முதலாளித்துவத்தின் இரண்டாம் முரண்

படம் 3: பிரஞ்சுப்புரட்சி

அத்தியாயம் 2: முரண்களும் வரலாற்று பொருள்முதல்வாதமும்

  • சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை உலகின் உயிரினங்கள் அனைத்தையும் வகைப்படுத்திப் பார்க்க மட்டுமே நமது அறிவியல் பழகியிருந்தது. அதில் ஒவ்வொரு வகைப் பிரிவிற்கும் ஒரு குறிப்பிட்ட ஒத்ததன்மை அல்லது குணம் இருக்கும். எளிமையான உதாரணமாக, பறவைகள் என்ற பிரிவு பறக்கும், முட்டையிடும்; மீன்கள் தண்ணீரில் இருக்கும்; பாலூட்டிகள் குட்டிபோடும், பால் கொடுக்கும் போன்றவற்றின் அடிப்படையில் மேற்கண்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டு இருந்தன. இதில் ஒவ்வொரு பிரிவையும் கடவுள் தனித்தனியே படைத்தார் என்றும்கூட கூறப்பட்டது. அதில் மனித இனத்தைக், கடவுள் தன்னைப்போன்ற உருவில் மிகவும் நெருக்கமாகப் படைத்தார் என்றெல்லாம் அறிவியல் உலகமே கூறிய காலங்கள் உண்டு. இதில் ஒரு பிரிவுக்கும் இன்னொரு பிரிவுக்கும் இடையில், உணவுச் சங்கிலியைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நம்பப்பட்டது. ஆனால், முதன்முதலாக ஒரு அறிவியல் அறிஞர், “மனிதனைக் கடவுள் படைக்கவில்லை. குரங்கு உருவான அதே மூதாதையரில் இருந்து தான் மனிதனும் உருவாகி இருக்கிறான். உயிர்கள் அனைத்திற்கும் மூலம் ஒன்றே. அவை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு விதங்களில் பரிணமித்ததன் விளைவாகத் தான் இறுதியில் மனித இனம் தோன்றியுள்ளது” என்று கூறி அதனை நிரூபணம் செய்தார். அவர் தான் ‘உயிரியல் பரிணாமக் கோட்பாடு’ தந்த சார்லஸ் டார்வின்!அந்தச் சமயத்தில் அறிவியல் உலகினால் கேலி செய்யப்பட்டாலும், வெகுகாலத்திற்கு டார்வினின் ‘பரிணாமக் கோட்பாட்டை’ அறிவியல் உலகினால் மறுக்க இயலவில்லை. அவரது இந்தக் கோட்பாடு அறிவியல் உலகை ‘டார்வினுக்கு முன் – டார்வினுக்குப் பின்’ என்று பிரிக்கும் அளவிற்கு உலகையே புரட்டிப் போட்டது. உதாரணமாகப் பறவைகள் முட்டையிடும், பாலூட்டிகள் குட்டி போட்டுப் பால் கொடுக்கும் என்று வகைப்பாடு இருக்கையில்; பிளாட்டிபஸ் என்ற பாலூட்டி முட்டைபோடும். டார்வினுக்கு முந்தைய அறிவியல் உலகைப் பொறுத்த வரை அது ஒரு ‘Exception’ அல்லது ‘Anomaly’. அதாவது அவர்கள் உருவாக்கிய வகைப்பாட்டின் பார்வையில் ஒரு ‘ஒழுங்கின்மையான’ உயிரினம். ஆனால், டார்வினுக்குப் பிந்தைய அறிவியல் உலகு இதற்கு விளக்கம் கொடுத்தது. பறவைகளும் பாலூட்டிகளும்  முட்டையிடும் தன்மையுடைய ஒரே மூதாதைய இனத்தில் இருந்து வந்தவையே. இரண்டு இனங்களும் இரு வேறாக பரிணமித்துள்ளன. அப்படிப் பார்த்தால் பரிணாமம் ஒரு இயக்கம்; ஒரு இயங்கியல் (Dialectic). அந்த இயக்கத்தின் ஒரு கட்டத்தில் உருவான ஒரு உயிரினம்தான் ‘பிளாட்டிபஸ்’ என்றது டார்வினுக்குப் பிந்தைய அறிவியல் உலகம்.
    படம் 1. மூன்று வித்தியாசமான பண்புகளை ஒருங்கே பெற்ற பிளாட்டிபஸ்

     

    இதற்குப் பின்னர் அறிவியல் உலகம் வகைப்பாடுகளையே விட்டுவிடவில்லை. ஆனால், நிலைத்த பண்புகளின் அடிப்படையில் வகைப்பாடுகள் இல்லாமல் ஒரு இயக்கத்தை அடிப்படையாய் கொண்டு வகைப்பாடுகள் உருவாக்கப்பட்டன. டார்வினின் இந்த தாக்கம் இயற்கை அறிவியலோடு நின்றுவிடவில்லை என்பதுதான் வியப்பு. அவரது தாக்கம் சமூக அறிவியலிலும் எதிரொலித்தது. முக்கியமாக வரலாற்றில்!

    டார்வினுக்கு முன்னர் வரலாறு என்பது பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்த கால அளவாகவும், முக்கிய நிகழ்வுகளைக் குறித்து வைப்பதாகவும் மட்டுமே பார்க்கப்பட்டது. ஒரு காலத்திற்கும் மற்றொரு காலத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் கற்பிக்கப்படவில்லை. ஆனால், டார்வினின் தாக்கம் வரலாற்றை ஒரு நகர்வாக, இயக்கமாக, ஓட்டமாகப் பார்க்கச் சொல்லியது. வரலாற்றுக் காலங்கள் ஒரு நதியினைப்போல் பார்க்கப்பட்டன. ‘சமூகப் பரிணாமம்’ (Social Evolution) என்ற பதம் புழக்கத்திற்கு வந்தது. அதாவது உயிரினங்கள் போலவே சமூகமும் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்குப் பரிணமிக்கிறது என்ற கருத்து உருவானது.

    இதற்குப் பல்வேறு அடிப்படைகள் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக ஆங்கிலேய சமூகவியல் அறிஞரான ஸ்பென்சர் (Herbert Spencer), இந்தப் பரிணாமத்தை மக்கள்தொகையையும், அந்தச் சமூக அமைப்பின் எளிமைத் தன்மையையும் வைத்து விளக்குகிறார். சமூகமானது குறைந்த மக்கள்தொகையில் இருந்து அதிக மக்கள்தொகையை நோக்கியும், எளிமையான அமைப்பிலிருந்து சிக்கலான (Complex) அமைப்பையும் நோக்கி நகரும் என்று கூறினார். பல அறிஞர்கள் இந்த எளிமையான அமைப்பிலிருந்து சிக்கலான அமைப்பினை நோக்கிய சமூகத்தின் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால், “எதனால் இந்தப் பரிணாமம் நிகழ்கிறது? அந்த இயக்கத்தின் அடிப்படை (mechanism) என்ன?” போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. இதற்கான பதிலை ‘இயங்கியல்’ (dialectic) தத்துவத்தின் அடிப்படையில் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்’ என்னும் கோட்பாடாக அளித்தவர்தான் பேராசான் கார்ல் மார்க்ஸ். அதனைப் பார்க்கும்முன், “ஏன் மார்க்சின் இந்தக் கோட்பாடு பொருள்முதல்வாதம் எனப்படுகிறது? பொருள் உலகிற்கும் சமூக வரலாற்றிற்கும் என்ன தொடர்பு” என்பதை பார்த்துவிடலாம்.

    ஏன் பொருள்முதல்வாதம் (Materialism)?

    முன்னமே கூறியதைப்போல, வரலாற்றின் இது போன்ற பல்வேறு வகைப்பாடுகள் பல்வேறு அறிஞர்களால் உருவாக்கப்பட்டிருந்தன. தற்காலத்தில் கூட பரவலாக அனைவரும் யுவல் நோவா ஹராரேவின் ‘Sapiens’ புத்தகம் பற்றிக் கேள்வியுற்றிருபோம். இந்த புத்தகமும் வரலாற்றை பரிணாம அடிப்படையில்தான் பேசியிருக்கும். ஆனால் அந்தப் பரிணாமத்திற்கு அடிப்படையாக மனிதனின் சிந்தனையைக் குறிப்பிட்டு பேசியிருப்பார் ஹராரே [1]. இது படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் அடிப்படையில் பெரும் பிழை கொண்டது. இது கருத்துமுதல்வாத (Idealism) தத்துவத்தைச் சார்ந்தது.

    கருத்துக்களும் சிந்தனைகளும் தன்னிச்சையாக மனிதனின் உள்ளிருந்தோ, அல்லது கடவுளிடம் இருந்து அருளப்பட்டோ பிறப்பதில்லை. இந்த உலகின் பொருண்மையில் இருந்துதான், அதாவது பொருளாதாயத் (Materialistic) தன்மையில் இருந்துதான் பிறக்கிறது. பறவைகளைப் பார்த்து, அதன் அமைப்பியலைப் பார்த்து தான் மனிதன் ஆகாயவிமானத்தை வடிவமைக்கிறான். ஏன் உலகையே புரட்டிபோட்டதாக நாம் பார்த்த டார்வினின் கோட்பாடுமே, அவர் உலகம் முழுவதும் கடற்பயணம் மேற்கொண்டபோது பார்த்த உயிரினங்களை ஒப்பிட்டு ஆராய்ந்து உருவான சிந்தனை தான். நம் சிந்தனைகள் அனைத்தும் பொருள் தன்மையதான இந்த உலகில் இருந்து பெறப்பட்டதே. பரிணாமத்திலும் கூட கருத்தின் தாக்கத்தை விட பொருளின் தாக்கமே அதிகமாக உள்ளது என்கின்றனர் தற்கால ஆய்வாளர்கள்.

    உதாரணமாகப் பெரும்பாலும் மரத்தில் வாழும் தன்மையையுடைய (Arboreal) மனிதஇனத்தின் மூதாதைய இனங்கள், பல நூற்றாண்டுகள் நிலைத்த ஒரு பெரும் பஞ்சத்தின் காரணமாகவே தரையில் இறங்குகின்றனர். வேட்டையாடத் துவங்குகின்றனர். பொருள்சார் உலகின் தாக்கம் காரணமாகவே வேட்டை உலகில் நிலைக்கத் தேவையான நகங்களோ, பற்களோ இல்லாமல் கருவிகளைக் கையில் எடுக்கின்றது மனித இனம். மனிதனின் மூளையில் கருவிகள் செய்யும் சிந்தனை தோன்றிய பின்பு தான் அவன் அதை உருவாக்குவதாகவும் இதனால் மனிதனின் உடலானது கருவிகளுக்கு ஏற்றார் போல மாறுவதாகவும் ஹராரே ‘சேப்பியன்ஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். ஆனால், மனிதரின் கட்டைவிரல் கருவிகளைப் பிடிப்பதற்கு ஏற்றார்போல் மாறிய பின்புதான், அவர்கள் சிந்தனை செய்யும் வகையில் மூளையின் அளவு மாற்றங்கள் உருவானது என்பதை உயிர்-தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதனை ‘மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்’ கட்டுரையில் ஏங்கெல்ஸ் விளக்கியிருப்பார் [2]. தற்போதைய அறிவியல் உலகமும் இதனையே கூறுகிறது.

    படம் 2: கற்கருவிகளை பிடிக்க ஏதுவாக மாறிய கட்டைவிரல்

    மார்க்சின் வரலாற்று வகைப்பாடும் பொருளினையும் பொருள்சார் உலகின் தன்மைகளையும் அடிப்படையாய் கொண்டதே. அதில் நடக்கும் உற்பத்தியையும், அதில் உள்ள முரண்களையும் அடிப்படையாய் வைத்து உருவாக்கப்பட்டதால் தான், இது பொருள்முதல்வாதத் தன்மை பெற்றுள்ளது. இதன் காரணமாகத்தான் மார்க்சின் இந்தக் கோட்பாட்டை ‘வரலாற்று பொருள்முதல்வாதம்’ (Historical Materialism) என்கிறோம். இந்தக் கோட்பாட்டில் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலான சமூகஅமைப்பிலும் ஒரு உற்பத்தி முறைக்கும், அதன் முதன்மை முரண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

    வரலாற்று பொருள்முதல்வாதம்:  

    வரலாறு என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனியான கால-நிகழ்வுகள் அல்ல. அவை ஒரு தொடராக நிகழ்வது. அந்த நிகழ்விற்குக் காரணம் கடவுள் இல்லை; மாறாக இந்த உலகிலேயே காணப்படும் முரண்கள்தான் என்கிறார் மார்க்ஸ். இந்த முரண்கள்தான் வரலாற்றின் பாதையில், சமூகத்தை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு உந்தித் தள்ளுகின்றன என்கிறார். இந்தக் கோட்பாட்டின் படி, மனிதர்களின் சமூக வரலாறு ஆறு பிரிவுகளாய் பிரிக்கப்படுகின்றது.

    1. ஆதிப்பொதுவுடைமை (Primitive Communism) – இது ஆரம்பகால வேட்டைச் சமூகமாகும். சிறுசிறு குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்த இந்தச் சமூகத்தில் உழைப்பும் அதன் பயனும் பொதுவில் இருந்தது. ஒரு குழுவில் அனைவரும் வேட்டைக்கோ, உணவு கண்டெடுக்கவோ செல்வர். அப்படிச் சேமிக்கப்பட்ட உணவு அனைவருக்கும் பொதுவாகப் பிரித்துக் கொடுக்கப்படும். தனிச்சொத்து, தனியுடைமை போன்றவை வழக்கத்தில் இல்லை. ஆனால், இந்தச் சமூகத்தில் உற்பத்தி பெரிய அளவில் இல்லை. இதனால் மனிதர்கள் நாடோடிகளாகத் திரிந்து கொண்டிருந்தனர்; சிறு பஞ்சம் அல்லது உணவுப் பற்றாக்குறை வந்தாலும் குழுவே மொத்தமாக அழியும் நிலை இருந்தது. அந்த அளவிற்கு இயற்கையின் பிடியில் கட்டுண்டு இருந்தது மனித சமூகம்.
    2. அடிமைச் சமூகம் (Slave Society) – சிந்துநதி நகரங்கள், கிரேக்க நகரங்கள், தமிழ்ச்சங்க நகரங்கள் போன்ற, அடிமைகளைப் பெரும்பான்மையாகக் கொண்டு இயங்கிய சமூக அமைப்புகள் இவை. தற்போதைய உற்பத்தியை ஒப்பிடுகையில் சிறிய அளவில் உற்பத்தி நடைபெற்றது. நாகரிகங்கள் உருவாகின; நகரங்கள் உருவாகின. தனியுடைமை, தனிமனித சொத்து போன்றவை இருந்தன. மனிதர்களே இன்னொரு மனிதர்களை உரிமை கொண்டாடும், ஏன் பொருளுக்கு விற்கும் சமூகம் இது. ஆனால், இந்தச் சமூக அமைப்புதான் இயற்கையின் நிலையில்லாத் தன்மையில் இருந்து மனித இனத்தைக் காத்தது. இந்த நிலைக்கு வர இயலாமல் அழிந்த பிற மனித இனங்கள் ஏராளம். இதனை இன்னும் விரிவாகப் பின்னர் காணலாம்.
    3. நிலப்பிரபுத்துவம் (Feudalism) – விவசாய உற்பத்தி மிகப்பெரிய அளவில், உலகம் முழுவதும் நிலம் சார்ந்து, பண்ணை சார்ந்து நிகழ்ந்தது. ஒருவரின் சொத்து என்பதே அவருக்குச் சொந்தமான நிலத்தின் அளவைப் பொறுத்து இருந்தது. நிலக்குத்தகை, குறுநில மன்னர்கள், பிரபுக்கள் கோலோச்சிய மத்திய கால (Medieval) சமூகங்கள் இவை. இந்தியாவில் குப்தர்களுக்குப் பிந்தைய காலத்தைக் கூறலாம். தமிழகத்தில் பல்லவர்களுக்குப் பிறகு வந்த காலகட்டம் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பைக் கொண்டது.

    இந்தியாவில் அடிமைச் சமூகமும் நிலப்பிரபுத்துவ அமைப்பும் இல்லை; மாறாக ‘ஆசிய உற்பத்தி முறை’ [1] என்ற அமைப்பு இருந்தது என்றும் மார்க்ஸ் கூறியிருக்கிறார். இதனை ஒரு வகையில் கிராமிய, சாதிய அமைப்பிலான உற்பத்தி முறை என்றும் கூறலாம்.

    1. முதலாளித்துவம் (Capitalism) – தற்போது உலகில் பெரும்பான்மையாக இருக்கும், தனிமனித முதலாளிகள் நிறைந்த சமூகம். உழைப்பாளர்கள் பெயரளவில் அடிமையாகவோ, பண்ணையடிமைகளாகவோ இல்லை எனினும் உற்பத்தியில் தனது உழைப்பை விற்று அதில் வாழும் பிரிவாக உள்ளனர். அடிமைச் சமூகத்தில் உருவான தனிமனித உடைமை, முதலாளித்துவ சமூகத்தில் உச்சத்தை எட்டுகிறது என்கின்றனர் மார்ச்சிய அறிஞர்கள். தொழிற்புரட்சிக்குப் பிந்தைய உலகின் காலகட்டம் ‘முதலாளித்துவ’ காலகட்டம்.
    2. பாட்டாளி அரசுடைமை (Socialism) – தனிமனித முதலாளிகள் ஒழிக்கப்பட்டு, அனைத்தும் அரசின் உடைமையாக மாற்றப்பட்ட ஒரு சமூகம். தனிமனித மூலதனமோ, அதனை அதிகரிக்க உற்பத்தியோ இல்லாமல்; மக்களின் தேவையின் அளவை அறிந்து அதற்கேற்ப திட்டமிட்ட உற்பத்தி நடைபெறும் சமூக அமைப்பை உடையது. மனித சமூகம் முதலாளித்துவத்தில் இருந்து பொதுவுடைமைக்கு நகர்வதற்கு இடைப்பட்ட சமூக அமைப்பாக இதனை மார்க்ஸ் முன்மொழிகிறார். லெனின் இதனை முதன்முதலாக ரஷியாவில் சாதித்தார். அவரைத் தொடர்ந்து மாவோவின் சீனா, காஸ்ட்ரோவின் க்யூபா போன்ற நாடுகள் இந்த நிலையை எட்டின.
    3. பொதுவுடைமை (Communism) – தனியுடைமை, அரசு போன்ற அமைப்புகள் ஒழிக்கப்பட்டு, உற்பத்தியும் அதன் பயன்களும் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சமமாக தேவைக்கேற்ப பிரித்து அளிக்கப்படும் ஒரு சமூகம். ஆதிப் பொதுவுடைமை போன்ற சமத்துவம் நிலவும், ஆனால் இயற்கையின் நிலையற்ற தன்மை பாதிக்காத வண்ணம் உற்பத்தி நடைபெறும். இந்தச் சமூக நிலை இன்னும் நம் வரலாற்று பரிணாமத்தில் உருவாகவில்லை.இவ்வாறு மனிதச் சமூக வரலாறு பல நிலைகளைக் கடந்து பரிணமிக்கிறது. இறுதியில் பொதுவுடைமை சமூகத்தை எட்டும் என்கிறார் மார்க்ஸ். இந்தப் பரிணாம வளர்ச்சி முரண்களால் நிகழ்வது என்கிறது கோட்பாடு. உலகம் முரண்களால் அமைந்தது என இயங்கியல் தத்துவம் கூறுவதாக சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதே இயங்கியல் தத்துவத்தை, மேற்சொன்ன சமூகத்தின் வரலாற்று பரிணாமத்தை ஆராயப் பயன்படுத்துகிறார் மார்க்ஸ்.உற்பத்திமுறையும்வர்க்கமுரண்களும்:

      இயற்கையும் அதன் பொருளாதாய வளங்களும் உற்பத்தியின் மூலம் தான் மனிதர்களின் உபயோகத்திற்கு வருகிறது. மனிதர்கள் உழைக்கின்றனர்; அந்த உழைப்பு இயற்கையை மனிதர்கள் நுகரத் தகுந்ததாக மாற்றித் தருகிறது. மார்க்சின் வரலாற்று பொருள்முதல்வாதக் கோட்பாட்டின்படி, வரலாற்றின் ஒவ்வொரு நிலையிலும் இந்த உற்பத்தி ஒவ்வோரு விதமாக நடைபெற்றது. உதாரணமாக நிலவுடைமைச் சமூக அமைப்பின் உற்பத்தியானது விவசாய உற்பத்தியாக நிலத்திலும் தற்போதைய முதலாளித்துவ சமூக அமைப்பில் உற்பத்தியானது தொழில் உற்பத்தியாக தொழிற்சாலைகளிலும் நடைபெறுகின்றன. இந்த உற்பத்தியைப் புரிந்துகொள்ள இதனை இரண்டு காரணிகளாகப் பிரிக்கின்றது ‘வரலாற்று பொருள்முதல்வாதக்’ கோட்பாடு.

      • உற்பத்தி சக்திகள் (Forces of Production) – உற்பத்தி சக்திகள் என்பவை உற்பத்தியில் போடப்படும் பொருட்கள் (இடுபொருட்கள்), கருவிகள், உழைப்புச் சக்தி, தொழில்நுட்ப அறிவு போன்றவையாகும். இவற்றில் இடுபொருட்கள் புறப்பொருள் சார்ந்தவையாகவும், இயற்கை வளங்களில் இருந்து கிடைப்பவையாகவும் இருக்கின்றன. கருவிகள் மனிதனால் உருவாக்கப்படுவன. இவை முந்தைய சமுதாயத்தின் மூலம் கையளிக்கப்பட்டன. மேலும் உழைப்பு சக்தியும் தொழில்நுட்ப அறிவும் மனிதன் நடவடிக்கை சம்பந்தபட்டவையாகும். இந்த நடவடிக்கைகள் மூலம் தான் உற்பத்தி உறவுகள் உருவாகின்றன.
      • உற்பத்தி உறவுகள் (Relations of Production) – மேற்கண்ட உற்பத்தி சக்திகள் மனிதர்களில் யாருடைய உடைமையாக இருக்கிறது என்பதையும், அவற்றை கொண்டு யார் உழைக்கின்றனர் என்பதையும் பொறுத்து ‘உற்பத்தி உறவுகள்’ அமைகின்றன. ஒரு பிரிவு உழைக்கையில், அவற்றின் மூலம் உருவாகும் உற்பத்தியை இன்னொரு பிரிவு அபகரிக்கையில் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் முரண் தோன்றுகிறது. இந்த இரண்டு பிரிவுகள் வர்க்கங்கள் (Class) எனப்படுகின்றன. உற்பத்தியுடன் இருக்கும் தொடர்பினை வைத்துதான் ஒருவரின் வர்க்கம் முடிவு செய்யப்படுகிறது. ஒன்று உடைமை/ஆளும் வர்க்கம்; மற்றொன்று உழைக்கும்/அடிமை வர்க்கம்.  பொதுவுடைமைச் சமூகங்களைத் தவிர பிற சமூகநிலைகள் வர்க்கமாகப் பிரிந்திருக்கும்.

      இந்த இரண்டு காரணிகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு சமூக அமைப்பின் உற்பத்தி முறைகளும் உருவாகின்றன. வரலாற்றின் ஒவ்வொரு சமூக அமைப்பின் உற்பத்தி உறவுகளையும் உற்பத்தி சக்திகளையும் அட்டவணை 1-ல் காணலாம். இவற்றில் உற்பத்தி உறவுகளில் காணப்படும் இரண்டு வர்க்கங்களுக்கு இடையில்தான் முரண்கள் உள்ளன என்கிறார் மார்க்ஸ். இந்த ‘வர்க்க முரண்’தான் வரலாற்றின் ஒவ்வொரு சமூக அமைப்பிலும் முதன்மை முரணாக உள்ளது என்கிறார். நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்ததைப் போல இந்த முதன்மையான வர்க்க முரண்தான் அதன் சமநிலை தவறி, அதனைச் சரிசெய்ய முடியாமல் போகும்போது புரட்சியாக வெடித்து அடுத்த நிலைக்கு சமூகத்தை நகர்த்திச் செல்கிறது.

      உதாரணமாக, நிலப்பிரபுத்துவ சமூகத்தை எடுத்துக்கொள்வோம். நிலம் சார்ந்த விவசாய உற்பத்தி முறையில், நிலத்தை உடைமையாகக் கொண்ட வர்க்கம் ஒன்று உள்ளது. இது ஐரோப்பாவில் Nobles, Knights, Lords, Dukes போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட ‘நிலப்பிரபுக்கள் வர்க்கம்’. இந்தியாவில் ஜமிந்தார், ஜாகிர்தார், குறுநில மன்னர்கள் போன்றவர்களைக் கூறலாம். எல்லா நிலமும் இவர்களின் சொத்தாகவே இருந்தது. ஆனால், இந்த நிலத்தில் உற்பத்தி செய்பவர்கள் இவர்கள் இல்லை. மாறாக, இந்த நிலங்களிலும் பண்ணைகளிலும் அடிமையாக இருந்து உழைக்கும் ‘பண்ணையடிமை வர்க்கம்’. இதற்கு முந்தைய அடிமைச் சமூகத்தில் உழைத்தவர்களை விட இவர்களின் வாழ்வு மேம்பட்டது என்றாலும் பண்ணையடிமையாக இருப்போருக்கு அவர்களின் உழைப்பில் விளைந்த உற்பத்தியில் ஒரு சிறு பகுதி மட்டுமே கிடைத்தது. இந்த இரண்டு வர்க்கங்களுக்கும் இடையிலான முரண், பல நூற்றாண்டுகளாக ஒரு சமநிலையில் இருந்து வந்தது.

      18ஆம் நூற்றாண்டின் மத்தியில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, அதனால் உருவான தொழில் சார்ந்த முதலாளிகள் வர்க்கம், நிலத்திலிருந்து உற்பத்தி தொழிற்கூடங்களுக்கும் நகரங்களுக்கும் நகர்ந்தது போன்ற பல்வேறு மாறுதல்கள் இந்தச் சமநிலையை அசைத்தன. மேற்கண்ட நிகழ்வுகள் அந்த சமநிலையை அசைத்து, பண்ணையடிமைகளின் பக்க விசையை அதிகரித்தன. இது நிலப்பிரபுக்களால் பல்வேறு வழிகளில் சரிசெய்ய முயன்றும் முடியாமல் போக, அந்த நூற்றாண்டின் இறுதியில் பிரஞ்சுப் புரட்சியாக வெடித்தது.

      படம் 3: பிரஞ்சுப்புரட்சி

      இதற்குப் பின்பு பல ஆண்டுகளாக ஐரோப்பா முழுவதும் நிகழ்ந்த தொடர் புரட்சிகள், நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து முதலாளித்துவ சமூகத்திற்கு வரலாற்றை நகர்த்திச் சென்றன. தொழிற்புரட்சியின் பயன்களை முழுவதுமாக அனுபவித்து மூலதனத்தை குவித்த தொழில் முதலாளிகள், இந்த முதலாளித்துவ சமூகத்தில் ஆளும் வர்க்கம் ஆயினர். பண்ணையடிமையாக இருந்த வர்க்கத்தினர், ஓரளவு சுதந்திரத்தோடு உழைப்பை கொடுத்து ஊதியம் பெரும் ‘பாட்டாளி வர்க்கம்’ ஆயினர். இவ்வாறு வரலாற்றின் அடுத்த நிலையின் இரண்டு வர்க்கங்கள் தோன்றின. தற்போது இந்த இரண்டு வர்க்கங்களுக்கும் இடையில் முரண் இருக்கிறது. இதனை முதலாளித்துவ சமூகத்தின் முதன்மை முரணாகவும், இதன் சமநிலை தவறும் போது அது ‘பாட்டாளி வர்க்கப் புரட்சியாகவும்’ வெடிக்கும் என்கின்றது வரலாற்று பொருள்முதல்வாதக் கோட்பாடு. இவ்வாறு முரண்களே சமூகத்தை வரலாற்றின் ஒரு நிலையில் இருந்து அடுத்ததோர் முன்னேறிய நிலைக்குப் பரிணமிக்கச் செய்கிறது. அதுவும் உற்பத்தி சார்ந்த பொருள்சார் முரண்களே இதற்குக் காரணம்.

      ஆனால், இந்தச் சமூக நிலைகளில் முதல் நிலையான ‘ஆதிப் பொதுவுடைமையில்’ வர்க்கங்களே இல்லாத போது, அது எவ்வாறு அடுத்த நிலையான ‘அடிமைச் சமூகத்திற்கு’ பரிணமித்தது? சமத்துவமான ஒரு சமூகம் ஏன் ஒரு அடிமைச் சமூகமாக பரிணமிக்க வேண்டும்? இதற்கான பதிலையும், இந்த வரலாற்றுப் பரிணாமத்தில் முரண்களின் தாக்கத்தை இன்னும் ஆழமாகவும் இந்தத் தொடரின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்.

      அட்டவணை 1: வரலாற்றுச் சமூகநிலைகளில் உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும்

       

      வரலாற்று சமூகநிலை

       

      உற்பத்தி சக்திகள்

       

      உற்பத்தி உறவுகள்

       

      ஆதிப்பொதுவுடைமை

      கற்கருவிகள், வேட்டைக்கருவிகள், வளர்ப்பு மிருகங்கள்  

      வர்க்கம் உருவாகவில்லை

       

      அடிமைச் சமூகம்

      சிறிய விவசாயக் கருவிகள், உலோகக்கருவிகள், வளமான நிலம்  

      ஆண்டான் – அடிமை

       

      நிலப்பிரபுத்துவம்

      நிலம், பாசன வசதிகள், முன்னேறிய விவசாயக் கருவிகள்  

      பிரபு – பண்ணையடிமை

       

      முதலாளித்துவம்

      தனியுடைமையான நவீன உற்பத்திக் கருவிகள், மூலதனம்  

      முதலாளி – பாட்டாளி

       

      அரசுடைமை

      அரசுடைமையான நவீன உற்பத்திக் கருவிகள், அரசு மூலதனம்  

      வர்க்கப்போர்

       

      பொதுவுடைமை

      பொதுவுடைமையான நவீன உற்பத்திக் கருவிகள்  

      வர்க்கமற்றது

       

      • . ஹரி பாரதி

      ஆய்வு மாணவர்,

      ஐதராபாத் பல்கலைக்கழகம்.

      ([email protected])

       

      குறிப்புகள்:

      [1] Harare, Y. N. (2011). Sapiens: A Brief History of Humankind. Harper Publications.

      [2] ஏங்கல்ஸ். F. (2005). மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம். பாரதி புத்தகாலயம்.

      [3] மார்க்ஸ், K. (2014). மூலதனம்: பாகம் 1. நியு செஞ்சுரி புக்ஹவுஸ்.

      ——————————————–

     

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments