மகத்தான கண்டுபிடிப்பின் மறுபக்கம்
கடந்த நூற்றாண்டின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிழி என்றால் மறுக்கமுடியாது. அது நம் வாழ்வை அசாத்திய சொகுசானதாகவும், வசதியானதாகவும், எளிதானதாகவும் மாற்றியிருக்கிறது என்றால் மிகையில்லை. குறிப்பாக, மருத்துவ உலகில் நெகிழியின் பங்களிப்பு மகத்தானது. என்றாலும், இந்த சாதனைகளின் மறுபக்கம் முகம் சுழிக்கச் செய்யக்கூடியது. நெகிழியானது பெருங்கடல்களிலும் நிலத்திலும் கலந்து ஒட்டுமொத்தப் புவியின் முகத்தையே சிதைத்து மீள்புதுப்பிக்க முடியாதபடி உருமாற்றியிருக்கிறது. நம் சூழலுக்கு நச்சூட்டியிருக்கிறது. இதுவரையிலும் அது காத்த உயிர்களைக் காட்டிலும் அதன் முழு வாழ்க்கை சுழற்சியில் அழித்த உயிர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமென்றே தோன்றுகிறது. கெடுவாய்ப்பாக, துர்நாற்றம் வீசும் உண்மைகள் குப்பைகளில் அமிழ்ந்துபோகின்றன; வெகுஅரிதாகவே அச்சிலேறும் வாய்ப்பு அவற்றுக்குக் கிடைக்கிறது. எனினும், இனிமேலும் இந்த முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைக்க முடியாத நிலையை புவி எட்டியிருக்கிறது.
நெகிழியானது, சூழலில் எளிதில் மட்காது என்பது அதன் பிரச்சினைகளில் முதன்மையானதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையான பிரச்சினைகள் அதனினும் மிகப்பிரம்மாண்டமானவை; ஆழமானவை. பொதுவாக நெகிழிப் பிரச்சினைக்குக் காரணமான பெருநிறுவனங்கள் அதன் மற்ற பிரச்சினைகளை மறைக்கவே குப்பையை மட்டுமே முதன்மைப் பிரச்சினையாக்கி அதன்மூலம் தவறான குப்பை மேலாண்மையே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற பிம்பத்தைத் தொடர்ந்து இங்கு கட்டமைத்து வருகின்றன. உண்மையில், இன்று மலைபோல உற்பத்தி செய்து குவிக்கப்படும் பொருட்களின் வேகத்துக்கு எந்தத் தொழில்நுட்பங்களாலும் அவற்றின் கழிவுகளை சிறப்பாகக் கையாள முடியாது என்பதே உண்மை.
- நெகிழி தன்னளவில் ஒரு நச்சுப் பொருள். குற்ப்பாக, பிவிசி, LDPE போன்றவை நச்சுக்களை கசியச் செய்யக்கூடியவை. நெகிழிப் பொருட்களின் உற்பத்தியில் பல்வேறு வேதிப்பொருட்கள் (additives) குறிப்பிட்ட குணநலன்களைப் பெறுவதற்காக சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்படும் ஆயிரக்கணக்கான வேதிப்பொருட்களில் நூற்றுக்கும் குறைவானவையே இதுவரையிலும் சோதிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சோதிக்கப்பட்டவற்றில் பல மிகக்கடுமையான உடல்நல சீர்கேடுகளை உருவாக்குபவையாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. BPA, தாலேட்டுகள், கன உலோகங்கள் போன்றவை இவற்றில் அடங்கும். (மேலும் படிக்க: https://ipen.org/site/plastics-toxic-additives) அண்மையில், சென்னையில் மறுசுழற்சி செய்யப்படும் நெகிழியில் செய்யப்பட்ட ஆய்வில் கடும் நச்சுப்பொருட்கள் ஏறக்குறைய அத்தனை நெகிழிப் பொருட்களிலும் BPA உள்ளிட்ட நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
- நெகிழி தனது இறுதி விளைபொருளாக சூழலிலிருந்து நீக்கமுடியாத – பாதுகாப்பாக அழிக்கவோ அல்லது கையாளவோ முடியாத – எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத நச்சுக் கழிவுகளை உருவாக்கக்கூடியது. ஆகவே, சூழலுக்கு ஏற்ற உற்பத்தி முறையான சுழற்சிப் பொருளாதாரத்துக்கு (Circular Economy) இது முற்றிலும் எதிரானது.
- காலநிலை மாற்றத்திற்கு மிகமுக்கியக் காரணமான புதைபடிம எரிபொருட்களை நெகிழி மூலப்பொருளாகக் கொண்டிருப்பதோடு காலநிலை மாற்றத்தைத் தூண்டும் காரணியாகவும் இருக்கிறது. நெகிழி தனது எடையில் 5 முதல் 10 மடங்கு எடையுடைய பசுங்குடில் வாயுக்களை தனது முழு வாழ்க்கை சுழற்சியில் உமிழ்கிறது.
- நெகிழியின் உற்பத்தி, பயன்பாடு, கழிவு நீக்கம் என அத்தனைப் படிநிலைகளிலும் சூழலை மாசுபடுத்துகிறது; உயிர்ப்பன்மையச் வளத்தைச் சிதைக்கிறது. இன்று மிகப்பெரிய பிரச்சினையாக நுண்ணெகிழி உருவெடுத்து வருகிறது. மனிதனின் இரத்தம், தொப்புள்கொடி, விந்தணுக்கள் என அத்தனை உடல் திசுக்களிலும் நுண்ணெகிழித் துகள்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. நாம் சுவாசிக்கும் காற்றிலும் குடிக்கும் நீரிலும் (புட்டிக் குடிநீரிலும்கூட) நுண்ணெகிழித் துகள்கள் கலந்திருக்கின்றன. கடல் உப்பு, கீரைகள், மீன், பிற இறைச்சி என அத்தனை உணவுகளிலும் நுண்ணெகிழி கலந்திருக்கின்றது.
- அடர்ந்த காடுகள், மலைச் சிகரங்கள், ஆழ்கடல்கள் என மனிதரின் கால்படாத பகுதிகளையும் நெகிழி ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. பெருங்கடல்களில் நீரோட்டத்தின் போக்கில் நெகிழியாலான புதிய தீவுகளும் உருவாகி வளர்ந்து வருகின்றன. கடற்கரைகளில் நாம் பார்ப்பது இந்தப் பிரச்சினையின் சிறுதுளிதான். புவியின் நில அடுக்குகளிலேயே இரண்டறக் கலக்குமளவுக்கு நெகிழிப் பிரச்சினை தீவிரமடைந்திருக்கிறது.
- நெகிழிப் பயன்பாடு சூழல் நீதிக்கு எதிரானது. நெகிழியைக் கையாள முடியாத வளர்ந்த நாடுகள் அவற்றை மூன்றாம் உலக நாடுகளில் மறுசுழற்சி என்ற பெயரில் கொட்டுகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் விளிம்புநிலை மக்கள் பெருகும் குப்பை மலைகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.
நெகிழி ஒரு பெருநிறுவனக் குப்பை
“நம் குப்பை நம் பொறுப்பு ஆகவே, நாம் தூக்கி எறியும் நெகிழிக் குப்பைகளுக்கும் நாமே பொறுப்பு; அல்லது, நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசே பொறுப்பு” என்ற பொய்ப்பிரச்சாரத்தை நெகிழிப் பிரச்சினைக்குக் காரணமான பெருநிறுவனங்கள் வெகுசாமர்த்தியமாக சமூகத்தில் கட்டமைத்திருக்கின்றன. ஒவ்வொரு நாடுகளிலிருமிருந்த மரபார்ந்த பொருளுற்பத்தி, விற்பனை மற்றும் பொட்டலமாக்கும் முறைகளைத் தகர்த்து சின்னாபின்னப்படுத்தி எல்லாவற்றிலும் தமது நெகிழி உற்பத்திப் பொருட்களை இவை திணித்திருக்கின்றன.
டவ் கெமிக்கல், டுபாண்ட், செவ்ரான், எக்சான் மொபில், ஷெல், ரிலையன்ஸ் போன்ற பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களும் பெப்சிக்கோ, கொக்கோகோலா, நெஸ்லே, யுனிலீவர், புராக்டர் அண்ட் கேம்பில் போன்ற நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களுமே (FMCG) உலகின் ஒட்டுமொத்த நெகிழிப் பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கின்றன. புவி முழுதும் வலைபரப்பியுள்ள இந்த நிறுவனங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிட முடியும்; ஆனாலும், இவற்றின் ஆற்றல் பாதாளம்வரை பாயக்கூடியது; அரசுகளை பகடைக் காய்களைப்போல தாம் விரும்பும் திசையில் இவற்றால் உருட்டிவிட முடியும். ஒவ்வொரு நாடுகளிலும் அங்கிருக்கும் சூழல் பாதுகாப்புச் சட்டங்களை சிதைத்து அவை தம் வணிக சாம்ராஜ்யத்தை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே நகர்ந்துகொண்டிருக்கின்றன.
உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான நெகிழிப் பொருட்கள், பாதுகாப்பாக அழிக்க இயலாதவையாக இருக்கும்போது தவிர்க்கமுடியாதபடி இவற்றை நுகரும் நிலையிலுள்ள நுகர்வோரை எப்படிக் குப்பைக்குப் பொறுப்பாக்க முடியும்? தம் உற்பத்திப் பொருட்களை நம்மீதும் சூழலிலும் திணித்து பல்லாயிரம்கோடி லாபங்களில் இந்நிறுவனங்கள் புரளும்போது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுகள் ஏன் குப்பைக்கு பொறுப்பேற்க வேண்டும்?
நெகிழியை ஒழிப்பதன் சவால்கள்
நாம் நினைத்தால் கடைக்குச் செல்லும்போது ஒரு துணிப்பையை கையில் எடுத்துச் செல்லலாம்; அல்லது, பயணத்துக்கு ஒரு தண்ணீர் புட்டியை எடுத்துச் செல்லலாம்; ஆனால், நமக்கு அத்தியாவசியத் தேவையான – நம்மால் உற்பத்தி செய்ய முடியாத பொருட்களான உப்பையோ, சர்க்கரையையோ, எந்த மசாலாக்களையுமோ நெகிழியல்லாத பொட்டலங்களில் நம்மால் பெற முடியாது. நம் அரசாங்கம் நெகிழிப் பைக்குத் தடைவிதிக்கலாம்; ஆனால், உலகின் மிகப்பெரிய நெகிழி மாசுறுத்திகளில் ஒன்றான ‘பெப்சிக் கோ’ நிறுவனத்தின் ‘லேஸ்’ நொறுக்குத்தீனிக்கு அதனால் சட்டப்பூர்வமாகத் தடைவிதிக்க முடியாது.
என்னதான் மக்கள் ஒன்றுபட்டு தங்கள் சிறு குடியிருப்பில் ‘கழிவில்லா நிலை’யை (zero waste) அடைய புரட்சிகரமான முன்னெடுப்புகள் செய்தாலும்கூட மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிக் கழிவுகளை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. நெகிழிப் பை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை சீல் வைக்க முடியும் ஒரு அரசாங்கத்தால் அதற்கு மூலப்பொருள் வழங்கும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நெகிழிப் பொட்டலத்தில் காய்கறி விற்கும் மூதாட்டிக்கு அபராதம் விதிப்பதைவிட ஒரு பெட்ரோலிய நிறுவனத்துக்குத் தான் வழங்கும் மானியத்தை நிறுத்துவது, ஒரு அரசுக்கு மிகக்கடினமானது.
ஒரு நிறுவனம் நினைத்தால் நாட்டின் தேசியக் கொடியையே நெகிழியில் (பாலியெஸ்டர்) உருவாக்கும்படி சட்டத்திருத்தம் செய்வது மட்டுமின்றி அதனை ஒவ்வொரு குடிமகனையும் வாங்கச் செய்ய அரசையே நிர்பந்திக்க முடியும் என்ற நிலையையும் நாம் அறிவோம். இந்தப் பின்னணியில் நல்வாழ்வுக்கான நமது போராட்டம் அத்தனை எளிதானதல்ல.
இந்த சோர்வடையச் செய்யும் உண்மைகளே நெகிழி உற்பத்தியை உலகளாவிய அளவில் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துவது எத்தனை முக்கியமானது என்பதற்கு சிறு உதாரணங்கள். ஆம்! தடையற்ற வர்த்தகத்தை அனுமதிக்கும் சந்தைப் பொருளாதார அமைப்பில், ஒரு நாடோ அல்லது தனி மனிதரோ சந்தையிலிருந்து விலகி வாழ்ந்துவிட முடியாத நிலையில், சந்தையைக் கட்டுப்படுத்தும் உலகளாவியச் சட்டங்கள் மட்டுமே புரட்சிகரமான நல்விளைவுகளை உருவாக்கும் மாற்றங்களை உருவாக்க முடியும்.
சந்தைப் பொருளாதாரத்தையும் தடையற்ற வர்த்தகத்தையும் திணிக்கும் உலகளாவிய அமைப்புகளான உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்ற ராட்சச சக்திமிக்க அமைப்புகளுக்கிடையே, நமக்கிருக்கும் ஒரே பிடிப்பான ஐக்கிய நாடுகள் சபையானது அத்தனை வலுவானதல்ல. தனது சொந்த இயக்கத்துக்கே பெருநிறுவனங்களின் நிதியுதயை எதிர்பார்த்து நிற்கும் ஒரு அமைப்பின்மூலம் நாம் என்ன சாதித்துவிட முடியுமென்ற கேள்வி புறந்தள்ளக்கூடியதல்ல. என்றாலும், இவற்றை வலுப்படுத்தி நமதாக்கி இறுகப் பற்றிக்கொள்வதைத் தவிர நாம் நம்பிக்கை வைப்பதற்கு இங்கு எதுவுமில்லை என்பதே உண்மை.
ஐ.நா.வின் வரலாற்று முன்னெடுப்பு
பெருநிறுவனக் குப்பையான நெகிழியைக் கட்டுப்படுத்துவதில் உலகளாவிய சட்டப்பூர்வக் கட்டுப்பாடுகள் மிகமிக முக்கியமானவை என்ற நிலையில் அதற்கான வரலாற்றுக் கனவை நனவாக்க, ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட நெகிழி மாசுவை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட “Intergovernmental Negotiating Committee (INC) on Plastic Pollution” ஆனது 2024 க்குள் தனது சட்ட வரைவை உருவாக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது. ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளையும் குடிமைச் சமூகங்களையும், மாசுறுத்திகளான பெருநிறுவனங்களையும் அவற்றின் ஆசிபெற்ற அமைப்புகளையும் உள்ளடக்கிய INC இரண்டு பேச்சு வார்த்தைகளை முடிந்திருக்கின்றது. இவற்றில் சறுக்கல், பாய்ச்சல் என இரண்டுமே உண்டு. தற்போது, மூன்றாவது கட்டப் பேச்சு வார்த்தை நவம்பர் 2023 நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் அழிவு சக்திகளான பெருநிறுவனங்களும் இன்னொருபுறம் ஓரங்கட்டப்பட்ட குடிமைச் சமூக அமைப்புகளுக்குமிடையே நடக்கும் நேரடியான யுத்தம் என்றுகூட இதைச் சொல்ல முடியும். அசுரசக்திகொண்ட பெருநிறுவனங்களுக்கும் உண்மையையும் உறுதியையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு நீதியை வேண்டி நிற்கும் குடிமைச் சமூகங்களுக்கும் இடையிலான சமச்னற்ற சமர் இது. இந்த யுத்தக் களத்தில் தன்னையும் ஒருதரப்பாக நிறுத்திக்கொள்ளவே ‘நீதி’யானது பெரும் போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. எண்ணெய் வளமிக்க நைஜீரியாவையும் பெரும்பாலான ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய 57 இலட்சியவாத நாடுகளின் அணியானது (High Ambition Coalition) இங்கே நீதியின் பக்கமிருக்கின்றது. வணிக நலன்களுக்காக சூழலையும் மனிதரையும் பலிகொடுக்கத் துணிந்த, இந்தியா, சீனா, சவூதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா உட்பட மற்றைய நாடுகள் (No Ambition Coalition) தம் முகங்களை மறைத்தோ மறைக்காமலோ எதிர்முகாமிலிருக்கின்றன.
நெகிழியை அதன் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு, கழிவுநீக்கம் என்ற அனைத்து நிலைகளிலும் அதாவது அதன் முழு வாழ்க்கை சுழற்சியையும் கருத்தில்கொண்டு கட்டுப்படுத்துவது; நெகிழி மாசுபாட்டை கட்டுப்படுத்த ‘சட்டப்பூர்வமாக அரசுகளைக் கட்டுப்படுத்தும் வலுவுள்ள ஒப்பந்தத்தை (legally binding treaty) உருவாக்குவது; இவை இரண்டுமே INC இன் முதன்மை இலக்குகள்; இவற்றை விரிவுபடுத்தி, ஒற்றை பயன்பாட்டுக்கு உரிய / மறுசுழற்சி செய்ய முடியாத / அத்தியாவசியமற்ற / நச்சுத் தன்மைகொண்ட நெகிழிப் பொருட்கள் போன்றவற்றைத் தடை செய்வது, ஒட்டுமொத்த நெகிழியைக் குறைக்க உற்பத்தியைக் குறைக்க இலக்கு நிர்ணயிப்பது, பெருநிறுவனங்களை அவற்றின் மாசுக்கு பொறுப்பேற்கச் செய்வது என்று இலட்சியப்பூர்வமான இலக்குகளாக விரிக்க முடியும்.
பேச்சுவார்த்தைகளின் ஒவ்வொரு கட்டத்திலும் சில உலகளாவிய அமைப்புகளையும் அரசாங்கங்களையும் தமது கைப்பாவையாகப் பயன்படுத்தி பெருநிறுவனங்கள் ஒவ்வொரு முன்னெடுப்புகளையும் சிதைக்கும் வேலையைச் செய்துவந்தன. சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த முயற்சிப்பதுபோல, முக்கியத்துவமற்ற சம்பிரதாய நடைமுறைகளில் தேவையற்ற நேரவிரையத்தை திட்டமிட்டு உருவாக்கி பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் இந்த எதிர்முகாம் திறம்படச் செய்திருக்கிறது. இதுவும் ஒருவகையில் ‘இலட்சியவாத’ முகாம்தான் என்பதை நாம் இங்கு விளக்க வேண்டியதில்லை. உலகின் வலுவான பொருளாதார சக்திகளில் ஒன்றான இந்தியா, நெகிழியை ஒழிக்கும் ஐ.நா.வின் வரலாற்று முன்னெடுப்பில் முட்டுக்கட்டையாக இருந்து அழிக்கமுடியாதக் கறையை ஈட்டியிருக்கிறது.
‘நெகிழி தன்னளவில் பிரச்சினையற்றது; கழிவு நீக்கம்தான் பிரச்சினை’ என்ற இந்தியாவின் நிலைப்பாடானது, கழிவு மேலாண்மையின் முதல் படிநிலையான ‘கழிவுகளை அவற்றின் உற்பத்தியிலேயே தவிர்த்தல்’ (Reduce / Prevention) என்ற நடைமுறைக்கு முரணானது. பெரும்பாலான உறுப்பு நாடுகள், நெகிழி ஒழிப்பில் தேசிய அளவிலான செயற்திட்டத்தை உருவாக்க முன்வந்த நிலையில் இந்தியாவோ, அந்தந்த நாடுகளே அவற்றின் ‘சூழலுக்கும் திறனுக்கும் தகுந்தபடி’ அதனை முடிவு செய்யட்டும் என்றதோடு, ‘அத்தியாவசியமற்ற, பிரச்சினைக்குரிய’ (Unnecessary and problematic plastic) நெகிழிப் பொருட்களைத் தடை செய்யும் முன்னெடுப்புகளுக்கும் தனது நட்பு நாடுகளின் உதவியோடு முட்டுக்கட்டையாகி நின்றிருக்கிறது. அதோடு ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிக்கு எதிராக எழுத்துப்பூர்வமான அறிக்கை எதையும் கொடுக்காமல் மவுனம் சாதித்திருக்கிறது.
அத்தனை எளிதாய் சாதித்துவிடக்கூடிய விஷயமல்ல இது என்று தெரிந்தே இருந்தாலும், இரண்டாம்கட்டப் பேச்சு வார்த்தையின் இறுதியில், ‘நீதி’யானது தான் சோர்ந்துபோனதாக அறிவித்தபோது என்னைப்போலவே இப்புவியின் சூழல் நலனுக்காய் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் தனது இதயத்தைக் குத்திக்கிழித்து ஒரு வாள் ஊடுருவியதுபோலவே உணர்ந்திருக்கக்கூடும். பல்லாயிரம்கோடி வர்த்தகத்துக்கு கட்டுப்பாடு விதிப்பதும் கடிவாளம் மாட்டுவதும் எளிதா என்ன?
இது ஒரு நீண்ட நூற்றாண்டுகாலத் தொடர் போராட்டத்தின் சிறு படிநிலைதான்; சமரசமற்ற செயல்பாட்டாளர்களின் கடைசி மூச்சு இருக்கும்வரையில் எந்தவொரு பின்னடைவும் இறுதியாக இருந்துவிட முடியாது. ஒப்பற்ற சூழல் போராளியும் ஷெல் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்துக்குப் பரிசாக தனது சொந்த அரசாங்கத்தால் தூக்கிலடப்பட்ட ‘கென் சரோ விவா’வின் வார்த்தைகளிலேயே நான் இச்சூழலை எதிர்கொள்கிறேன். “இப்போராட்டத்தில் நாம் வென்றாக வேண்டும்; இல்லையென்றால் நாம் கொல்லப்பட்டு விடுவோம்; ஏனெனில் நமக்கு ஒழிந்துகொள்ள வேறு இடங்கள் (வாய்ப்புகள்) இல்லை”.
ஆம்! உண்மையில் போரிட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர வாழ்வதற்கான எந்த வாய்ப்பும் நம்முன் இல்லை.
தேசிய அரசுகள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளின் கடமை
உலக அரங்கில் வலுவான அரசியல் – பொருளாதார சக்தியான இந்தியா, INC இன் இலட்சியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும் வலுப்பெற்றதாய் இருந்தபோதிலும்கூட, அது பெருநிறுவன நலன்களையும், தான் மகிழ்விக்க நினைக்கும் வல்லரசுகளின் நலன்களையுமே வெளிப்படுத்தியிருப்பது நம்மை ஆழ்ந்த கவலைகொள்ளச் செய்கிறது.
நெகிழியில்லா தேசத்தை உருவாக்க தனது குடிமக்களிடம் கோரிக்கை விடுத்துக்கொண்டே இன்னொருபுறம் நெகிழியைக் கட்டுப்படுத்தும் சட்ட வரைவை உருவாக்கும் INC பேச்சுவார்த்தைகளின்போது, அதற்கு முரணான நிலைப்பாட்டை எடுத்ததும், அந்த நிலைப்பாடு இங்கு ஒரு பேசுபொருளாகக்கூட மாறாததும் எந்த அளவிற்கு நெகிழிப் பிரச்சினையிலிருந்து நம் ஊடகங்களும் குடிமைச் சமூகமும் வெகுதொலைவில் இருக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம்.
காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளாக இருந்தாலும்சரி அல்லது நெகிழிக் கட்டுப்பாடுகளாக இருந்தாலும்சரி இவை மேலிருந்து (அதாவது அதிகாரம் மற்றும் உற்பத்தி மட்டத்திலிருந்து தொடங்கி) கீழாக செய்யப்படுவது மட்டுமே முழுமையான நல்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், மேலிருக்கும் அதிகார வர்க்கத்தையும் அதனை கட்டுக்குள் வைத்திருக்கும் முதலாளித்துவ சக்திகளையும் அசைக்கும் வலுவானது மிகச்சிறப்பாக ஒன்றுசேர்க்கப்பட்டு ஒருமித்தக் குரலில் வெளிப்படும் குடிமைச் சமூகத்தின் வலிமையிலேயே இருக்கிறது. அதன் ஒத்துழைப்பைப் பெறுவதில் நாம் குறிப்பிடத்தக்க அளவிற்கு இன்னும் வெற்றிபெறவில்லை என்பதையே இந்தப் பின்னடைவு உணர்த்துகிறது.
ஏரி குளம் தூர்வாருவதையோ, மரங்கள் நடுவதையோ, குப்பை அள்ளுவதையோ ஆர்வமாய் செய்து தங்கள் சாதனைகளாய் பறைசாற்ற முயலும் அரசுகள், சூழல் செயல்பாடுகள் ஏதேனும் பெருநிறுவன நலனுக்கு முரணான செயல்பாடுகளாய் இருக்கும்போது பதுங்கிப் பின்வாங்கிவிடுகின்றன. இந்தப் பின்னணியில் வெகுமக்கள் பேசுபொருளாக மாற்றப்படாத – குடிமைச் சமூகத்திலிருந்து பெருமளவில் அழுத்தம் தரப்படாத எந்தவொரு முன்னெடுப்பும் வெற்றிபெறுவது சவாலானதே! குறிப்பாக, நெகிழி விஷயத்தில் என்னதான் விழிப்புணர்வும் அங்கலாய்ப்பும் பொதுமக்களிடையே இருந்தாலும்கூட அவை அரசை உலுக்குமளவுக்கு செயல்வடிவம் பெறாததற்கு – அல்லது தவறான திசையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.
ஒன்று, அறிந்தோ அறியாமலோ பெருநிறுவனங்களின் போலித்தீர்வுகளுக்கு இரையாகி அவற்றின் கைப்பாவையாக அதிகார வர்க்கமும் குடிமைச் சமூகமும் செயல்படும் நிலை. இன்னொன்று போதுமான குடைச்சலை ஏற்படுத்துமளவுக்கு நம் குரல்கள் வலுவற்றதாய் இருப்பதும், ஆங்காங்கே எழும் குரல்களும்கூட உதிரிகளாயும் ஒருங்கிணைக்கப்படாது இருப்பதும் என்று நான் கருதுகிறேன்.
இங்கு குப்பைகள் குறித்து ஏராளமானோர் பேசினாலும்கூட பெரும்பாலானோரின் நோக்கம் நெகிழியை அதன் உற்பத்தியிலேயே கட்டுப்படுத்துவதாக இருப்பதில்லை. ஒருவர் துணிப்பை விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருப்பார்; இன்னொருவர் தனிமனித மாற்றங்களைக் கோருவார்; வேறொருவரோ நாள் பொழுது பாராமல் தன்னார்வலர்களுடன் கடற்கரைகளை சுத்தம் செய்பவராக இருப்பார். இவ்வாறாக நம்முடைய செயல்பாடுகள் ஒற்றை நோக்கம் கொண்டதாயின்றி பிளவுபட்டிருக்கின்றன. இவற்றை ஒன்றுபட்டக் குரலாக ஒலிக்கச் செய்வதன்மூலமாகவே, ஹைட்ரோகார்பனுக்கு எதிரான – விவசாயச் சட்டங்களுக்கு எதிரான – ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டங்களில் நாம் அடைந்ததுபோன்ற வெற்றியை – அந்த வெற்றி அரசின் உள்ளக்கிடக்கைக்கு எதிராகவே இருந்தாலும் ஈட்ட முடியும்.
சூழல் சிக்கல்கள் வாழ்தல் குறித்த சிக்கலாக மாறியிருக்கும் நிலையில் இவ்விஷயத்தில் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு பல்வேறு வேறுபட்ட சமூகப் பணிகளில் ஈடுபடும் அத்தனைக் குடிமைச் சமூக அமைப்புகளும் மாணவர் சமூகமும்கூட ஈடுபட வேண்டும். ஊடகங்களின் பொறுப்பு இங்கு மிக முக்கியமானது; போலித்தீர்வுகளைப் புறக்கணித்து சரியான தீர்வுகளை மக்கள்முன் அடையாளப்படுத்த முதன்மையான கடன்பட்டவையாய் இருக்கின்றன.
“இதுவொரு உலகளாவியப் பிரச்சினை; ஆகவே, நம்மால் எதுவும் செய்துவிட முடியாது” என்று எந்த விதத்திலும் தேசிய அரசுகளோ அல்லது பிராந்திய அரசுகளோ நெகிழிப் பிரச்சினையில் பொறுப்பில்லாததுபோல தப்பித்துக்கொள்ள முடியாது. ஒன்றிய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் ஏன் ஒரு உள்ளாட்சி அமைப்பாகவேகூட இருந்தாலும் நெகிழி மாசுவைக் கட்டுப்படுத்துவதில் இங்கு எண்ணெற்ற விஷயங்களை சாத்தியப்படுத்த முடியும். உலகம் முழுதும் மக்களுக்கான ஆட்சியாளர்கள் அதையே செய்கின்றனர். ஏராளமான ஆப்பிரிக்க அரசாங்கங்கள் இதில் நமக்கு முன்னோடிகளாக இருக்கின்றனர்.
கெடுவாய்ப்பாக, சாதிக்கக்கூடிய ஆகச்சிறிய எளிய முன்னெடுப்புகளைக்கூட இங்கு நம்முடைய அரசுகள் செயல்படுத்த முனையவில்லை என்பதே உண்மை. ஒன்றிய – மாநில அரசுகல் இரண்டும் குறிப்பிட்ட ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களுக்குத் தடைவிதித்தும்கூட அவை எங்கும் தடையின்றி கிடைப்பது, நெகிழிக் கட்டுப்பாட்டுக்கு எதிரான குப்பை எரிவுலைகள் போன்றவற்றை கண்மூடித்தனமாக நிறுவுவது போன்றவை அரசுகளின் சூழல் விரோத – மக்கள்விரோத நிலைப்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது. குறைந்தபட்சம் மிக எளிதாக சாதிக்கக்கூடிய நெகிழிப் பை பயன்பாட்டைக்கூட அரசு தடுக்கத் தவறியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
முற்போக்கான மாநிலமான தமிழகத்தில், மக்கள் நல அரசாகத் தன்னை முன்னிறுத்தும் மாநில அரசு குப்பை மேலாண்மை மற்றும் நெகிழிக் கட்டுப்பாட்டில் தனது எல்லைக்கு உட்பட்ட அத்தனை விஷயங்களையும் செய்து முடித்து, உலக அரங்கில் சரியான நிலைப்பாடு எடுக்க ஒன்றிய அரசை வற்புறுத்துமளவுக்கு முன்னோக்கியப் பாய்ச்சலை நிகழ்த்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.
தனிமனித முன்னெடுப்புகள்:
இங்கே, தனிமனிதர்களாக நெகிழியைப் புறக்கணிப்பதும் அதன் வணிகத்துக்கு ஒத்துழைக்க மறுப்பதும் மிக முக்கியமானதொரு செயல்பாடாக நான் கருதுகிறேன். பெரும்பாலான நேரங்களில் இதன் வலுவானது குறைத்து மதிப்பிடப்படுவதாகவோ அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படுவதாகவோ நான் கருதுகிறேன். மாற்றம் மேலிருந்து நிகழவேண்டும் என்பது மறுக்க முடியாதது. அதே நேரத்தில் மாற்றம் மேலிருந்து வரும் வரையில், கண்மூடித்தனமாக நாம் நெகிழியை பயன்படுத்துவோம் என்பதுபோன்ற நிலைப்பாட்டை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ‘தவிர்க்கக்கூடிய’ நெகிழியை எல்லா மட்டங்களிலும் முழுமையாகத் தவிர்ப்பது சூழல் அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனின் அடிப்படையானக் கடமை; இதற்கு கொடுக்கப்படும் சப்பைக்கட்டு காரணங்கள் நெகிழிக்கு எதிரான நமது போராட்டத்தை தார்மீகரீதியில் வலுவற்றதாக்கிவிடும்.
அவ்வகையில், நெகிழியை ஒழிக்க ஒன்றுபடும் குடிமைச் சமூக அமைப்புகள், மேல்மட்டத்தில் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தி முன்னெடுக்க வேண்டிய அதே தருணத்தில் அடித்தளத்தில் நெகிழிக்கு எதிரான ஒரு சமூக ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை முன்னெடுப்பது அவசியமானது. இந்த ஒத்துழையாமையும் புறக்கணிப்பும் பெருநிறுவனங்களை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாக அமைய வேண்டும். “இது உன் குப்பை; இதற்கு நீயே பொறுப்பு” என்று எழுதப்பட்ட பொட்டலங்களில் நெகிழிக் குப்பைகளை அடைத்து, பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகள் அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கே தபாலில் திருப்பி அனுப்புகின்றன.
எவ்வளவு அழுத்தமிக்கப் போராட்ட வடிவம் இல்லையா இது?
காலாவதியான போராட்ட வடிவங்களை விடுத்து காலத்துக்கு ஏற்ப நவீன வடிவங்களை நாம் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. நமது எதிர்ப்புகள் உலகளாவிய கவனத்தை ஈட்டவேண்டுமென்றால் அது மிக அதிக மக்களை உள்ளிழுத்துக்கொள்ளுவதாகவும் உள்ளூர் – பிராந்திய – தேசிய அரசாங்கங்களை அசைக்கும் வலுக்கொண்டதாகவும் இருப்பது அவசியம். அதற்கான தார்மீக வலுவை சமூகத்தில் நெகிழியைப் புறக்கணிப்பதிலிருந்தே நாம் தொடங்க வேண்டும்; நம் செயல்பாடுகள் அதை உற்று நோக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்; அவர்களையும் உள்ளிளுக்க வேண்டும்; நம் அடுப்பங்கரையில் தொடங்கும் நெகிழி புறக்கணிப்பு ஐ.நா.வின் INC அவையில் மாற்றத்தை உருவாக்குவது வரையில் தீவிரமான இயக்கமாக வேண்டும்.
மீண்டும் ஒருமுறை சொல்வதானால், பிழைத்திருப்பதற்கு நமக்கு வேறு வழிகள் இல்லை!
- ஜீயோ டாமின்