பனையும் கரும்பும்!

பேருந்து நிறுத்தத்தில் ஒரு கருப்புக் குடையின்கீழ் அமர்ந்து நுங்கு விற்றுக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அவருக்கு வயது ஐம்பது இருக்கலாம். அவர் வெட்டி வைத்த நுங்கைப்போல அவர் உடலும் முற்றியிருந்தது. ஆனால், கைகள் பரபரப்பாக நுங்கை வெட்டி எடுப்பதில் ஈடுபட்டுக கொண்டிருந்தன. விலை எப்படி என விசாரித்தேன். பத்து ரூபாய்க்கு மூன்று என்றார். “ஐம்பது ரூபாய்க்கு போடவா”, என்றார். “வேண்டாம் முப்பது ரூபாய்க்கு போதும்”. மடமடவென ஒரு நெகிழி பையில் நுங்கை அள்ளிப் போட்டு நீட்டினார். “பனையோலையில் கட்டிக் கொடுங்களேன்”, என்றேன். “அதெல்லாம் இல்ல பா. எல்லாரும் கவர்ல தான் வாங்கிட்டு போறா. இது தான் வசதி”, என்றார். எனக்கு வேண்டாம் என்று வந்து விட்டேன். நேராகச் சாலையைக் கடந்து ஆற்றை நோக்கிச் செல்லும் சிறிய பாதையில் நுழைந்து  நடக்கத் தொடங்கினேன். பாதையின் இருபுறமும் சில பனைமரங்கள் உண்டு. அதில் சில குலைகள் வெட்டப்பட்டு இருந்தது. அதைத்தான் அந்தப் பெரியவர் விற்றுக் கொண்டிருந்தார் எனப் புரிந்தது. உள்ளூரிலேயே வெட்டி உள்ளூர் மக்களிடமே விற்பதற்கு எதற்கு எங்கோ உற்பத்தியான (தடை செய்யப்பட்ட) நெகிழிப் பைகளை பயன்படுத்த வேண்டும். செலவில்லாத அழகான இயற்கை மணம் மிக்க பனையோலையை விடுத்து இந்த சல சல கவர்களில் என்ன வசதியை கண்டுவிட்டனர் இம்மக்கள். அது சரி தீஞ்சுவை மிக்க கருப்பட்டியை காட்டிலும் பளபளக்கும் வெள்ளை சர்க்கரைக்கும், உடலுக்கு ஊட்டம் தரும் இளங்கள்ளை காட்டிலும் கலப்பட சாராயத்திற்கும் தானே மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். வெறும் அறுபது ஆண்டுகளில் கருப்பட்டி சீனியாகவும், கள் சாராயமாகவும், பனையோலை பெட்டி பாலித்தீன் பைகளாகவும் மாறியது எப்படி?

சர்க்கரையின் ஆதிக்கம்

சென்ற இதழில் கரும்பு எவ்வாறு நியூ கினி தீவிலிருந்து இந்தியா வந்து பின்னர் ஐரோப்பியர்களின் அடிமை வர்த்தகத்தின் மூலம் செழித்து வளர்ந்தது என்றெல்லாம் பார்த்தோம். அதுவரை வெறும் நீர் குடித்து வளர்ந்த கரும்பு ஐரோப்பியர்கள் கை பட்டதும் இரத்தம் குடித்து வளரத் தொடங்கியது என்றே சொல்லலாம். ஆம் பிரேசில், கியூபா போன்றவை சர்க்கரைக் கிண்ணங்களாக நிறைந்து வழியத் தொடங்கியது ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பினில்தான். ஐரோப்பாவோடு கரும்புக்கும் அடிமைகளுக்குமான உறவு முடிந்து விடவில்லை. அதன் பின் அமெரிக்கா அதை வெகு காலம் செவ்வனே தொடர்ந்து செய்து வந்தது, வருகிறது, நவீன வழிகளில். 1853ல் சாலமன் நார்த்அப் எழுதிய 12 years a slave  என்னும் புத்தகம் லூசியானாவின் கரும்புத் தோட்டங்களில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் கடத்தப்பட்டு வேலை செய்ய கட்டாயப் படுத்தப்பட்ட அடிமை முறையின் கொடூர முகத்தை எடுத்து கூறும் ஓர் அவல சாட்சியம். பின்னர் அதே தலைப்பில் 2013ல் அது படமாக வெளிவந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திச் சென்றது. என்னதான் ஐரோப்பா அமெரிக்கா என்று அனைத்து நாடுகளும் அடிமை முறையை ஒழிக்க சட்டங்கள் இயற்றி விட்டபோதிலும் அடிமை முறை தங்களுக்கு அள்ளித் தந்த லாபங்களை முதலாளிகளும் முதலாளிகள் தூக்கி எறிந்த எலும்பு துண்டுகளை அரசுகளும் இழப்பதற்குத் தயாராக இல்லை. எனவே அவை வெவ்வேறு வடிவங்களில் அவற்றைத் தொடரவே செய்தன. அப்படிதான் முதன் முதலில் கரும்பில் இருந்து சாறு பிழிந்து சர்க்கரை ஆக்கும் கலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய தமிழினம் இன்று அந்த கரும்பினாலேயே தன் அடையாளமான பனையையும் பனை சார்ந்த பொருட்களையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் இழந்துவிட்டு கரும்பாலைகளிடம் கையேந்தி நிற்கிறது. நாம் அடிமைப்பட்டு இருக்கிறோம் என்ற உணர்வே மக்களுக்கு எழாத வகையில் அவர்கள் முன்னால் பணம் பதவி வசதிகள் வளர்ச்சி என்ற புல் கட்டுகளை கட்டித் தொங்கவிட்டு பொதி சுமக்கும் கழுதைகளாக நம்மை மாற்றி மேல் ஏறி பயணம் செய்வதே முதலாளித்துவத்தின் இயல்பு.

 

கரும்பின் எழுச்சி

 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரும்பு நம் உணவிலும் பண்பாட்டிலும் கலந்துவிட்ட போதும் தமிழர்கள் பெரும்பாலும் கரும்பில் இருந்து வெல்லமாக தயாரித்தே பயன்படுத்தி வந்தனர். வெள்ளை சர்க்கரை நம் உணவுகளில் மலிந்து விட்டது கடந்த அறுபது ஆண்டுகளில்தான். இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில்கூட சுமார் மூன்றில் இரண்டு பங்கு கரும்பிலிருந்து வெல்லமாகதான் உற்பத்தி செய்யப்பட்டது. வெள்ளை சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது சில பெரிய இயந்திர ஆலைகளில் மட்டும்தான். அந்த ஆலைகளின் நலனுக்காக கரும்பில் ஆராய்ச்சி செய்து சில மேம்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அவை நன்கு தடிமனாகவும் நீண்ட தூரம் கொண்டு செல்லவும் சீக்கிரம் காய்ந்து போகாமலும் இருந்தன. எனவே இந்த புதிய ரக கரும்பினை பெரிய இயந்திரங்கள் இல்லாத உள்ளூர் ஆலைகளில் பிழிந்து எடுப்பது சிரமமாக இருந்தது. அதற்கு முன் இருந்த பாரம்பரிய கரும்பு ரகங்கள் சற்று இலகுவாகவும் எளிதாக காய்ந்து சாறு வற்றிப் போகும் வகையிலேயே இருந்தன. எனவே இவற்றை அறுவடை செய்த உடனே உள்ளுர் ஆலைகளில் சிறு இயந்திரங்கள் கொண்டு பிழிந்து வெல்லமாக தயாரித்து விடுவர். அதனால் புதிய கடினமான கரும்பின் வருகையால் உள்ளுர் உற்பத்தியாளர்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவர் என்று காந்தியரான ஜே சி குமரப்பா வருந்தினார். மேலும் அவர் பல விதங்களிலும் ஆராய்ச்சி செய்து பனையில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லமே இந்தியாவின் சூழலுக்கு பல வகைகளிலும் பலன் தரக் கூடியது என்றார். ஏனெனில் கரும்பு உற்பத்தி செய்ய அதிகப்படியான நிலமும் நீரும் தேவைப்படும் சூழலில் பனை மரங்கள் குறைவான நிலப்பரப்பில் மிக குறைந்த மழைநீரை மட்டுமே கொண்டு மிகச் சிறந்த வெல்லத்தை வழங்குகின்றன. எனவே, இந்தியாவின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்ய உள்ளூர் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லமே போதுமானது என்றும் அதுவும் பனையில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லமே பல வகைகளில் சிறந்தது என்றும் பெரிய சர்க்கரை ஆலைகள் காந்தியின் கனவான கிராம சுயராஜ்யத்தை அழித்துவிடும் என்றும் ஜே சி குமரப்பா சுதந்திரத்திற்கு முன்பே போராடினார். ஆனால், காந்தியின் கருத்துக்களை விட காந்தி படம் போட்ட நோட்டிற்கு வலு அதிகம். அதனால்தான் சுதந்திர இந்திய அரசின் கொள்கைகள் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சியை ஊக்குவித்தன. அதன் பயனாக உள்ளூரில் செயல்பட்டு வந்த ஆலைகள் படிப்படியாக தேய்ந்து காணாமல் போயின. தம் உற்பத்தியை விற்க வேறிடம் இல்லாததால் வேறு வழியின்றி விவசாயிகளும் அரசின் கட்டுப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த விலைக்கு கரும்பினை குறிப்பிட்ட சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைத்து விட்டு நிலுவைத் தொகைக்காக ஆலை வாசலில் போராடி மடிகின்றனர்.

 

சர்க்கரை ஆலைகள் பளபளக்கும் வெள்ளைச் சர்க்கரையை உற்பத்திசெய்து தள்ளினாலும் ஆரம்பத்தில் அதற்கு பெரிய வரவேற்பு மக்களிடம் கிடைக்க வில்லை என்பதே உண்மை. ஏனெனில் தமிழர்கள் பாரம்பரியத்தை விரும்புபவர்கள். தமிழர்களின் பண்டைய இனிப்பு வகைகள் எதை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலும் வெல்லத்தில் செய்தவையே. அதிரசம், பாயாசம், சர்க்கரைப் பொங்கல், பால் கொழுக்கட்டை, சுழியம், கெட்டிதப்பான் உருண்டை, பொரிவிளங்காய் உருண்டை, எள்ளுருண்டை, கடலை மிட்டாய், கருப்பட்டி பணியாரம் என்று பலவும் வெல்லம் (அ) கருப்பட்டி கொண்டு செய்யப்பட்ட பண்டங்களே. இப்படி மரபு உணவுகளின் வழி வெல்லத்தை பற்றிக் கொண்டு இருந்த தமிழ் சமூகத்திற்கு காபி, டீ போன்றவற்றில் சர்க்கரை சேர்த்துக் குடிப்பது ஆடம்பரத்தின் அடையாளமாகக் காட்டப்பட்டது. அதுவரை கருப்பட்டி காபி கடுங்காபி குடித்தவர்கள் ஏழைகளாக மாற்றப்பட்டு வெள்ளை சர்க்கரை போட்ட காபி குடித்தவர்கள் வசதியானவர்களாக மாறினர். பின்னர் 70-80களில் அதுவே புட்டிகளில் அடைக்கப்பட்ட பழச் சாறுகளிலும் குளிர்பானங்களிலும் கலக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகி இந்திய நாவுகளை இனிப்பு தாகம் எடுக்கச் செய்தன. இப்படி குளிர்பானங்களில் கலக்கவும் ஐஸ்கிரீம் துரித உணவுகள் போன்றவற்றில் கலக்கவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிகப் படியான சர்க்கரை தேவைப்பட்டது.

கரும்பும் கியூபாவும்

அறுபதுகளில் எல்லாம் சர்க்கரை என்றால் அது கியூபாதான். உலகின் சர்க்கரைக் கின்னம் என்றே கியூபாவிற்கு பெயர். அமெரிக்காவில் இருந்து கூப்பிடு தூரத்தில்தான் இருந்தது கியூபா. ஆனால், அப்படிப்பட்ட கியூபாவை விடுத்து இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய முடிவு செய்தது அமெரிக்கா. காரணம் 1959ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு சோவியத் ஒன்றியத்துடன் தன்னை நெருக்கமாக காட்டிக் கொண்டதால் அதற்கு எதிர் வினையாக அமெரிக்கா 1960ல் கியூபாவில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த சர்க்கரையில் 7 லட்சம் டன் அளவு சர்க்கரையை வேறு நாடுகளில் இருந்து பெற முடிவு செய்தது. அதுவரை அமெரிக்கா ஆண்டுதோறும் கியூபாவிலிருந்து 3 மில்லியன் டன்களுக்கு மேல் சர்க்கரையை இறக்குமதி செய்து வந்தது. அது அமெரிக்காவின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை மில்லியன் டன் சர்க்கரையை அமெரிக்கர்கள் எப்படி உட்கொண்டார்கள்? பெரும்பாலும் கொக்க கோலா போன்ற குளிர்பான நிறுவனங்களும் பிற துரித உணவு நிறுவனங்களுமே கூடுதல் சுவைக்காக சர்க்கரையை அதிகம் பயன்படுத்தின. அந்த பெரு நிறுவனங்களின் விளம்பர யுக்திகளால் அவற்றின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்ததால் சர்க்கரையின் தேவையும் கூடவே அதிகரித்தது. எனவே, அவற்றின் சர்க்கரைத் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு சர்க்கரை ஆலைகளின் ஒற்றை ஆதிக்கத்தின் கீழ் அவற்றை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து சர்க்கரை ஏற்றுமதியைத் தொடர்ந்தனர். இதன் மூலம் சர்க்கரையை மலிவு விலைப் பொருளாக மாற்றி குளிர்பானங்கள் குப்பை உணவுகள் போன்றவற்றில் கலந்து மக்களின் அன்றாட உணவிலும் சேரும்படி செய்து விட்டனர். அதிகப்படியான சர்க்கரை நுகர்வுதான் உடற்பருமன், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை உருவாகக் காரணமாக இருக்கிறது என்று அறுபதுகளிலேயே அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோதிலும் சர்க்கரைத் தொழிலதிபர்கள் 1967ல்  ஆராய்ச்சியாளர்களுக்கு பணம் கொடுத்து சர்க்கரை நுகர்வுக்கும் இதய நோய்களுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை என்று எழுத வைத்தனர். தன் லாபத்தைக் காத்துக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்யும் முதலாளி வர்க்கம். எனினும் தற்போது பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் அளவுக்கு அதிகமான சர்க்கரை நுகர்வு நீரிழிவு உடல் பருமன் உட்பட பல்வேறு உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது என்று சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுவிட்ட போதும் குளிர்பான நிறுவனங்கள், சாக்லேட், கேக் முதலான தின்பண்டங்கள், துரித உணவுகள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவை தங்கள் தயாரிப்புகளில் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள தயாராக இல்லை. அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்பதைக் கடந்து அவற்றுக்கு குறைந்த பட்சம் சர்க்கரை வரி போன்றவற்றை விதித்து அவற்றின் பயன்பாட்டை கட்டுப்படுத்தக்கூட இந்த அரசுகளுக்கு துணிவில்லை. ரசாயன குளிர்பானங்கள், உடல் நலக் கேட்டை உண்டாக்கும் வெளிநாட்டு துரித உணவுகள் உள்ளூர் உற்பத்தியை நசுக்கிடும் பெரு நிறுவனங்கள் போன்றவற்றைத் தடுக்க இயலாத அன்றைய தமிழ் நாடு அரசுதான் வெகு மக்கள் குடித்து வந்த இயற்கை பானமான கள்ளைத் தடை செய்தது.

 

பனையின் வீழ்ச்சி

ஏற்கெனவே சர்க்கரை ஆலைகளின் அசுர வளர்ச்சியாலும் மலிவு விலை சர்க்கரையின் சந்தையோடும் போட்டி போட முடியாமல் வெல்லம் மற்றும் கருப்பட்டி உற்பத்தி பாதிப்படைந்திருந்த சூழலில் கள் இறக்கத் தடை என்பது பனையேறிகள் வாழ்வில் இடியென விழுந்தது என்றால் அது மிகையாகாது. 1987ல் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட கள்ளுக்கான தடை என்பது ஏதோ மது விலக்கை கொள்கையாகக் கொண்டு அரசு எடுத்த முடிவு என்று எண்ணி விட வேண்டாம். அதற்கு முந்தைய ஆட்சி காலத்தில்தான் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மது விலக்கு தளர்த்தப்பட்டு வெளிநாட்டு மது வகைகளை தயாரிக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் மது விற்பனையை ஒழுங்குபடுத்தவும் அதன் விற்பனையை அதிகரிக்கவும் டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தொடங்கப்பட்டு பின்னர் மது விற்பனையின் ஏகபோக உரிமை டாஸ்மாக் வசமானது. அரசின் வெளிநாட்டு மது வகைகளின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில்தான் கள் இறக்கவும் அதை விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கூறப்பட்ட காரணமோ கள்ளில் பல கலப்படங்களும் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மக்களின் ஆரோக்கியம் கெடுவதாகவும் கூறி அதைத் தடுக்கவே கள்ளுக்கு தடை விதிப்பதாக கூறியது அரசு. ஆனால், அதே அரசு கொண்டு வந்த மேல் நாட்டு பாணி மதுவினில் நிறைந்து இருப்பது என்னவோ எத்தனால்தான். சர்க்கரை ஆலைகளில் இருந்து வரும் உப பொருளான எத்தனாலுடன் சில ரசாயனங்களும் நீரும் கலந்து பாட்டிலில் அடைத்து விஸ்கி, பிராந்தி, பியர் என்று பல பெயர்களிலும் வண்ணங்களிலும் விற்கப்படுகிறது. உண்மையில் வெளிநாடுகளில் மது என்பது பழச் சாறுகளை நொதிக்க வைத்தும் கோதுமை, பார்லி, அரிசி போன்ற தானியங்களில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. அதை பல்லாயிரம் ஆண்டுகளாக சொல்லப்போனால் வேளாண்மை கண்டுபிடிக்க படும் காலத்திற்கு முன்பிருந்தே மக்கள் இயற்கையான அம்மதுவை பருகி வந்திருக்கின்றனர். அதேபோல்தான் தமிழ்நாட்டிலும் பனை தென்னை போன்ற மரங்களில் இருந்து கிடைக்கும் இயற்கையான கள்ளை மக்கள் உணவாகவும் புளிக்க வைத்து மதுவாகவும் அருந்தி வந்தனர். ஆனால் கள் விற்பனையில் கலப்படம் நடைபெற்றதாகவும் அதனால் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் ஒரு கதையைக் கூறி கரும்பின் கழிவில் இருந்து சாராயத்தை உற்பத்தி செய்து அதோடு பல ரசாயனங்களை கலந்து கலப்பட சாராயத்தை அரசே வீதிக்கு வீதி சென்று விற்கிறது. அது போதாதென இப்பொழுது தானியங்கி இயந்திரங்கள் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடான டெட்ரா பேக்கிங்கில் அடைத்து விற்க தொடங்கியுள்ளது. கலப்படச் சாராயத்தை அரசே விற்கும் சூழலில் இயற்கையாக விளையும் கள்ளை அறுவடை செய்து விற்பதற்கு விவசாயிகளுக்கு தடை விதிப்பது ஜனநாயக விரோத செயல். ஏனெனில் கள் இறக்க தடை சட்டம் என்பது ஒரு கட்டத்தில் கள்ளை கடந்து மரம் ஏறவே தடைகளையும் அடக்குமுறைகளையும் அவமதிப்பு களையும் சந்திக்கும் சூழலுக்கு பனை தொழிலாளர்களை தள்ளி விட்டது என்பதே உண்மை. இன்று தமிழ் நாட்டில் பனையை கண்டாலும் கண்டுவிடலாம் பனையேறியை காண்பது அரிது என்னும் சூழலே நிலவுகிறது.

 

இறுதியாக பனையில் இருந்து கிடைத்த கள், பதநீர், கருப்பட்டி போன்றவை அரசின் தவறான கொள்கைகளாலும் சர்க்கரை ஆலைகளின் ஆதிக்கத்தினாலும் பலமாக பாதிக்கப்பட்டதோடு பனையில் இருந்து கிடைத்த மற்ற பயன்களான பனையோலை பெட்டிகள், விசிறி, பாய், கைவினை பொருட்கள் போன்ற பலவும் பிளாஸ்டிக்கின் புரட்சிகர வரவால் காணாமலே போய்விட்டன. கரும்பு என்னும் ஒற்றை புல்லின் வளர்ச்சியோடும் பனை என்ற ஒற்றை புல்லின் அழிவோடும் தமிழர்களின் மரபு உணவுகள், சுவைகள், கலைகள், கைவினை பொருட்கள், கலைச் சொற்கள், விளையாட்டுகள், இயற்கை வளங்கள், நீராதாரங்கள், பொருளாதாரம், சுகாதாரம், சூழலியல் மற்றும் வாழ்வியல் என்று அனைத்தும் மங்கி மறைந்து கொண்டு இருக்கிறது. ஆற்றுக்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் பார்த்தேன், சுடுகாட்டிற்கு எதிரில் ஓர் ஒற்றை பனை தன் சாவினை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழை உழவனைப் போல் மௌனமாக நின்றிருந்தது.

  • அகிலன் பாலகுரு
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments