காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980ன் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திருந்தங்கள் அடங்கிய கலந்தாய்வு ஆவணம் மீது 5,600 கருத்துகள்/ஆலோசனைகள் பெறப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980ல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்த கலந்தாய்வு ஆவணமொன்றை ஒன்றிய அரசின் வனத்துறை கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்பிற்காக வெளியிட்டிருந்தது.
காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக
இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சோபே ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமின்றி வட்டார மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட கலந்தாய்வு ஆவணத்தின் மீது 5,600 கருத்துகள் பெறப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையானது மிகவும் குறைவாகும். கடந்த ஆண்டு வரைவு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை வெளியானபோது 20 லட்சத்திற்கும் அதிகமான கருத்துகள் பெறப்பட்டிருந்தது. காடுகள் பாதுகாப்புச் சட்டத் திருத்த கலந்தாய்வு ஆவணத்தைப் பொருத்தமட்டில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்ட 20 நாட்கள் கழித்தே தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியானது. கருத்துகள் அதிகம் பெறப்படாததற்கு இந்த தாமதமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் செய்பவர்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை என்பதை 3 மாத சிறை தண்டனையாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இணையமைச்சர் தெரிவித்தார்.
– செய்திப் பிரிவு
FCA