மழை ஓய்ந்துவிட்டதால் நம்மைப் போலவே பூச்சிகளும் தன் இயல்புக்கு திரும்புகின்றன. மழை பெய்யும் முன் தாழப் பறந்த தட்டான்கள் இப்போது ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வெயிலில் காய்கின்றன. பூச்சிகள் குளிர் ரத்த உயிரிகள்(Cold blooded animals); எனவே தங்கள் உடல் வெப்பநிலையை சமனில் கொள்ள, வெளிப்புற வெப்பம் இன்றியமையாத தேவையாகின்றது.
குறிப்பு 1: உலகில் வாழும் உயிர்கள் யாவையும், வெப்ப ரத்த உயிர்கள், குளிர் ரத்த உயிரினங்கள் என்று பிரிக்கலாம். வெப்ப ரத்தம் கொண்டவைகளுக்கு உடல் வெப்பநிலையானது, வெளிப்புற வெப்பநிலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். இவைகள் வெப்பச் சமநிலையை நிறுவிப் பராமரிக்கவென்றே பரிணாம தகவமைப்புகள் கொண்டிருக்கும்: மனிதர்களாகிய நாம் வியர்வையை வெளியேற்றி உடல் வெப்பச் சமநிலை கொள்கிறோம்; பறவைகளுக்கு இறகுகள் உதவுகின்றன. குளிர் ரத்தப் பிராணிகள், சூரியனின் வெப்பத்தில் காய்ந்து தம் உடல் வெப்ப நிலையைப் பெறுகின்றன. பட்டாம்பூச்சி, தட்டான் முதலிய பூச்சிகள் வெயில் வந்தவுடன் அதில் காய்ந்து ஆற்றல் பெறுகிறது.
என் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை, ரோஜா, வெட்சி (இட்லிப் பூ), செம்பருத்தி ஆகிய மலர்ச் செடிகளும், தக்காளி போன்ற காய் தரும் தாவரங்களும் உண்டு. இவைகளுக்கு நீர் ஊற்றவும், உரம் வைக்க செல்லும்போதும் அதில் வாழும் சிறு உயிர்களின் நடவடிக்கைகளை கவனிப்பேன். நம் வீட்டைச் சுற்றி இருக்கும் சிறு தாவரங்களே கூட பூச்சிகள் போன்ற சிற்றுயிர்களுக்கு முக்கியமான மைக்ரோ-சூழல் அமைப்பு தான். அதில் மல்லிகை இலைகளின் ஊடே அதுவரை ஆடாமல் அமர்ந்திருந்த சிறு வண்ணத்துப்பூச்சி மெல்ல சிலிர்த்தது போல் இருக்க, நெருங்கிப் பார்த்தேன்.
Mantis என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கும்பிடுப் பூச்சி ஒன்று அதனை பிடித்து, தன் வளைந்த முன் கைகளில் நசுக்கிக் கொண்டிருந்தது. தன் இரையைப் பற்றி நசுக்கவென்றே இப்பூச்சியின் முன்னிரு கால்கள் வளைந்த, முட்கள் கொண்ட கைகள் போன்று பரிணமித்து உள்ளது; மேலும் இவை மறைந்திருந்து தாக்கி இரைக்கொல்லும் பிராணிகள் (ambush predators); அதற்காகவே மரப்பட்டை நிறத்திலும், இலைப் பச்சை நிறத்திலும் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இந்தக் கும்பிடுப் பூச்சி இலையோடு இலை போலவே பச்சையாக இருந்ததால் வண்ணத்துப்பூச்சி எளிதாக சிக்கிக் கொண்டுவிட்டது. அடுத்த கொஞ்ச நிமிடங்களில் கடித்து குதறப்பட்ட வண்ணத்துப்பூச்சியின் சிறகுப் பாகங்கள் மட்டுமே மிஞ்சின!
குறிப்பு 2: சில கும்பிடுப் பூச்சியினங்களின் ஒரு தனித்துவமான இயல்பு sexual cannibalism; அதாவது இணை சேர்ந்த பின்னர் ஆண் பூச்சியை பெண் பூச்சி கடித்து சாப்பிட்டுவிடும். பெண் பூச்சி முட்டைக்கு ஆண் பூச்சியே புரதச் சத்தாக இவ்வகையில் மாறுகிறது.
எச்சில் பூச்சி:
செடிகளுக்கு நடுவே முளைத்த புல் ஒன்றில் யாரோ எச்சில் துப்பி வைத்தது போன்று நுரை; இதை நீங்கள் புற்களில், புதர்களில் கண்டிருக்கலாம். இதுவும் ஒரு பூச்சியின் வேலை என்றால் நம்புவீர்களா? Froghopper அல்லது Spittle Bug என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் எச்சில் பூச்சியின் இளரி (nymph) தாவரங்களின் சாறை உறிஞ்சி நுரையாக்கும். இந்த நுரை இரைக்கொல்லிகளிடம் இருந்து ஒளிந்திருந்து தப்பவும், வெளிப்புற வெப்பநிலை மாற்றங்களில் இருந்து காக்கவும் உதவுகின்றது(insulation).
இலைவெட்டித் தேனீ!
தேனீக்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் கூடி வாழும் கட்டமைப்பும், கூடும் தான். ஆனால் சில வகை தேனீ இனங்கள் தனியாகவே வாழும் இயல்புடைவை. எங்கள் வீட்டு ரோஜா செடியின் இலைகளை அழகிய அரைவட்ட வடிவில் வெட்டிக் காலில் மடித்துச் செல்லும் இலைவெட்டித் தேனீ ஒன்றை சமீபத்தில் கண்டேன். ரோஜாவின் இலைகள் சற்றே தடிமனானது; அது தேனீயின் கூட்டை வலுவாக்கும். வெட்டிய அந்த இலைத் துண்டுகளை எங்கள் வீட்டிலுள்ள உபயோகிக்காத நீர்க்குழாயில் கொண்டு சென்று அங்கே சிறு கூடமைக்கிறது இப்பூச்சி. இந்தக் கூட்டில்தான் பெண் தேனீ முட்டையிடும்; வளர்ந்து வெளிவரும் இளரிகளுக்கு இலைத் துணுக்குகள் உணவாகவும் அமையும்.
ஒட்டுண்ணிக் குளவி
தேனீக்களை பற்றி சொல்லும்போது தான் அதன் உறவினரான குளவி குறித்த நினைவு வருகிறது. அண்மையில் ஒட்டுண்ணி குளவியின் இயல்பை நேரடியாகக் காண முடிந்தது. செங்குளவி என்று ஊராரால் அழைக்கப்படும் இது Spider Wasp குடும்பத்தைச் சேர்ந்த ஒட்டுண்ணி; இது சிலந்திகளின் உடலில் முட்டையிடும். பறந்து வந்து சிலந்தியின் மேல் கொட்டி அதில் மயக்கமுறும் திரவத்தை செலுத்தும். மயக்கத்தில் தன்னியல்பை இழக்கும் சிலந்தியை இழுத்துச் சென்று மறைவிடத்தில் வைத்து அதன் உடலுக்குள் முட்டையிடும்.
முட்டையில் இருந்து வெளிவரும் இளரிகள் சிலந்தியின் உடலை உணவாக்கி ஆற்றலைப் பெறும். இரக்கமற்ற இயல்பாகத் தெரிந்தாலும், பரிணாமத்தில் தப்பிப் பிழைத்திருக்க இதுவும் ஒரு வழி தான். மேலும் இவ்வகை ஒட்டுண்ணி குளவியினங்கள் சிலந்திகள், கரப்பான்கள் போன்றவற்றில் முட்டையிடுவதால், அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கிறது; இயற்கை சமநிலைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது இக்குளவி!
களையில் வளரும் பட்டான்
காய்கறிகள் வளரும் பகுதியில், அவைகளின் ஊடே தானாகவே புளியாரைக் கீரை முளைத்து வளர்கிறது. களைச் செடியான இது, வண்ணத்துப்பூச்சி ஒன்றின் வாழ்க்கைச் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. Pale Grass Blue என்னும் நீலன் வகைப் பட்டானுக்கு இது தான் ஓம்புப்பயிர் (host plant). மிகச்சிறிய அளவில் புளியாரை இலைக்கடியில் முட்டையிட்டு, வெளிவரும் புழு அத்தாவரத்தை உண்டு வளர்ந்து தோலுரித்து பட்டாம்பூச்சியாகும். பின்னர் இணை கூடி அதே புளியாரை வகைச் செடி ஒன்றில் முட்டையிடும். நெடுங்காலமாக தாவரமும் பூச்சியும் வாழ்வியல் வழியே இணைந்த பரிணாமம் இது.
குறிப்பு 3: பூக்கும் தாவரங்களுக்கும் குளவியினங்கள், செதிலிறகிகள், வண்டுகள் ஆகிய பூச்சிகளுக்கும் இடையே இணைந்த பரிணாம வளர்ச்சி Cretaceous புவியியல் காலத்தில், அதாவது கிட்டத்தட்ட 66 முதல் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒன்று. Coevolution என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இதனை விரிவாக இனி வரும் செதிலிறகிகள் குறித்த கட்டுரையில் காண்போம்!
கண்ணி வைத்து இரைக்கொல்லும் பூச்சி!
காய்கறிச் செடிகளில் இருந்து தள்ளி வந்தால், பூச்செடிகளுக்கு அருகே சுவற்றின் ஓரத்தில், கட்டிட வேலைக்காக கொட்டிய மணல் கொஞ்சம் மிச்சம் இருக்கும். காலியாக இருக்கும் இவ்விடத்தில் ஆங்காங்கே சிறு சிறு வட்டக் குழிகள் இருக்கின்றன! அவை குழிநரி என்னும் Antlion இளரியின் (Larva) வேலை. வலுவான தாடைகளும், மண்ணில் சிறு அசைவையும் உணர்த்தும் நுண்மயிர்களும் தான் இவற்றின் பலம்.
கால்களால் லகுவான மணல்பாங்கில் சிறு பள்ளம் வெட்டி உள்ளே காத்திருக்கும்; அந்த வழியே நடக்கும் சிறு எறும்பு போன்ற உயிர்கள் உள்ளே சிக்கியதும், அவற்றை தன் தாடையால் கடித்துக் கொன்று தின்னும். இளரியின் இயல்பு தான் இது. வளர்ந்த நிலையில் தட்டானை ஒத்திருக்கும் குழிநரி ஒரு இரவாடிப் பூச்சி; பூந்தேனையும் மகரந்த வகைகளையும் உணவாகக் கொள்கிறது.
வெண் வளையக் கரப்பான்பூச்சி
கருப்பு உடலில் வெண்புள்ளிகள் கொண்ட ஒரு பூச்சி, சருகுகளுக்கு நடுவே மெல்ல மண்ணில் ஊர்வதைக் காணமுடிகிறது. எண்ணிப்பார்த்தால் சரியாக இரு இறகுகளிலும் 6 வட்டமான வெள்ளைப் புள்ளிகளும், உடல் நடுவே ஒரு வெண்புள்ளியும் கொண்டது; இது கரப்பான் வகைப் பூச்சி. Domino Cockroach என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது, வலிமையான ஆறுபுள்ளி தரைவண்டினை ஒத்திருக்கும் ‘ஒப்புப்போலி’ (visual mimic). இத்தகைய தகவமைப்பு இரைக்கொல்லிகளிடமிருந்து இவற்றைக் காக்கின்றது .
குறிப்பு 4: பொதுவாக வீட்டின் அடுக்களையிலும், குளியலறைகளிலும் நாம் காணும் கரப்பான்கள், 300 – 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே Carboniferous யுகத்தில் புவியில் தோன்றியவை. அசைப் போடக்கூடிய வாயமைப்பை கொண்ட இப்பூச்சியினங்கள், ஆர்க்டிக் பனியிலும், அடாத வெயிலிலும் கூட வாழப் பழகியவை. பறவைகள், சிறு விலங்குகளுக்கு இரையாவதும், அழுகும் உயிரினங்களை உண்டு செரித்து, தாவரங்களுக்கு நைட்ரஜன் வழங்குவதும் இதன் முக்கிய சூழல் பங்கு!
கொம்புப் பூச்சியின் மேய்ப்பர்!
அடுத்து எங்கள் வீட்டுச் செம்பருத்திச் செடிக்கு வருவோம்: எந்நேரமும் கருப்பு எறும்புகள் மொய்த்தவாறு இருந்த காம்பை அணுகிப் பார்த்தால், சிறு கொம்புப்பூச்சிகள் சிலவற்றின் மேலே ஏறி இறங்கி சென்று கொண்டிருந்தன எறும்புகள். எறும்புக்கும் கொம்புப் பூச்சிகளுக்கும் இடையே ஒரு உடன்படிக்கை உண்டு; நகர இயலாத கொம்புப் பூச்சி இளரிகளை எறும்புகள் செடியில் நகர்த்தி ஆங்காங்கே அமர உதவும். கொம்புப் பூச்சிகள், செடியின் சாற்றை உறிஞ்சி , கழிவாக தேன் போன்ற திரவத்தை எறும்புகளுக்கு உணவாகத் தரும். இப்படியாக புவியின் முதல் மேய்ப்பர் எறும்பினம் என்று சொன்னால் அது மிகையாகாது!
பகலில் காணப்பெறும் பூச்சிகளில் சிலவற்றை இக்கட்டுரையில் காட்டினேன். பல மில்லியன் ஆண்டுகளாகப் பிழைத்திருக்க இன்னும் எத்தனையோ தகவமைப்புகளை கொண்ட பூச்சிகளை சாதாரணமாக நம் வீட்டுச் சூழலிலேயே காண முடியும்; இயற்கை வரலாற்றின் வாழும் சின்னங்கள் இவை.
இன்னும் சில பூச்சிகளை, குறிப்பாக இரவாடிப் பூச்சிகளை அடுத்த கட்டுரையில் காண்போம்.
– அமர பாரதி
பகுதி 1ன் இணைப்பு முகவரியை இந்த பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கலாமே.
சிறப்பு… சிறு வயதில் இருந்தே எங்களை சுற்றியுள்ள உயிரினங்களின் பெயர்களையும் அதன் வாழ்வியலையும் அறிந்து கொண்டதில் உண்மையில் மகிழ்ச்சி