சுகாதார கட்டமைப்புகளை சீர்குலைக்கும் காலநிலை மாற்றம்
தீவிர பேரிடர்களில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வெப்ப அலைகள்
பாதிப்புகளை மட்டுப்படுத்த உதவும் காலநிலை தகவல்கள் மற்றும் சேவைகள்
உலக வானிலை அமைப்பு (WMO) தனது வருடாந்திர காலநிலை சேவைகளின் நிலை அறிக்கையை (State of Climate Services) வெளியிட்டுள்ளது, இந்த அறிக்கை மனித ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, வானிலை முன்னறிவிப்புகளுக்கான ஐரோப்பிய வானிலை சேவை மையம் (European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF) மற்றும் கோபர்னிகஸ் காலநிலை மாற்றம் சேவை (சி 3 எஸ் *)( Copernicus Climate Change Service (C3S*)), ஆகியவற்றின் பங்களிப்புகளை உள்ளடக்கியது.
மிகத் தீவிரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் மோசமான காற்றின் தரம், மாறிவரும் தொற்று நோய் முறைகள் மற்றும் உணவு மற்றும் நீர் பாதுகாப்பின்மை ஆகியவற்றை எதிர்கொள்ள காலநிலை தகவல் மற்றும் சேவைகளின் உதவி எந்தளவிற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
”நம் மொத்த புவிக்கோளமும் நடப்பாண்டு முழுவதும் வெப்ப அலைகளை சந்தித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் எல் நினோவின் தொடக்கம், முந்தைய வெப்பநிலை உச்சங்களை மேலும் முறியடிப்பதற்கான வாய்ப்பை பெரிதும் அதிகரிக்கும், இது உலகின் பல பகுதிகளிலும் கடலிலும் அதிக தீவிர வெப்பத்தைத் தூண்டி நாம் எதிர்கொண்டு வரும் சவாலை மேலும் இன்னும் அதிகமாக்குகிறது” என்று உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டேரி டாலஸ் கூறுகிறார்.
காலநிலை பேரிடர்களின் தாக்கம்
இவ்வறிக்கை தீவிர வெப்ப அலைகளின் தாக்கம் குறித்து தனியாக விவாதித்துள்ளது. ஒட்டுமொத்த தீவிர வானிலை பேரிடர்களிலும் அதிக மரணத்தை ஏற்படுத்துவது வெப்ப அலைகளின் தாக்கம்தான் என அறிக்கை குறிப்பிடுகிறது. வெப்பம் தொடர்பான இறப்பு விகிதம் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளதை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் பாதிப்புகள் குறைவாக மதிப்பிடப்படுகின்றன என்கிற அதிர்ச்சியான தகவலையும் அறிக்கை கூறுகிறது.
பாதிக்கப்பட்ட நாடுகளில் பாதியில் மட்டுமே சுகாதார முடிவு அமைப்புகளுக்கு வெப்ப எச்சரிக்கை சேவைகள் வழங்கப்படுகின்றன எனத் தெரியவந்துள்ளது. இதனால் அந்த நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் போகிறது. ஆனால் ’அனைவருக்கும் சர்வதேச ஆரம்ப எச்சரிக்கைகள்’ என்கிற முன்முயற்சியின் கீழ் 2027 க்குள் விரைவாக இந்த சேவைகள் வழங்கப்படுவது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாறிவரும் தட்பவெப்ப நிலைகள் பல தட்பவெப்பநிலை உணர்திறன் கொண்ட தொற்று நோய்க்கிருமி-, உணவு-மற்றும் நீரினால் பரவும் நோய்களின் பரவலை அதிகரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, டெங்கு உலகின் மிக வேகமாக கொசுக்களால் பரவும் நோயாகும், அதே நேரத்தில் மலேரியா பரவும் பருவத்தின் நீளம் உலகின் சில பகுதிகளில் அதிகரித்துள்ளது. நீர், உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து, தொற்று நோய்களின் (உணவு, நீர்-, காற்று மற்றும் கொசுக்களால் பரவும் நோய்கள்) இணைப்பு மற்றும் தீவிர வானிலை மற்றும் காற்றின் தரத்தின் இணைப்பு, குறிப்பாக நகர்ப்புறங்களில் சுகாதாரத்திற்கு மிக முக்கியமான சவால்கள் என்று அறிக்கை கூறுகிறது.
அறிக்கையின் வலியுறுத்தும் அம்சங்கள்
காலநிலை மாற்றம், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பல தசாப்த கால முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
காலநிலை தீவிரங்கள் மற்றும் மாறிவரும் காலநிலையால் சுகாதார அமைப்புகள் மற்றும் மக்கள்தொகை ஆரோக்கியம் எவ்வாறு, எப்போது பாதிக்கப்படலாம் என்பதை நன்கு புரிந்துகொள்வதற்கும், காலநிலை தொடர்பான அபாயங்களை நிர்வகிப்பதற்கும் காலநிலை தகவல் மற்றும் சேவைகள் அடிப்படையானவை.
சுகாதாரத் துறைக்கு காலநிலை அறிவியல் மற்றும் காலநிலை சேவைகளின் நன்மைகளை மேம்படுத்துவதற்கும் அதிகரிப்பதற்கும் மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன. 31% தேசிய வானிலை மையங்கள் மட்டுமே ‘முழு’ அல்லது ‘மேம்பட்ட’ திறனில் காலநிலை சேவைகளை வழங்குகின்றன. இந்த இடைவெளியை நிரப்ப ஏராளமான கல்வி, தனியார் துறை மற்றும் அரசாங்க பங்களிப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது, மொத்த உலக நாடுகள் பெறும் தகவமைப்புப் பணிகளுக்கான நிதியில் வெறும் 0.2% மட்டுமே சுகாதாரத்தை முதன்மை கவனமாக அடையாளம் காணும் திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது, மேலும் பல்துறை மற்றும் பயனுள்ள காலநிலை அறிவியல் மற்றும் சேவைகளுக்கான திறனில் முதலீடு மிகக் குறைவு. பெரும்பாலான ஹைட்ரோமெட்டாலஜிக்கல் முதலீடுகள் சுகாதார விளைவுகளை ஆதரிக்க தெளிவாக வடிவமைக்கப்படவில்லை. இது மாற வேண்டும் என அறிக்கை வலியுறுத்துகிறது.
காலநிலை மாற்றம் மற்றும் அதன் தீவிர தாக்கங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வரும் இந்திய மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. தற்போது டெங்கு பாதிப்பு தமிழ் நாட்டில் தீவிரமாக உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு இப்பாதிப்பு தொடரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. டெங்கு பரவலுக்கும் புவி வெப்பமயதால் டெங்கு பரப்பும் கொசுக்களின் வாழ்நாளில் ஏற்படுத்தும் மாற்றத்துக்கும் தொடர்பு இருப்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. பொது சுகாதாரத்துறையில் இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் வலிமையான கட்டமைப்பைக் கொண்டது தமிழ் நாடு. காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து தமிழ் நாட்டைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ் நாடு அரசு காலநிலை சேவைகள், தரவுகளைத் திறம்பட கையாண்டு சுகாதார பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்.
– சதீஷ் லெட்சுமணன்