நெஞ்சு பொறுக்குதில்லையே!

கடந்த நான்கு ஐந்து நாட்களாக வயலில் அறுவடை வேலை நடந்து கொண்டிருந்தது. நன்றாக முற்றியிருந்த பயிர்கள் ஆடி காற்றில் சாய்ந்து படுத்தே போயிருந்தன. மழைக்கு முன்னர் அறுவடை செய்து விடலாம் என போன வாரமே ஏற்பாடு செய்து விட்டேன். ஆனால், எங்கள் நிலத்திற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய மேட்டு நிலத்துக்காரர் தன் பயிருக்கு தண்ணீர் பூட்டி வைத்திருப்பார் போல, மடையை சரியாக கட்டாததால் இரவோடு இரவாக தண்ணீர் முழுவதும் நம் நிலத்தில் அடித்து நின்றது. இன்று அறுவடை என காலையில் குதூகலமாக சென்ற என் ஆசையில் மண் விழுந்தது. சரி இரண்டு நாள் செல்லட்டும் காய விட்டு திங்கள் அன்று அறுவடையை வைத்துக் கொள்ளலாம் என மனதை தேற்றிக் கொண்டேன்.

 

பட்ட காலிலேயே படும் என்பது போல ஞாயிறு இரவு நல்ல மழை! மழை நல்லதுதான், ஆனால், சில நேரங்களில், சில இடங்களில், சில மனிதர்களுக்கு மழை நன்மையைச் செய்வதில்லை. ஏற்கெனவே பயிர்கள் படுத்து விட்டதாலும் வானமும் தூவானமாக தென்பட்டதால் மழை தொடர்ந்தால் நெல் மணிகள் முளைத்து விடும் அபாயம் இருந்தது. எனவே மழை கொடுத்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு புதன்கிழமை அன்று அறுவடையை முடித்து விட அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டேன். வானம் மேக மூட்டமாகவே காணப்பட்டாலும் மழை வராது என்று ஓர் நம்பிக்கை. அறுவடை துரிதமாக நடந்தது. மழை பெய்து விட்டிருந்தாலும் நிலம் சற்று காய்ச்சலாகவே இருந்தது. ஆனால், பக்கத்து நிலத்துக்காரரின் அலட்சியத்தால் நம் நிலத்தில் இறங்கிய நீரால் சுமார் அரை கால் காணி அளவு நிலம் ஈரமாகவே இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் நெல் அறுக்கும் இயந்திரத்தால் அந்த நிலத்தில் இறங்கி அறுக்க முடியவில்லை. மீறி இறங்கினால் சக்கரங்கள் உள் அழுந்தி மாட்டிக்கொள்ளும் என்பதால் முடிந்த வரை அறுத்துக் கொடுத்துவிட்டு மீதியை கைகளால் அறுத்து வைக்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார் ஓட்டுநர்.

 

உச்சி வெயில் நேரம் ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் அறுத்து அடித்து எடுத்துச் செல்லலாம் என்றால் முழுமையாக இரண்டு மூட்டை நெல் கூட கிடைக்காது என்னும் நிலை. இதை ஆள் வைத்து அறுத்து இயந்திரத்தில் அடித்து வண்டி வைத்து கொண்டுச் செல்லவே அதைவிட கூடுதலாக செலவாகும் என்று கணக்கு செய்து அந்த நெல்லை அறுக்காமல் விட்டுவிடலாம் என்று எண்ணினேன். ஆனால் விளைந்த பயிரை அறுவடை செய்யாமல் நிலத்திலேயே விட்டுவிடுவது அழகல்ல என்று சுற்றியிருந்தவர்கள் எல்லாம் கூறினர். எனக்கும் நட்டத்தை கணக்கிட்டு நெல்லை நிலத்திலேயே கொட்டி வீணாக்க விருப்பம் இல்லை. ஏனெனில், எனக்கென்னவோ நட்டம் இரண்டாயிரம் ரூபாய்தான் ஆகும். ஆனால், அதே நெல் அரைத்து அரிசி ஆக்கப்பட்டால் பல நூறு பேரின் பசியைப் போக்கும் என்று நினைத்த பொழுது அந்த செலவை செய்து நெல்லை அறுவடை செய்ய முடிவு செய்தேன். இந்தியா முழுவதுமே விவசாயிகள் நஷ்டப்பட்டுதான் மக்களுக்கு உணவு அளித்துக் கொண்டு இருக்கின்றனர். இதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

 

ஒவ்வொரு ரூபாயாக எண்ணி பஞ்சத்திற்கு பயிர் செய்யும் என்னைப் போன்ற விவசாயிக்கே மக்கள் பசி தீர்க்கும் உணவை விட பணம் ஒன்றும் பெரிதில்லை என்னும் தெளிவு இருக்கும் போது பல ஹெக்டேர் பரப்பளவிலான பால் முற்றிய நெல் வயல்களை இயந்திரங்கள் கொண்டு அழித்து நாசமாக்கி இருக்கிறது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். பல லட்சம் மக்களின் பசி தீர்க்க வல்ல நெற்பயிர்களை நாசமாக்கும் NLCயின் அழிவு வேலைக்கு பல்லாயிரம் போலிஸாரை குவித்து பந்தோபஸ்த்து வழங்கியது மதி கெட்ட மாநில அரசு.

 

நிலம் என்னும் நித்திய தாரகை

 

வானில் துருவ நட்சத்திரம் என்று ஒன்று உண்டு. இரவு வானில் நட்சத்திரங்களை கண்டு களிப்பவர்களுக்கு தெரியும் நட்சத்திரக் கூட்டங்கள் அனைத்தும் பூமியின் சுழற்சியின் காரணமாக நாம் பார்க்கத் தொடங்கிய இடத்தில் இருந்து நேரம் செல்ல செல்ல விலகிச் சென்று கொண்டே இருக்கும். ஆனால், உலகின் எந்த பகுதியில் இருந்து எந்த மாதத்திலும் இரவு எந்த நேரத்தில் பார்த்தாலும் எங்கும் நகராமல் நிலையாக ஓர் நட்சத்திரம் இருக்கும் என்றால் அது துருவ நட்சத்திரம்தான். இந்த துருவ நட்சத்திரம்தான் அந்த காலத்தில் கடலில் பயணிக்கும் மாலுமிகளுக்கு இரவில் திசை காட்டும் கருவியாக செயல்பட்டது. தொலைந்துபோன வழிப்போக்கர்களுக்கு எல்லாம் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது அந்த துருவ நட்சத்திரம்தான். அது போல உலகமயமாக்கலின் ஈவு இரக்கமற்ற வளர்ச்சியால் கைவிடப்பட்டு தொலைந்து போய்விட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது அவர்களின் நிலம் மட்டுமே.

 

அரசின் திட்டங்கள் தங்களைப் புறந்தள்ளி முன்னேறும் போதும், நித்தம் சோறு தின்னும் மக்கள் அதை விளைவித்த தம்மை மறந்து வெகு காலம் ஆகிவிட்ட போதும், சீப்பு பத்து ரூபாய் கூறு பத்து ரூபாய் என்று தாம் விளைவித்தவற்றை தாமே கூவி வித்த காலம் மாறி குளிரூட்டப்பட்ட அங்காடிகளில் அவை பல மடங்கு விலையில் விற்கப்படுவதை வேடிக்கை பார்த்து நகரும் காலம் வந்துவிட்ட போதும், சில பச்சைத் துண்டு விவசாய தலைவர்களைப் போல் பருவ மழையும் பொய்க்கத் தொடங்கிய பிறகும் விவசாயிகள் பயிர் தொழில் செய்யத் துணிவது தங்கள் நிலத்தின் மீது உள்ள நம்பிக்கையினால்தான். தலைமுறை தலைமுறையாக தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றி வரும் இந்நிலமகள் எக்காலத்திலும் இந்த நன்றி கெட்ட அரசியல்வாதிகள்போல் தன்னை வஞ்சிக்க மாட்டாள் என்னும் நம்பிக்கையில்தான் ஒரு விவசாயி விவசாயியாகவே வாழ்கிறார். எனவே, விவசாயிகள் வாழ்வில் ஓர் பிடிப்பை ஏற்படுத்தும் நிலமும் ஓர் நித்திய தாரகை தான்!

 

ஆனால், விவசாயிகளின் ஒரே நம்பிக்கையான நிலத்தையும் – முதலாளிகளுக்கான அரசின் – வளர்ச்சி திட்டங்கள் பறித்துக் கொண்டு அவர்களை வீதியில் துரத்தி அடித்தால் பாவப்பட்ட மக்கள் எங்கு செல்வர். அலையடிக்கும் பெருங்கடலில் எங்கும் நிறைந்திருக்கும் சின்னஞ்சிறு மீனினங்களை உடற்பருத்த திமிங்கிலங்கள் தங்கள் வசதிக்காக கடலை விட்டு துரத்தி விட்டு அவற்றின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொண்டால், கடலிழந்த மீன்கள் கருவாடாய் போவது போல தங்கள் நிலம் விட்டு துரத்தப்பட்ட மக்களும் நிம்மதியிழந்து நடைப்பிணமாக மாறுகின்றனர்.

 

அரசாங்கமும் நிறுவனங்களும் தாங்கள் கையகப்படுத்தும் நிலத்திற்கு இழப்பீட்டு தொகை கொடுத்தாலும் அந்த பணத்தை வைத்துக் கொண்டு மட்டும் ஓர் விவசாயியால் என்ன செய்துவிட முடியும். அவர்கள் கொடுக்கும் இழப்பீட்டு தொகையை வைத்து வேறு எங்கும் அவர்களால் நிலம் வாங்க முடிவதில்லை. மாறாக அந்த இழப்பீட்டு தொகை பெரும்பாலும் குழந்தைகளின் உயர் கல்வி செலவு, வீடு கட்டுதல், வங்கி வைப்பு நிதி போன்ற வகைகளிலேயே முதலீடு செய்யப்படுகிறது. அதிலிருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருவாய் என்பது குறைவுதான். அதே நிலமாக இருக்கும் பட்சத்தில் இயற்கையும் ஒத்துழைத்தால் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு நல்லதொரு வருவாயை அவ்விவசாயியால் தன் நிலத்தில் இருந்து ஈட்ட முடியும். அந்த வருவாய் வங்கி வைப்பு நிதியிலிருந்து வரும் வட்டியை விட அதிகமாகதான் இருக்கும். மேலும் நிலத்தில் இருந்து வெறும் பண பலன்கள் மட்டும் கிடைப்பதில்லை. நிலத்தில் பிரதான பயிர்களின் ஊடாக ஊடு பயிர்கள் வரப்போர பயிர்கள், கீரைகள், மூலிகைகள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கான விலையில்லா தீவனங்கள், தண்ணீர், விறகு என்று தற்சார்பு வாழ்விற்கான அனைத்தையும் ஓர் குறு விவசாயியால் எளிதாக தன் நிலத்தில் இருந்து உற்பத்தி செய்துக் கொள்ள முடியும். இவை எதுவும் விவசாயிகளின் வருவாய் கணக்கோடு பொருத்திப் பார்க்கப்படுவதில்லை.

 

பணம் மட்டுமே வருவாய்க்கான அளவுகோலாக பார்க்கப்படும் பொருளாதார அமைப்பினில் சந்தைப் பொருளாதாரத்தைச் சாராத தற்சார்பு வாழ்வியல் எல்லாம் வெறும் கேலிக்கூத்துதான். இந்திய கிராமங்களில் உள்ள விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீட்டுத் தேவைகளுக்காக தாங்களே உற்பத்திச் செய்துக் கொள்ளும் அல்லது தங்களுக்குள் பண்டமாற்று செய்துக் கொள்ளும் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், மளிகை பொருட்கள், கைவைத்தியத்திற்கு உதவும் மூலிகைகள், கால்நடை தீவனங்கள், ஏரி மீன்கள், பஞ்சாரக் கோழிகள், கைவினைப் பொருட்கள், விறகு, எருவு என்று பல் துலக்கும் வேப்பங்குச்சி வரை சந்தை பொருளாதாரத்திற்குள் வராத அதே சமயம் சந்தையில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் விவசாய பெருங்குடி மக்களால் தற்சார்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் ஓர் மதிப்பிட்டால் அதுவே பல லட்சம் கோடி ரூபாய்கள் வரும். ஆனால், இத்தனை பெரிய பணம் நம் நாட்டின் GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலோ விவசாயிகளின் சராசரி வருமானத்திலோ பிரதிபலிப்பதே இல்லை. காந்திய பொருளாதார சிந்தனையும் நம் நாட்டின் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தற்சார்பு பொருளாதார அமைப்பில் இருந்து விலகி நுகர்வு கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட சந்தை பொருளாதாரத்தை இந்திய அரசு கொள்கையாக ஏற்றதனால்தான் அனைத்தையும் உற்பத்தி செய்யும் கிராமங்களும் அதில் வாழும் உழவர்களும் வறுமையிலும் அவற்றை நுகரும் நகரங்களும் விவசாயம் சாராத மேட்டுக்குடி மக்களும் செழிப்புடனும் இருக்கின்றனர். இந்த தற்சார்பு கூறு கிராமங்களில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருப்பதனால்தான் விவசாயத்தில் பெரிய லாபம் இல்லாத போதும் அதை விவசாயிகளால் சமாளிக்க முடிகிறது. நிலத்தை பிடுங்கிக்கொண்டு இழப்பீடும் வேலைவாய்ப்பும் தருவதாகக் கூறும் அரசாங்கத்தால் இந்த தற்சார்பை வழங்கிட முடியுமா?

 

 

விவசாய தொழிலாளர்கள்

 

எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த ஒரு வளர்ச்சித் திட்டங்களுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப் பட்டாலும் பேசு பொருளாவது நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையும் வீட்டில் ஒருவருக்கு அந்த நிறுவனத்தில் வேலை வேண்டும் என்பதாகவே இருக்கும். “வளர்ச்சி திட்டங்கள் காலத்தின் தேவை. ஆனால், விவசாயிகளும் பாதிக்கப்பட கூடாது”, என்பவர்கள் அதிகபட்ச இழப்பீட்டு தொகை, வீட்டில் ஒருவருக்கு வேலை என்பது போன்ற சலுகைகள் மூலம் இரண்டு பக்கமும் பலன் பெறுவதாக எண்ணி அதோடு திருப்தி அடைந்து கொள்கின்றனர். அது கிடைக்காத பொழுது விவசாயிகளை பரிதாபமாக பார்த்து விட்டு ஒதுங்கி கொள்கின்றனர். ஆனால் அரசுகளும் நடுநிலையாளர்களும் ஏன் விவசாயிகளே கூட காணாத மூன்றாவது பக்கம் தான் இது போன்ற வளர்ச்சி திட்டங்கள் மூலம் அதிகம் பாதிப்படைகின்றனர். அது விவசாய தொழிலாளர்களும் நிலமற்ற ஒப்பந்த விவசாயிகளுமே. ஏனெனில் ஒரு நிலத்தைச் சொந்தமாக வைத்துள்ள விவசாயி ஒருவர் தான் மட்டுமே தனியாக  அந்த நிலத்தில் உழைத்து பயிர் செய்வதில்லை. மாறாக அது நெல் வயலாக இருப்பின் அந்த நிலத்தை உழுபவர், அண்டை வெட்டுபவர், நாற்று பறிப்பவர்கள், நடவு நடும் மகளிர், களை பறிக்கும் பெண்கள், உரம் இடுபவர், அறுவடை செய்பவர்கள், அறுவடைக்கு பின் நெல்லை அள்ளி தூற்றி மூட்டையில் கட்டுபவர்கள், வைக்கோல் வாங்கும் வியாபாரி, அதற்கு உதவும் இடைத்தரகர்கள் என்று கடைசியாக அரிசி கடை முதலாளி வரை அந்த நிலத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் பலர் உண்டு. ஒரு ஏக்கர் நிலம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை உண்டு பண்ணக்கூடியது.

 

அறுவடை சமயத்தில் நிலத்தில் சிதறும் நெல் மணிகளை பொறுக்கி எடுத்து குத்தி புடைத்து கஞ்சி காய்ச்சி குடிக்கும் வர்க்கத்தினரும் தமிழ்நாட்டில் இன்றளவும் உண்டு. நிலைமை இப்படி இருக்க நிலத்தின் சொந்தக்காரருக்கு மட்டும் இழப்பீடும் வேலைவாய்ப்பும் அளித்து விட்டால் (அவர்களுக்கே முழுதாக கிடைக்கவில்லை!) பிரச்சினை தீர்ந்து விடுமா என்ன? நிலத்தை நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்களுக்கு என்ன இழப்பீடு கிடைக்கப் பெறுகிறது? அவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டும் அதே சுரங்கங்களில் கூலிகளாக வேலைக்குச் சேர்ந்து விடுகின்றனர். பெரும்பாலானவர்கள் மற்ற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் தேசங்களுக்கும் சென்று பிழைப்புக்காக அகதிகளாய் வாழ்ந்து வருகின்றனர். இதில் பெண்கள் நிலை மிகவும் மோசம். முன்பு தன் ஊரிலேயே வீட்டிற்கு பக்கத்திலேயே உள்ள நிலத்தில் வேலைக்குச் சென்று கிடைத்த வருமானத்தில் வீட்டையும் பார்த்துக் கொண்டு ஒரளவு நிம்மதியாக வாழ்ந்தவர்கள் தற்போது இந்த வளர்ச்சி திட்டங்களின் வருகையால் வேலை இழந்து சமூக சிக்கல்களால் வெளி பிரதேசங்களுக்கும் வேலைக்குச் செல்ல முடியாமல் வேறு வேலைகளும் கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

 

விவசாயத்தில் பெண்களின் பங்கு பாதிக்கும் மேல் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம் மட்டும் ஏற்பாடு செய்தால் போதாது அந்த பேருந்துகளில் சென்றிறங்கி நாற்று நடுவதற்கு நிலங்களும் மிச்சம் இருக்க வேண்டும். எங்கள் வயல்களின் மீது எட்டு வழி சாலைகள் அமைத்து விரைவு பேருந்துகளை அந்த வழித்தடத்தில் அரசாங்கம் ஓட விடுமானால் அது எங்கள் மண்ணில் இருந்து எங்களை நாடு கடத்தி விட்டு நாங்கள் போற்றிப் பாதுகாத்து வந்த இயற்கை வளங்களை பெருநிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்குதான். அப்படி சொந்த மண் விட்டு நகரங்களுக்கு குடிபெயர்ந்த அனைவரும் ஏதோவொரு வகையில் அந்த பெரு நிறுவனங்களிடமே ஊழியர்களாகி ஊழியம் செய்தே ஆயுளைக் கழிக்கின்றனர். அதை வளர்ச்சி என்று நம்மை நம்ப வைப்பதற்குதான் பெருநிறுவனங்களின் அடிமைகளான அதிகார வர்க்கம் வேலை செய்கிறது.

 

வளர்ச்சி அல்ல படுகொலை

 

இப்படி வளர்ச்சி என்னும் பெயரால் அழிக்கப்படும் விளைநிலங்களால் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் பெரியதாகி ஒரு சில முதலாளிகளின் கைகளில் பெரும் சொத்துக்களும் ஏனைய விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உரிமைகளை இழந்து வாழிடங்களை இழந்து கூலிகளாக தரம் இறக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நாம் நேசிக்கும் சக மனிதர் ஒருவரின் உயிரை யாராவது பறித்து விட்டால் பறித்தவரின் செயல் கொலை என்று கருதப்படுகிறது. ஆனால் நாம் நேசிக்கும் உயிருள்ள ஓர் நிலத்தை பறித்துக் கொள்ளும் அரசு மற்றும் பெருநிறுவனங்களின் கொலைகாரச் செயல் மட்டும் வளர்ச்சி என்று கருதப்படுவது எத்தனை மூடத்தனம். இதுபோன்ற பொறுப்பற்ற வளர்ச்சித் திட்டங்களால் தனிமனித உரிமை பறிப்பும் சமூக ஏற்றத் தாழ்வுகளும் ஏற்படுவதோடு சுற்றுச்சூழலும் உயிர்களின் சமநிலையும் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது என்பதை சமீபத்தில் வெளியான பூவுலகின் நண்பர்களுடைய NLC குறித்தான அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குடிக்கும் நீரில் 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்து இருக்கிறதென்றால் எத்தகைய வளர்ச்சி திட்டம் அது? அந்த வளர்ச்சி தந்த மின்சாரத்தில்தான் நாம் பகுமானமாக காற்று வாங்கி கொண்டு இருக்கிறோம் என்றால், அம்பேத்கர் கூறியதுபோல் வீசும் காற்றில் விசம் பரவட்டும்!

  • அகிலன் பாலகுரு
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments