கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் – கருத்து கேட்கும் சுற்றுச்சூழல் துறை

தமிழ்நாட்டிற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. இதுகுறித்து வெளியான அரசு செய்திக் குறிப்பு பின்வருமாறு;

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன்படி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் மூலம் அங்கரிக்கப்பட்ட நிறுவனமான நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM), சென்னை, என்ற மைய அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் பணி சுற்றுச்சூழல் துறை மூலம் வழங்கப்பட்டது. இத்திட்டம் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டு, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019 வழிமுறைகள் படி, தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு மற்றும் நிலப்பயன்பாட்டு வரைபடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 1:25000 என்ற உருவளவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019 இணைப்பு IV, பத்தி 6ன் படி, தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு குறித்து அரசுத் துறைகள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகள்/ ஆட்சேபணைகளை அறிய 16.06.2023 அன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் இணையதளத்திலும் (http://www.environment.tn.gov.in) மற்றும் இத்துறையின் ENVIS மையத்தின் இணையதளத்திலும் (http://www.tnenvis.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, நிறுவனங்கள், பொதுமக்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு குறித்த தங்களின் ஆலோசனைகள் /ஆட்சேபணைகள் ஏதுமிருப்பின் இத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் அதாவது (04.08.2023) அன்றுக்குள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுத்து மூலம் இத்துறைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் கடலோர சூழல் அமைவுகளைப் பாதுகாத்திட கடலோர மண்டல மேலாண்மைத் திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் இத்திட்டம் மற்றும் வரைபடங்களை ஆய்வுசெய்து தங்கள் பகுதிகளில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஏதேனும் விடுபட்டுள்ளதா என்பதையும் CRZ பகுதிகள் சரியாக வரையறுக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்வது அவசியம்.

திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களுக்கான திட்டம் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எண்ணூருக்கு அருகே கொசஸ்தலையாற்றின் குறிப்பிடத்தக்க பகுதிகளை வேண்டுமென்றே வரைபடத்தில் இருந்து நீக்கிப் போலியாகத் தயாரிக்கப்பட்ட வரைபடம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவின் அடிப்படையில் மீண்டும் கள ஆய்வுகள் நடத்தப்பட்டு இவ்விரு மாவட்டங்களுக்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் பின்னர் தயாரிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments