

என்ன செய்யவேண்டும்?

புவியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி உயர்ந்ததற்கே காலநிலையில் மிகத் தீவிரமான மாற்றங்கள் நிகழ்கின்றன. 2 டிகிரி அளவிற்கு வெப்பம் உயர்ந்துவிட்டால் விளைவுகளைக் கணிக்கவே முடியாது. இந்தியாவின் வானிலையை, பருவமழையைத் தீர்மானிப்பதில் பல்வேறு ‘புதிய நிகழ்வுகள்’ பங்காற்றுகின்றன. ஆர்க்டிக் பனித்திட்டு உருகுவது, கல்ஃப் ஸ்ட்ரீம், இந்தியப் பெருங்கடல் இருமுனை எனப் பல்வேறு விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பொதுவாகவே வெப்பமண்டலப் பகுதிகளின் பருவமழையைக் கணிப்பது மிகவும் கடினம். பல்வேறு புதிய நிகழ்வுகளும் சேர்ந்தால், கணிப்பது கூடுதல் சிரமம் ஆகிவிடும். தமிழகத்திற்கெனத் தனிப்பட்ட காலநிலை, பருவமழை மாதிரிகள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிற்கு வருவதே பருவமழையை, வெப்பத்தை ஓரளவிற்குக் கண்டறிய உதவும்.

எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தீவிர காலநிலை நிகழ்வுகளை சமாளித்து நம்மைத் தகவமைத்துக்கொள்ள தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இனிமேல் இயல்பான வாழ்க்கை என்பதே பேரிடர்களின் இடையில்தான் என்று ஆகிவிட்ட பிறகு, பேரிடரிலிருந்து விரைவாக மீள்வதற்குத் தேவையானவற்றைச் செய்யவேண்டும்.

குறிப்பு: இக்கட்டுரை முதலில் ஆனந்த விகடன் இதழ் மற்றும் தளத்தில் வெளியானது.

https://www.vikatan.com/news/general-news/arctic-snow-and-chennai-heavy-rain

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments