எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கசிவு கலந்ததற்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் எனும் பொதுத்துறை சுத்திகரிப்பு ஆலையே காரணம் என தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
எண்ணூர் கழிமுகத்தில் 4ஆம் தேதியே எண்ணெய் கசிவு தொடங்கிய நிலையில் 7 நாட்கள் கழித்து கசிவிற்கு காரணமான நிறுவனத்தை மாசு கட்டுப்பாடு வாரியம் கண்டறிந்து முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
எண்ணூர் கழிமுகத்தில் கடந்த 4.12.2023 அன்று மணல் தொழிற்பேட்டை வழியாக வரும் பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கழிவுகள் கலந்து வரத் தொடங்கின. இந்த கழிவுகள் மழைவெள்ள நீரில் கலந்து நீர்தேங்கிய இடங்களில் உள்ள வீடுகள், கடைகள், மீனவர்களின் படகுகள் உள்ளிட்ட அனைத்திலும் படிந்தன. இதன் காரணமாக கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் கழிமுகம், தழங்குப்பம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கழிவுகள் படிந்தன. மீன்கள்,, நண்டுகள், பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் செத்து மிதந்தன.
இது தொடர்பாக, CPCL நிறுவனத்தை தொடக்கம் முதலே குற்றம் சாட்டி வந்த நிலையில் 7ஆம் தேதி நேரில் ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாடு வாரியம் எண்ணெய் கசிவிற்கான சுவடுகள் மட்டுமே கிடைத்ததாக உண்மையான பாதிப்புகளை மறைத்துக் கூறியிருந்தது.
Report of TNPCB on suspected oil leak (1)இது தொடர்பாக 9.12.2023 அன்று தென்மண்டல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்தது. இந்த விசாரணையில் நீர்வளத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் 5கி,மீ, தூரத்திற்கு பெரிய அளவிலான எண்ணெய் கசிவு நடந்திருப்பதாகவிம் இதனால் சுற்றுச்சூழலுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் பசுமைத் தீர்ப்பாயம் ஒரு உயர் மட்டக் குழுவை விசாரணைக்காக அமைத்தது.
டிசம்பர் 10ஆம் தேதி இந்திய கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் எண்ணூர் கழிமுகத்தை ஆய்வு செய்ததில் கொற்றலை ஆற்றின் முகத்துவாரம் முதல் காசிமேடு துறைமுகம் வரையில் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு எண்ணெய் கசிவு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த எண்ணெய் கசிவு பேரழிவான விளைவுகளையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும், கடலோர சூழல் அமைவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பையும் ஏற்படுத்தும் எனவும் கடலோர காவல்படை தெரிவித்தது.
இந்த இரண்டு அறிக்கைகளும் மாசு கட்டுப்பாடு வாரியம் உண்மையான நிலையை மறைத்து வெளியிட்ட அறிக்கையை அம்பலமாக்கியதால் 11.12.2023 அன்று தமிழ் நாடு அரசு 5 பேர் கொண்ட ஒரு தொழில் நுட்பக் குழுவை எண்ணூரில் ஆய்வு செய்ய அனுப்பியிருந்தது.
இக்குழுவானது CPCL ஆலையிலிருந்துதான் எண்ணெய் கசிவு, பாதுகாப்பு குளங்கள் மற்றும் மழை நீர் வடிகால் குளங்களில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாயில் நுழைந்து இறுதியாக எண்ணூர் கழிமுகத்தை அடைந்ததாக முடிவு செய்தது. இதனையடுத்து அந்த ஆலை நிர்வாகத்துக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் 33(A) விதியின்படி நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) விதியில் கூறப்பட்டுள்ளபடி உத்தரவுகளைப் பிறப்பித்தது. அந்த உத்தரவுகள் பின்வருமாறு;
- எண்ணெய் கலந்த இடங்களின் மறுசீரமைப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
- குழாய்களில் கசிவு இருந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் ஆலை மூடப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படித்தியதற்கு நீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்க வேண்டும்.
- கசிவைக் கண்டறிவதற்கான Leak Detection and Repair ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
- எண்ணெய் கசிந்த இடங்கள் குறித்து ஆய்வு செய்து அதைச் சரிசெய்வதற்கான செயல்திட்ட த்தை மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
முன்னதாக தமிழ் நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, எண்ணூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் நடத்திய கள ஆய்வில் எண்ணூர் கழிமுகம் பகுதிகளில் கணிசமான எண்ணெய் படிவு இருப்பது தெரியவந்தது. பல கரையோர மீனவ சமுதாயத்தினரின் வீடுகளுக்குள் நுழைந்த எண்ணெய் கலந்த நீர், அவர்களின் தனிப்பட்ட உடைமைகளைப் பாதித்து அவர்களின் படகுகளில் எண்ணெய் படிந்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் மோசமாகப் பாதித்துள்ளதும் தெரியவந்தது. பின்னர் எண்ணெய் கசிவினால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யுமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது.
தோல் நோய் மருத்துவர்களின் துணையோடு தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு மருத்துவர் குழுவை நியமித்துள்ளது. மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி மீன்வளத்துறையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையும் இப்பகுதியில் எண்ணெய் கசிவினால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பீடு செய்து வருகிறது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் கால்நடைகளுக்குத் தகுந்த சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவினை நீக்குவதற்கு விதிகளின்படி தகுந்த தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு கடலோர காவல் படை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர்
தலைமையில் 2023 மே மாதம் அமைக்கப்பட்ட மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மை தொடர்பான உயர்மட்டக் குழுவின் கூட்டம் 11.12.2023 மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருவாய் ஆணையர் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர். இ.ஆ.ப., சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப., நீர் மேலாண்மைத் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., , காவல் துறையின் தலைமை இயக்குநர் அபாஷ் குமார், இ.கா.பா., சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.பா., கடலோர காவல் படை தலைமை இயக்குநர் விஜயகுமார், இ.கா.பா., மற்றும் சென்னை பெட்ரோலிய கழகம், மணலி தொழிற்சாலைகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் முடிவில் மாவட்ட அளவிலான எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மை கூட்டத்தை கூட்டுமாறு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மைக் குழு, எண்ணெய் அகற்றுதல் மற்றும் நிவாரணப் பணிகள் முடிவடையும் வரை தினமும் இப்பணிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே உயர் அலுவலர்கள் குழுவை நியமித்து உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் இருந்து எண்ணெய் படிவங்களை நீக்குவதில் அனுபவம் பெற்ற முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த முகமைகள் எண்ணெய் கசிவு முழுவதையும் உறிஞ்சி அகற்றுவதற்கு தேவையான சிறப்பு இயந்திரங்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 11.12.2023 அன்று எண்ணூர் கழிமுகம் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளில் தேவையான பொருட்களுடன் 20 படகுகளில் ஆட்களும் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வனம் மற்றும் வருவாய்த் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் குழு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து எண்ணெய் கசிவை அகற்றுதல் மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் பணியில் முனைந்துள்ளது.
இப்பிரச்சனை தொடர்பாக 4ஆம் தேதியே புகார் எழுப்பியிருந்தார்கள் மீனவர்கள். அவ்ர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தால் பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் எண்ணூரில் CPCL நிறுவனம் நடத்திய சூழலியல் குற்றம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தில் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. 7ஆம் தேதி மாசு கட்டுப்பாடு வாரியம் வந்து உத்தரவிடும் வரை எண்ணெய் கலந்த மழைநீரை ஆலை நிர்வாகம் வெளியேற்றிக் கொண்டிருந்தது. இந்த அளவிற்கு ஒரு நிறுவனம் அலட்சியமாக செயல்பட முடியுமா? இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 12.12.2023 அன்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற உள்ளது.
– சதீஷ் லெட்சுமணன்