தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்; ஏல அறிவிப்பு வெளியிட்டது ஒன்றிய அரசு

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன்

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது 03.01.2024 அன்று திறந்தவெளி அனுமதி கொள்கை (Opean Acreage Licensing Policy) எனும் ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழான 9வது சுற்று ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஏல அறிவிப்பில் தமிழக ஆழ்கடலின் 32485.29 சதுர கிலோமீட்டர் பரப்பிலான 4 வட்டாரங்களும் இடம்பெற்றுள்ளன.  தமிழக ஆழ்கடல் பகுதியைச் சேர்ந்த 4 வட்டாரங்கள் உட்பட நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் 1,36,596 சதுர கிலோமீட்டர் பகுதிகள் ஏல அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

Technical Booklet 29Jan18 Final Single Page

ஏல அறிவிப்பில் இடம்பெற்றுள்ள தமிழ் நாட்டின் ஆழ்கடல் பகுதிகள்

  1. CY – UDWHP-2022/1 – 9514.63 ச.கி
  2. CY – UDWHP-2022/2 – 9844.72 ச.கி
  3. CY – UDWHP-2022/3 – 7795.45 ச.கி
  4. CY – UDWHP-2023/1 – 5330.49 ச.கி

 

இந்த வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் 03.01.2024 முதல் 29.02.2024 க்குள் விருப்பமான இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஏல அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதிகளில் 30ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் ஆழமான கடற்பகுதியில் 95 ஆயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பிலும் ஹைட்ரோகார்பன் இருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதனை ரிலையன்ஸ், வேதாந்தா, ஒ.என்.ஜி.சி. பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை(OALP) அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த கடற்பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவங்களுக்கு வழங்கி வருகிறது. இது கடல்வாழ் உயிரினங்களையும் மீன்பிடி பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எனப் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு

குறிப்பாக தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதிகளில் அரியவகை பாதுகாக்கப்பட்ட கடற்பசு உள்ளிட்ட 25 பாலூட்டிகள், ஆமைகள், உயிர்வாழ்கின்றன. டால்பின்கள், திமிங்கலங்கள் போன்ற உயிரினங்கள் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலியை எழுப்புவதன் மூலமே தங்களுக்குள் தகவல்களை பறிமாறிக் கொண்டு தங்களது பயண வழிகளையும் தீர்மானிக்கின்றன. கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் நில அதிர்வுச் சோதனையின்போது எழுப்பப்படும் வெடிச்சத்தம் கடல்வாழ் உயிரினங்களை மிகவும் பாதிக்கிறது. அதுமட்டுமின்றி எண்ணெய், எரிவாயு எடுக்கும்போது வெளியிடப்படும் ரசாயனக் கழிவுகளால் மீன்வளம் பெருமளவில் குறையுமென்றும் கடற்பசு, ஆமைகள் போன்ற முக்கியமான பல கடல்வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்துபோகும் என்கின்றனர் கடல்சார் ஆய்வாளர்கள்.

– செய்திப் பிரிவு

Technical Booklet_OALP_IX_January2024_Final

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments