கடும் எதிப்பிற்குப் பிறகு வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023ஐ தமிழில் வெளியிட்டுள்ளது மக்களவை செயலகம்.
காட்டு வளங்களைச் சுரண்டுவதற்காக வனப் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தும் மசோதா 2023ஐ ஒன்றிய அரசு கடந்த மார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. இம்மசோதாவிற்கு எதிர்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டுக்குழுவின் தலைவர் ராஜேந்திர ஆக்ரவால் எம்.பி. இம்மசோதா மீது கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் 15 நாட்களுக்குள் தங்கள் கருத்துகளை ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் JOINT SECRETARY (JM), LOK SABHA SECRETARIAT, ROOM No.440,PARLIAMENT HOUSE ANNEX, NEW DELHI-11001 என்கிற முகவரிக்கு இரண்டு நகல்களாக அனுப்பலாம் எனவும் அக்கடித்ததை [email protected]. என்கிற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என மே 3ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
மசோதா, நாடாலூமன்ற கூட்டுக்குழுவின் அறிவிப்பு, கருத்துக்களைத் தெரிப்பதற்கான மொழித் தேர்வு என அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி மட்டுமே இருந்ததால் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் மசோதாவை வெளியிட்டு அனைத்து மொழிகளிலும் கருத்துத் தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதே கோரிக்கை தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவருக்கும், வனத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இதே கோரிக்கை தொடர்பாக தீரன் திருமுருகன் என்பவர் பொது நல மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இம்மனு மீது 24.05.2023 அன்று உத்தரவிட்ட நீதிபதிகள் ஒன்றிய அரசின் பத்திரிகை செய்திக்கு தடை விதித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மக்களவை செயலகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவ்வழக்கில் கடந்த 02.06.2023 அன்று நடந்த விசாரணையின்போது மக்களவை செயலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் 05.06.2023க்குள் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 தமிழில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை உச்ச நீதிமன்றம் தடை செய்திருந்தது.
இந்த நிலையில் 05.06.2023 அன்று வெளியான நாளிதழ்களில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 மீது கருத்து தெரிவிக்க விரும்புவோர் அடுத்த 7 நாட்களுக்குள் இணைச் செயலாளர்(ஜே.எம்), மக்களவை செயலகம், எண். 440, நாடாளுமன்ற வளாகம் (கூடுதல் கட்டிடம்) புது தில்லி என்ற முகவரிக்கு இரண்டு நகல்களுடன் கடிதமாகவும் [email protected] என்ற முகவரிக்கு கருத்துகளை அனுப்பலாம் என்கிற அறிவிப்பை தமிழில் வெளியிட்டுள்ளது மக்களவை செயலகம்.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இன்னும் மசோதா வெளியிடப்படவில்லை.
FCA BILL TAMIL
காட்டு வளங்களைச் சுரண்டும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக – கூட்டறிக்கை