சுருக்குமடிவலை அனுமதி – சூழியல் பாதுகாப்புக்கும், மீனவர்களின் வாழ்வுக்குமான தீர்வா?

தமிழ்நாடு 1076km நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது. பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை உள்ள பகுதி சோழமண்டலக் கடற்கரை என்றும், கோடியக்கரை முதல் ராமேஸ்வரம் தீவு வரை உள்ள பகுதி பாக் விரிகுடா என்றும், ராமேஸ்வரம் தீவு  முதல் கன்னியாகுமரி வரை உள்ள பகுதி மன்னார் வளைகுடா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று பகுதியும் தனித்துவமான சூழியல் அமைப்பையும், மீன் வகைகளையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக மீன்கள் வேட்டையிடும் யுத்திகளும், வலை போன்ற உபகரணங்களும்,  ஒவ்வொரு பகுதிக்கும் சற்றேனும் வேறுபடுகிறது.

இந்த வேட்டையாடும் யுத்திகள் நெய்தல் குடிகளின் சூழியல் சார் அறிவில் இருந்து உதித்த அவர்களது தனித்துவ அறிவின் வெளிப்பாடு. ஆனால், காலப்போக்கில் மீன்பிடியை உற்பத்தி சார்ந்த தொழிலாக பார்க்கத் தொடங்கிய முதலாளித்துவத்தாலும், அரசின் கொள்கைகளாலும் இன்று கடல்சார் மீனவமக்களின் வாழ்வியல் சிதைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுருக்குமடி வலை குறித்த நடவடிக்கைகள் நாம் அந்த பார்வை கொண்டே புரிந்துகொள்ளவும் வேண்டியுள்ளது. கடந்த ஜனவரி 24 அன்று, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். போபண்ணா  அடங்கிய அமர்வு ஒன்றிய அரசின் வரம்புக்குட்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல (Exclusive Economic Zone) கடற்பரப்பில் சுருக்கு மடிவலையைப் பயன்படுத்தலாம் என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவானது சுருக்கு மடிவலையைப் பயன்படுத்தும் சில மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கி இருந்தாலும், மற்றொரு புறம் குறைந்தபட்ச தொழிற்நுட்பமும், பாரம்பரிய அறிவினாலும் மீன் வேட்டையில் ஈடுபட்டு வரும் சிறுமீன் பிடியாளர்கள்(Small Scale Fisher) மற்றும் சூழியல் செயற்பட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில், சுருக்குமடி வலையின் பின்னணி குறித்தும், அதற்கும் மீனவ மக்களுக்குமான வாழ்வாதார உறவு குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. எவ்வாறாயினும், சுருக்கு மடி மீதான தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகள் என்பது நமக்கு தெளிவாகப் புலப்படுத்துவது ஒன்றே ஒன்று தான். இந்த வலைகளை அறிமுகப்படுத்தியது அரசுகள் தான். குறிப்பாக, சுருக்குமடி வலையானது 1954 ஆம் ஆண்டு இந்தோ- நார்வேஜியன் திட்டதின் கீழ் கேரளாவின் கொல்லம் துறைமுகப்பகுதியில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், கர்நாடகா, கோவா மற்றும் பிற கடலோர மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில்  2000ஆம் ஆண்டுவாக்கில் இருந்து சுருக்கு வலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனவே, இது போன்ற வலைகள் என்பது நெய்தல் நில மக்களின் வாழ்வியல் மரபுக்கே எதிராக, மீன் வளத்தை சூறையாடும் நோக்கில் கொண்டு வரப்பட்டதுதான். இன்று வரை, சுருக்கு வலை மீன்கள் நமது உணவு பயன்பாட்டுக்கு அல்லாமல், பெரும் பகுதி மீன்கள் மீன் எண்ணெய் மற்றும் இறால் ஊட்டப்பொருள் நிறுவனங்களுக்குச் செல்கிறது. இதனை, பசுமை புரட்சி உழவைப் பின்புலமாகக் கொண்ட மக்களின் வாழ்வியலை சிதைத்ததைப் போன்று நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.  மேலும், தமிழக கடற்கரைப் பகுதிகளில் படகு  மற்றும் வலைப் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காலவரிசை அட்டவணை இதனை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள உதவும்.

 

அட்டவணை: தமிழகத்தில் மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களில் ஏற்பட்டுள்ள கணிசமான மாற்றங்கள்.

தரவு: Management Plans for the Marine Fisheries of Tamil Nadu

காலம் படகு மற்றும் வலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
1950 பாரம்பரிய உபகரணங்கள் மற்றும் படகுகளே பயன்பாட்டில் இருந்துள்ளன.  பருத்தி வலைகளே பயன்படுத்தப்பட்டன.
1960- 1980  பருத்தி வலைகளுக்குப் பதிலாக Nylon வலைகள் பயன்பாட்டிற்கு வந்தன. நாட்டுப்படகுகள் மற்றும் கட்டுமரங்களில் மோட்டார் பயன்பாட்டுக்கு வந்தன.  1960 ஆம் ஆண்டுவாக்கில் இயந்திரப் படகுகளும் அரசால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

 

இழுவலைகள் பயன்பாட்டிற்கு வந்தன.

 

1980-81 ஆண்டில், வங்காள விரிகுடா திட்டத்தின் கீழ் இரட்டை மடி வலைகள்(Pair trawling), முன்னோட்ட அடிப்படையில் மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பயன்பாட்டிற்கு வந்தன. 1982 ஆண்டில் இது வணிகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

1990- 2000 1992 ல், மன்னார் வளைகுடா பகுதியில் நாட்டுப்படகுகளில் Outboard மோட்டார் பொருத்தப்பட்டன.

 

1991 ல்,  சோழமண்டல கடற்கரைப் பகுதிகளில் கட்டுமரங்களில்  Outboard இஞ்சின்கள் பயன்பாட்டுக்கு வரும் முயற்சிகள் நடைபெற்றன.    1992 ல் இது பெரும்பான்மையாக பயன்பாட்டிற்கு வந்தது.

 

1990 வாக்கில் Outboard மோட்டார் உடன்  fibre reinforced plastic (FRP) எனப்படும் பைபர் படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன

 

2000- 2004 சுருக்கு வலை(RING Seine) Outboard மோட்டார் கொண்ட பைபர் படகுகளில் மன்னார் வளைகுடா, சோழமண்டல கடற்கரை, பாக் விரிகுடா ஆகிய பகுதிகளின் சில இடங்களில் பயன்பாட்டுக்கு வந்தது.  இது மத்தி மீன்கள் பிடித்தலை அதிகப்படுத்தியது.
2004க்குப் பிறகு கட்டுமரங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.  இழுவை படகுகளின் நீளம் 24 மீ அதிகமாக மாற்றப்பட்டது. இஞ்சின் திறனும் 400 hp அதிகமாக உயர்த்தப்பட்டது.

 

2012ல், ஹைட்ராலிக் வின்ச்(இயந்திர வலை இழுக்கும் இயந்திரம்),  ஆழ்கடல் கில்நெட்டர்களில் நிறுவப்பட்டது. இது வலை இழுக்கும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்தது.

 

2009 ஆம் ஆண்டு முதல்,  கடலூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் சுருக்கு வலை இயந்திரப்படகுகள் பயன்பாட்டுக்கு வந்தது.  படகின் அளவு 25 மீ அதிகமாகவும் , இஞ்சின் திறன் 500 hp க்கும் அதிகமாகவும் உயர்த்தப்பட்டது.  வலையின் அளவும் 1000 மீ  அதிகமாக உயர்த்தப்பட்டது.  GPS மற்றும் ECHO SOUNDER போன்ற கருவிகளும் படகுகளில் பயன்பாட்டிற்கு வந்தன. இதன் காரணமாக மத்தி மீன்களின் வரத்து கணிசமாக உயர்ந்தது.

 

 

இந்நிலையில், இந்த சுருக்குமடிவலைகள் பல  ஆண்டுகளுக்கு  முன்பாகவே மீனவர்கள் மத்தியில் பழக்கத்தில் இருந்திருக்கிறது.  அப்போது இதனை யாரும் சுருக்குமடி என்று கூறவில்லை.  இதற்குப் பதிலாக அந்த வலையை முல்லா வலை என்றும், பெருவலை என்று கூறுவார்கள். குறிப்பாக, இந்த முல்லா வலை பெரிய பெரிய மீன்களை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும்.  இவை சணல் மற்றும் பருத்தியால் நூல் கயிறுகளால் ஆனது. தற்போது இருக்கும் சுருக்கு வலையும் சரி, முன்னர் பயன்படுத்திய முல்லா வலையும் சரி.  எல்லாமே ஒரு சுருக்கும் அடிப்படைத் தன்மை கொண்டது. இவை  கடலின் மேற்பரப்பில் வரக்கூடிய மீன்களை  (pelagic) மொத்தமாக  பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

எனினும், இவ்விரண்டு வலைகளிலும் மீன்கள் பிடிபடும் விதம் என்பது வேறுபட்டது. முல்லா வலை (அல்லது) பெருவலையைப் பொறுத்தவரை, வலை ஒரே அளவிலான கண்ணிகளை உடையது.  மீன்கள் மாப்பாக(கூட்டமாக) வரும் போது மீன்களின் போக்குக்கு ஏற்றவாறு வலையானது வட்ட வடிவில் வருமாறு வீசப்படும். இதன் லாவகத்தால் மீன்கள் மாட்டும்.  ஆனால்,  தற்போது இருக்கின்ற வேறுபட்ட கண்ணிகளைக் கொண்டது. வலையின் மேற்புறத்தை விட அடியில் சிறிய அளவிலான கண்ணிகளைக் கொண்டது. இதன் காரணமாக வலையின் கீழ் இருக்கக்கூடிய ‘மடி’ என்று சொல்லக்கூடிய மீன்களை ஒன்று சேர்க்கின்ற பகுதியில் குறைந்த அளவிலான கண்ணிகளைப்  பயன்படுத்தி மீன்களை பிடிக்கிறார்கள்.  தற்போது பயன்பாட்டில் உள்ள இந்த சுருக்குமடிவலைகள் 650-750 பாகம் வரைக்கும் நீளம் கொண்டது. அதாவது ஒரு  கிலோமீட்டர் நீளம் உடையவை.  அந்த ஒரு கிலோமீட்டர் வரைக்கும் இருக்கக்கூடிய வலையை வைத்து கடலில் மீன்கூட்டங்களை பார்த்த உடனே வளைப்பார்கள்.

இதில் அதிகமாக பிடிபடக்கூடிய  மீன் மத்தி. தமிழகத்தின் தென்பகுதி மற்றும் கேரள பகுதிகளில் இது சாளை மீன் என்று அழைக்கப்படுகிறது.  இந்த மீன்கள் கேரளாவிற்கு உணவுக்காகவும், மீன் எண்ணெய் எடுப்பதற்கும் ,மீன் மாத்திரைகள் தயாரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது.

இந்த சுருக்குமடி வலைத் தொழிலைப் பொறுத்தவரை,  50 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொருவரும் குறிப்பிட்டத் தொகை முதலீடு செய்து(பங்குதாரராக)  மொத்தமாகச் சேர்த்து,  அதன் வழியாக  சுருக்குமடி படகுகள்,  வலைகள் அதற்கு தேவையான சிறிய படகுகள் அனைத்தையும் வாங்குவார்கள்.  இந்த சுருக்கு வலையில் இருக்கக்கூடிய அனைத்து மீனவர்களும் பங்குதாரர்கள் மற்றும் அவர்களே உரிமையாளர்களும் கூட.  அதில் கிடைக்கக்கூடிய அனைத்து வருமானங்களும் அதில் சேர்ந்திருக்கக்கூடிய பங்குதாரர் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. இது ஒரு நெய்தல் பழங்குடி மரபின் பங்கீட்டு முறையாகும்.  இதில் யாருக்கும் தனிப்பட்ட உரிமைகள்  கிடையாது.

சுருக்குமடி வலையை பொறுத்தவரை குறிப்பிட்ட இடத்தில், கடலின் மேற்பரப்பில்  வரக்கூடிய மீன்களை (Pelagic) மட்டுமே வளைத்து பிடிப்பதால் கடலின் தரைப்பகுதியில் இருக்கக்கூடிய சிறிய மீன்கள் எதுவுமே இந்த சுருக்குமடி வலையால் பிடிக்கப்படுவதில்லை. ஆனால், இழுவை படகு மற்றும் இரட்டை மடி வலைகளால் மட்டுமே சிறிய குஞ்சு மீன் இனங்கள் பிடிக்கப்படுகின்றன. சுருக்குமடிவலையில் இது போன்ற ஒரு மீன்கள் கூட வருவதில்லை,கொல்லப்படுவதும் இல்லை.

இதேவேளையில், இந்த சுருக்குமடி வலையில் அதிகப்படியாக மத்தி மீன்களே பிடிக்கப்படிகின்றன. இதற்கு முதன்மையான வேறொரு காரணமும் உள்ளது. அது மத்தி மீன்களை உணவாகக்கொண்டிருக்கும் பெரு மீன் வகைகளை மீன்பிடிக் கப்பல்களும், பெரும் விசைப்படகுகளும் 12 கடல் மைல் பரப்புக்கும் மேலுள்ள ஆழ்கடல் பரப்பில் பிடித்துவிடுகின்றன. இதனால் பெரு மற்றும் சிறு மீன்களுக்கு இடையேயான உணவுச் சங்கிலியே சிதைவுக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக உயிர்ச்சமநிலை பாதிப்படைந்து. மத்தி மீன்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இதனை பெருமுதலாளிகள் குறிவைக்கிறார்கள். அதற்கு விளிம்பு நிலை சமூகமான மீனவ மக்களை இலக்காக்கிக் கொள்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

மேலும், இந்த சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துகின்ற கிராமங்களில் பொருளாதாரநிலை மேலோங்கிதான் காணப்படுகிறது. பொருளாதாரம்  என்பதை விடவும் சுருக்குமடி பயன்படுத்திய கிராமங்கள் என அனைவருமே உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.  அதனால் அவர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் முன்னேறியே இருக்கிறார்கள்

தற்போது உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய இடைக்கால உத்தரவானது,  திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமை மட்டும் 12 நாட்டிக்கல் மையிலுக்கு மேலாக காலை 6:00 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கத் தடை இல்லை என்று கூறுகிறது. ஆனால்,  இந்த இடைக்கால உத்தரவு நடைமுறை சாத்தியமற்றது.

ஏனென்றால்,  மீன் கூட்டம் எங்கு வேண்டுமானாலும் வரக்கூடும். அப்படியிருக்கும் நிலையில் 12 நாட்டிக்கல் மையலுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும் என்பதும், காலை 6 மணிக்கு சென்று இரவு 8 மணிக்குத் திரும்ப வேண்டும் என்பதும் நிறைய சிக்கல்கள் நிறைந்தது. மீன் பிடிக்கின்ற போது நேர விரயம் நிறையவே ஆகும். அப்படி இருக்கையில் இந்த உத்தரவானது நடைமுறைக்கு மிகவும் சிக்கலானது.  அதோடு, இந்த உத்தரவை யார் கண்காணிப்பார்கள் என்பது பெருங்கேள்வியாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல்,  வாரத்தில் இரண்டு நாட்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமை என்றால், பிற நாட்களில் அந்த சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கக்கூடிய மீனவர்களின் நிலைமை என்னவாகும்? அவர்களின் குடும்பங்களின் நிலை என்ன? சுருக்குமடி வலையில் பயன்படுத்துகிற அனைவருமே மீன்பிடி தொழில் இருக்கக் கூடிய கூலித் தொழிலாளர்கள். இவர்கள் சுருக்குமடி வலையின் பங்குதாரராகி, கூலித் தொழிலில் இருந்து உரிமையாளர் என்ற நிலையை எட்டி இருக்கிறார்கள்.

இந்நிலையில், இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேட்டியளித்த மீனவ சமூக செயல்பாட்டளரும், ஆய்வாளருமான ஜோன்ஸ் தாமஸ் ஸ்பார்ட்டகஸ், “சுருக்குமடி போன்ற அழிவுப்பூர்வமான உபகரணங்கள் யாவும் மீனவமக்களால் உருவாக்கப்பட்டதல்ல. இது முழுக்க முழுக்க அரசின் திட்டங்களால் வழங்கப்பட்டதாகும்.  இந்திய மீன்வளத் துறையின் வளர்ச்சிக் கொள்கைகள் தீவிர உற்பத்தி மற்றும் ஏற்றுமதியையைச் சார்ந்தாக உள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து இவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே நீலப் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த உத்தரவானது மீனவ மக்கள் மத்தியில் எழுந்துள்ள மீன்வளம் குறித்த சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் அதிகப்படுத்தவே செய்யும். மேலும், இந்த உத்தரவானது ஒருபுறம் மாநில அரசு தனது வரம்பிற்குட்பட்ட 12 நாட்டிக்கல் மைல் கடல் பகுதியை பாதுகாப்பதை உறுதிபடுத்தும் அதேவேளையில், ஒன்றிய அரசானது சிறப்பு பொருளாதார மண்டல கடற்பரப்பில்,  தனது ஏற்றுமதி ஆதாயங்களுக்காக   அழிவுப்பூர்வ உபகரணங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சூழலில், இந்த இடைக்கால உத்தரவானது மீனவமக்களின் பிரச்சனைக்கும், சூழியல் பாதுகாப்புக்கும் மருந்தாக அமையவில்லை என்பதையே உணர்த்துவதாக உள்ளது.

 

கட்டுரையாளர்கள்:

S.பிரகாஷ் – பாரம்பரிய மீனவர் மற்றும் மீனவ சமூக செயற்பாட்டாளர், காரைக்கால்

பிரதீப் இளங்கோவன், ஆவணப்பட இயக்குநர்  – [email protected]

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments