கடலூர் சிப்காட் பகுதி கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தீர்ப்பாயம் உத்தரவு!

அகில இந்திய அளவில் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என்று பளபளப்பாக போர்த் தப்பட்டிருக்கும் இந்த பெருமை திரையை விலக்கி கீழே பார்த்தால் இந்நாட்டின் மக்கள் அடிப்படைத் தேவையான சுகாதாரமான குடிநீர்த் தேவைக்கே நீதிமன்றப் படிக்கட்டேறும் அவலம்தான் தெரிகிறது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி சென்னையில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அலுவலகம் அளித்துள்ள ஒரு தீர்ப்பு இதற்கு தக்கதொரு உதாரணம்! கடலூர் சிப்காட் வளாகத்தைச் சுற்றி இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் தருவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோடு அதற்கான செலவுத் தொகையை பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனங்களிடம் இருந்து அரசாங்கம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தீர்ப்புரைத்துள்ளது. சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்த புகழேந்தி, செம்மங்குப்பத்தைச் சேர்ந்த சிவசங்கர் மற்றும் ஈச்சங்காட்டைச் சேர்ந்த அமிர்தலிங்கம் ஆகியோர் தான் இந்த வழக்கினை தொடுத்தவர்கள்.

அப்படியானால் என்ன பொருள்? இத்தனை ஆண்டுகாலமும் அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக குழந்தைகள் என்ன மாதிரியான குடிநீரை அருந்தியிருக்கிறார்கள், என்னென்ன நோய்களுக்கெல்லாம் ஆளாகியிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது நமக்கு பதறத்தானே செய்கிறது! ஆனால், பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுக்கு அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய லாற்றும் என்பது கேள்விக்குறிதான்!

பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்தக்கப்பட்ட இந்த வழக்கில் முக்கியப் பங்காற்றிய ‘கடலூர் சிப்காட் பகுதி சமுதாயச் சுற்றுச்சூழல் கண் காணிப்பு குழு’வைச் சேர்ந்த அருள்செல்வம் அவர்கள் இதுபற்றி கூறும்போது:

“பிப்ரவரி 2013 முதல் ஏப்ரல் 2014 வரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடலூர் சிப்காட் பகுதியில் குடிநீர் சோதனை நடத்தியது. மொத்தம் 11 இடங்களில் 41 குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து நடத்தப்பட்ட அந்த சோதனை முடிவு திடுக்கிடும் வகையில் இருந்தது. நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அந்த சோதனை முடிவினைப் பெற்றோம். அதில் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு கன உலோகங்கள் உள்ளதாக கூறப்பட்டிருந்தது. கேட்மியம், மெர்குரி, ஈயம் ஆகியவை அளவுக்கு அதிகமாக இருப்பதால் இந்த குடிநீரை பொதுமக்கள் குடித்தால் அவர்கள் பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு ஆளாக வேண்டிருக்கும். போதிய சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இல்லாமல் தொழிற்சாலைகள் கழிவுகளை ஆண்டுக்கணக்காக வெளியேற்றியதன் விளைவு இப்போது அந்தப் பகுதியின் நிலத்தடி நீரே நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது” என்றார். ஏற்கனவே, காற்று மாசுபட்டுள்ளதால் கடலூர் சிப்காட் பகுதி மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறியிருந்ததையும் இங்கு நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். நிம்மதியாக சுவாசிக்கவும் முடியாமல், தாகத்துக்கு பாதுகாப்பான குடிநீரும் கிடைக்காமல் கடலூர் சிப்காட் அருகே சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் தவித்து வருகின்றன. இந்த தண்ணீரில் குளித்தால்கூட உடல் அரிப்பு உள்ளிட்ட தோல் வியாதிகள் வருகின்றன என்று மக்கள் புலம்புகிறார்கள். “சிப்காட் தொழிற்சாலை எங்கள் பகுதிக்கு வருவதற்கு முன்னால் எங்கள் கிராமங்கள் அவ்வளவு அழகாக, வளமோடு இருந்தன. எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது. நல்ல குடிநீர், சுகாதாரமான காற்று, பச்சைபசேல் வயல்வெளி என்று இருந்த எங்கள் ஊர்ப்பகுதிகள் இப்போது ரசாயன வாடையும் நச்சுக்காற்றுமாக மாறிவிட்டது. பழைய வசந்தகாலம் ஒரு கனவுபோல மறைந்துவிட்டது. எங்களின் அடுத்தத் தலைமுறையினர் நோய்நொடி இல்லாமல் வாழ்வதற்கு இந்த கிராமங்கள் தகுதியிழந்துவிட்டன,” என்று குமுறினார் இந்த வழக்கைத் தொடுத்தவர்களில் ஒருவரான புகழேந்தி. அவர் மேலும் கூறுகையில் “பலகட்டப் போராட்டங்களுக்கு பிறகு 2014-15 ஆண்டுதான் சிப்காட் சுற்றுவட்டார கிராமங்களுக்கு ரூ.15.5 லட்சம் செலவில் கூட்டுக்குடிநீர்த் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், அந்த குடிநீரும் ஒன்றிரண்டு கிராமங்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறது. மற்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள். 3 கிலோமீட்டர் வரை மோட்டார் பைக்குகளில் சென்றுதான் குடிநீர் எடுத்து வருகிறோம். அரசுக்கு எங்கள் கோரிக்கை என்னவென்றால், மக்கள்தொகை பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு இந்த கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் எல்லா கிராமங்களுக்கும் அதன் பயன் சென்றடையும். பெயரளவுக்கு ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதால் எந்த பயனும் இருக்காது. நீண்டகாலத் திட்டம் தேவை,” என்றார்.

இந்த கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதோடு, கடலூர் மாவட்ட நிர்வாகமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சிப்காட் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க முடியும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் முறையான சுத்திகரிப்புக்குப் பிறகுதான் வெளியேற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தவறிழைக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் பகுதி மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழிற்சாலைப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் வகையில் காலாண்டுக் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் தவறாது கூட்டி, அதில் எழுப்பப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும்! பொதுமக்களுக்கு கொஞ்சமாவது நம்பிக்கை ஏற்படும்வகையில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் அமைந்தால் நல்லது! சிப்காட் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதில் இருந்து அது தொடரட்டும்! தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை கடலூரின் நஞ்சுக்கலந்த காற்றோடு பறக்கவிடாமல் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும்!

உடனடியாக செயல்படுத்துமா தமிழக அரசு?

ஆர்வலன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments