உத்தரகாண்ட் பேரிடர் கற்றுத்தரும் காலநிலை பாடங்கள்

உத்தரகாண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் கடந்த 7ம்தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்ததில் ஏற்பட்டிருக்கும் திடீர் பனிவெள்ளத்தில் சிக்கி இதுவரை 26பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் 171 நபர்களைக் காணவில்லை.

இந்தப் பனிவெள்ளத்தின் காரணமாகத் தவுலி கங்கா, ரிஷி கங்கா மற்றும் அலக்நந்தா நதிகளில் திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் என்டிபிசியின்(NTPC)தபோவன-விஷ்ணுகாட் நீர் மின்சாரத் திட்டம், ரிஷி கங்கா நீர்மின்சாரத் திட்டதிற்காகச் சுரங்க பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். இந்த பேரிடர் காரணமாக தபோவனில் சுரங்கப்பாதையில் மட்டும் ரூ 1500 கோடிக்கு மேல் மதிப்பிலான கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளன.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6150 அடி உயரத்தில் இருக்கும் சமோலி பகுதியில் நிலச்சரிவுகள்(Landslides), பனிச்சரிவுகள்(Avalanches), மேக வெடிப்பு (Cloud Burst), திடீர் வெள்ளம்(Flash Floods) ஆகியவை அடிக்கடி நிகழக் கூடியவை தான். ஆனால் தற்பொழுது நடந்திருப்பதாகக் கருதப்படும் பனிப்பாறை வெடிப்பு(Glacier burst) அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படவேண்டும்.

தற்பொழுது சமோலியில் குளிர் காலம் நிலவி வருகிறது.இயல்பாக அக்டோபர் தொடங்கி மார்ச் இறுதி வரை குளிர்காலம் நீடித்து இருக்கும். மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் அங்கு பனி உருகி ஆங்காங்கே பனிச்சரிவுகள் ஏற்படும்.தற்போது குளிர் காலத்திலேயே பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இயல்பான பனிச்சரிவு போல் இல்லாமல், பனிப்பாறையின் ஒரு பெரும் பகுதி உடைந்து (Glacial Burst) அதில் இருந்து வெள்ளம் பெருக்கெடுதிருக்கலாம் என்று சில வல்லுனர்களும் , உறை நிலைப் பனி ஏரி(Glacial Lake Outburst) உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று வேறு சில வல்லுனர்களும் கருதுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இது காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கக் கூடிய பேரிடர் என்பது நமக்கு உறுதியாகிறது.

3,500 சதுர கிலோமீட்டருக்கு பரந்து விரிந்திருக்கும் இமயமலையின், ஹிந்து குஷ் பகுதிதான் காலநிலை மாற்றத்தின் காரணமாக மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ளக் கூடிய பகுதியாக இருக்கும் என ICIMOD-International Centre for Integrated Mountain Development என்ற அமைப்பு கடந்த 2019ம் ஆண்டு தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின் வழிகாட்டுதலின் படி பூமி வெப்பமயமாதலைத் தடுக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டாலும் கூட இமயமலையின் ஹிந்து குஷ் பகுதிகளின் வெப்பம் அதிகரிப்பதைக் கட்டுபடுத்த முடியாது என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தற்பொழுது அதிகரித்து வரும் பூமியின் தட்பவெட்ப நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் முடிவிற்குள் ஹிந்து குஷ் பகுதிகளில் 4 டிகிரி முதல் 6 டிகிரி வரை தட்பவெப்பம் அதிகரிக்கும் என அறிக்கை கூறுகிறது. மேலும் இதனால் இந்த நூற்றாண்டிற்குள் அங்குள்ள மூன்றில் இரண்டு பங்கு உறைபனி உருகிவிடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமோலிப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளின் தட்பவெப்பநிலை (Glacier Thermal Profile) இயல்பாகச் சுமார்-6 டிகிரி முதல் -20 டிகிரி இருந்து வந்துள்ளது , ஆனால் தற்பொழுது அவை -2 டிகிரி ஆக அதிகரித்துள்ளது என பனிப்பாறைகளை ஆய்வு செய்து வரும் ஐஐடி பேராசிரியர் முஹம்மத் பாரூக் ஆசாம் தெரிவித்துள்ளார்.

தற்போது 1975 முதல் 2000ம் ஆண்டு வரை பனிக்கட்டிகள் உருகியதை விட இரண்டு மடங்கு வேகமாகவும் அதிகமாகவும் இமயமலைப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகிவருவதாக, கொலம்பியா பல்கலைக் கழகம் 2019ம் வருடம் வெளியிட்ட ஆய்வு கூறுகிறது.

அதாவது இமயமலையில் மட்டும் ஆண்டிற்கு 8 பில்லியன் டன் அளவிலான பனி உருகிக்கொண்டிருக்கிறது. பனிப்பாறைகள் உருகும்போது அவை சுருங்குவதோடு (glacier fragmentation), உறை பனி ஏரிகளாகவும் உருமாறுகின்றன.

2005ம் ஆண்டு ICIMOD ஆய்வில் ஹிந்து குஷ் பகுதியில்மட்டும் 801.83 சதுர கிமீ பரப்பளவில் சுமார் 8,790 பனி ஏரிகள் (glacial lakes) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 203 பனி ஏரிகள் மட்டுமே பனி ஏரி வெடிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வரும் காலங்களில் புவி வெப்பமயமாவதால் இமயமலையில் உள்ள பனி ஏரிகளின் எண்ணிக்கைகளும் அதன் பரப்பளவும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் தற்பொழுது நிகழ்ந்துள்ள பனி ஏரி வெடிப்புப்போல் (GLOF) அடிக்கடி நிகழ வாய்ப்புள்ளதாக சர்வதேச காலநிலை மாற்றத்திற்கான Intergovernmental Panel on Climate Change (IPCC) அமைப்பின் ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரகாண்ட் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களே இந்தப் பேரிடருக்கு முக்கியக் காரணம். குறிப்பாக ஆறுகளின் போக்கை மாற்றி அமைத்து, இடைமறித்து அதிகமாகக் கட்டப்பட்டுள்ள அணைகள் ஒரு முக்கியப் பிரச்சனையாகும்.

நகரமயமாக்கல் காரணமாக உருவாகி வரும் கான்க்ரீட் காடுகள் அப்பகுதியில் வெப்பம் அதிகரிக்கக் (heat-island impact on mountains) காரணமாக உள்ளது.

உத்தரகாண்ட இமயமலை பகுதிகளில் மாறிவரும் தட்பவெப்பம் அதிகரித்துப் பனி உருகுவதோடு வெயில் காலங்களில் அங்குக் காட்டுத்தீயும் அதிகரித்து வருகிறது. உத்தரகாண்டில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் சுமார் 44,000 ஹெக்டேர் காடுகள் காட்டுத்தீயால் அழிந்துள்ளன. கடந்த அக்டோபர் 2020 முதல் ஜனவரி 2021 வரை மட்டும் உத்தரகாண்டில் 236 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.காட்டுத்தீ ஏற்பட்டுள்ள காடுகளில் பெரும்பான்மையானவை மனிதர்களால் தொந்தரவு செய்யப்பட்ட காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

காடழிப்பால் உத்தரகாண்ட் பகுதியில் மழை அளவு பெரிதாகக் குறைந்துள்ளது. அப்பகுதியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் சராசரி மழைப் பொழிவு 60.5மிமீ இருக்கும். 2016, 2017, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் 16.2 மிமீ, 21.3 மிமீ, 25.5 மிமீ, 17.8மிமீ மட்டுமே மூன்று மாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதே போல் உத்தரகாண்ட் பகுதியில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழை சராசரி 1002.3 மிமீ ஆகும், ஆனால் கடந்த 2020ம் ஆண்டு இது 12% குறைந்து 883.9மிமீ ஆகப் பதிவாகியுள்ளது.

இப்படி உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் வெப்பம் அதிகரிப்பதனாலும், மழைப்பொழிவு குறைந்து மண்ணின் ஈரப்பதம் குறைவதாலும் அப்பகுதி மண்ணின் மரங்களான சால், ஓக், பைன் போன்றவை தம் இயல்பான வாழிடத்திலிருந்து உயரமான பகுதிகளை நோக்கிப் பரவத்தொடங்கியுள்ளன (treeline shifting towards upwards) என UEPPCB ஆய்வு தெரிவிக்கிறது .

இந்தப் புதிய இயல்பின் காரணமாக (Treeline Shifting) வனப்பகுதி பாலைவனமாவதும் (Desertification), பனிப்பரப்பளவு சுருங்குவதாகவும் (Glacier Shrinking) இவ்வறிக்கை கூறுகிறது.

இப்படிக் காலநிலை மாற்றம், கண்மூடித்தனமான நகர்மயமாக்கல், சூழலியல் சீர்கேடு போன்றவையே உத்தரகாண்டில் நிகழ்ந்துள்ள பேரிடருக்குக் காரணம் எனக் கூறலாம். காலநிலை மாற்றம் சூழல் சீர்கேடுகள் போன்றவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் சந்தை பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது இப்பகுதியின் சூழலை மேலும் பாழ் படுத்த வழிகோலும். இதைத் தடுக்கக் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

1. இமயமலை மையப்பகுதியில் வரவிருக்கின்ற புதிய அணைகள் மற்றும் நீர் மின் திட்டங்கள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
2. ஏற்கனவே அமைந்துள்ள அணைகள் மற்றும் நீர் மின்திட்டங்களைச் செயலிழக்க செய்வதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
3. பேரிடர் அபாயமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள மக்களை இடம்பெயர செய்வதற்கான திட்டங்கள் உருவாக்க வேண்டும்.
4. இமயமலைப் பகுதிகளில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிககளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் கட்டுமான திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
5. நிலச்சரிவு, பனிச்சரிவு, உறை பனி ஏரிகள், வெள்ள அபாயப் பகுதிகளைக் கண்டறிந்து, அவ்விடங்களில் முன்னெச்சரிக்கை அமைப்புகள் (Early Warning System) உருவாக்க வேண்டும்.
6. பேரிடரை எதிர்கொள்ளுவதற்கான பயிற்சி மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
தொடரும் ஒவ்வொரு இயற்கைப் பேரிடர்களும் நமக்குச்சொல்லும் செய்தி ஒன்றுதான். காலநிலை மாற்றம் தொடங்கிவிட்டது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதற்குச் செவிமடுத்தாக வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு இயற்கைப் பேரிடர்களின் போதும் மீட்பு மட்டும் நிவாரணம் என்ற இரண்டு மட்டுமே இங்கு பேசுபொருளாக இருக்கின்றன. இந்த துயரங்களுக்கான காரணங்களை ஆராய்வதும் இனியும் இவ்வாறு நேராது தவிர்ப்பதுமே மக்களுக்கான அரசின் கடமை.

நம் அரசு என்ன செய்யப்போகிறது?

மேலதிக தகவல்களுக்கு: வீ.பிரபாகரன் +91 7395-891230

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments