அனைத்து உயிரினங்களின் ஆதாரப்புள்ளியாய் இருப்பது தாய். ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான உலகத்தைத் தர தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வாள். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு தாயால் தன் குழந்தைக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைத் தர இயலுமா என்றாள் முடியாது என்பதே உண்மை.
சமீப ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தாய்ப்பாலில் நுண் நெகிழி இருப்பது உறுதியாகியுள்ளது. உலகில் கலப்படமற்ற ஆரோக்கியமான உணவு தாய்பால்தான் என்று கூறப்பட்டு வந்த சூழலில் அதில் நெகிழி கலந்திருப்பது மிகவும் மோசமான சூழலியல் சீர்கேட்டிற்குள் நாம் வந்துவிட்டதை உணர்த்துகிறது. இதைவிட கொடுமை இருக்கமுடியாது என்று நினைக்கும் பொழுதே அதைவிட அச்சுறுத்தக்கூடிய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. கருவுற்றிருக்கும் தாய்மாரின் வயற்றில் இருக்கும் குழந்தை அனைத்து ஊட்டத்தையும் பெற நச்சுக்கொடியே காரணம். அதன் வழியாகவே குழந்தை தனக்கு தேவையான ஆற்றலைப் பெறுகிறது. அந்த நச்சுக்கொடியிலும் நுண் நெகிழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலகையே இன்னும் பார்க்காத குழந்தையின் உடலில் கூட பிளாஸ்டிக் இனி இருக்கும் என்பதை நம்மால் எப்படி சாதாரணமாக கடந்துவிட முடியும். இதை நாம் கவனிக்காமல்விட்டால் நம் எதிர்கால சந்ததியை நாம் எப்படி குற்றஉணர்ச்சி இல்லாமல் அணுகமுடியும்.
ஏற்கெனவே வந்த ஆய்வுகள் வயது வந்தவர்களைவிட குழந்தைகளையே நுண் நெகிழித்துகள்கள் அதிகம் பாதிக்கும் எனக் கூறுவதால் நம் குழந்தைகள் நம் கண்முண்ணே புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதை பார்க்கப் போகிறோம். சொல்வதற்கு கடினமாக இருந்தாலும் இதுவே நிதர்சனமான உண்மை.
உலகில் உள்ள நெகிழிக் கழிவுகளில் 12% எரிக்கப்பட்டே அழிக்கப்படுகின்றன. இது காற்றை நச்சாக்குகிறது. நாம் உண்ணும் அனைத்துப் பொருட்களிலும் நுண் நெகிழி நிரம்பி உள்ளது. 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வில் 5 கிராம் அளவு நெகிழி( அதாவது ஒரு கிரடிட் கார்டு அளவு) ஒவ்வொரு வாரமும் நம் உடலுக்குள் செல்கிறது. உலகம் முழுவதும் சுமார் 800 கோடி டன் அளவு நெகிழிப் பொருட்கள் சுற்றி வருகின்றன. அவை காலப்போக்கில் சிறிது சிறிதாக மாறி மைக்ரோ மற்றும் நேனோ நெகிழிக் கழிவுகளாக மாறுகிறது. அந்த மைக்ரோ நெகிழிகள் நீர், நிலம், காற்று என அனைத்திலும் பரவி நம் அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
நேனோ மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மிகச்சிறியதாக இருப்பதால் அவை நம் நுரையீரல் வரை பயணம் செய்கின்றன. மேலும் நம் இரத்தத்திலும் இவை கலந்துவிடுகிறது. இவ்வாறு நெகிழிகள் இரத்தத்தில் கலப்பதாலேயே தாய்ப்பாலில் இருந்து நச்சுக்கொடிவரை அவை பரவியுள்ளன.
ஆண்களைவிட பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது. உற்பத்திவெறி கொண்ட முதலாளித்துவ சமூகம் இதுதான் அழகு என்று ஒரு வரையறை வகுத்து அதற்கு தகுந்தாற்போல் அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து அனைவரையும் வாங்க வைக்கின்றது. அதுமட்டுமின்றி இந்த சமூக கட்டமைப்பு பெண்களே வீடுகளில் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என நிர்பந்திக்கிறது. தூய்மைப் பணிக்கு பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் அதிக அளவு நுண் நெகிழிகள் உள்லன அவை தோல் வழியாகவும் சுவாசத்தின் வழியாகவும் அவர்களின் உடம்பிற்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தாய்மைப்பேருக்காக இயற்கையாகவே பெண்களின் உடலமைப்பு ஆண்களை விட அதிக கொழுப்பு திசுக்களை கொண்டதாக உள்ளது. இந்த உடலமைப்பே ஆண்களை விட பெண்களின் உடலில் நெகிழிகள் அதிகமாக தங்கி பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாகிறது.
இத்தகைய சூழலில் பெண்களையும் நம் எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க நெகிழி உற்பத்தியை குறைத்து அதன் கழிவுமேலாண்மையை ஒழுங்குபடுத்த வேண்டும். உற்பத்தியாளரே தான் உற்பத்திசெய்யும் கழிவுக்கு பொறுப்புடையவர் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
- ச.பூ.கார்முகில்