சூழலைக் காக்க ஒன்பது விதிகள்

 

பல நேரங்களில் நாம் செய்யும் செயல்களினால்  சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை நாம் உணர்வதேயில்லை. உதாரணமாக ஒரு புறம் சூழலைக் காக்கவும் கரிவழியை உட்கிரகிக்கவும் மரங்கள் நடும் நாம் இன்னொரு புறத்தில் குப்பைகளை எரித்தும், பட்டாசுகள் கொழுத்தியும் கரிக்காற்றோடு பல நச்சுக்களையும் உருவாக்கிச் சூழலைப் பாழ்படுத்துகிறோம். இப்படிப் புரிதலற்ற ஒரு சூழல் சீர்கேடுதான் மிகை நுகர்வு.

இங்கு நடக்கும் ஒவ்வொரு சூழல் சீர்கேட்டின் மூல காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் அது ஏதோ ஒரு பொருளின் உற்பத்திச் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும். தென் தமிழகத்தின் கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட் முதல் வடசென்னையின் அனல்மின்  நிலையங்கள் வரை இது பொருந்தும். பொருட்களின் உற்பத்தியும் மிகை நுகர்வும் புவியின் இயற்கை வளங்களைச் சூறையாடுவதோடு சூழலையும் பாழ்படுத்துகின்றன. இன்றைய நுகர்வுக் கலாச்சார யுகம் சந்தைப் பொருட்களை வாங்கிக் குவிப்பதே மகிழ்ச்சியெனவும் ‘கெத்து’ எனவும் தனது விளம்பரங்கள் மூலமாக இங்குக் கட்டமைத்திருக்கிறது. இதற்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரையாகின்றனர். கடன் வாங்கியாவது இந்தக் கெத்தான வாழ்க்கையை வாழ பலரும் போராடுகின்றனர்.

இந்தச் சந்தைப் பொருட்களின் மீதான மோகத்திலிருந்து வெளிவருவது நமது பொருளாதாரத்தையும் உண்மையான மகிழ்ச்சியையும் மேம்படுத்துவதோடு இப்புவியின் சூழலையும் காக்கும். இந்தச் செயல்பாட்டிற்கான அடிப்படையான ஆங்கில எழுத்து “R” இல் தொடங்கும் ஒன்பது விதிகளை இங்குச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

 

  1. மறுபரிசீலனை செய்யுங்கள் (Rethink)

 

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் சுற்றுச்சூழல் தாக்கத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் உண்ணும் உணவு, வாங்கும் பொருட்கள், உற்பத்திச் செய்யும் பொருட்கள், செய்யும் வேலைகள் எத்தகைய சூழல் தாக்கத்தை உருவாக்குகிறது என்று உணர முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு செயல்பாடுகள், நுகர்வுப் பண்டங்கள், நீங்கள் பெறும் சேவைகளைப் புதிய கோணத்தில் அணுகுங்கள். அவற்றின் கரிம வழித்தடம், மறைநீர் (virtual water), அவை தமது உருவாக்கத்தில் / பயன்பாட்டில் / விநியோகத்தில் / கழிவுநீக்கத்தில் வெளிப்படுத்திய / வெளிப்படுத்தும் நச்சுக்கள், அவை அபகரித்த இயற்கை வளங்கள், அவற்றின் அவசியம் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் புரிதலின் அடிப்படையில் அந்தப் பொருளோ அல்லது சேவையோ அவசியமானதா என்பதை முடிவெடுங்கள்.

 

  1. புறக்கணியுங்கள் (Refuse)

 

உங்கள் பரிசீலனையின் முடிவில் அத்தியாவசியத் தேவையற்றதாய் உணரும் பொருட்களையும் செயல்பாடுகளையும் அறவே தவிருங்கள். உதாரணமாக நீங்கள் பேருந்துப் பயணம் செய்யும்போது தண்ணீர் புட்டியை எடுத்துச் சென்றிருந்தாலும் அங்கு உங்களுக்கு ஒரு தண்ணீர் புட்டியும் நொறுக்குத் தீனிப் பொட்டலமும் கொடுக்கப்படலாம். நீங்கள் கடைக்கு ஒரு பையை எடுத்துச் சென்றாலும் உங்கள் கைகளில் ஒரு நெகிழிப்பைத் திணிக்கப்படலாம். கடையில் நீங்கள் வாங்கும் ஒரு பொருளுக்கு உங்களுக்குப் பயன்படாத இன்னொரு பொருள் இலவசமாகக் கொடுக்கப்படலாம். இவை மட்டுமின்றி வெறும் ஆடம்பரத்திற்கான பொருட்கள்; உதாரணமாக அலைபேசியில் நேரம் பார்க்க முடியும்போது கைக்கடிகாரம் எதற்கு? இவை அனைத்தையும் முற்றிலுமாகப் புறக்கணியுங்கள்.

 

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களும் நீண்ட ஆயுளுடையவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சில நொடிகளே ஆயுட்காலமுடைய பொருட்கள் உதாரணமாகக் காது குடையும் குச்சிகள், டிஷ்யூ பேப்பர்கள் முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் நெகிழி ஸ்டிரா உட்பட அத்தியாவசிமற்ற அத்தனை பொருட்களையும் புறக்கணியுங்கள். நீங்கள் இவற்றை இன்னொருவருக்கு வழங்குமிடத்தில் இருந்தாலும்கூட இவற்றைக் கொடுப்பதைத் தவிருங்கள். முடிந்தால் நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.

 

  1. குறையுங்கள் (Reduce)

 

புறக்கணிக்க இயலாத அத்தியாவசியத் தேவைகளைக் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள். உதாரணமாக எத்தனை பேர் இருக்கும் வீடாக இருந்தாலும் ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் தேவையற்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட அலைபேசிகள் ஒருவருக்குத் தேவையற்றது. விதவிதமான காலனிகள், ஆடை அலங்காரப் பொருட்கள், பசிக்காக அல்லாத சுவைக்கான உணவு போன்றவற்றைக் குறையுங்கள். நீர், மின்சாரம், எரிபொருள் போன்றவற்றை மிகுந்த சிக்கனத்துடன் பயன்படுத்துங்கள்.

 

  1. பழுதுபார்த்துத் தொடர்ந்து பயன்படுத்துங்கள் (Repair & Reuse)

நிறுவனங்களின் வணிகம் பெருக வேண்டுமென்றால் பொருட்கள் தொடர்ந்து வாங்கப்பட வேண்டும். பொருட்கள் தொடர்ந்து வாங்கப்பட வேண்டுமென்றால் பயன்பாட்டில் உள்ள பொருட்கள் தொடந்து தூக்கியெறியப்பட வேண்டும். இந்தத் தூக்கியெறிதலையே இன்றைய விளம்பரயுகம் நாகரிகமாய் நமக்குக் கற்றுத்தருகிறது. இதை இன்றைய நவீனப் பொருளாதார உற்பத்திமுறை திட்டமிட்ட அழித்தொழிப்பு (Planned Obsolescence) என்ற பெயரில் நடைமுறைப்படுத்துகிறது. இதன்படியே நாம் பயன்படுத்தும் அலைபேசிகள் போன்ற மின்னணு சாதனங்கள் எளிதில் பழுதுபார்க்க முடியாதவையாகவோ இல்லை குறைந்த ஆயுளே உடையவையாகவோ வடிவமைக்கப்படுகின்றன.

நாம் பயன்படுத்தும் பொருட்கள் நல்ல நிலையிலேயே இருந்தாலும் பலநேரங்களில் ‘மேலும் புதிய அட்வான்ஸ் ஃபார்முலா”, “அட்வான்ஸ் டெக்னாலஜி”, “இன்னும் மேம்பட்டத் திறன்” போன்ற கவர்ச்சியான வார்த்தைகளால் அவற்றைத் தூக்கியெறிந்துப் புதிய பொருட்களை வாங்கத் தூண்டப்படுகிறோம். அதுமட்டுமின்றி நம்மைச் சுற்றிய வணிக உலகம் ஒரு பொருள் நீண்டகாலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதைக் கவுரவக் குறைவாகச் சித்தரிக்க முயல்கிறது. இந்த மாயைகளில் நாம் சிக்கிக்கொள்ளாது நாம் பயன்படுத்து ஒவ்வொரு பொருளையும் தேவைப்பட்டால் பழுது பார்த்து நீண்ட காலம் அப்பொருளின் முழு ஆயுழுக்கும் பயன்படுத்த வேண்டும்.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் ஏராளம் நீரை வீணடித்துப் பசுமை இல்ல வாயுக்களை உமிழ்ந்து, எரிபொருளை விழுங்கி சூழலை மாசுபடுத்தி நம் கைகளை அடைகின்றன. அவற்றை மதிப்புடன் பயன்படுத்துங்கள்.

 

  1. மாற்றுப் பயன்பாட்டுக்கு உட்படுத்துங்கள் (Repurpose)

ஒரு பொருள் தனக்கான தேவையை முடித்த பின்னர் அதை மாற்றுப் பயன்பாட்டுக்கு உட்படுத்தி அதன் ஆயுளை அதிகரியுங்கள். உதாரணமாகப் பயன்பாடு முடிந்த நெகிழிப் புட்டிகளைப் பேனா ஸ்டாண்டுகள் போன்ற வேறு பல பயன்பாட்டுக்குரிய பொருட்களாக நம்மால் எளிதாக மாற்றியமைக்க முடியும். ஆடைகளைத் தரை விரிப்புகளாக்க முடியும். பயன்படுத்திய வாகனங்களின் டயர்களைத் தோட்டங்களில் அமரும் இருக்கைகளாகவோ இல்லை சுவர்களாகவோ வடிவமைக்க முடியும். இது இன்று ஒரு பொழுதுபோக்காகவே (Art from waste) வளர்ந்துவருகிறது. இவ்வாறாகக் காலாவதியான பொருட்களின் பயன்பாட்டை வேறுவிதத்தில் மாற்றுவதன் மூலம் நாம் அந்தப் பொருள் குப்பைக்குச் செல்வதைத் தவிர்க்கிறோம். அதுமட்டுமின்றிப் புதிய மூலப்பொருட்களின் தேவையும் குறைவதோடு பயன்பாட்டில் உள்ள மூலப்பொருட்கள் வீணாவதும் தடுக்கப்படுகிறது.

இந்த மாற்றுப் பயன்பாடுகளைப் பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் அவர்களின் படைப்புத்திறனை அதிகரிக்கவும் சூழலைக் காக்கவும் ஒருசேர உதவும் யுக்தியாகவும்கூடப் பயன்படுத்த முடியும்.

  1. பரிசளியுங்கள் (Regift)

நம் சமூகத்தில் ஒருவருக்கொருவர் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளுதல் இன்று பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. முன்பு நாம் பயன்படுத்திய பொருட்களை மிக எளிதாக எந்தச் சங்கடமுமின்றிப் பரிமாறிக் கொண்ட நாம் இன்று அதைக் கவுரவக் குறைவாக நினைக்கிறோம். ஒருவருக்கொருவர் பொருட்களைப் பரிமாறிக்கொள்வதன்மூலம் நம் சமூகங்களில் உறவுகள் வலுப்படுவதோடு புதிய பொருட்களுக்கான பொருளாதாரத் தேவைகளும் குறையும்,

நீங்கள் பயன்படுத்திய நல்ல நிலையில் உள்ள பொருட்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். ஆடைகள், புத்தகங்கள், பாத்திரங்கள், விழையாட்டுச் சாதன்ங்கள், பாத்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டக் காலத்துக்குப் பின்னர்த் தூக்கி எறிவதற்குப் பதிலாகத் தேவையிலுள்ளவர்களுக்கு இலவசமாகவோ இல்லை குறைந்த விலையிலேயோ கொடுப்பதன் மூலமாக நாம் புதிய பொருட்களின் உற்பத்தியையும் சூழல் சீர்கேட்டையும் தடுப்பதோடு பிறருக்கு உதவவும் செய்கிறோம். நமக்கு அதில் சிரமங்கள் இருந்தால் OLX போன்ற இணையச் சேவைகளையும் அதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். கொடுப்பதற்கு மட்டுமல்ல நமக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்குக்கூட இவற்றைப் பயன்படுத்தலாம்.

 

  1. மறுசுழற்சி செய்யுங்கள் (Recycle)

பயன்பாடு முடிந்தப் பொருட்களைக் குப்பையில் வீசுவதற்குப் பதிலாக மறுசுழற்சி செய்யத்தக்க அத்தனை பொருட்களையும் மறுசுழற்சிக்கு உட்படுத்துங்கள். இது இயற்கை மூலப் பொருட்கள் குப்பையில் வீணாவதைத் தடுப்பதோடு புதிய மூலப் பொருட்களுக்காகப் பூமியின் வளங்கள் அதிகம் சுரண்டப்படுவதைத் தவிர்க்க உதவும்.

  1. தொழுவுரமாக்குங்கள் (Rot)

நாம் வீடுகளில் உருவாக்கும் குப்பையில் 50 விழுக்காட்டுக்கும் மேல் மட்கும் குப்பைகள்தான். அவற்றை மட்கச் செய்து உரமாக்குவதால் என்னென்ன நடக்கிறது என்று பார்க்கலாமா?

  • நம் குப்பைகளை நாமே கையாள்வதால் ஊராட்சி அமைப்புகளின் சுமையைக் குறைக்கிறோம்.
  • நம் தோட்ட்த்திற்கான உரத்தை நாமே உற்பத்திச் செய்கிறோம்.
  • நச்சு உரங்கள் பயன்படுத்தப்படாத கீரைகள் மற்றும் காய்கறிகளைப் பெறுகிறோம்.
  • மாநகராட்சி குப்பைக் கொட்டுமிடங்களில் உருவாகும் பசுமையில்ல வாயுவான மீத்தேனின் உற்பத்தியைக் குறைக்கிறோம்.
  • இன்றைய இயந்திரகதியான வாழ்க்கையில் நாம் வளர்க்கும் சில தொட்டிச் செடிகள் கூட நம்மை உலக அழுத்தங்களிலிருந்து மீட்டு மகிழ்ச்சி தரவல்லது.

இவற்றைச் செய்யப் பெரிய கட்டமைப்புகள் எதுவும் தேவையில்லை. ஒரு சில பழைய டப்பாக்களும் கொஞ்சம் மனசும் இருந்தாலே போதும். ‘கம்போஸ்ட்’ எனப்படும் தொழுவுரத்தைத் தயாரிப்பதுகுறித்து ஏராளமான தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

  1. மகிழ்ந்திருங்கள் (Rejoice)

இறுதியானது ஆனால், முக்கியமானது. மகிழ்ச்சியுடன் வாழ்வோம். பொருட்களின் மீதான கவர்ச்சியையும் அவற்றைப் பெறுவதால் கிடைக்கும் உடனடி மகிழ்ச்சியையும் தவிர்த்து நம்முடைய நேரத்தையும் பணத்தையும் நம்முடைய திறமைகளை மேம்படுத்தவும் உறவுகளைச் செழுமைப்படுத்தவும் செலவிடுவோம்.

நமக்கு மட்டுமல்ல; நம் ஒரே வாழிடமான புவிக்கும் அதுவே நல்லது.

-ஜீயோ டாமின்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments