கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்திற்கான கருத்து கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய NGT உத்தரவு

தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் இம்மாதம் நடைபெற இருந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் மற்றும் வரைபடம் மீதான கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

தமிழ்நாட்டிற்கான வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை 16.06.2023 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. முழுமையற்றும், தவறாகவும் இருக்கும் இந்த வரைவு அறிக்கை மீது கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தக் கூடாதென பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன்படி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் மூலம் அங்கரிக்கப்பட்ட நிறுவனமான நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM), சென்னை, என்ற ஒன்றிய அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் பணி சுற்றுச்சூழல் துறை மூலம் வழங்கப்பட்டிருந்தது. இத்திட்டம் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டு, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019 வழிமுறைகள் படி, தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு மற்றும் நிலப்பயன்பாட்டு வரைபடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 1:25000 என்ற உருவளவில் தயாரிக்கப்பட்டது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019 இணைப்பு IV, பத்தி 6ன் படி, தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு குறித்து அரசுத் துறைகள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகள்/ ஆட்சேபணைகளை அறிய 16.06.2023 அன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் இணையதளத்திலும் (http://www.environment.tn.gov.in) மற்றும் ENVIS மையத்தின் இணையதளத்திலும் (http://www.tnenvis.nic.in) கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் மற்றும் நிலப்பயன்பாடு வரைபடம் வெளியிடப்பட்டது..

இதன்மீது, நிறுவனங்கள், பொதுமக்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு குறித்த தங்களின் ஆலோசனைகள் /ஆட்சேபணைகள் ஏதுமிருப்பின் இத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் அதாவது (04.08.2023) அன்றுக்குள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுத்து மூலம் சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்புமாறு சுற்றுவ்சூழல் துறை கோரியிருந்தது.

தமிழ்நாட்டின் கடலோர சூழல் அமைவுகளைப் பாதுகாத்திடவும் மீனவ மக்களின் வாழ்வாதார, வாழிட உரிமைகளைப் பாதுகாக்கவும் கடலோர மண்டல மேலாண்மைத் திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் இத்திட்டம் மற்றும் வரைபடங்களை ஆய்வுசெய்து தங்கள் பகுதிகளில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஏதேனும் விடுபட்டுள்ளதா என்பதையும் CRZ பகுதிகள் சரியாக வரையறுக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்வது அவசியம்.

ஆனால், வரைவுத் திட்டம் வெளியான நாள் தொடங்கி பல்வேறு மீனவ அமைப்புகளும் திட்டம் குறைபாடுகளுடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதன்மீது கருத்து கோருவது சட்டவிரோதம் எனவும் கூறிவந்தனர். குறிப்பாக பல கிராமங்களில் மீனவர்களின் மீன்பிடி பகுதிகள், மீன்களின் இருப்பு குறித்த பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை, சில கிராமங்களின் பெயர்கள் தவறாகவும், சில கிராமங்களின் பெயர்களே விடுபட்டுள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக 09.08.2023 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தின் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய மீனவ நல சங்கம், தமிழ்நாடு மீனவ முன்னேற்ற சங்கம், அகில இந்திய பாரம்பரிய மீனவ சங்கம், செங்கல்பட்டு மீனவர் கூட்டுறவு இணையம், செங்கல்பட்டு மீனவ கிராம பஞ்சாயத்து ஆகிய அமைப்புகள் ” மீனவ வாழ்வாதாரத்திற்கு மிகவும் அடிப்படையான மீன்பிடி & மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள்; வாழ்வுரிமையை பாதுகாக்க நீண்ட கால குடியிருப்பு திட்டங்கள், கடல் அரிப்புப் பகுதிகள் போன்றவை சட்டப்பூர்வமாக கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு திட்டங்களில் இவை விடுபட்டுள்ளன” எனக் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையில் வரைவு திட்டம் மற்றும் வரைபடம் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றி தயாரிக்கப்படவில்லை எனக்கூறி  செயற்பாட்டாளர்கள் ஜேசு ரத்தினம், சரவணன் ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 11.08.2023 அன்று இம்மனு மீதான விசாரணை நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு மீது விசாரணைக்கு வந்தபோது “ தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் முழுமையற்றதாக இருப்பதாகவும் இந்த வரைவு திட்டத்தைக் கொண்டு பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது பொருத்தமாக இருக்காது” என தீர்ப்பாயம் தெரிவித்தது.

CZMP வரைவுத் திட்டம் மற்றும் வரைபடம் முழுமையற்றதாகவோ, பிழையாகவோ இருந்தால் பொதுமக்கள் கூட்டம் நடத்தப்படாது எனத் தீர்ப்பாயம் கூறிய நிலையில் 18.08.2023 அன்று இம்மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றபோது  தமிழ் நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தீபக் பில்கி IFS நேரில் ஆஜரானார். “ பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மீனவர்களின் கோரிக்கைகள், கருத்துகளைப் பெற்று அதை வரைவு திட்டத்தில் சேர்ப்போம்” எனக் கூறினார். இதனைக் கேட்ட தீர்ப்பாயம்  ”பல ஆண்டுகளாக மீனவர்களின் இக்கோரிக்கை கவனிக்கப்படாமல் உள்ளது. மீன்கள் எங்கு இனப்பெருக்கம் செய்யும் என்கிற விபரங்கள் கூட இல்லாமல் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கட்டுமானங்கள் இடம்பெறக் கூடாத இடங்கள் தவறாக குறிக்கப்பட்டால் கடலோர சூழல் அமைவுகள் பாதிக்கப்படும்“ எனக் கூறியது.

வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் மற்றும் வரைபடம் முழுமையற்று இருப்பது உறுதியானதால் இம்மாதம் நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் ஆகஸ்ட் 23ல் கடலூர், திருநெல்வேலி மாவட்டங்களிலும், 24ல் விழுப்புரத்திலும், 25ல் தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்களிலும், 26ல் கன்னியாகுமரியிலும், 29ல் தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டங்களிலும், 30ல் மயிலாடுதுறை மாவட்டத்திலும், 31ல் நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நடைபெறவிருந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்து ரத்துச் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவிருந்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்கெனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்குமான வரைவு திட்டமே இன்னும் தயாராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முழுமையான திட்டத்தைத் தயாரித்த பின்னர் அதன்மீது மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துமாறு தமிழ் நாடு அரசுக்கு உத்தரவிட்டு அக்டோபர் 4ஆம் தேதிக்கு மனுவை ஒத்தி வைத்தனர்.

– சதீஷ் லெட்சுமணன்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments