மக்கள்தொகைப் பெருக்கம்- ஊதிப் பெருக்கியது!

“ஏப்ரல் 2023 முதல் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகைப் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக் கொண்டு முதல் இடம் பிடித்தது. இது இந்தியப் பொருளாதாரத்தை எந்த வகையில் பாதிக்கும்?”. “1950களில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகைப் சுமார் 200 கோடியாக இருந்தது. கடந்த எழுபது ஆண்டுகளில் அது 800 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஓர் அசுர வளர்ச்சி”. “வடமாநில புலம்பெயர் தொழிலாளிகளின் குடியேற்றத்தால் தமிழ்நாட்டில் தமிழர்களின் உரிமைகளும் பண்பாடும் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகிறது”. “800 கோடி மக்களுக்கும் இயற்கை விவசாயத்தால் உணவிட முடியுமா?” “கட்டுப்பாடில்லாத மக்கள்தொகைப் பெருக்கம் கார்பன் உமிழ்வுகளை மேலும் அதிகரித்து காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்!”

 

மேற்கூறிய கருத்துக்கள் மற்றும் கேள்விகள் போன்றவற்றை நாம் சமீப காலங்களில் பார்த்தும் கேட்டும் வந்திருப்போம். ஏன் நமக்கே கூட அது குறித்தான சந்தேகங்கள் எழுந்திருக்கும். தீவிர வலதுசாரியினர் முதல் இடதுசாரியினர் வரை அனைவருமே பெரும்பாலும் மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து ஐயங்களையும் எதிர் மறை எண்ணங்களையுமே கொண்டுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூட மக்கள்தொகைப் பெருக்கத்தால் மனிதர்களின் உணவு, இருப்பிடம் போன்ற பிற தேவைகள் அதிகரிக்கும், அதற்காக காடுகள் அழிக்கப்படும், இயற்கை வளங்கள் மேலும் மேலும் சூறையாடப்படக்கூடும் என்கிற பொதுவான மேம்போக்கான புரிதலையே கொண்டிருப்பதாக எண்ணுகிறேன். உண்மையில் மக்கள்தொகைப் பெருக்கம் அத்தனை பெரிய பிரச்சனை தானா? பெருகிவரும் மக்கள்தொகைப்க்கு நம்மால் உணவு வழங்கிட முடியுமா? மக்கள்தொகைப் பெருக்கத்தால் காலநிலை மாற்றம் தீவிரம் அடையுமா?

 

மக்கள்தொகைப் பெருக்கத்தின் வரலாறு

மக்கள்தொகைப் பெருக்கம் குறித்தான கருத்தாக்கமும் அச்சமும் முதலில் தொடங்கியது 19ம் நூற்றாண்டில் தான். 1798ல் இங்கிலாந்தில் வாழ்ந்த தாமஸ் மால்தஸ் என்னும் பொருளாதார நிபுணர் தான் வாழ்ந்த இடத்தில் பெருகி வந்த மக்கள்தொகையைப் பார்த்து துணுக்குற்றார். இப்படி மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுப்பாடின்றி வளர்ந்து வந்தால் போதிய அளவு உணவு கிடைக்காமல் பசியும் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உண்டாகும் என்று கணித்தார். இது குறித்து ஓர் புத்தகமும் எழுதினார், An Essay on the Principles of population.  அதில் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியின் அளவு போதுமானதாக இல்லை என்றும் அதனால் ஒரு கட்டத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு சமூக ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் எழுதினார். மேலும் இதற்குத் தீர்வாக அவர் முன்வைத்தது ஏழைகளை குறைந்த எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக் கொள்ள கட்டாயப் படுத்துவதும் அவர்களை பட்டினியால் சாக விடுவதும் தான்! ஏனெனில் அவரைப் பொறுத்தவரை ஏழைகளுக்கு தார்மீக கட்டுப்பாடு என்பதெல்லாம் கிடையாது அவர்களால் தான் மக்கள்தொகைப் அதீதமாகப் பெருகுகிறது. எனவே அவர்களை குழந்தை பெற்றுக் கொள்வதிலிருந்து தடுப்பதும் அவர்கள் நோயுற்றும் பட்டினி கிடந்தும் சாவதே இந்த பெரும் ஆபத்தில் இருந்து உலகை காக்கும் என்று எண்ணினார். அதற்காகவே ஏழைகள் வாழும் பகுதிகளில் குறுகலான சாலைகள் அமைப்பதையும் சுகாதாரமற்ற வாழத் தகுதியற்ற முறையில் அவர்களின் வாழிடங்களை ஏற்படுத்துவதையும் ஓர் உபாயமாக அவர் முன்வைத்தார். இதை வெறும் மக்கள்தொகைப் பெருக்க பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. இது உழைக்கும் வர்க்கம் மீதான மேட்டுக்குடிகளின் வெறுப்பையும் ஆதிக்கத்தையுமே குறிக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும்கூட நகரங்களில் பாட்டாளிகளும் பாமரர்களும் வசிக்கும் பகுதிகள் ஜனநெருக்கம் அதிகம் நிறைந்த சுகாதாரமற்ற பெரிதும் மக்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாகவே உள்ள சூழலில், பெரும் பணக்காரர்களும் அதிகாரிகளும் பல்லாயிரம் சதுரடி பங்களாக்களிலும் பெரிய கோல்ஃப் மைதானங்களிலும் பொழுதைக் கழிப்பதை நாம் பார்க்க முடிகிறது.

 

ஆனால், மால்தஸ் எண்ணியதுபோல் மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு பெரும் நெருக்கடியாகவெல்லாம் வளர்ந்து விடவில்லை. சொல்லப்போனால் 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் தான் மக்கள்தொகை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. எனினும் அதற்கேற்ப உணவும் பிற பொருட்களின் உற்பத்தியும் பெருகியதால் மால்தஸின் கணக்கு தவறாயிற்று. ஆனால், மக்கள்தொகைப் பெருக்கம் குறித்தான கருத்தினை விதைத்தவர் மால்தஸ் தான். அந்த விதைதான் சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் கழித்து மீண்டும் முளைவிட்டு வளர்ந்து மரமானது. ஆம், 1968ல் உயிரியலாளர் பால் எர்லிக் எழுதிய The Population Bomb என்னும் புத்தகம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மால்தஸ் கூறிய அதே கருத்துக்களைத் தான் எர்லிக்கும் கூறினார் என்றாலும் சூழலுக்கு ஏற்ப சற்று மேம்படுத்தியிருந்தார். அதாவது மக்கள்தொகைப் பெருக்கத்தால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்னும் மால்தஸின் கருத்தையே சற்று மாற்றி மக்கள்தொகைப் பெருக்கம் தீவிர சுற்றுச்சுழல் பாதிப்புகளுக்குக் காரணமாகிறது என்று கூறினார். அதற்கு அவர் துணைக்கு அழைத்துக் கொண்டது இந்தியாவை. அவரது டில்லி பயண அனுபவத்தை வைத்துத்தான் தன் புத்தகத்தையே தொடங்குகிறார். அவர் அவருடைய மனைவி குழந்தையுடன் டில்லியில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்வதற்காக டில்லியின் சேரிகள் வழியாக டாக்ஸியில் பயணிக்கிறார். அப்படி பயணிக்கையில் வழியெங்கும் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டம் சாலையோரங்களில் தூங்குவதும், சமைப்பதும், சாப்பிடுவதும், சண்டை இடுவதும், பிச்சையெடுப்பதும், சிறுநீர் மலம் கழிப்பதுமாக இருப்பதைக் காண்கிறார். அவர், டில்லியின் வெப்பமும் ஜனநெருக்கமும் இரைச்சலும் அடுப்புப் புகைகளிலில் இருந்து வரும் காற்று மாசும் தனக்கு நரகத்தில் இருப்பது போல உணர வைத்தது என்று கூறுகிறார். இப்படியாக ஒரு நிலப்பரப்பின் சூழலியல் குறித்தும் வரலாறு குறித்தும் அம்மக்களின் வாழ்வியல் குறித்தும் அறிந்திராத ஒருவர் தான் கண்டதை வைத்து மக்கள்தொகைப் பெருக்கம் சுற்றுச்சூழல் பாதிப்பினை அதிகரிக்கும் என்னும் முடிவுக்கு வருகிறார். அவர் எழுதிய புத்தகமும் 2 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது. அதைத் தொடர்ந்து வந்த 1970 முதல் உலக புவி தினத்தில், இப்பூமியை காக்க மக்கள்தொகைப் கட்டுப்பாடு அவசியம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை எழுப்பத் தொடங்கினர்.

 

 

இதே காலகட்டத்தில் எர்லிக் போன்றே இன்னும் சிலரும் மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்தினர். அவர்களில் முக்கியமானவர் காரட் ஹார்டின். அடிப்படையில் ஓர் சூழலியலாரரான அவர் மக்கள்தொகைப் பெருக்க பிரச்சினையை தேசிய இன அடையாளத்துடனும் வர்க்க நலன்களோடும் பொருத்திப் பார்த்தவர். அவருடைய The tragedy of the commons மற்றும் Lifeboat ethics ஆகிய இரண்டு கட்டுரைகளின் வழி மக்கள்தொகைப் பெருக்கம் குறித்தான பிரச்சினையையும் அதற்கானத் தீர்வுகளையும் பரிந்துரைத்தார். இரண்டின் வழியும் அவர் கூற வருவது இந்த பூமி வரையறுக்கப்பட்ட வளங்களை கொண்டது. அதனால், ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையின் தேவையைத்தான் பூர்த்தி செய்ய முடியும். எனவே மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தபட வேண்டிய ஒன்று தான். அதிலும் ஏழை நாடுகளில் உள்ள மக்கள் நெருக்கடி காலங்களில் வளர்ந்த நாடுகளின் வளங்களை பயன்படுத்தி கொள்ளவே முற்படுவார்கள். அது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டின் மக்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எண்ணினார். எனவே வளர்ந்த நாடுகள் அவர்கள் வளங்களை பிறர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காமல் பாதுகாத்துக் கொள்ளவதே சிறந்தது என்று ஹார்டின் கூறினார். ஆனால், மக்கள்தொகைப் பெருக்கம் குறித்தான எர்லிக் மற்றும் ஹார்டின் இருவரின் கூற்றும் பிழையானது என்று பின்னாளில் தெரிந்துவிட்ட போதும் அன்று அமெரிக்க அரசியலில் தவிர்க்க முடியாத கருத்தாக்கமாக அது இருந்தது.

 

மக்கள்தொகைப் பெருக்கமும் – வலதுசாரி அரசியலும்

மக்கள்தொகைப் பெருக்கம் என்னும் கருத்தாக்கம் தீவிர வலதுசாரியினர் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கொள்ளவே பெரிதும் உதவி புரிகிறது. அது அவர்களின் இன-மத கலாச்சாரங்களை, தங்கள் இயற்கை வளங்களை தற்காத்துக் கொள்ளுதல் என்னும் பெயரில் குறிப்பிட்ட சிலரின் அரசியல் ஆதாயங்களை வளர்ப்பதற்கே பெரிதும் உதவி புரிகின்றது. உதாரணமாக அமெரிக்காவில் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக டிரம்ப் பேசிய பேச்சுக்கள் ஆகட்டும், ஐரோப்பாவில் ஐரோப்பியர்களைவிட புலம் பெயர்ந்து வந்தவர்களின் இனப்பெருக்க விகிதம் அதிகமாக இருக்கிறது என்னும் எண்ணம் ஆகட்டும், இந்தியாவில் இந்துக்களை விட இசுலாமியர்கள் (திட்டமிட்டே!) அதிகம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்னும் வதந்தி ஆகட்டும், தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைகள் வடமாநிலத்தவரால் பறிக்கப்பட்டுக் கொள்கின்றன என்னும் பேச்சாகட்டும்  அனைத்தும் இன அடிப்படையில் மற்ற இனத்தவர் எண்ணிக்கையில் பெருகும் பொழுது தம்மையும் தம் இயற்கை வளங்களையும் அவர்கள் ஆதிக்கம் செலுத்திடக் கூடும் என்னும் அச்சமே காரணம். இதனையே எர்லிக் மற்றும் ஹார்டின் கருத்துக்களில் இருந்து நாம் காணலாம். அதே கருத்தாக்கத்தின் தொடர்ச்சியாக தான் ஹிட்லர் முசோலினி போன்றவர்கள் இனத் தூய்மையைக் காத்திட தங்களுக்கு ஆபத்து என கருதிய இனத்தவரை கொன்று குவித்தனர். அதையேதான் இன்றும் அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகளும் இந்தியாவில் நடைபெறும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும் உணர்த்துகின்றன.

 

மக்கள்தொகை பெருக்கத்தை வலதுசாரியினர் இரண்டு விதமாகப் பார்க்கின்றனர். ஒன்று தென்கிழக்கு நாடுகளில் ஏற்படும் மக்கள்தொகைப் பெருக்கம் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு வழிவகுக்கிறது. இரண்டாவது மக்கள்தொகைப் பெருக்கத்தால் புலப்பெயர்வு ஏற்பட்டு அதன் மூலம் வளர்ந்த நாடுகளின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. அதனால்தான் அமெரிக்கா மக்கள்தொகை கட்டுப்பாடு என்னும் திட்டத்தை செயல்படுத்தத் துணிந்தது.

 

1959ல் அமெரிக்க செனட் கமிட்டியின் பரிந்துரைப்படி வெளியுறவு கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை (குடும்ப கட்டுப்பாடு) செயல்படுத்தும் வளரும் நாடுகளுக்கு சிறப்பு உதவிகள் வழங்கிட பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் 1966ல் ஜனாதிபதி ஜான்சன் அந்த பரிந்துரையை கட்டாயமாக்கி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் பல ஏழை நாடுகளில் இந்த குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமெரிக்க நிதியுதவியுடன் தீவிரமாக அமலாக்கப் பட்டது. இந்தியாவிலும் 1976ல் எமர்ஜென்சி அமலில் இருந்த காலக்கட்டத்தில் இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்தியின் நேரடிக் கண்காணிப்பில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் கட்டாயப் படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் சுமார் 83 லட்சம் பேருக்கு கருத்தடை செய்யப்பட்டது. அதில் பெரும்பாலானோர் ஆண்கள். ஆனால், இந்தியாவில் மட்டுமே இது கட்டாயப்படுத்த படவில்லை. உலகம் முழுவதுமே இதே நிலைதான் அன்று இருந்தது. இந்தியாவில் மட்டும் தான் பெரும்பாலும் ஆண்கள் கருத்தடை செய்யப்பட்டனர். உலகம் முழுவதும் இந்த திட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்கள் தான். அமெரிக்க அரசின் கருத்துப்படி அன்று குடும்ப கட்டுப்பாடு திட்டம் அதே வேகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அமெரிக்க நிதியுதவியின் மூலம் கருத்தடை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை மட்டும் 10 கோடியை தாண்டும் எனக் குறிப்பிட்டது. இப்படி வளர்ந்த நாடான அமெரிக்கா ஒரு பொய்யான கருத்தாக்கத்தை நம்பி தன் எதிர்கால நலனை காத்துக் கொள்ள தன்னுடைய பண உதவி என்னும் வல்லாதிக்கத்தின் மூலம் வளரும் நாடுகளில் உள்ள மக்களின் இனப்பெருக்க உரிமையை பறித்தது. இந்த தாக்குதலை வளரும் நாடுகளின் மீது மட்டும் அமெரிக்கா நடத்தவில்லை. தன் சொந்த நாட்டைச் சேர்ந்த வசதியற்ற ஏழை எளிய மக்களின் மீதும் இதே வல்லாதிக்கத்தைச் செலுத்தியது. அமெரிக்காவில் வாழ்ந்த கருப்பினத்தவர், ஏழை எளிய பெண்கள் போன்றவர்களுக்கு பணத்தாசைக் காட்டியும் கட்டாயப்படுத்தியும் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது. இது அப்பட்டமான நிற மற்றும் வர்க்க ஆதிக்க செயல்பாடு தான். ஏனெனில் அமெரிக்கா தன் வெள்ளை இன மக்களின் இருத்தலையும் அவர்கள் வசதிகளை காத்துக் கொள்ளவும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திடவும் மற்ற நாடுகளைச் சேர்ந்த பிற இனத்தவர்களையும் பண வசதியற்ற ஏழை எளிய மக்களையும் கட்டாயப் படுத்தி கருத்தடை செய்ய வைத்தது ஹிட்லரின் ஆரிய இனப் பெருமிதத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு சற்றும் சளைத்ததல்ல.

 

 

மக்கள்தொகைப் பெருக்கமும்- இடதுசாரிகளும்

மக்கள்தொகைப் பெருக்கம் குறித்தான இடதுசாரிகளின் பார்வையும் வலதுசாரிகளின் பார்வைப் போன்றே இருந்து வந்துள்ளது. அவர்கள் கட்டாய கருத்தடைகளையும் இன, நிற அடிப்படையில் மக்கள்தொகைப் கட்டுப்பாட்டை அணுகினார்கள் என்றால், இடதுசாரிகளின் பார்வை அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் கருத்தடை வசதிகள் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் அவர்கள் தாங்களாகவே குழந்தை பெற்றுக் கொள்ளவதை தள்ளிப்போடவும் குறைத்திடவும் வாய்ப்பளிக்கும் என்றே எண்ணினர். கல்வி சுகாதாரம் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு போன்றவை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவற்றை மக்கள்தொகைப் பெருக்கம் என்னும் கண்ணாடி கொண்டு பார்ப்பதுதான் அபத்தம் என்று கூறுகிறேன். கருத்தடை உரிமை என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்கள் குடும்பத்தை திட்டமிட உதவியாக இருக்க வேண்டும். மாறாக மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இருத்தல் கூடாது. மக்கள்தொகைப் பெருக்கம் ஆபத்தானதாக பார்க்கப்படக் காரணம் மக்கள்தொகைப் பெருக்கத்தால் நுகர்வும் அதன் பயனாக உமிழ்வும் அதிகமாகி காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தும் என்பதுதான் பெரும்பாலானோரின் வாதமாக இருக்கிறது. ஆனால், அதிக மக்கள்தொகைப் கொண்ட இந்தியாவை விட குறைந்த மக்கள்தொகைப்யும் குறைவான நிலப்பரப்பும் கொண்ட கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளின் கார்பன் உமிழ்வு அதிகமாகதான் இருக்கிறது. அதேபோல் ஒரு சராசரி இந்தியரை விட ஓர் அமெரிக்கர் மேற்கொள்ளும் நுகர்வு (உணவு மற்றும் பிற பொருட்கள் அனைத்திலும்) பல மடங்கு அதிகமாக இருக்கிறது. உலகில் இன்று உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் வளர்ந்த நாட்டினரால்!

 

நவீன மருத்துவ வசதிகளும், தொழில்நுட்பத் திறன்களும் இன்று பெருமளவில் இறப்பு விகிதத்தைக் குறைத்து மக்கட்தொகைப் பெருக்கத்துக்குக் காரணமாகியிருக்கின்றன. மக்கட்தொகை அதிகரிப்பால் இயற்கை வளங்களின் பயன்பாடு அதிகரிக்குமென்பதையும் அதனால் பொருள் உற்பத்தியும், உமிழ்வும், மாசுகளும் அதிகரிக்குமென்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், அதே நேரத்தில் முதன்மையான பிரச்சினையாக இருப்பது ஒரு சிறுபான்மையினர் மட்டுமே மிகையான நுகர்வுக்கும், அவற்றால் விளையும் சூழல் சீர்கேடுகளுக்கும் காரணமாக இருக்கின்றனர் என்பதுதான். இதனை ஒப்பிடும்போது மக்கள்தொகை பெருக்கம் இரண்டாம் பட்சமானதாகவே இருக்கிறது. என்னதான் மக்கள்தொகை இன்று அதிகமாக இருந்தாலும்கூட இந்த சிறுபான்மையினர் அபகரித்து வைத்திருக்கும் வளங்களைப் பங்கிட்டால் ஒட்டுமொத்த சமூகத்தின் தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்துவிட முடியும். அதாவது, பத்து குழந்தைகளைப் பெற்ற ஒரு ஏழையைவிட ஒரு குழந்தையைக் கொண்ட ஒரு கோடீஸ்வரரின் குடும்பமே சூழல் சீர்கேட்டுக்கு மிக அதிக காரணமாக இருக்கிறது. சூழல் நெருக்கடிகளின் காரணங்களை அலசும்போது அதிக சீர்கேடுக்குக் காரணமான சிறுபான்மை கோடீஸ்வரர்களைத் தப்பவிட்டுவிட்டு எண்ணிக்கையில் அதிகமான ஏழைகளைக் குற்றம்சாட்டுவது அபத்தமானது.

 

நிலைமை இப்படி இருக்கையில் மக்கள்தொகைப் பெருக்கம் உலகிற்கு பெரும் அச்சுறுத்தல் என்று கூறிக்கொண்டு இருக்கும் மால்தஸ், எர்லிக், அட்டன்பேரோ, பிரின்ஸ் ஃபிளிப், பில் கேட்ஸ், டிரம்ப் போன்றவர்கள் எல்லாம் வெள்ளையின, பணக்கார, அதிகாரம் மிக்க ஆணாதிக்கவாதிகளாகவே இருந்து வந்துள்ளனர். இவர்களின் பிரச்சாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஏழை நாடுகளைச் சேர்ந்த பல்வேறு இனங்களை சேர்ந்த குரல்வளையற்ற பெண்கள்தான். அவர்கள்தான் கட்டாயமாக கருக்கலைப்பு செய்யப்பட்டும் கருத்தடை செய்யப்பட்டும் கொடுமைப்படுத்தப் பட்டனர். இன்று அதே அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை வேண்டி போராடுவதும் பெண்கள்தான். இனப்பெருக்கம் ஓர் இயற்கையான நிகழ்வு. அனைத்து உயிர்களையும் போலதான் மனிதர்களின் இனப்பெருக்கமும். குழந்தை வேண்டுமா வேண்டாமா எப்பொழுது வேண்டும் எத்தனை வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும். அதில் சட்ட திட்டமோ, அரசோ, சமூகமோ தலையிடுவது அபத்தம். பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட உலகில் 800 கோடி அல்ல 1000 கோடிக்கும் மேல் மக்கள்தொகைப் பெருகினாலும் இயற்கையால் அனைவருக்கும் உணவளிக்கவும் முடியும் சுற்றுச்சூழலும் கெடாது. பிரச்சனை மக்கள்தொகைப் பெருக்கம் அல்ல மக்களின் சிந்தனையை, செயலை, வாழ்க்கை முறையை கட்டுப்படுத்தும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பும் அதற்குத் துணை நிற்கும் அரசுகளும் தான்.

  • அகிலன் பாலகுரு
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Palanikumar
Palanikumar
10 months ago

மக்கள் தொகை பெருக்கமும் இயற்கையே!!
பறந்த பூமியில் மனிதனின் மூச்சுக்காற்று படதா இடங்களும் உண்டு.
இயற்கை தன்னை தானே தகவைத்து கொள்ளும் அதன் விதிக்களுக்கு உட்பட்டு.