தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 6ஆம் தேதி காலை முதல் 7ஆம் தேதி காலை வரை சென்னையில் பெய்த அதிகனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மிதந்து வருகின்றன. அன்றைய நாளில் மட்டும் அதிகபட்சமாக சென்னையில் 23 செண்டி மீட்டர் அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியது.
தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் அடையாறு, கூவம் ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பாதிப்புகள்
9.11.2021 மதியம் 12 மணி நிலவரப்படி நகரில் 363 இடங்களில் மழை நீர் தேங்கியிருந்ததில் 148 இடங்களில் நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தியாகராய நகர், பெரம்பூர், அசோக் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை. எஞ்சிய 223 பகுதிகளில் மழை நீரை மோட்டார் பம்புகள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வேரோடு சாலையில் விழுந்த 105 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மழைநீர் சூழ்ந்த 16 சுரங்கப் பாதைகளுள் 14 சுரங்கப்பாதைகளில் நீர் அகற்றப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் 1,343 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 205 மருத்துவ முகாம்களில் 8546 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 43 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 JCB-களும், 325 பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முன்னறிவிப்பில் தாமதம்
தமிழ்நாட்டின் தலைநகரில் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திய அதிகனமழை குறித்து உரிய நேரத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு அரசிற்கு முன்னறிவிப்பை வழங்காததும் பாதிப்புகள் அதிகமானதற்கு முக்கியக் காரணமாகும். 5 மற்றும் 6ஆம் தேதிகளில் வெளியான வானிலை முன்னறிவிப்பில் 9ஆம் தேதி வங்கக் கடலில் உருவாகப்போகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஏற்படும் கனமழை பற்றி மட்டுமே எச்சரிக்கை வழங்கப்பட்டது. 7ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி 23 செண்டி மீட்டர் மழை சென்னையில் பெய்திருந்தது. 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னையில் ஒரே நாளில் பெய்த அதிக மழைப்பொழிவு நிகழ்வு இதுவாகும்.
22.10.1969 – 279.7 mm
27.10.2005 – 272 mm
9.11.2015 – 166.8 mm
13.1.2015 – 147 mm
16.1.2015 – 256 mm
2.12.2015 – 319.6 mm
12.12.2016 – 119.10 mm
6.11.2021 – 215 mm
ஆறாம் தேதி நள்ளிரவில் 45 நிமிடத்திற்குள் சென்னை நுங்கம்பாத்தில் மட்டும் 6 செண்டிமீட்டர் மழை செய்திருந்தது. மறுநாள் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் நாங்கள் கணித்தற்கு மாறாக சென்னையில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்துவிட்டது என தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒக்கி கனமழை சம்பவத்திற்கு பிறகு ஏறத்தாழ அனைத்து தீவிர வானிலை நிகழ்வுகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்திருந்தது. ஆனால், இந்த முறை அப்படி கணிக்க முடியவில்லை. சென்னை மற்றும் காரைக்காலில் உள்ள இரண்டு ரேடார்களும் கடந்த ஒரு வாரமாக செயல்பாட்டில் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்தது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் புவி அறிவியல் துறையின் இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து புவி அறிவியல் துறையின் செயலாளர் ரவிச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனை தொடர்புகொண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நெருக்கடியான நிலையில் சென்னையில் உள்ள இரண்டு ரேடார்கள் வேலை செய்யாமல் போனது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் விரைவில் ரேடார்கள் வேலை செய்யத் துவங்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடார் செயல்படாமலேயே உள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் முக்கிய ரேடார் வேலை செய்யாமல் போனது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தற்போது ஸ்ரீஹரிகோட்டா மற்றும் காரைக்காலில் உள்ள ரேடார்கள் உதவியுடன் மழை முன்னறிவுப்புகளை வழங்கி வருவதாகவும் விளக்கமளித்தார். #Chennai #Radar
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 8, 2021
அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க. அரசு இந்த பருவமழையை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மழை வெள்ளம் பாதித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் Times Now செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “முந்தைய ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்று பல கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வாங்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த உள்ளாட்சி பணிகள் எதுவுமே முறையாக நடைபெறவில்லை. கமிஷன் மட்டும் வாங்கி இருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்து உரிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
#Exclusive | Food, accommodation, medical relief have been provided to the flood-affected people. Previous government mismanaged the stormwater drainage system, they have taken commission for all projects: @MKStalin, Tamil Nadu CM, tells TIMES NOW.
Shabbir with analysis. pic.twitter.com/1ZGjN295PG
— TIMES NOW (@TimesNow) November 9, 2021
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோ, கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு எந்த பணிகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொள்ளவில்லை எனவும் நிலைமை சரியாகாவிட்டால் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிப்போம்” என அரசை எச்சரித்துள்ளார்.
உண்மையில் யார்தான் பிரச்சனைக்குக் காரணம்.
அதிகனமழை நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் அரசுகள், கட்சிகள், நீதிமன்றங்கள், அரசுத் துறைகள் அனைத்தும் ஒவ்வொருவர் மீது பழிபோடுவது அண்மையில் வழக்கமாகிவிட்டது. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து வெளியான CAG அறிக்கையில் சென்னை பெரு வெள்ளத்திற்கான காரணங்கள் மிகத் தெளிவாகக் கூறபட்டது. திட்டமிடப்படாத சென்னை நகரின் வளர்ச்சியும், நீர் நிலைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், நீர்வழிப்பாதைகள், ஆறுகள் மீது தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பே ஒவ்வொரு முறை கனமழை ஏற்படும்போதும் வெள்ளநீர் வடிய இடமில்லாமல் நகருக்குள் தேங்குவதற்கு காரணமாக இருக்கிறது.
2015ஆம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் எனப் பல அறிவிப்புகள் வெளியாகின. சென்னையின் பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வெள்ள நீர் வடிகால்கள் உள்ளிட்ட திட்டங்கள் செயலடுத்தப்பட்டன. இவ்வளவு நடந்தும்கூட தியாகராய நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது நாளில் கூட வெள்ள நீர் வடியாமல் உள்ளது.
குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்து தமிழ்நாடு பட்ஜெட்டில் மட்டும் 6,744.01 கோடி மதிப்பீட்டிற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தப் பணிகள் நடைபெற்றதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.
பட்ஜெட் அறிப்புகள்
2016-2017 பட்ஜெட் அறிவிப்பு
“ எளிதாக பாதிப்புக்குள்ளாக கூடிய சென்னை போன்ற கடலோர மாவட்டங்களுக்கு விரிவான பாதுகாப்பு திட்டம் ஒன்றை இந்த அரசு தயாரித்து வருகிறது இத்திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் நபார்டு வங்கி உதவியுடன் வெள்ள தடுப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 445.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”.
2018-2019 பட்ஜெட் அறிவிப்பு
“ மழை வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளுக்கான விரிவான வெள்ளத்தடுப்பு வேலைத்திட்டம் முறையே 2,055.67 கோடி ரூபாய் மற்றும் 1,243.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்டுள்ளது”
2020-2021 பட்ஜெட் அறிவிப்பு
”கடலோர பேரிடர் குறைப்பு திட்டத்தின் அடுத்த கட்டத் திட்டமாக, பெருநகர சென்னையில், விரிவான வெள்ள பேரிடர் தணிப்பு திட்டத்தினை 3,000கோடி ரூபாய் மொத்தச் செலவில் செயல்படுத்திட உலக வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ளது”.
மேற்கூறிய பட்ஜெட் அறிவிப்புகள் மட்டுமின்றி ஒவ்வொரு முறையும் பருவமழைக்கு முன்பாக நீர்வளத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழிப்பாதைகள் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நிதிகளும் எங்கு சென்றன? எத்தனை திட்டங்கள் செயல்டுத்தப்பட்டன?
சென்னை மாநகராட்சியை இன்று கடுமையாக கடிந்த சென்னை உயர்நீதிமன்றம் இவ்வளவு நாட்கள் என்ன செய்தது? ஆற்றங்கரையோரம் வசித்த மக்களின் குடியிருப்புகளை அகற்றி அம்மக்களை நகரை விட்டு வெளியேற்றியதை உறுதி செய்த வழக்கை மட்டுமே தீவிரமாக நடத்தி உத்தரவுகளை பிறப்பித்து வந்தது உயர் நீதிமன்றம். சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் ட்விட்டரில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் சென்னை நீர்நிலைகள் அரசுத் துறைகளும், அரசு நிறுவனங்களும், பெரிய தனியார் நிறுவனங்களும் எந்தளவிற்கு ஆக்கிரமித்துள்ளன என்கிற விபரங்கள் அதில் கூறப்பட்டுள்ளது.
எண்ணூர் பரவல் கொற்றலை ஆற்றில் வரும் வெள்ள நீரை தேக்கி வைத்து மெதுவாக எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் சேர்த்து உள்நாட்டு பகுதிகளை பாதுகாக்கிறது. சுப்பாரெட்டி ஆலம் அருகே காமராஜர் துறைமுகத்தின் ரயில்வே விரிவாக்கத்திற்கு ஆறு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கு. 5/n pic.twitter.com/2tFHQOpYXq
— NityanandJayaraman (@NityJayaraman) November 7, 2021
விளிம்புநிலை மக்களை நகரை விட்டு வெளியேற்றுவதில் காட்டிய அதே தீவிரத்தை மேற்கூறிய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சென்னை உயர்நீதிமன்றம் காட்டுமா?
காலநிலை மாற்றத்தின் தீவிரம்
ஒவ்வொரு முறை கனமழை பெய்து நகரில் தண்ணீர் தேங்கும்போதும் 3மணி முதல் 6 மணி நேரத்திற்குள் தண்ணீர் வடிந்து விடும். அதற்குள் ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிதாக்கிவிட்டதாக சென்னை மாநகராட்சி அண்மையில் கூறி வருகிறது. ஆனால் , இதில் எந்த உண்மையுமில்லை. சென்னை நகரில் வெள்ளம் வடிவதற்கான கட்ட்மைப்புகள் முறையாக அமைக்கப்படவில்லை. சமரசமின்றி அரசு நிறுவனங்கள், தனியார் பெறு நிறுவனங்கள் சென்னையின் நீர்நிலைகள் மீது எழுப்பியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தீவிர காலநிலை நிகழ்வுகளை சமாளிக்கும் வகையில் சென்னையின் வடிகால் அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும்.
அண்மையில் ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழுவானது(Council on Energy, Environment and Water) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்திய அளவில் தீவிர காலநிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் 7ஆவது இடத்தில் சென்னை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை நகரை தீவிர காலநிலை நிகழ்வுகளை சமாளிக்கும் வகையில் மீட்டுருவாக்கம் செய்வதே தீர்வாக இருக்கும்.
- சதீஷ் லெட்சுமணன்.
அருமையான பதிவு! நன்றி
ஆழமான தரவுகளுடன் அருமையான அறிக்கை
சிறப்பு