நிலவாழ் பறவைகள் புத்தக விமர்சனம்

சிறுவயதில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் கவிஞர் ப. கார்த்திகேயன் அவர்கள் இயற்றிய ஈரச்சிறகுகள்.  அதனால் எனது கல்லூரி இலக்கிய அணிக்கு ஈரச்சிறகுகள் என்று பெயர் சூட்டினேன். அதற்கு அடுத்து என்னை மிகவும் கவர்ந்த சிறகுகள்(பறவை) அமரபாரதி மற்றும் மேகா சதீஷ் இயற்றிய இந்த நிலவாழ் பறவைகள் புத்தகம்.

இந்தப் புத்தகம் எனது நூலகத்துக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்றுதான் படித்தேன். ஏன் இந்த ஆறு மாதம் தாமதம் செய்தேன் என மிகவும் வருந்துகிறேன். குறிப்பாக இந்த ஆறு மாத இடைவேளையில் வட இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட், ஹிமாச்சல் போன்ற மாநிலங்களில் உள்ள பல மலைப்பிரதேச பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். ஐந்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள மலைப்பகுதிகளுக்குச் சென்றேன். ஆனால், அதில் உள்ள அழகிகளை ரசிக்கத் தவறிவிட்டேன்.

குறிப்பாக இந்தியாவில் உள்ள High altitude zoo எனப்படும் உயரமான உயிரியல் பூங்கா நைனித்தாலில் உள்ளது. அங்கு சென்றபோது சிறுத்தை தூங்கிவிட்டது என வருத்தப்பட்டேன். ஆனால் பல பறவைகளைக் கண்டேன்.  ஜிம் கார்பெட் செல்லும்போது புலியைக் காணவில்லை என்று வருத்தப்பட்டேன். ஆனால் பல பறவைகளைக் கண்டேன். இந்தப் புத்தகத்தை முன்பே படித்திருந்தால் கண்டிப்பாக பல பறவைகளை அதன் சிறப்பியல்புகளோடு அவதானித்திருப்பேன்

இனி மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணங்களிலும் பறவைகளை உணரத் தொடங்குவேன். அதற்கு இப்புத்தக பெரிதும் உதவி புரிந்துள்ளது. இந்தப் புத்தகத்தை படிக்கும்போதே பல நண்பர்களுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டேன். குறிப்பாக அதிகாலையிலும்; மாலை சூரியன் மறையும் பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் எனது தோழி; கோகிலம் எனும் பறவையை ஞாபகப்படுத்தினால். பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் தானியங்கள் வைத்து அதற்காக காத்திருக்கும் இயற்கை புகைப்படக்கலைஞர் பிரணவையும் ஞாபகப்படுத்தியது. அவருக்கும் இந்தப் புத்தகத்தை பரிந்துரைத்தேன்.

என்னைப் பொருத்தவரை இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொன்றும் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.  இந்த புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன் இந்த புத்தகம் யாருக்கானது என்று பட்டியலிடுகிறேன்.

 

1) தமிழ் நாட்டிலுள்ள அனைத்து பள்ளி நூலகத்திலும் இருக்க வேண்டிய புத்தகம்.

 

2) பள்ளிக்குச் செல்லாமல் ஹோம் ஸ்கூலின் செய்யும் அனைத்துக் குழந்தைகள் வீட்டிலும் இருக்க வேண்டும்.

 

3) பாலூட்டிகள் பற்றி வகுப்பெடுக்கும் அனைத்து உயிரியல் ஆசிரியரும் படித்திருக்க வேண்டும்.

 

4) குழந்தைளை இயற்கையோடும் இயற்கை சார்ந்தும் வளர்க்க நினைக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும்.

 

5) அடிக்கடி பயணங்கள் செய்யும் நண்பர்களுக்கு பயணங்களில் கண்டிப்பாக ஒரு புதிய தாக்கத்தை இப்புத்தகம் ஏற்படுத்தும்.

 

6) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் பயனுள்ள வகையில் பறவைகளின் சத்தங்கள் அடங்கிய க்யூ ஆர் கோடுகள் உள்ளது. கண்டிப்பாக இது அவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

 

புத்தகத்தைப் பற்றிய மிக நுணுக்கமான விமர்சனங்கள் ….

 

❗முதலில் கவர்ந்தது- அலகின் அழகு. அலகுகளின் அமைப்புகள் எப்படி பறவைகளின் சூழல் மற்றும் அவற்றின் இரையைப் பொறுத்து மாறுபடும் என்ற விளக்கமும் அதன் சித்திரங்களும் மிகவும் வியப்பாக இருந்தது.

 

❗அறியாமை பல அகன்றது. “மைனா” என்பது தமிழ் பெயர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் தமிழ் பெயர் நாகணவாய். அதன் தமிழ் விளக்கத்தை கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும். தமிழ் மொழியின் செழுமையையும் அறிவீர்.

 

❗குயில்களின் தன்மைகளில், செண்பகம் என்னை மிகவும் கவர்ந்தாள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 

❗அக்கா குயிலின் கதையும் “அற்புதம்”.

 

❗சிறுவயதில் நான் வரைந்த ஓவியங்களில்  “V” வடிவில் பறந்த பறவை பச்சைப் பஞ்சுட்டான் என்று அறிந்தேன்.

 

❗ஒரு வருடத்திற்கு முன்பு கான்க்ரீட் காடான நொய்டாவின் 21வது மாடியில் வசித்து வந்தேன். மாடப்புறாவை கரிச்சிக் கொட்டாமல் நாட்கள் சென்றதில்லை. அவைகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போவதற்கு காரணத்தையும் அறிந்தேன்.

 

❗மரங்கொத்தியின் பரிமாணத்தை மறக்காமல் படியுங்கள் ஆச்சரியத்தை உண்டாக்கும்.

 

❗அறிவியல் ஆராய்ச்சியாளராக இருந்தும் சிட்டுக்குருவி குறைந்து உள்ளது என்பதை நம்பிக் கொண்டு தான் இருந்தேன். குருவிகள் நகரத்தில் காணாமல் போன காரணத்தையும் அறிந்தேன்.

 

❗ஆண் தூக்கணாங்குருவியின் சுயம்வரம் சேட்டையும் சிரிப்பை தந்தது.

 

❗ஏன் மயில் ஆடினால் மழை வரும் என்ற ரகசியத்தையும் அறிந்தேன்.

 

❗எனக்குத் தமிழில் ஆர்வம் அதிகம் உள்ளதால் நண்பர்கள் பலர் பெயர் பரிந்துரை கேட்பது உண்டு. இப்பொழுது சொல்கிறேன் மகள் பிறந்தால் விச்சுளி என்ற பெயரிடுங்கள் காரணம் என்னவென்று புத்தகத்தில் படியுங்கள்.

 

❗நண்பர்கள் என்னை “பக்கி” என்று அழைப்பதுண்டு. உண்மையான பக்கி யார் என்று புத்தகத்தின் கடைசியில் உள்ளது.

 

எனக்கு எப்படி இந்தப் புத்தகம் மிகவும் பயனுள்ளதோ; மகிழ்ச்சி அளித்ததோ அதுபோல வாசிக்கும் அனைவருக்கும் அமையும் என்று நம்புகிறேன். இந்தப் புத்தகத்தைக் கண்டிப்பாக அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். வாசித்து மகிழுங்கள்!!

  • முனைவர். அபிநயா சேகர்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments