வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் குழாய்களை மாற்றுவதில் தாமதம்; எச்சரிக்கும் பசுமைத் தீர்ப்பாயம்

Photo: Shibimol, The Wire

வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் குழாய்களை குட்டைக்கு எடுத்துச் செல்லும் பழுதான குழாய்களை புதிய குழாய்களைக் கொண்டு மாற்றும் பணிகளை முடிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகில் உள்ள எண்ணூரில் வடசென்னை அனல்மின் நிலையம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து உருவாகும் நிலக்கரி சாம்பலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றுக் மின் பகிர்மானக்கழகம் அனல்மின் நிலையத்திற்கு அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாற்றில் கொட்டி வந்தனர். காமராஜர் துறைமுகம் தனது விரிவாக்கப் பணிகளுக்காக கடலைத் தூர்வாரியதில் வெளியேற்றப்பட்ட 73 ஆயிரத்து 113 க்யூபிக் மீட்டர் கழிவுகளை கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதிகளில் கொட்டியிருந்தது. இதனை அகற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரவிமாறன் மற்றும் ஆர்.எல். சீனிவாசன் ஆகியோர்  2016ஆம் ஆண்டு தென்மண்டல தேசிய பசுமைத்த் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கில் 2020ல் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளில், ’சாம்பல் கழிவுகளை எடுத்துச் செல்லும் பழைய குழாய்களை ( குழாய் எண் 1, 2, 4 மற்றும் 5) மாற்றும் பணிகளை 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்’  என்பதும் ஒன்றாகும். ஆனால், இக்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தால்( TANGEDCO) அனைத்து பழைய குழாய்களையும் மாற்ற முடியவில்லை. இதற்கான கூடுதல் அவகாசம் கோரி TANGEDCO மற்றும் வடசென்னை அனல்மின் நிலையமும் காலக்கெடு முடிந்திலிருந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் புதிய மனு ஒன்றை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.

TANGEDCO நிறுவனம் வடசென்னை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் எண் சாம்பல் குழாயை புதிய குழாய் கொண்டு 09.04.2021 அன்று மாற்றியிருந்தது. மேலும் பிற குழாய்களை ( குழாய் எண், 1, 2, 4, 5) ஜூன்  2022க்குள் மாற்றிவிடுவோம் எனவும் கூறியிருந்தது. இதனையடுத்து 20.04.2022 அன்று சாம்பல் கழிவுகளை குட்டைக்கு எடுத்துச் செல்ல குழாய் எண் 2ஐ பயன்படுத்த தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்தது. மேலும் 25.04.2022 அன்றிலிருந்து குழாய் எண் 1 (பழையது), 2 மற்றும் 3 வழியாகவே சாம்பல் கழிவுகள் குட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வந்தன.

இதற்கிடையில் மொத்தம் 4 முறை குழாய்களை மாற்றுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் அதிக விலை, ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்காதது உள்ளிட்ட காரணங்களால் ஏல நடவடிக்கை கைவிடப்பட்டது. இதன் காரணமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பழைய குழாய்களை மாற்ற முடியவில்லை என TANGEDCO தீர்ப்பாயத்தில் தெரிவித்தது. மேலும் புதிய குழாய்கள் அமைக்கும் பணிக்கான ஏல அறிவிப்பு 13.01.2024  அன்று விடுக்கப்பட்டுள்ளதாகவும், 31.01.2024 அன்று ஏலம் திறக்கப்படும் என்றும் TANGEDCO தீர்ப்பாயத்தில் தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில் குழாய் எண் 4ஐ மாற்றும் பணிகளுக்கு ஆகஸ்ட் 2024 வரையிலும், குழாய் எண் 5ஐ மாற்றும் பணிகளுக்கு நவம்பர் 2024 வரையிலும், குழாய் எண் 1ஐ மாற்றும் பணிகளுக்கு டிசம்பர் 2024 வரையிலும் கால அவகாசம் வேண்டும் என TANGEDCO தனது மனுவில் கோரியிருந்தது.

இம்மனு மீதான உத்தரவை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு 31.01.2024 அன்று பிறப்பித்தனர். அதில், TANGEDCO குழாய்களை மாற்றுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே நிகழவில்லை என்பதாலும், கெடுவாய்ப்பால இப்பணியை ஏலத்தில் எடுக்க தகுதி வாய்ந்த நிறுவனங்கள் கிடைக்கவில்லை என்பதாலும் பழைய குழாய்கள் 1, 4 மற்றும் 5ஐ மாற்றுவதற்கு தீர்ப்பாயம் கூடுதல் கால அவகாசம் வழங்குவதாகக் கூறினர்.

குழாய்களை மாற்றுவதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்னர் புதிய மனு தாக்கல் செய்யப்பட்ட குறித்த் அதிருப்தி வெளிப்படுத்திய தீர்ப்பாயம் பொதுமக்கள் நலன் கருதியே கால அவகாசம் வழங்கப்பட்டதாகக் கூறியது. தற்போது நடைமுறையில் உள்ள ஏலத்தில் எந்த காலதாமதமும் ஏற்படக் கூடாது எனத் தெரிவித்த தீர்ப்பாயம் ரூ 1 லட்சத்தை 2 வாரங்களில் தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையிடம் செலுத்த வேண்டும் எனவும் அத்தொகையானது எண்ணூர் கழிமுக மற்சீரமைப்புக்காகச் செலவிடப்பட வேண்டும் எனத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

கடந்த ஜனவரி மாதம் மணலி-எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல புதிய திட்டங்களை தமிழ் நாடு முதலமைச்சர் ”தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து சாம்பல் அணைக்கட்டுக்கு ஈரமான சாம்பலை எடுத்துச் செல்லும் குழாய்கள் புதுப்பிக்கப்படும்” என்றும் அறிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை சாம்பல் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கலந்துள்ளன. தமிழ் நாடு அரசு இனியும் தாமதிக்காமல் பழைய குழாய்களை மாற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

– செய்திப் பிரிவு

extension order

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments