ஓடுகளை மாற்றிக் கொள்ளும் துறவி நண்டுகள்

டேவிட் அட்டன்பேரோவின் ‘One Planet’ என்னும் புவியைப் பற்றிய ஆவணப் படத்தில், ஒரு காட்சி. இது கடற்கரையில் வாழும் துறவி நண்டுகள் (hermit crabs) மத்தியில் நடக்கும் நிகழ்வினை எடுத்துரைக்கும் சிறிய நான்கு நிமிட காட்சியாயினும், பார்ப்பவர் மனதில் பதிந்து போகும் தன்மையுடையது. இவ்வகை நண்டுகளின் முகம், கொடுக்கு, கால்கள் அனைத்தும் சாதாரண நண்டுகள் போலவே இருந்தாலும், விசித்திரமாக அவற்றின் வயிற்றுப்பகுதியில்  வெளிச்சூழலில் இருந்து காக்கும் ஓட்டுக்கு பதிலாக கடல் நத்தை ஓடுகள் அல்லது சங்குகள் உள்ளன. இதுவே இந்த வகை நண்டுகளை மிக சுவாரசியமான உயிரினமாக்குகிறது. வெயில் மற்றும் இறையாடிகளிடம் (predators) இருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஓடு என்பது நண்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு அங்கமாகிறது. இந்த நண்டுகளோ ஓட்டிற்கு பதிலாக மெல்லிய தோலுடைய  சுருண்ட வயிற்றுப்பகுதியுடன் பரிணமித்துள்ளன. ஆகவே தங்களை காத்துக்கொள்ள, கடற்கரையில் அனாதையாக கிடக்கும் மெல்லுடலிகளான (molluscs) கடல் நத்தைகளின் ஓடுகளையும் சங்குகளையும் பயன்படுத்திக் கொள்கின்றன. இவற்றின் சுருண்ட மெல்லிய வயிறு ஓட்டினை இருகப் பற்றிக் கொள்ள உதவுகின்றன.

ஓரட்டிலுண்ணல் உறவு

ஹெர்மிட் (hermit) என்றால் தமிழில் துறவி என்று பொருள். இவை பொதுவாக பெரும் கூட்டமாக வாழக் கூடியவையாக இருந்தாலும், ‘ஓட்டுக்குள்’ தனித்து பதுங்கி உயிர்வாழ்வதால் துறவி நண்டென்று அழைக்கப்படுகின்றன. இவை சுமார் 15 கோடி ஆண்டுகளாக இப்படி பிற உயிரினத்தின் ஓட்டில் வாழ்வதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 6 கோடி ஆண்டுகள் முன்பு அழிந்து போன அமோனைட் எனப்படும் ஒருவகை மெல்லுடலியின் ஓட்டில் இவை வாழ்ந்திருப்பதற்கான சான்று அவற்றின் படிமங்களில் இருந்து கிடைக்கின்றன. இப்படியாக இந்த புவியில் இரு வேறு உயிரினங்கள் (இங்கு கடல் நத்தையும் – நண்டும்) ஏதோ ஒரு விதத்தில், ஒன்றி வாழ்வதை சூழலியலாளர்கள் ‘சிம்பையாசிஸ்’ (symbiosis) என்கின்றனர். இதில் மூன்று வகை உறவுகள் உண்டு.

  1. ஒன்றுக்கொன்று துணையாகும் (mutualism) உறவு: இரண்டு உயிரினமும் பயன் பெறுவது. உதாரணம்: உண்ணிக் கொக்கு, மாட்டின் மீது அமர்ந்து உண்ணிகளை பிடித்து தின்பதால் இதற்கும் உணவு கிடைக்கிறது, மாட்டிற்கும் உண்ணிகள் குறைகிறது.
  2. ஓரட்டிலுண்ணல் (commensalism) உறவு: ஒரு உயிரினம் பயன் அடைந்து, மற்றொரு உயிரினம் எந்த நன்மையும், தீமையும் அடையாதிருப்பது. உதாரணம்: மரத்தவளைகள் மரத்தில் வாழ்தல்.
  3. மேலொட்டி (Parasitism): ஓர் உயிர் நன்மையடைந்து, மற்ற உயிர் பாதிப்படைவது. உதாரணம்: ரத்தம் உறிந்து வாழும் உண்ணிகள்.

இதில், துறவி நண்டுகளுக்கும், நத்தைகளுக்குமான உறவு ஓரட்டிலுண்ணல் (commensalism) தன்மையுடையது. இறந்துபோன நத்தைக்கு இதனால் எந்த நன்மையையும், தீமையும் கிடையாது.

பூ போன்ற தோற்றமளிக்கும் கடல் உயிரினமான அனிமோன்கள் (sea anemones) துறவி நண்டுகளுடன்  ஒன்றுக்கொன்று துணையாகும் (mutualism) உறவின் மிக பிரபலமான சான்றாக விளங்குகிறது. அவற்றின் ஓடுகளில் ஒட்டிக்கொண்டு வாழும் அனிமோன்கள், அவற்றின் கொத்தும் தன்மையால் துறவி நண்டுகளை ஆபத்தில் இருந்து பாதுகாக்கின்றன. அதே சமயம் துறவி நண்டுகள் மீதிருப்பதால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் நகர்ந்து செல்லுதல் மற்றும் நண்டின் மிச்ச இரையை உண்டு வாழ்தல் போன்ற நன்மையை அனிமோன்கள் அடைகின்றன.

துறவி நண்டின் ஓட்டில் கடல் அனிமோன் வெற்றிட சங்கிலி நிகழ்வு

ஹெர்மிட் நண்டுகள் வளர வளர இந்த ஓட்டின் அளவு அவற்றுக்கு பற்றாமல் போகிறது. இதனால் சற்று பெரிய ஓட்டினை இவை தேடிப் பிடித்து, மாறிக்கொள்வது இவற்றின் வளர்ச்சியில் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாகிறது. மேற்சொன்ன ஆவணப் படக்காட்சியும், இதையே காட்ட முயற்சிக்கிறது. ஒரு சிறிய துறவி நண்டு கரை ஒதுங்கிய ஒரு பெரிய கடல் நத்தை ஓட்டினை ஆராய்ந்து விட்டு, அதன் அளவு பெரியதாக இருப்பதால் அதனை உபயோகிக்காமல், அதன் பக்கத்தில் அமர்ந்துக் கொள்கின்றது.

சற்று நேரத்தில் 7-8 வெவ்வேறு அளவிலான நண்டுகள் அங்கு சூழ்ந்து, அளவு ரீதியாக தங்களை வரிசைப் படுத்திக்கொண்டு, அந்த கரை ஒதுங்கிய நத்தை ஓட்டின் அளவினை ஒத்த ஒரு பெரிய துறவி நண்டு வரும் வரை காத்திருக்கின்றன.  அப்படி ஒரு நண்டு வந்ததும், வரிசை அதன் பின்னால் இணைந்து கொள்கின்றது. அந்த நண்டு தன் முந்தைய ஓட்டினை துறந்து புதிய ஓட்டினுள் நுழைந்ததும், வரிசையில் இருக்கும் அனைத்து நண்டுகளும் தங்கள் ஓடுகளை விட்டு வெளியேறுகின்றன. மறுகணமே சற்றும் பொறுக்காமல், வரிசையில் முன் நிற்கும் தன்னை விட சற்று பெரிய நண்டு கழற்றிய  ஓட்டுக்குள் அடித்துபிடித்து நுழைந்து கொள்கின்றன. இந்த நிகழ்வு, வெற்றிடச் சங்கிலி (vacancy chain) எனப்படுகிறது. சில இன துறவி நண்டுகள் மட்டுமே இதை மேற்கொள்கின்றன.

நம்மைச் சுற்றியும் துறவி நண்டுகள்

இப்படியான வினோதமான நண்டுகள், எங்கோ ஒரு தூர தேசத்திலோ தீவிலோ மட்டுமே இருக்கும் என்று நமக்கு தோன்றலாம். ஆனால் உயிரின வகைகள் பெருகியுள்ள, வெப்ப மண்டல பிரதேசமான தமிழ்நாட்டிலும் இதைக் காண முடியும். நன்னீரும், கடல்நீரும் கலக்கும் உவர்நிலங்களில் அமைந்திருக்கும் சேற்றுப் பகுதிகளில் இவற்றைக் காண்பது மிக எளிது. தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மட்டும் 11 வகை துறவி நண்டுகள் பரவலாக காணப்படுகின்றன. சென்னையில் உள்ள அடையாறு, கொற்றலை, பழவேற்காடு கழிமுகங்களில் இவற்றை விதவிதமான  ஓடுகளில் அவற்றைக் கண்ட அனுபவம் எனக்குண்டு. அடையாறு கழிமுகத்தில், பூவுலகின் நண்பர்கள் நடத்திய இயற்கை நடையில், இதை எடுத்து காட்டியபோது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதை விந்தையுடன் பார்த்து ரசித்தனர். கடலின் சூழலில் இவை இறந்த சிறிய உயிரினங்களை தின்று, உணவுச்சத்து பரிமாற்றம் புரிகிறது. மேலும், இவை  உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றில் சில இனங்கள் கடல் மட்டுமல்லாமல் நிலத்திலும் வாழ்கின்றன. புவியில் உமிழப்படும் அதிக கரியமில வாயு (CO2) கடலில் கரைந்து  அமிலமாவதால், இன்று கடலின் அமிலத்தன்மை கூடியுள்ளது (Ocean acidification). இந்த தன்மை கடலில் உள்ள கார்பனேட் (Carbonate ion) அளவைக் குறைத்து நத்தைகளின் ஓட்டை அரித்து அவற்றின் எண்ணிக்கையை குறைக்கின்றன. இது துறவி நண்டுகளின் வாழ்வை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இப்படி, சுற்றுச்சூழலின் அனைத்து தட்டுகளிலும், பெரும்பாலான எல்லா உயிரினங்களும் அதீத கரிம உமிழ்வினால் அவதிப் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இது மட்டுமின்றி, இவை ஓடிற்கு பதிலாக கரையொதுங்கும் நெகிழி மூடிகளை பயன்படுத்தும் புகைப்படங்கள் நெகிழி மாசின் அவலத்தையும் புலப்படுத்துகின்றன.

  • மேகா சதீஷ்
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Deepak
Deepak
9 months ago

Nice article. Very interesting