நெகிழிக்கான தீர்வுகள்: அசலும் போலியும்

 ஒரு பிரச்சினைக்கு முன்வைக்கப்படும் தீர்வானது அந்த பிரச்சினையை தீர்ப்பதாக அல்லாமல் இன்னும் மோசமாக்குவதாகவும் உண்மையான பிரச்சினையிலிருந்து திசைதிருப்புவதாகவும் அமைவதைப் போலித்தீர்வுகள் (False solutions) என்கிறோம். போலித்தீர்வுகள், பிரச்சினைக்குரிய நிறுவனங்களால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு அவற்றின் பிரச்சார வலிமையால் பரப்பப்பட்டு பொதுமக்களின் அறியாமையால் முன்னெடுக்கப்படுகின்றன. இவை, ஏதோவொரு நல்ல செயல்பாடு நடந்துகொண்டிருப்பதான நம்பிக்கையை குடிமைச் சமூகத்துக்குத் தருகின்றன. இதன்மூலமாக சரியான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்துவிடுகின்றன.

நெகிழிக் கட்டுப்பாடு விஷயத்தில், பெருநிறுவனங்களின் போலித் தீர்வுகளுக்கு குடிமைச் சமூகம் இரையாவதும் – அவையே உலகளாவிய பேச்சுவார்த்தைகளில் எதிரொலிப்பதையும் செயல்பாட்டாளர்கள் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கின்றனர். பெருநிறுவனங்களின் ‘கருணை’யைப் பெறுவதற்காய் போலித்தீர்வுகளை மக்களிடையே திணிக்க முயலும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் வெற்றிக்கான பயணத்தில் பெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன.

சரியான தீர்வுகளை முன்னெடுப்பதைவிடவும் ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதான வேடங்களில் வரும் போலியான தீர்வுகளை அம்பலப்படுத்தி அவை கட்டமைக்கும் பிம்பங்களை உடைத்து நொறுக்குவதும்கூட சூழல்செயல்பாட்டாளர்களின் கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நெகிழி ஒரு நச்சுப்பொருளாகவும், அதன் உற்பத்தியும் பயன்பாடும் கழிவு நீக்கமும் சூழலைப் பாதிப்பதாகவும் இருக்கும் நிலையில் அதனை உற்பத்தியிலேயே கட்டுப்படுத்துவதைத் தடுக்கும் எந்த முன்னெடுப்பையும் போலித் தீர்வாகவே கருத முடியும்.

கடற்கரை சுத்தப்படுத்தல், நெகிழிச் சாலைகள் அமைத்தல், நெகிழிக் குப்பையிலிருந்து கட்டுமானப் பொருட்கள் தயாரித்தல், குப்பையை எரித்து மின்சாரம் பெறுதல் போன்றவை நெகிழிப் பிரச்சினையைக் கையாள முன்வைக்கப்படும் போலித்தீர்வுகளாகும். மறுசுழற்சி செய்வதால் / குப்பைகளை வகைபிரித்துப் பெறுவதால் நெகிழிப் பிரச்சினையை சரிசெய்ய முடியுமென்ற பிரச்சாரம்கூட ஒருவகையான போலித்தீர்வே. இந்த போலியான தீர்வுகள் மேலும் மேலும் அதிகம் நுகர்வதற்கான நியாயத்தை நுகர்வோருக்கு வழங்குகின்றன.

ஒன்றைப் போலி என்று சொல்லும்போதே எது அசலானது என்றும் சொல்ல வேண்டுமல்லவா? குறிப்பாக, “ஐஐடி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு; பிளாஸ்டிக்கை சாப்பிடும் பாக்டீரியா!” என்று ஒரு தலைப்புச் செய்தியைப் பார்த்தால் நாம் என்ன முடிவெடுப்பது என்று உணர போலிகளுக்கும் அசலானத் தீர்வுகளுக்குமான வேறுபாட்டை உணர்வது அவசியம். நெகிழி விஷயத்தில் அதன் தீமை குறித்த நல்ல புரிதல் உள்ளவர்களுக்கே சரியான தீர்வுகள் குறித்து போதுமான தெளிவிருப்பதில்லை. சில பிரபலமான போலித் தீர்வுகளையும் சரியான தீர்வுகளையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

குப்பை எரிவுலைகள்:

போலித்தீர்வுகளில் மிகுந்த அபாயகரமானதாகவும் அதேநேரத்தில் அதிக பிரபலமடைந்து வருவதாகவும் குப்பை எரிவுலைகள் (Incinerators) பார்க்கப்படுகின்றன. பைராலிசிஸ், கேசிபிகேஷன், ஆற்றலை மீட்டல் (Energy recovery), குப்பையிலிருந்து ஆற்றல் (Waste To Energy), நெகிழியிலிருந்து எரிபொருள் (Oil from plastics) என பல கவர்ச்சிகரமான முகமூடிகளுடனும் இன்று இவை நம்மிடையே திணிக்கப்படுகின்றன. ஒருகாலத்தில் மேலைநாடுகளில் காலாவதியாகிப்போன இந்த எரிவுலைகள் இன்று அதிநவீன கண்டுபிடிப்புபோல மூன்றாம் உலக நாடுகளில் பெரும் நிதியுதவிகளுடன் நிறுவப்படுகின்றன. சென்னையின் இத்தகைய இரண்டு குப்பை எரிவுலைகள் நிறுவப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் நாடு முழுவதும் இத்தகைய குப்பை எரிவுலைகள் ஐம்பதுக்குமேல் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன என்று தெரியவருகிறது.

மிகஅதிக பொருட்செலவு மிக்க திட்டங்களாக எரிவுலைகள் இருந்தபோதிலும் நெகிழி உற்பத்தியை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முனையாமல் எந்த குப்பையையும் சாம்பலாக்க இவை உதவுவதால் ஆக்கப்பூர்வமான குப்பை மேலாண்மை நடவடிக்கைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்கு அரசாங்கங்களுக்கு இவை உதவுகின்றன. குப்பை எரிவுலைகள் காலநிலை மாற்றத்தைத் தூண்டும் பசுங்குடில் வாயுக்களை உமிழ்வதாகவும், நச்சு வாயுக்களையும் சாம்பலையும் உருவாக்குவதாகவும் இருக்கின்றன.

சிமெண்ட் ஆலைகளில் நெகிழிக் குப்பைகளை எரிக்கும் ‘Co – processing’ எனும் செயல்பாடும்கூட மிகக்கடுமையான சூழல் மாசுபாட்டை உள்ளடக்கியப் போலித்தீர்வாகும். குப்பை எரிவுலைகள் நெகிழியை அழிப்பதில்லை. மாறாக, அவற்றை அதிகச் செறிவுடைய நச்சுகள் கொண்ட சாம்பலாகவும் வாயுக்களாகவும் மாற்றுகின்றன. இவற்றின் நச்சுச் சாம்பலை பாதுகாப்பாகக் கையாள முடியாது. அந்த சாம்பலை பயன்படுத்தி கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றைச் செய்வது ஒரு ஆபத்தான நச்சுத் தீர்வாகும். குப்பை எரிவுலைகள் குடிமக்களின் வரிப்பணத்தை பெருநிறுவனங்களின் இலாபத்துக்காக வீணடிக்கின்றன. குப்பை எரிவுலைகள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அமைகின்றன.  குப்பை எரிவுலைகள் இயற்கை வளங்களை எரித்து வீணடிக்கின்றன. மின்சாரம் தயாரிக்கும் எரிவுலைகளுக்குத் தொடர்ந்து நெகிழிக் குப்பை தேவைப்படுகிறது; ஆகவே, அவை நெகிழிக் கட்டுப்பாட்டுக்கு நேரெதிரானவை. குப்பை எரிவுலைகளிலிருந்து கிடைக்கப்பெறும் மின்சாரத்தின் கார்பன் வழித்தடமானது நிலக்கரி மின்சாரத்தின் கார்பன் வழித்தடத்தைவிட அதிகம்.

தமிழ்நாடு இத்தகைய போலித்தீர்வுகளில் முதலீடு செய்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

நெகிழி மறுசுழற்சி

நெகிழியை மறுசுழற்சி செய்யும்போது அதைவிடத் தரம்குறைந்த பொருளே கிடைக்கிறது. இதனை ‘குறைசுழற்சி’ (Downcycling) என்கிறோம். எந்த நெகிழிப் பொருளையும் ஒருசில முறைக்குமேல் மறுசுழற்சி செய்ய முடியாது. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்யவே முடியாது. உதாரணமாக, டெட்ரா பேக்கிங்கள், சேஷேக்கள், போன்றவற்றைத் தொழில்நுட்பரீதியாக மறுசுழற்சி செய்ய முடியாது. எந்த நெகிழியையும் சிலதடவைகளுக்குமேல் குறைசுழற்சி செய்ய முடியாத நிலையில் இவை மீண்டும் நிரந்தரமான குப்பைகளை உருவாக்குவது இயல்பே. மேலும் மறுசுழற்சியானது ஏராளமான நச்சு வாயுக்களை வெளியிடுவதாகவும் அதிக மறைநீர் பயன்பாடு கொண்டதாகவும் ஆகவே சூழல் விரோத நடைமுறையாகவும் இருக்கிறது. நெகிழிக் கழிவு மேலாண்மையில் மறுசுழற்சி முக்கிய அங்கமாகவே பரிந்துரைக்கப்பட்டாலும் அதனை நெகிழிப் பிரச்சினைக்கான தீர்வாக எடுத்துக்கொள்வது அபத்தமானது. உலகம் முழுதும் வெறும் 2% நெகிழி மட்டுமே ‘திறம்பட முழுமையான மறுசுழற்சி’க்கு உட்படுத்தப்படுகிறது.

“ஏழ்மை இவ்வுலகில் இருப்பதாலேயே நெகிழி மறுசுழற்சியும் இருக்கிறது” என்று “The Story of Plastic” திரைப்படத்தில் சொல்வார்கள். இந்த ஒரு வரியே இது எப்படி ஒரு மோசமான தீர்வு என்பதை விளக்கப் போதுமானது.

கடற்கரை சுத்தப்படுத்தல்

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் குப்பைகள் தொடர்ந்து கடலில் சேரும் நிலையில் நகரின் ஒருசில கடற்கரைகளிலிருந்து சிலநூறு கிலோ நெகிழிக் குப்பைகளை வெளியே எடுப்பது எவ்விதத்திலும் பயனற்றது. இது நெகிழிக்கு எதிராக ஏதோவொரு நல்ல விஷயம் நடப்பதான மாயையை உருவாக்குகிறது. கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வுகள், நெகிழிக் குப்பைகளின் பழியை பொதுமக்களின்மீது போடுகின்றன. இது பெருநிறுவனங்கள் தப்பித்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது.

பல்வேறு கடற்கரை சுத்தப்படுத்தல்களுக்கு மாசுறுத்தும் பெருநிறுவனங்களே நிதியுதவி செய்கின்றன. இதன்மூலம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு முதலீடு செய்வதிலிருந்து அவை தப்பித்துக்கொள்வதோடு, இதனை விளம்பரப்படுத்தி தம்மைச் சூழல் காவலனாய் மக்கள் முன்னிலையில் கட்டமைக்கின்றன. இந்த பிம்பம் மேலும் அதிக விற்பனையை அவற்றுக்கு ஈட்டித் தருகிறது.

கடற்கரை சுத்தப்படுத்தல்கள் குப்பைகளை கட்டுப்படுத்தவோ அல்லது அழிக்கவோ எந்தவகையிலும் உதவுவதில்லை. கடற்கரைகளிலிருந்து வெளியேற்றப்படும் நெகிழியை எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்வதைத்தவிர வேறு எந்த வழிமுறையும் நம்மிடையே இல்லை. கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வுகள், சமூக ஆர்வமுள்ள இளைஞர்களை குப்பை மேலாண்மையில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பதிலிருந்து தடுத்து போலியான தீர்வுகளுக்காக உழைக்கச் செய்கின்றன.

நெகிழிச் சாலைகள்

தமிழர் கண்டுபிடித்தத் தொழில்நுட்பம் என்று ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்பட்ட இது, இறுதியில் ஒன்றிய அரசே அத்தனை புதிய சாலைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு நெகிழிக் குப்பைகளைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கும் அளவுக்கு சூழல் விரோத நடவடிக்கையில் இறங்கும் இழிநிலையில் முடிந்திருக்கிறது. சூழல் குறித்த முழுமையானப் பார்வையற்ற, எல்லாவற்றையும் வெறும் தொழில்நுட்பப் பிரச்சினைகளாக அணுகும் மனநிலைக்கு இந்தப் போலித்தீர்வு ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

நெகிழிச் சாலைகள் அமைக்க நெகிழியைச் சூடாக்கும்போதும், சாலையானது வெயிலில் சூடாகும்போதும் அது நச்சு வாயுக்களை வெளிப்படுத்துகிறது. சாலையிலிருக்கும் நுண்ணெகிழித் துகள்கள் வெயிலிலும் மழையிலும் சிதைந்து சூழலில், குறிப்பாக மழைநீரோடு நிலத்தடிநீரில் கலக்கின்றன. நெகிழிச் சாலைகள் அமைக்க நெகிழிக் குப்பைகள் தொடர்ந்து தேவைப்படுகின்றன. ஆகவே, இவை நெகிழி உற்பத்தியைக் குறைப்பதில்லை. மறுசுழற்சி போன்ற சற்று மேம்பட்ட தீர்வுகளை செயல்படுத்துவதையும்கூட நெகிழிச் சாலைகள் தடுக்கின்றன.

மட்கும் நெகிழி

நெகிழி மட்காமல் இருப்பது மட்டுமே சூழல் பிரச்சினை என்று கருதுபவர்களுக்கு மட்கும் நெகிழி கட்டற்ற நுகர்வுக்கு வாசலாக இருக்கிறது. இது, சோளம், கரும்பு போன்ற தாவர அங்கங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மட்கும் நெகிழியை அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட மட்கச்செய்யும் நிலையத்தில் மட்டுமே மட்கச் செய்ய முடியும். குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் அது மட்குவதற்கு மூன்று மாதங்கள் வரையில் எடுத்துக்கொள்ளும். அத்தகைய மட்கச் செய்யும் நிலையங்கள் தமிழ் நாட்டில் ஒரு இடத்தில்கூட இல்லை என்பதே இது எவ்வளவு மோசடியான முன்னெடுப்பு என்பதை உணர்த்தும்.

மட்கும் நெகிழியின் ஆற்றல் பயன்பாடு, கார்பன் உமிழ்வு, நச்சுத்தன்மை, காலநிலை மாற்றத்தில் அதன் பங்கு ஆகியவற்றைப் பார்க்கும்போது அது எவ்விதத்திலும் சாதாரண நெகிழியைவிட மேம்பட்டதல்ல. மட்கும் நெகிழியை முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலையை அடைய மிக அதிக தாவரப்பொருட்கள் தேவைப்படுவதால் அது உணவுக்கான விவசாயத்தையும் உணவுப் பாதுகாப்பையும் கடுமையாகப் பாதிக்கும். மட்கும் நெகிழியில் சேர்க்கப்படும் இரசாயனங்கள் வழக்கமான நெகிழியைப் போலவே பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் குறித்த வெளிப்படைத்தன்மை எதையும் நிறுவனங்கள் இங்கு கடைபிடிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மட்கும் நெகிழியின் தரக்கட்டுப்பாடுகள் போதுமானவை அல்ல; பல நேரங்களில் மட்கும் நெகிழியோடு சாதாரண நெகிழியின் பாலிமரும் கலக்கப்படுவது கண்டறியப்பட்டிருக்கிறது.

இவை சாதாரண நெகிழியோடு கலந்து ஒட்டுமொத்த குப்பை மேலாண்மையையும் சிதைக்கின்றன. மறுசுழற்சி செய்யப்படும் நெகிழியின் தரத்தைக் குறைக்கின்றன. மட்கும் நெகிழியாகவே இருந்தாலும் அவை ஒற்றை பயன்பாட்டுப் பொருட்களாக இருக்கும்போது சூழலைப் பாழ்படுத்துபவையாகவும், அதிக வளச்சுரண்டல், கார்பன் உமிழ்வு கொண்டவையாக மாறிவிடுகின்றன.

நெகிழிக் கடன்

இது ஒருவிதமான நவீன சந்தைப் பொருளாதார மோசடியாகும். இது கார்பன் உமிழ்வைக் குறைப்பதாகச் சொல்லப்படும் ‘கார்பன் கிரெடிட்’ போன்றதே. நெகிழிக் கடன் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

‘A’ என்ற ஒரு நிறுவனம் நெகிழிக் குப்பைகளை சிறப்பாக சேகரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ‘B’ என்ற வேறொரு உலகளாவிய நிறுவனமானது ‘A’ நிறுவனத்துக்கு அது சேகரித்த நெகிழியின் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட புள்ளிகளை வழங்கும். இப்படி உலகமுழுதும் பல்வேறு நிறுவனங்கள் நெகிழியை சேகரித்து கழிவுக்கு ஏற்ற புள்ளிகளைப் பெறுவார்கள். அதே நேரத்தில் இன்னொருபுறம் ‘C’ என்ற நிறுவனம் சூழலை மாசுபடுத்த விரும்புகிறது; அதாவது, தனது நெகிழி உற்பத்தியை வழக்கம்போலத் தொடர விரும்புகிறது எனில் அது ‘A’ நிறுவனம் ஈட்டியப் புள்ளிகளை உரிய விலைகொடுத்து வாங்கி தம் சூழல் அழிப்பைத் தொடரலாம். இங்கு எந்த வகையிலும் நெகிழி உற்பத்தி குறையவில்லை என்பதையும் வெறுமனே குப்பை சேகரிப்பை ஊக்குவிக்க பணம் செலுத்தப்படுகிறது என்பதையும் பார்க்கிறோம்.

புதியதாய் நெகிழியை உருவாக்க புள்ளிகளைப் பணம்கொடுத்துப் பெறவேண்டியது அவசியமாதலால் நிறுவனங்கள் தம் உற்பத்தியைக் குறைக்குமென்று இங்கு சொல்லப்படுகிறது. யார் சொல்கிறார்கள் என்றுதானே யோசிக்கிறீர்கள்? சந்தையே சொல்கிறது!

நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் நெகிழிக்கு ஈடாக கழிவுகளை சேகரித்ததாய் இதன்மூலம் தம்பட்டமடித்து மேலும் தம் விற்பனையைப் பெருக்கிக்கொள்ள முடியும். அதோடு, சேகரிக்கப்பட்ட கழிவானது மறுசுழற்சி செய்யப்பட்டதா அல்லது எரிக்கப்பட்டதா என்பதை இந்தத் திட்டம் கட்டுப்படுத்துவதில்லை.

இவைபோக நெகிழிக் கழிவுகளை உயர்சுழற்சி செய்து மதிப்புக்கூட்டப்பட்டப் பொருட்களாய் மாற்றுவதாகச் சொல்லப்படும் மோசடி போன்று பல உதாரணங்களை போலித்தீர்வுகளாய் அடுக்கிக்கொண்டே செல்ல முடியும். போலித்தீர்வுகளைப் பார்த்துவிட்டோம்; எவை சரியான தீர்வுகள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமல்லவா?

சரியான தீர்வுகள்

  • எண்ணெய் அகழ்வு மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிலுக்கான அரசாங்க மானியங்களை நிறுத்துதல்.
  • நெகிழியின் ஒட்டுமொத்த உற்பத்திக்குக் உலகளாவிய அளவில் சட்டப்பூர்வமாக நிர்பந்திக்கும் கட்டுப்பாடுகள் (Production Cap) விதித்தல்.
  • தேவையற்ற நெகிழிப் பொருட்கள் (Unnecessary Plastics) மற்றும் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களின் உற்பத்தியை முழுமையாகத் தடை செய்தல்.
  • சூழலுக்குப் பாதுகாப்பான பொட்டலமில்லாத (package free goods) அல்லது மரபான மாற்று பொட்டலமாக்கும் வழிமுறைகளைக் கைக்கொள்ளுதல்; இவற்றில் நிறுவனங்களை முதலீடு செய்யச்செய்தல்.
  • மீண்டும் நிரப்பி – மறுபயன்பாடு செய்யத்தக்க (Refillable and Reusable systems) பொட்டலமாக்கலுக்கு நகருதல்.
  • தீங்கு விளைவிக்கும் வேதிச் சேர்மானங்களை (Additives) நெகிழியில் பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்தல்.
  • நெகிழிப் பொருட்களின் உற்பத்தியில் முதல் தலைமுறை நெகிழியோடு (Virgin Plastics) குறிப்பிட்ட அளவுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குதல். அதன்மூலம் புதிய பெட்ரோலிய விரிவாக்கங்களைத் தடுத்தல்.
  • தொழில்நுட்பரீதியிலும் நடைமுறையிலும் திறம்பட முழுமையாக மறுசுழற்சி (Effective recycling) செய்யமுடியாத நெகிழிப் பொருட்களின் உற்பத்தியை முழுமையாகத் தடைசெய்தல்.
  • நெகிழியின் முழுவாழ்க்கை சுழற்சியிலும் அதன் சூழல் மற்றும் சமூகத் தாக்கங்களுக்கு அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களைப் பொறுப்பாக்கி நியாயம் பெறுதல்.
  • நெகிழியின் உற்பத்தியைக் குறைக்க உதவாத அத்தனை போலித்தீர்வுகளையும் பாசாங்கான நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துதல். போலித்தீர்வுகளுக்கான அரசு மானியங்களை நிறுத்துதல்.
  • நெகிழிக் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சியில் ஈடுபடும் முறைசாராத் தொழிலாளர்களை அங்கீகரித்து அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்வதோடு நியாயமும் நீதியுமிக்க பணிச்சூழலையும் ஊதியத்தையும் அவர்களுக்கு உறுதி செய்தல். நெகிழியை ஒழிப்பதற்கான காலக்கெடுவிற்குள் இவர்களை முழுமையாக மாற்றுத் தொழில்களுக்குள் நகர்த்துதல் (Just Transition).

இந்த பட்டியல் முடிவானதன்று.

சுருக்கமாக, எது நெகிழியின் உற்பத்தியைத் தடை செய்ய உதவவில்லையோ அதை போலித்தீர்வு என்றும் அதற்கு மாறானதை சரியான தீர்வாகவும் புரிந்துகொள்ள முடியும். சரியான திசையில் ஒட்டுமொத்த குடிமைச் சமூகத்தையும் அரசையும் நகர்த்த போலிக்கும் அசலுக்கும் நடுவிலான வேறுபாட்டில் நாம் மிகக்கவனமாக இருப்பது அவசியம்.

  • ஜீயோ டாமின்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments