மணிப்பூரில் சுமார் 3 மாதங்களாக நடைபெறும் வன்முறையை, இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதலாக பாஜக ஆதரவு ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. ஆனால், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை வளங்களை, கனிமங்களை, வன நிலங்களை வணிகமயமாக்கும் நாசகர திட்டங்களே இதன் பின்னிருக்கும் சூழ்ச்சி என்பதை இடதுசாரிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர். இந்த உண்மைகள் மக்களுக்கு வெளிப்பட்டு விடும் என்பதாலேயே பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வராமல் அஞ்சி ஒளிந்து கொண்டிருக்கிறார். ஆனால், இந்த சூழலிலும்கூட, அவர் தனது கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு தீவிரமாக பணியாற்றுவதை நிறுத்தவில்லை. இன்னும் சொன்னால், மணிப்பூர் வன்முறை எதற்காக நிகழ்த்தப்பட்டதோ, அந்த நோக்கத்தை நாடாளுமன்ற அமளிக்கு இடையிலேயே நிறைவேற்றிக் கொண்டும் இருக்கிறார். அதாவது, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை வளங்களை சூறையாடுவதற்கும், பழங்குடி மக்களை வனங்களிலிருந்து வெளியேற்றுவதற்குமான ‘வன (பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா 2023-ஐ’ நாடாளுமன்ற அமளிக்கிடையே தந்திரமாக நிறைவேற்றியுள்ளார். இந்தச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் நாசகர அம்சங்கள் என்ன? என்பதை தோழர் மு. இக்பால் அகமது கட்டுரை விளக்குகிறது.
கடந்த மார்ச் மாதம் மணிப்பூரின் மலைப்பிர தேச மக்களை அவர்களின் பாரம்பரிய காடு களில் இருந்து மாநில பாஜக அரசு வெளியேற்றியது. அரசு கூறிய ஒரே காரணம்: இக்காடுகள் பாதுகாக்கப் பட்ட காப்புக்காடுகள் என்பதாகும். அதே மார்ச் மாதம் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவையும் அறிமுகம் செய்தது. அதன் பெயர் வன (பாதுகாப்பு) திருத்த மசோதா – 2023 (Forest Conservation (Amendment) Bill, 2023) ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற வன பாதுகாப்புச் சட்டம் 1980 (Forest Conservation Act 1980)-ல் திருத்தத்தை கொண்டுவருவதே இந்த முன்வரைவு. அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட் டது. விந்தை என்னவெனில் அந்த குழுவில் இருந்த அனைத்து எம்.பி.களும் பாஜகவினர். நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பாமல் இக்குழுவுக்கு அனுப்பியதில் உள்நோக்கம் இருந்தது. இக்குழு பொது மக்கள் கருத்தை அறிவதற்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து விளம்பரம் செய்தது. அதாவது 2023 மே 18 இறுதி நாள் என்று அறிவித்தது. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் இக்குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறப்பட்டது. அதன்படியே இப்போது நடந்து கொண்டு இருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில், 26.7.2023 வன (பாதுகாப்பு) திருத்த மசோதா – 2023ஐ, எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையிலும் சத்தமே இல்லாமல் நிறைவேற்றி முடித்திருக்கிறது.
சூறையாடப்படும் வடகிழக்கு நிலங்கள்
வனப் பாதுகாப்புச் சட்டம் – 1980 (FCA 1980) சுற்றுச்சூழலுக்கும் சமூக வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக இருப்பதால் இச்சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவது அவசியம் என்று ஒன்றிய பாஜக அரசு கூறிக்கொண்டாலும், உண்மை என்ன? வடகிழக்கு மாநில மக்களின் நிலங்கள் முழுவதையும் அந்த மக்களிடம் இருந்து பறிமுதல் செய்து கார்ப்பரேட் முதலைகளிடம் ஒப்படைப்பது என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே இதில் பின்னால் இருப்பதாகும். அதனை மறைக்க பாஜக அரசு வளர்ச்சி, மக்கள் நலன் என்று பகட்டான வார்த்தைகளை அள்ளிவீசும். வடகிழக்கு மாநிலங்களின் நிலம், இயற்கை வளம், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் மீதான அம்மக்களின் உரிமைகளுக்கு நம் அரசியலமைப்புச் சட்டம் சிறப்பான பாதுகாப்பை வழங்கியுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு தற்போது நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்தமோ வடகிழக்கு மக்களின் உரிமைகளை முற்றாக நிராகரிக்கிறது, மாறாக பல லட்சம் ஹெக்டேர் காடுகளை அவர்களிடம் இருந்து பறித்து கார்ப்பரேட் வசம் கொடுக்கவும், காடுகள் சாராத பிற வணிகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் எளிதில் வழி செய்கின்றது.
உதாரணமாக, இப்போது நடைமுறையில் உள்ள வனப்பாதுகாப்பு சட்டத்தின் மிக கடுமையான ஷரத்துகளில் இருந்து இந்த திருத்தம் முழுமையாக விலக்கு அளிக்கிறது. உதாரணமாக, சர்வதேச எல்லைகளில் இருந்து, கட்டுப்பாட்டு கோட்டில் (Line of Contorl – LOC) அல்லது உண்மையான கட்டுப்பாட்டுக் (Line of Actual Control- LAC )கோட்டில் இருந்து 100 கிமீ தூரத்துக்குள் இருக்கின்ற எந்த ஒரு நிலத்தையும் அரசு கைப்பற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், சீனா, திபெத், மியான்மர், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்பவை. அந்த வகையில் நாகாலாந்து மாநிலத்தின் 90% நிலங்களையும் இந்த சட்டத்திருத்தம் பாதிக்கும். கூடவே அருணாச்சலப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களின் காடுகளையும், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 100% நிலங்களையும் பாதிக்கும்.
அரசியலமைப்பு உரிமை பறிப்பு
டி.என்.கோதவர்மன் (T.N.Godavarman) வழக்கில் உச்சநீதிமன்றம் 1996இல் வழங்கிய தீர்ப்பின்படி காடுகளைப் பாதுகாப்பதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்குமான விதிகள் அனைத்து காடுகளுக்கும் சமமாகப் பொருந்தும். அந்த நிலத்தின் உரிமையாளர் யாராக இருந்தாலும் சரி அல்லது அது என்ன வகையான காடாக இருந்தாலும் சரி. ஆனால், இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் இமயமலை தொடரில் உள்ள 15,000 கி.மீ சர்வதேச எல்லை, வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய நிலப்பரப்பில் உள்ள காடுகள் அனைத்தையும் பாதுகாக்க தக்க வகையில் இதுகாறும் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிடச் சொல்கிறது. 1980 சட்டமானது, நாகாலாந்து, மிசோரம் சட்ட மன்றங்களுக்கு நிலம், இயற்கை வளம், அரசியல்-கலாச்சார உரிமைகள் மீதான தமது சொந்த சட்டங்களை இயற்றிக்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. 2023 திருத்தமோ, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 371ஐ நீர்த்துப் போக செய்யும் அல்லது முற்றாகவே துடைத்து போட்டு விடும் என்ற அச்சத்தை நாகா மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளால காடுகளில் குடியிருந்த – கூடியிருக்கும் பழங்குடியினர்தான் வனங்களை உண்மையில் பாதுகாக்கின்றார்களே தவிர அரசோ, அரசின் சட்டங்களோ, அதிகாரிகளோ அல்லர். அரசு என்ற ஒன்று இல்லாத காலத்தில் இருந்தே பழங்குடியினர்தான் வனங்களை பாதுகாத்து வந்துள்ளனர் என்பதே எளிய உண்மை.
பாலைவனமாக்கும் பாமாயில் மரங்கள்
ஒன்றிய பாஜக அரசு 2021இல் தேசிய சமையல் எண்ணெய் – பாமாயில் கழகம் (National Mission on Edible Oils-Oil Palm NMEOOP) என்ற திட்டத்தின் கீழ் 11,040 கோடி ரூபாய் ஒதுக்கியது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இத்திட்டத்தின் கீழ் குறிவைக்கப்பட்டன. இந்த பகுதிகள்தான் இந்தியாவின் முக்கியமான உயிர்ப்பன்மையப் பகுதிகள், உலகின் தலையாய மூன்று உயிர்ப்பன்மையப் பகுதிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பவை. மிக அரிய விலங்கினங்கள், பறவைகள், அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட தாவரங்கள், காடுகளில் மட்டுமே விளையக்கூடிய உணவுப்பயிர்களை உள்ளடக்கிய பாதுகாக்கப்பட்ட காடுகளைக் கொண்ட பிரதேசங்கள்.
ஆனால் 2021 திட்டம் மூலம் இக்காடுகளில் பாமாயில் மரங்களை பயிரிட ஒன்றிய அரசு தீவிரமானது. அவ்வாறு பாமாயில் மரங்களை பயிரிட்டால், இந்த பாதுகாக்கப்பட்ட காடுகளின், மற்றும் மாநிலங்களின் சுற்றுச்சூழலும் காடு சார்ந்த வாழ்வை ஒட்டிய அம்மக்களின் கலாச்சார பாரம்பரியமும் அழியும். இது நன்கு தெரிந்தே அசாமிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் 2021க்கு முன்பே – அதாவது, 2004 முதலே பாமாயில் மரங்கள் பயிரிடப்பட்டன. ‘கோத்ரெஜ்’, சங்கி சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’, 3 F Oil palm Agrotech ஆகிய கம்பெனிகள் மாநில அரசின் உதவியுடன் விவசாயிகளை அணுகி, ‘கொள்ளை லாபம் கிடைக்கும்’ என ஆசை காட்டி பாமாயில் பயிரிட தூண்டின. அதன் மூலம் ஏற்கனவே இருந்த இயற்கையான காடுகள் அழிக்கப்பட்டன. அந்த இடங்களில் பாமாயில் மரம் பயிரிடப்பட்டது. இதுவரை கண்டிராத அளவுக்கு தாராள மானியம், இலவச மரக்கன்றுகள், விளைபொருட் களை சந்தையில் விற்க உதவி, உள்நாட்டில் இதனால் வளர்ச்சி என்று பல்வேறு ஜிகினா விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதன் பின்விளைவுகள் மிக பயங்கரமானவை என்று மக்கள் பின்னர் உணர்ந்தார்கள். ஆனால், அந்த அழிவை அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவில்லை.
பறி போன உணவுப் பாதுகாப்பு
ஒரே நிலத்தில் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற பயிர்களை சுழற்சி முறையில் பயிரிடுவதுதான் மண்ணின் வளத்தை பெருக்கும். பணப்பயிர் ஆன பாமாயில் மரத்தை மட்டுமே பயிரிடுவதால், அதாவது – ஒற்றைப்பயிர் விவசாயம் செய்வதால் (monoculture) எதிர்காலத்தில் பெரும் அழிவு நேரும். இவ்வாறு ஏற்படப் போகும் கேடுகள், உணவு உத்தரவாதத்துக்கு நேரப்போகும் அபாயம் ஆகியவற்றை ஒரு போதும் அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பழங்குடியின மக்களிடம் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மிசோரம் மாநிலத்தில் 2004 தொடங்கி ஒற்றைப்பயிர் ஆன பாமாயில் மரம் மட்டுமே பயிரிட்டதால் ஏற்பட்ட சேதாரமானது வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துக்கும் பொருந்தும். மிசோரத்தில் ஏற்பட்ட பாதிப்பை பட்டியல் இடலாம்:
ஒரு பாமாயில் மரம் ஒரு நாளைக்கு 300 லிட்டர் தண்ணீர் குடிக்கும். அதாவது ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ஒரு நாளைக்கு 40000-50000 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதாவது இரண்டு ஹெக்டேர் பாமாயில் மரங்களுக்குத் தேவையான தண்ணீர் ஆனது ஒரு மிசோரம் குடிமகன் ஒரு ஆண்டு முழுவதும் உட்கொள்ளும் குடிநீரை உறிஞ்சியது.
- மிசோரத்தில் ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமே மழை பெய்யும். இந்நிலையில் இருக்கும் நிலத்தடி நீரையும் பெய்யும் மழை நீரையும் ஒட்டுமொத்தமாக பாமாயில் மரங்கள் உறிஞ்சி எடுத்துவிடவே, மிசோரத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.
- பாமாயில் மரங்களுக்கு உரமும் பூச்சி மருந்தும் அதிகம் தேவை என்பதால் மிசோரம் காடுகள் தம் இயற்கையான மண்ணின் வளத்தை இழந்தன.
- அறுவடை செய்யப்பட்ட பாமாயில் பழங்களை 24 மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்தி எண்ணெய் எடுக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் பிழிவு ஆலைகளுக்கு பழங்களைக் கொண்டு செல்லத்தக்க சாலை வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கொள்முதல் மையங்கள் எதுவும் மிசோரத்தில் இல்லாததால் பழங்கள் அழிந்து நட்டத்தில் முடிந்தன.
- அவ்வாறு அழிந்து போன பழங்களால் நிலம் மேலும் நாசமானது.
- பாமாயில் மரத்தின் அடிப்பாகம் மிக மிக பெரிதாக வளரும் என்றும் ஆண்டிற்கு நான்கு முறை இந்த மரங்களை சீராக்க வேண்டும் என்றும் அதற்கென கூலியாட்களை நியமித்து கூலி கொடுக்க வேண்டியுள்ளது என்றும் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கூறுகின்றனர்.
- பாரம்பரிய காடுகளில் பன்னெடுங்காலமாக விளைந்த அல்லது விளைவிக்கப்பட்ட உணவு தானிய, தாவர வகைகளை உண்பதை தமது உணவுப் பண்பாடாகக் கொண்டிருந்த பழங்குடியினர், ஒற்றைப்பயிர் ஆன பாமாயில் விவசாயத்தால் தமக்கான உணவு உத்தரவாதத்தை இழந்தனர். அதாவது தம் உணவுப்பண்பாட்டை கைவிடும் அவலம் நேர்ந்தது.
- இக்காடுகளில் இயற்கையாக விளைந்த உணவுப் பயிர்கள், மருத்துவத் தாவரங்கள், தேக்கு உள்ளிட்ட மரங்கள் ஆகியவை அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் ஆகியன பயிரிடப் பட்டதால் மக்களுக்கான உணவு, ‘உத்தரவாதம்’ இல்லாத அவலநிலை ஏற்பட்டது. இது நீண்ட கால பாதிப்பு ஆகும்.
- ஒரு ரூபாய் வருமானமோ லாபமோ கிடைக்காத ஒரு விவசாயி நாளடைவில் தன் நிலத்தை பாமாயில் பயிர் செய்ய தூண்டிய கார்ப்பரேட் நிறுவனத்திடம் விற்றுவிட்டு வெளியேறுவார். அவ்வாறு மிசோரத்தில் வெளியேறியும் இருக்கிறார்கள். அதன் பின் தம் பாரம்பரிய நிலங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளின் கூலிகளாக மாறினார்கள்.
- கார்ப்பரேட் முதலைகளுக்கு ஒட்டுமொத்த வட கிழக்கு மாநிலங்களின் காடுகளையும் கிட்டத்தட்ட இலவசமாக கொடுத்துவிடும் பாஜக அரசின் திட்டம், “வன (பாதுகாப்பு) திருத்த மசோதா – 2023” மூலம் தடையின்றி நிறைவேறப் போகிறது.
- உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (Food and Agricultural Organization) வெளியிட்ட வரைபடங்களின்படி, மிசோரம் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்களின் நிலம் அனைத்துமே பாமாயில் விவசாயத்துக்கு ஏற்றவை அல்ல.
- காடுசாரா வணிக நடவடிக்கைகளின் பொருட்டே வடகிழக்கு மாநிலங்களின் காடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றின. தற்போது வனச் சுற்றுலா, வனவிலங்கு காட்சிசாலைகள், கானுலா ஆகிய தொழில்களை இக்காடுகளில் தொடங்கி நடத்த கார்ப்பரேட் முதலைகளுக்கு வனங்களை குத்தகை விடலாம் என்று பாஜக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
மிசோரத்தை நகலெடுக்கும் மணிப்பூர்
மிசோரம் மாநில அரசு புதிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை (New Land Use Policy – NLUP) என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தன் மாநிலத்தில் பாமாயில் விவசாயத்தை ஊக்குவித்தது. தற்போது பாமாயில் என்ற ஒற்றைப்பயிர் விவசாயம் மிசோரத்தில் மிக மோசமாக தோல்வி அடைந்ததைக் கண்ட மணிப்பூர் விவசாயிகள் அதாவது மலைவாழ் குக்கி மக்கள், தங்கள் மாநில அரசு, மிசோரம் அரசின் என்எல்யுபி(NLUP) திட்டத்தை நகல் எடுப்பதை 2014ஆம் ஆண்டே எதிர்த்தனர். இப்போதும் பாரம்பரிய, இயற்கை சார்ந்த ஜூம் (jhum) சுழற்சி விவசாய முறையே சிறந்தது என்ற தம் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் பாமாயில் விவசாயத்தின் அனுபவம் என்ன?
வளர்ந்து வரும் நாடுகள் ஆன தென் கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் விவசாயம் என்பது மிகப்பெரிய எதிர்மறையான அனுபவத்தை அவர்களுக்கு கொடுத்தது என்பது வரலாறு. இந்த நாடுகள் தமது கசப்பான பாமாயில் விவசாய அனுபவங்களை, பிறகு ‘நிலையான பாமாயில் தொடர்பான வட்டமேஜை’ (Round Table On Sustainable Palmoil) என்ற அமைப்பை ஏற்படுத்தி பாமாயில் விவசாயத்தை மிகக் கவனமாக முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்கள் நலம் பேணும் அரசுகளால் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியும். தவறு செய்வதையே கொள்கையாக கொண்ட (பாஜக) அரசு போன்றவற்றால் நாடு நாசமாவது மட்டுமே நடக்கும்.
- ஒன்றிய, மாநில அரசுகளின் அடாவடி சட்டங்கள், சட்டத் திருத்தங்களால் தமது அதிகாரத்துக்கு உட்பட்ட நிலங்களின் மீது கிராம பஞ்சாயத்துக்களோ பிற கிராம சமூக கவுன்சில்களோ எந்த உரிமையும் கொண்டாட முடியாத கையறு நிலை ஏற்பட்டது.
- காடுகளின் அல்லது வடகிழக்கு மாநிலங்களின் உயிர்ப்பன்மையம் நாசமானது.
- உலகின் இரண்டாவது பெரிய உயிர்ப்பன்மையப் பிரதேசம் ஆன வடகிழக்கு மாநிலங்கள் இந்த கார்ப்பரேட், அரசுகள் கூட்டணியால் தம் இயற்கை சூழலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக அழிந்து போனதாகக் கருதப்பட்ட Bugun Liocichla என்ற பறவை வடகிழக்கில் மட்டுமே கண்டறியப்பட்டது. தற்போதைய சட்டத்திருத்தத்தால் அரிய காட்டுயிர்கள் – பறவையினங்கள் அழிவைச் சந்திக்கும்.
கார்ப்பரேட் கொள்ளையைத் திசை திருப்பும் கலவரச் செய்திகள்
ஒன்றிய பாஜக அரசின் பிரதமரும் அமைச்சர்களும் கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பல முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தது ஏன் என்ற கேள்வியையும் இப்போது நடக்கும் மணிப்பூர் கலவரங்களின் பின்னணியையும் மேலே சொல்லப்பட்ட ஒன்றிய அரசு, கார்ப்பரேட் கூட்டணி மேற்கொண்டுள்ள மக்கள்விரோத கொள்கைகளோடு வன (பாதுகாப்பு) திருத்த மசோதா – 2023 உடன் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. ஒருபுறம் இஸ்லாமிய, கிறித்துவ மக்களுக்கும் இந்து மத மக்களுக்கும் இடையே கலவரங்களைத் தூண்டி விடுவது; மறுபுறம் அதானி, அம்பானி, நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற பெரும் கார்ப்பரேட் முதலைகள் தம் சொத்தை பல நூறு மடங்கு பெருக்கி கொள்ள ஏதுவாக வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதும் பல லட்சம் கோடி மதிப்புக்கு கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்வதும் வங்கிகள் திவால் ஆவதை அனுமதிப்பதும் மிகத்தீவிரமாக தெளிவாக பாஜக அரசால் நடத்தப்படுகிறது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக மட்டுமே 4500 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ள கட்சிதான் பாஜக. கொரோனாவின் பேரால் மக்களிடம் திரட்டப்பட்ட நன்கொடை எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்ல மறுக்கும் அதே கட்சியின் பிரதமர். தன் தேசத்தின் ஒரு மாநிலத்தில் இரண்டு பெண்கள் ஓராயிரம் ஆண்களால் நிர்வாணமாக வீதிகளில் நடத்தப்பட்டது தெரிந்தும் கூட அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பது போல, அது பற்றி கடுகளவும் கவலை இன்றி அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகளின் மனைவிகளுக்கு வைர மோதிரம், சேலை ஆகிய பரிசுப் பொருட்களை தேர்வு செய்யும் வேலையில் கவனமாக இருந்தார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பெருத்த வாய்வீச்சு வீரராக திறந்து வைத்த இந்த தேசத்தின் பிரதமர் பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு வந்து மணிப்பூர் பற்றி பேச அச்சப்படுகிறார்.
இந்த பின்னணியில் பார்க்கும்போது மணிப்பூர் கலகங்களை இரண்டு மக்கள் பிரிவினருக்கு இடையேயான கலவரமாக பாஜகவும் ஆர்எஸ்எஸ் சார்பு ஊடகங்களும் சித்தரிக்க முயல்கின்றன, ஒன்றிய பாஜக அரசு+கார்ப்பரேட் கூட்டணி கொள்ளையைத் திட்டமிட்டு மறைக்கின்றன என்பதே உண்மை. இதை புரிந்துகொண்டு ‘மெய்டெய்’ இன மக்களும் ‘குக்கி’ இன பழங்குடி மக்களும் கைகோர்த்து, வடகிழக்கின் இந்து, முஸ்லிம், கிறித்துவ, புத்த சமய மக்களும் கைகோர்த்து பாஜக ஒன்றிய அரசு + கார்ப்பரேட் கூட்டணியை எதிர்க்க வேண்டும். வட கிழக்கில் அமைதியும் சமாதானமும் திரும்ப வேண்டும் எனில் இடதுசாரி ஜனநாயக சக்திகளும் மதசார்பற்ற சக்திகளும் அமைதியை விரும்பும் இயக்கங்களும் வடகிழக்கு மக்களிடையே இந்த பின்னணியை வலுவாக பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்திய நாடு ஒருசில கார்ப்பரேட் கம்பெனிகளின் சொத்து அல்ல என்பதிலும் மக்களிடையே பிளவை உருவாக்கி தந்திரமாக நாட்டை ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்யும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்துவதே நம் முன் உள்ள உடனடியான பெரும் கடமை என்பதிலும் உறுதியாக இருப்போம்!
குறிப்பு: இக்கட்டுரை தீக்கதிர் நாளிதழில் முதலில் வெளியானது.
- மு. இக்பால் அகமது