ஊழிக்காலமும் உலகழிக்கும் அணுசக்தியும்

Russia Nuclear Drills

கூடங்குளம் அணு உலைத் திட்டத்திற்கு எதிராக இடிந்தகரையில் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2014-ஆம் ஆண்டு இறுதிவரை ஒரு நீண்ட நெடிய போராட்டம் நடந்தபோது, போராட்டக்காரர்கள் ஏறத்தாழ ஐம்பது கேள்விகளை ஒன்றிய, மாநில அரசுகளிடமும், அணுசக்தித் துறையிடமும் முன் வைத்தோம்.

“கூடங்குளத்தின் மீது ஒரு போர்க்காலத் தாக்குதலோ அல்லது ஒரு பயங்கரவாத நடவடிக்கையோ கட்டவிழ்த்து விடப்பட்டால், என்ன செய்வது?” என்பது அவற்றுள் ஒரு கேள்வி. பதில்கள் ஏதுமில்லா அணுசக்தித் துறையும், பதில் பேச முடியாத ஒன்றிய, மாநில அரசுகளும், இவர்களுக்குப் பிறழாது தாளம் போட்டு பிழைப்பு நடத்திய சில அரசியல்வாதிகளும், ஊடகங்களும் எங்களின் இந்த கேள்வியைக் கண்டுகொள்ளாமலும், அல்லது கைத்தட்டிக் கேலி பேசியும் புறக்கணித்தார்கள்.

“போர்க்காலமாம், தாக்குதலாம்? போர்களை வரவிடாமல் தடுப்பதே அணு ஆயுதங்கள் தான், அவை நம்மிடம் ஏராளமாக இருப்பதால் தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் எனும் எளிய உண்மையைக்கூட இவர்கள் புரிந்துகொள்ளவில்லை” என்று எள்ளி நகையாடினர் சிலர். “பயாஸ்கோப் படமா பயங்கரவாதத் தாக்குதல்? தென்னிந்தியாவில் ஏதாவது அப்படி நடந்திருக்கிறதா? நடக்கத்தான் விட்டுவிடுவோமா? ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல, நாட்டின் வளர்ச்சியைக் கண்டு மிரண்டுபோன தேசத் துரோகிகளுக்கு அருமையானத் திட்டங்கள் எல்லாம் சிறுமையாகத் தெரிகின்றன” என்று வக்கணை பேசினர் சிலர்.

அணுசக்தியைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும் அணு ஆயுதங்கள் அசையும் அணு உலைகள் என்பதும், அணு உலைகள் அசையாதிருக்கும் அணு ஆயுதங்கள் என்பதும். இரண்டுமே இனிவரும் போர்களில் பயன்படுத்தப்படும் என்பதை உக்ரைன் போர் கட்டியம் கூறி கடிதில் உரைக்கிறது.

அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய விரிவாக்கவாத சூழ்ச்சிகளை வகை தொகையின்றிப் பெருக்கி, ரஷ்ய நாட்டு முன்வாசலிலேயே கொண்டுவந்து நிறுத்தின. ‘எங்கள் பாதுகாப்பு’ என்னும் பெயரால் பிறரின் பாதுகாப்பை அவர்கள் உருக்குலைப்பது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

இந்த மேற்கத்திய ஏகாதிபத்திய ஆணவத்தை கிழக்கத்திய ஏகாதிபத்தியமாய் இருந்து இன்று ஏகாந்தமாய் நிற்கும் ரஷ்யா எப்படி ஏற்றுக்கொள்ளும்? எழுந்து நிற்காமலிருந்தால், ஏனென்று கேட்காமல் விட்டால் முதலுக்கே மோசம் வரும் என்றறிந்த ரஷ்யா உக்ரைன் நாட்டுக்கு நெருக்கடி கொடுத்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு புகாரெஸ்ட் நகரில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் ஜியார்ஜியா மற்றும் உக்ரைன் உறுப்பு நாடுகளாக சேர்த்துக்கொள்ளப்படும் என்று நேட்டோ அறிவித்ததுமே, ரஷ்யா ஜியார்ஜியாவைத் தாக்கியது. பழமையிலிருந்து பாடம் கற்காதவர்கள் பட்டுத்தான் படிக்கவேண்டும்!

வெறும் வாய் வார்த்தைகளால் நடந்துகொண்டிருந்த ரஷ்ய-உக்ரைன் பிரச்சனை, கைகளை முறுக்குவதாய் உருமாறியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் எல்லைகளில் குவிக்கப்பட்டனர். பதிலுக்கு சனவரி 24, 2022 அன்று நேட்டோப் படைகள் ஆயத்தமாக்கப்பட்டன. அடுத்த நாளே ஆறாயிரம் இராணுவத்தினருடனும், அறுபது போர் விமானங்களுடனும் ரஷ்ய போர் ஒத்திகைத் தொடங்கப்பட்டது.

பிப்ரவரி 10, 2022 அன்று ரஷ்யாவும், பெலரூஸ் நாடும் பத்து நாள் இராணுவப் பயிற்சியை மேற்கொண்டனர். பிப்ரவரி 17 அன்று உக்ரைன் நாட்டின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பிரிவினை கோரும் பகுதிகளில் சண்டை தொடங்கியது.

பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைன் நாட்டின்மீது முழு வீச்சில் போர் தொடுத்தது. கடந்த 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அணுமின் நிலைய விபத்து நடந்த செர்னோபில் மற்றும் அதன் அருகிலுள்ள பிரிபியட் நகரங்களில் ரஷ்ய படைகளுக்கும் உக்ரைன் இராணுவத்திற்கும் கடும் சண்டை நடந்து, வெறும் இரண்டு மணி நேரத்தில் இந்நகரங்களும், சுற்றியுள்ளப் பகுதிகளும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

பிப்ரவரி 27 அன்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் “நேட்டோ நாடுகள் வன்மம் மிக்க அறிக்கைகளை வெளியிடுவதால், ரஷ்ய இராணுவத்தின் தடுப்பு ஆயுதங்களைப் (deterrence forces) போர் பயன்பாட்டிற்கான சிறப்புத் தயார் நிலையில் (“special mode of combat service”) வைத்திருக்கும்படி” ஆணையிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. மன்றம், உலக குடிமைச் சமூகம் அனைவருமே இந்த அணு ஆயுத மிரட்டலை ஒரே குரலில் எதிர்க்க, நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் (Jens Stoltenberg)“ஆபத்தான, பொறுப்பற்ற செயல்” என்று அதனை வன்மையாகக் கண்டித்தார். ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் (Stéphane Dujarric)அணு ஆயுதப் போர் “நினைத்துப் பார்க்க முடியாதது” என்று வேதனை தெரிவித்தார்.

மார்ச் 2, 2022 அன்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergey Lavrov), நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அணு ஆயுதப் போர் ஒன்றைத் தொடங்க விரும்புவதாகவும், “மூன்றாம் உலகப் போர் அணு ஆயுதப் போராகவும் பேரழிவைத் தருவதாகவும் இருக்கும்” என்றும் எச்சரித்தார். விளாடிமிர் புடின் ஆளும் ரஷ்யா, சதாம் உசேன் ஆண்ட ஈராக் அல்ல. ஈராக் நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் (Weapons of Mass Destruction) இருக்குமோ என்கிற அச்சம் மட்டும்தான் இருந்தது, ஆனால், ரஷ்யாவில் அவை ஏராளாமாக இருப்பதும், எக்குத்தப்பாக ரஷ்யாவைத் தொட்டு விளையாடினால், அவர்கள் போட்டுத் தாக்கிவிடுவார்கள் என்பதும் பனிப்போர் காலத்திலிருந்தே அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாகத் தெரியும்.

“உங்கள் பாதுகாப்பிற்கு ஊறு ஏற்பட்டால் ஓடோடிவந்து உங்களைக் காப்போம்” என்று உக்ரைன் அரசுக்கு ஆசைக்காட்டி மோசம் செய்த அமெரிக்காவும், நேட்டோவும் தங்களுக்கே ரஷ்ய அணு ஆயுத ஆபத்து ஏற்படும் என்றறிந்த மறுகணமே மாயமாயினர். இது தன்னலமிக்க, தான்தோன்றித்தனமான அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய பத்தாம்பசலித்தனத்தின் உச்சபட்ச வெளிப்பாடு.

அணு ஆயுதங்கள் போர்களைத் தடுத்து நிறுத்துபவை; அணு ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கும் இரண்டு நாடுகளுக்கிடையே போர் எழ வாய்ப்பே இல்லை; அணு ஆயுதங்கள் சமாதானத் தூதுவர்கள் என்றெல்லாம் கதைத்துக் கொண்டிருந்த ‘தடுப்புக் கோட்பாடு’ (deterrence theory) தவிடுபொடியாகி விட்டக் கதை மிகப் பழையது. எடுத்துக்காட்டாக, பனிப்போர் காலத்தில் நடந்த நிழல் போர்களின் (proxy wars) பட்டியல் மிக நீளமானது. அதேபோல, கடந்த 1962-ஆம் ஆண்டு நடந்த ‘கியூபா ஏவுகணை நெருக்கடி’ (Cuban Missile Crisis) சம்பவம் முதல் தற்போதைய உக்ரைன் போர் வரை அணு ஆயுத மிரட்டல்கள், உரசல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவை மட்டுமல்லாமல், அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் 1999-ஆம் ஆண்டு நடத்திய கார்கில் போர், அணு ஆயுதங்கள் சமாதானத் தூதுவர்கள் அல்ல என்கிற பேருண்மையை உலகுக்குப் படம்பிடித்துக் காட்டியது.

இப்படியாக, உக்ரைன் போரில் அணு ஆயுதப் பேய் ஒருபுறம் ஆடிக்கொண்டிருக்க, அணுசக்திப் பிசாசு இன்னொருபுறம் சுற்றிச்சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. மார்ச் 4 அன்று உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய அணு உலைப் பூங்காவான சபோரிஜியா (Zaporizhzhia) அணு உலைகளின் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவில் நடந்த குண்டு வீச்சாலும், அதனைத் தொடர்ந்து பற்றியெரிந்த பெரு நெருப்பாலும் உலகம் பேச்சு மூச்சின்றி உறைந்து நின்றது. மூன்று உக்ரைன் நாட்டு இராணுவத்தினரைக் கொன்று, ரஷ்யப் படைகள் அந்த அணுமின் நிலையத்தைக் கைப்பற்றின. அந்தத் தாக்குதலில் ஆறாம் அலகு அணு உலையின் மின்மாற்றி (transformer) சேதமடைந்தது.

அடுத்த நாள் உக்ரைன் நாட்டின் ‘அரச அணுசக்தி ஒழுங்காற்றுப் பரிசோதரகம்’ (State Nuclear Regulatory Inspectorate) அணு உலை வளாகத்திற்குள்ளே இருந்த ஒரு பயிற்சி மையம் தான் தாக்குதலுக்கு உள்ளானது என்றும், பல மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது என்றும், கதிர்வீச்சு அளவில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென்றும் அறிவித்தது.

ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி இகோர் கோனஷென்கோவ் (Igor Konashenkov) சபோரிஜியா அணு உலைகளின் மீது நடந்த தாக்குதல் உக்ரைன் நாட்டு ஆயுதக்குழு ஒன்றினால் நடத்தப்பட்ட நாச வேலை என்று விவரித்தார். ஆனால் உக்ரைன் நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் படைக்குழுவின் செயலர் ஓலெக்சி டானிலோவ் (Oleksiy Danilov) அது ரஷ்யர்களால் நடத்தப்பட்டத் தாக்குதல் என்று சுட்டிக்காட்டினார். இப்படியாக ரஷ்யாவும், உக்ரைன் நாடும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டிருக்க, செர்னோபில் மற்றும் சபோரிஜியா அணு உலைத் தாக்குதல்கள் உக்ரைன் நாட்டின் பதினைந்து அணு உலைகளின் பாதுகாப்புக் குறித்த பெரும் அச்சத்தையும், சந்தேகத்தையும் உருவாக்குகின்றன.

அணு உலைகளும், அணுக்கழிவு மையங்களும் பெரும் கதிர்வீச்சு ஆபத்துக்களை உருவாக்கலாம் என்பதால் பன்னாட்டு அணுசக்தி முகமை (IAEA) உடனடியாகத் தலையிட்டு உக்ரைன் நாட்டிலிருக்கும் மூடப்பட்ட மற்றும் இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்று பன்னாட்டு குடிமைச் சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

அணு ஆயுதங்களும், அணு உலைகளும் அணுத்தீமை எனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை உலகு நன்றாகவே அறிந்திருக்கிறது. உக்ரைன் போர் இதற்கான இன்னுமொரு நிரூபணமாக அமைகிறது.

பிப்ரவரி 24, 2022அன்று செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சின் அளவு திடீரென எகிறிக் குதித்து 65,500 nSv/h (nanoSieverts per hour) ஆக உயர்ந்தது. மறுநாள் அது இன்னும் அதிகரித்து 93,000 nSv/h என்றானது. இது குறித்து பிப்ரவரி 28, 2022 அன்று பன்னாட்டு அணுசக்தி முகமை (IAEA) ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் ரஷ்யப் படைகள் செர்னோபில் அணு உலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்திருக்கிறது என்றும்; உக்ரைன் நாட்டின் ஒழுங்காற்று வாரியம் கதிர்வீச்சு அளவுகளைத் தொடர்ந்து தந்துகொண்டிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ரஷ்யர்களும் கதிர்வீச்சு அளவுகளைத் தொடர்ந்து தெரிவிக்கிறார்களா என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை. அதேபோல, கதிர்வீச்சின் அளவு இயல்பு நிலையைத் தாண்டவில்லை என்று கதை சொன்ன அந்த அறிக்கை, பிப்ரவரி 24, 25 ஆகிய நாட்களில் ஏன் திடீரென்று உயர்ந்தது என்பதற்கான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

பிப்ரவரி 27, 2022 அன்று கீவ் நகரின் அருகேயுள்ள ஓர் அணுக்கழிவு மையத்தை ஓர் ஏவுகணைத் தாக்கியதாகவும், ஆனால் அக்கட்டிடம் சேதமடையாததால் கதிர்வீச்சு வெளிப்படவில்லை என்றும் உக்ரைன் தெரிவித்திருப்பதாகப் பன்னாட்டு அணுசக்தி முகமை (IAEA) கூறியது. அதேபோல, கார்கிவ் நகரின் அருகேயுள்ள இன்னொரு அணுக்கழிவு மையமும் தாக்கப்பட்டிருப்பதாக அதன் அறிக்கை தெரிவித்தது. மேற்படி அணுக்கழிவு மையங்கள் மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கடைநிலைக் கழிவுகளையும், பயன்பாட்டில் இல்லாத கதிர்வீச்சுக் கருவிகளையும் கொண்டிருந்தன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அணுசக்திப் பாதுகாப்பின்மை குறித்து கவலையுறும் ‘பியான்ட் நியூக்ளியர்’ (Beyond Nuclear) எனும் அமைப்பு  கீழ்க்காணும் அச்சங்களைத் தெரிவித்திருக்கிறது:

  • உக்ரைன் நாட்டில் ரிவ்னே (4), கமெல்னிட்ஸ்கி (2), தெற்கு உக்ரைன் (3), சபோரிஜியா(6) என்னுமிடங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் 15 அணு உலைகளும் போரில் நேரடியாகவோ, தவறுதலாகவோ தாக்கப்படவில்லை என்றாலும் கூட, மோசமான உருகுநிலைக்கு உள்ளாகும் வாய்ப்பிருக்கிறது.
  • அணு உலைக் கட்டிடங்கள் வழங்கும் உயர் பாதுகாப்பின்றி, வெளியே அமைக்கபட்டிருக்கும் எரிக்கப்பட்ட எரிகோல் தேக்கங்கள் மிகவும் ஆபத்தானவை. அணு உலைகளைவிட அதிகம் கதிர்வீச்சு உமிழும் இந்த அணுக்கழிவு மையங்களில் தீப்பிடித்தால், அவை மிக அதிகமான கதிர்வீச்சை வெளியிடும்.
  • போரினால் ஏற்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், சில அணுசக்தித் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் இடம்பெயர நேரிடலாம். அப்படி நடந்தால் அனுதினமும் கண்ணுங்கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டிய அணுமின் நிலையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பெரும் ஆபத்துகள் ஏற்படலாம்.

“கூடங்குளத்தின் மீது ஒரு போர்க்காலத் தாக்குதலோ அல்லது ஒரு பயங்கரவாத நடவடிக்கையோ கட்டவிழ்த்து விடப்பட்டால், என்ன செய்வது?” எனும் கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. தெற்காசியாவின் தீபகற்ப முனை பன்னாட்டு தந்திரோபாயங்களுக்கும் இலக்காகிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் சீனா இலங்கையில் உறுதியாக கால் பதித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தியா ‘குவாட்’ எனும் அமைப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த அமைப்பை ஆஸ்திரேலியா-நியூசிலாந்து-கனடா-அமெரிக்கா-பிரிட்டன் நாடுகள் தோற்றுவித்திருக்கும் “ஐந்து கண்கள்” (Five Eyes) எனும் உளவுக் கூட்டணியோடும், ஆஸ்திரேலியா-பிரிட்டன்-அமெரிக்கா நாடுகள் உருவாக்கியிருக்கும் ‘ஆகஸ்’ (AUKUS) பாதுகாப்பு ஒப்பந்தத்தோடும் இணைத்துப் பேசியிருக்கும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி (Wang Yi),அமெரிக்கா ஓர் ‘இந்தோ-பசிபிக் நேட்டோ’ Indo-Pacific NATO) அமைப்பை உருவாக்க முனைகிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் (தி இந்து, மார்ச் 8, 2022).

இது ஒரு முக்கியமான, மோசமான, கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு. நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா போர் புரிவது போல, மேற்படி ‘இந்தோ-பசிபிக் நேட்டோ’ அமைப்புக்கு எதிராக சீனா கிளர்ந்தெழுந்தால் என்னவாகும்? தீபகற்ப முனை நாடான இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்து, சமூக அமைதியும், பாதுகாப்பும் இல்லாமலாகி, அது ஒரு தோல்வியுற்ற நாடாக (Failed State) மாறும் வாய்ப்பு தொக்கி நிற்கிறது. அங்கே ‘ஜனதா விமுக்தி பெரமுன’ (ஜே.வி.பி.) போன்ற இந்திய/தமிழர் விரோத தீவிரவாதக்குழுக்கள் எந்நேரமும் தலைதூக்கலாம், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இப்படியாக நம் தீபகற்பமுனைப் பகுதியின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகலாம்.

நோய்த்தொற்று, பாசிச வெறுப்பரசியல், மதவாதம், இனவாதம், சாதியவாதம், பெண்ணடிமைத்தனம், ஏழ்மை, வறுமை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வாய்ப்புக்களின்மை, வருங்கால நம்பிக்கையின்மை என ஓர் ஊழிக்காலத்தில் நாம் உயிர்வாழ்கிறோம். இவற்றோடு உலகழிக்கும் அணுசக்தியும் சேருவது பெரும் ஆபத்தை உருவாக்கும்.

மனிதகுலம் மயிரிழையில் உயிர்பிழைத்துக் கொண்டிருக்கிறது. இந்த பாக்கியம் எப்போதுமே இப்படித் தொடராது என்பதுதான் உண்மை. அறிவியலும், தகவல் தொடர்புப் பரிமாற்றங்களும் பிரமாண்டமாக முன்னேறி, ஒவ்வொருவரின் உள்ளங்கையிலும் உலகம் இருப்பது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும் இந்த இருபத்தொன்றாவது நூற்றாண்டில்,அரசியல் சிக்கல்கள் குறித்து கருத்துப்பரிமாற்றம் நடத்தி, பேசித்தீர்க்க முடியாமற்போவதும்; இந்த மண் மீது வாழும் உயிரினங்களின் உடல்நலம், ஒட்டுமொத்தச் சூழல்நலம் போன்றவற்றை கருத்திற்கொண்டு நமது வளர்ச்சி சித்தாந்தங்களை, திட்டங்களை வகுத்துக்கொள்ள இயலாமற்போவதும்; அணு ஆயுதங்களும், அணுமின் நிலையங்களும் பல்கிப்பெருகி உருவெடுக்கும் அணுத்தீமையை தடுத்தழிக்கும் ‘ஆவதறியும் திறன்’ இல்லாமற்போவதும் துர்பாக்கியமானவை. ஊழிக்காலத்தில் வாழும் உலக மக்கள் யாவரும் உடனே செய்யவேண்டிய மூன்று கடமைகள் இவைதான்.

 

– சுப. உதயகுமாரன், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments