கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டிய விவகாரம்: 4.12 கோடி இழப்பீடு செலுத்த மின்வாரியத்திற்கு உத்தரவு

Image: CCAG

கொசஸ்தலை ஆற்றில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளைக் கொட்டிய மின்வாரியம் இழப்பீடாக 4.12 கோடி ரூபாய் செலுத்தவும் அனுமதியின்றி சாம்பல் குழாய் அமைக்கக் கூடாது எனவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

எண்ணூர் கழிமுகத்தைப் பாதுகாக்க மக்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி!

சென்னைக்கு அருகே எண்ணூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நிலக்கரி அனல் மின் நிலையத்தை அமைத்து வருகிறது. வடசென்னை அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 3 என்கிற இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த அனல்மின் நிலையத்தில் இருந்து சாம்பல் கழிவுகளை எடுத்துச் செல்லும் குழாய்களுக்கான பாலம் அமைக்கும் பணியை மின் வாரியம் கடந்த ஆண்டு மேற்கொண்டது. இப்பணிகள் கொசஸ்தலை ஆற்றின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் அமைந்ததோடு மட்டுமில்லாமல் உரிய கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

ennore
Image: CCAG

மேலும் இந்த அனல் மின் நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் மற்றும் அப்போது தயாரிக்கப்பட்ட திட்டம் குறித்தான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்ட எந்த ஆவணங்களிலும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சாம்பல் கழிவுகளை எடுத்துச் செல்லும் குழாய்கள் அமைக்கப்படும் என்கிற விபரங்களை மின்வாரியம் தெரிவிக்கவில்லை. எனவே இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி சட்டவிரோதமானது என அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் ரவிமாறன் 2021ஆம் ஆண்டு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

illegal-immunity_v1

மேலும் ரவிமாறன் தனது மனுவில் இந்த அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட காற்று மற்றும் நீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் கீழ் திட்டத்தை அமைப்பதற்கான இசைவாணையில்( Consent to Establish) கூட சாம்பல் கழிவு குழாய் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை எனவும் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் அனல் மின்நிலையத்தில் உருவாகும் சாம்பல் கழிவு அனைத்தும் வேறு பயன்பாட்டிற்கு அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இத்தகைய காரணங்களுக்காக தமிழ்நாடு மின்துறை மற்றும் மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் மீது கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகளை மீறியதற்கான சட்ட நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சாம்பல் குழாய்களுக்கான கட்டுமானத்தை உடனடியாக அகற்ற உத்தரவிடுமாறு ரவிமாறன் தனது மனுவில் கோரியிருந்தார்.

இம்மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த 6 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து மனுதாரரின் குற்றச்சாட்டில் உள்ள உண்மைத் தன்மையை ஆராயுமாறு உத்தரவிட்டது.

மேற்கண்ட நிபுணர் குழு பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பல் கழிவுகளை எடுத்துச் செல்லும் குழாய் அமைக்கும் பணிக்கான எந்த  அனுமதியும் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல  ஆணையில் இடம் பெறாததால் குழாய் அமைக்கும் பணி முற்றிலும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 2011ந் கீழ் சட்டவிரோதம் என தெரிவித்தது.

இதற்கிடையில் வடசென்னை அனல்மின் நிலைய ஸ்டேஜ் 1 மற்றும் 2 விலிருந்து செல்லும் சாம்பல் குழாயில் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் கசிவு ஏற்பட்டு சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. இதுதொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கிலும் சட்டவிரோதமாக மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தின் தொடர் உத்தரவுகளை மதிக்காமல் கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டுவதற்கு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் மற்றும் மின் துறை காரணமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

Ash slurry
Image: CCAG

பலகட்ட விசாரணைக்குப் பிறகு 31.01.2022ம் தேதி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு  இவ்வழக்குகளில் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அத்தீர்ப்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வடசென்னை அனல்மின் நிலைய ஸ்டேஜ் 3 திட்டத்திற்கான சாம்பல் கழிவு குழாய் அமைக்கும் பணியை உரிய அனுமதி பெறாமல் தொடரக்கூடாது.

கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை கொட்டி சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பிற்கான இழப்பீடாக ரூபாய் 4 கோடியே 12 லட்சத்தி 20 ஆயிரத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செலுத்த வேண்டும்.

உரிய முன் அனுமதி இன்றி சாம்பல் குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்டதற்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாயை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் செலுத்த வேண்டும்.

மேற்கொண்டு சாம்பல் குழாய்களில் கசிவு ஏற்படாமல் தடுக்க ஏற்கனவே பசுமை தீர்ப்பாயத்தால் இறுதி செய்யப்பட்ட கால அவகாசத்திற்குள் பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும்.

கொசஸ்தலை ஆற்றுப் பகுதிகளில் கொட்டப்பட்ட சாம்பல் கழிவுகளை அகற்றும் பணியை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகளை மீறிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மீது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட துறைகள் சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தனி நபராக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வழக்கைத் தொடுத்த மனுதாரருக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் தொகையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வழங்க வேண்டும்.

மேற்கூறிய அபராதங்கள், இழப்பீடுகளை மூன்று மாதங்களுக்குள்  மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சட்டம் 2010 விதி 25 மற்றும் வருவாய் மீட்புச் சட்டம் 1980ந் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

 

Ravivarman

மேலும் இத்தீர்ப்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் இத்திட்டத்திற்கு ஏற்கனவே பெற்றிருந்த கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதியில் திருத்தம் மேற்கொண்டு சாம்பல் குழாய்கள் அமைக்கும் பணியை தொடர்வது கூடாது எனவும் புதிதாக அனுமதி கோரி  விண்ணப்பித்து தனியாக சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு மீண்டும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2006 மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கை 2011 ஆகிய சட்டங்கள் கூறும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி மட்டுமே திட்டத்தை தொடர வேண்டும் என கண்டிப்பாக கூறியுள்ளது.

வடசென்னையை பொருத்தளவில் அங்கு நடைபெறும் அனைத்து விதமான சூழலியல் அநீதிகளையும் தடுத்து நிறுத்த அங்குள்ள பொதுமக்களே களப் போராட்டங்களையும் சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற பிரச்சனைகளில் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரங்கள் இருக்கும் அரசு அமைப்புகள் அனைத்தும் தொடர்ச்சியாக செயல்படாமல் இருந்து வருகின்றன. இதன் காரணமாகத்தான் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் போன்ற ஒரு அரசு அமைப்பே சுற்றுச்சூழல் விதிகளை மீறி சூழலியல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மின் துறையால் இயக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழல் விதிகளை மீறி சூழலியலை பாழ்படுத்துவது பின்னர் அதற்கான இழப்பீடாக பல கோடி ரூபாயை செலுத்துவது தொடர் கதை ஆகிவிட்டது.

இனியாவது தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தவறிழைக்கும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments