ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முயலும் ONGC
விண்ணப்பத்தை நிராகரிக்க தமிழ் நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ என் ஜி சி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்துள்ளது.
ramnad ongc applicationஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப்(HELP) அடிப்படையில், மூன்றாவது சுற்று திறந்த வெளி ஏலம்(OALP) மூலம் ONGC நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர கிலோமீட்டர் பகுதியில் (இதில் தரைபகுதி – 1259.44 மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் 143.97 ச.கிமீ.) ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.
தற்போது அந்த பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ONGC திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி தாலுகா மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை தாலுகா பகுதிகளில் புதிதாக கிணறுகள் அமைக்க ONGC அனுமதி கோரியுள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி அவசியமில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ONGC நிறுவனம் தற்போது விண்ணப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த 2020ம் ஆண்டே காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்பதால் இச்சட்டத்தால் காவிரி டெல்டாவை பாதுகாக்க முடியாது என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடர்ந்து கூறி வருகிறோம்.
மேலும், இச்சட்டம் அறிவித்தபடி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டத்தில் 5 பிளாக்குகள் (காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை), புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து பிளாக்குகள் (அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி) ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தனி மாவட்டம் ஆனதால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியாக அதை குறிப்பதற்காக, 2020- ஆம் ஆண்டு சட்டத்தில் ஒரு திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்து மயிலாடுதுறை மாவட்டம் இச்சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் விடுபட்ட ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அமையவுள்ள ஹைட்ரோகார்பன் கிணறுகள் திட்டங்களையும் தமிழ் நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரகள் தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் காவிரி டெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் என்றும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
தமிழ் நாட்டு விவசாயிகள் மற்றும் இயற்கை வளங்களின் நலன் கருதி புதிதாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும். மேலும் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம்.
ஹைட்ரோகார்பன் கிணறுகளால் ஏற்படும் பாதிப்புகள்
ஹைட்ரோகார்பன் கிணறுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மீத்தே திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் தனது அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“கடந்த காலத்தில் எண்ணெய் – எரிவாயுக் கிணறுகளில் பழைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட அழிவு மெதுவாகவே நிகழ்ந்தது. ஆனால் இப்போது அமைக்கப்படும் அனைத்து கிணறுகளும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் ஆகும். இதில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் – “நீரியல் விரிசல் ” அல்லது ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் என்ற புதிய தொழில்நுட்பமாகும். ஒவ்வொரு கிணறிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை 13 லட்சம் லிட்டர் தண்ணீரில் 70 வகை இரசாயனமும், பல லாரி மணலும் கலந்து உள்ளே செலுத்தி களிப்பாறை நொறுக்குதலைச் செய்து, களிப்பாறை இருக்குகளிலிருந்து எண்ணெய் மற்றும்எரிவாயு ஆகியவற்றை எடுக்கும் இம்முறை மிக மிக அபாயகரமானது. உலக அளவில் இந்த தொழில்நுட்பம் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து ஹைட்ரோகார்பன்களைப் பெற இந்த தொழில்நுட்பம் தவிர வேறொரு தொழில்நுட்பம் இல்லை. இதில் பயன்படுத்துவதற்கு பெருவாரியாக ஆற்று நீரும் நிலத்தடி நீரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப்படும். முன்னமே நீர்வளம் குறைந்த இராமநாதபுரம் நிலத்தடி நீரையும், ஆற்று நீரையும் இழந்து விட்டு பாலைவனமாகும். இதில் உள்ளே செலுத்தப்பட்ட இரசாயன கலவையை மீண்டும் உறிஞ்சி வெளியில் எடுத்து ஓடவிடும்போது அந்தப் பகுதியே மரண பூமியாக மாறும்.
ஹைட்ரோகார்பன் கிணறுகள் செயல்பட்டால் நிலத்தடி நீர் கீழே இறங்கி விடும். நிலத்தட்டுகள் நகரும். நிலத்தடியில் உள்ள உப்பு நீரும் மக்கள் பயன்படுத்தும் மேற்பகுதியில் இருக்கக்கூடிய நல்ல நீரும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்த முடியாத நீராக மாறும். ஹைட்ரோ கார்பன்களை தொடர்ந்து எடுக்கும் போது பூமிக்குள் வெற்றிடம் ஏற்பட்டு நிலம் கீழிறங்கும். இதனால் கடல் நீர் உப்புகும். ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் மற்றும் குழாய்களில் சிதைவுகள் ஏற்பட்டு நிலத்தடி நீர்த் தொகுப்பில் கச்சா எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் தொகுப்பு முழுவதும் பயன்படுத்த முடியாத நீராக மாறும்.
இது மட்டுமின்றி, ஓ.என்.ஜி.சி நிறுவனம் இராமநாதபுரம் அருகே ஆழமற்ற கடற்பகுதியில் 143 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதாக இருக்கிறது. ஹைட்ரோகார்பன் கிணறுகளில் எண்ணெய் வளத்தை மதிப்பீடு செய்ய “சீஸ்மிக் ஆய்வு”. என்பதை நடத்துவார்கள். இதில் இடைவிடாமல் வெடிபொருட்களை பயன்படுத்தி வெடிக்கப்படும். இதனால் கடல்வாழ் உயிரினங்களின் நுண்ணுணர்வு உறுப்புகள் சிதைவுற்று, மீன் இனம் அழிந்து போகும். மீன்கள், கடல்பசு, ஆமைகள் அழிந்து போகும் அல்லது இடம்பெயர்ந்து வேறு இடம் சென்று விடும். மீன்கள் இல்லா கடலாக இராமநாதபுரம் பகுதி கடற்பகுதி மாறும்” என அவர் தெரிவித்துள்ளார்.