இந்தியா முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 82,893.61 ஹெக்டேர் பரப்பளவு காட்டுப் பகுதியானது காடு சாராத திட்டங்களுக்காக நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
காடு சாராத பல்வேறு திட்டங்களுக்காக காடுகளும், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் நிலப் பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு வனத்துறையின் இணை அமைச்சர் அஸ்வினி குமார் சோபே கடந்த 13ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார்.
forest diversionஅதில், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 82,893.61 ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதிகள் காடு சாராத திட்டங்களுக்காக நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மேலும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் மட்டும் காடு சாராத 206 திட்டங்களுக்காக 4,118 ஹெக்டேர் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், காப்புக் காடுகள் ஆகியவற்றின் நிலப்பகுதிகளை நிலப்பயன்பாடு மாற்றம் செய்து கொள்வதற்காக தேசிய காட்டுயிர் வாரியத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
மாநில அளவில் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 19,638 ஹெக்டேர், ஒரிசாவில் 11,862 ஹெக்டேர், தெலங்கானாவில் 8,209 ஹெக்டேர், குஜராத்தில் 5,340 ஹெக்டேர் பரப்பளவு காட்டு நிலப்பரப்பானது காடு சாராத திட்டங்களுக்காக நிலப் பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்
தமிழ் நாட்டில் 81.91 ஹெக்டேர் பரப்பளவு மட்டுமே நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் வேளாண்மைக்கான நீர்ப்பாசனத் திட்டங்கள், நீர்மின் நிலையங்கள், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள், தொழிற்சாலை, சுரங்கம், ரயில்வே, நெடுஞ்சாலைகள், மின்சாரம் கடத்தும் கோபுரங்கள், காற்றாலைகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக காட்டுப் பகுதிகள் நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்படுகின்றன. காடுகள் பாதுகாப்புச் சட்டன் 1970ன் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இத்திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்படுகிறது.
திட்டங்கள் அடிப்படையில் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக 16,518 ஹெக்டேர் மற்றும் சுரங்கத் திட்டங்களுக்காக 16,312 ஹெக்டேர், பாதுகாப்புக் கட்டமைப்பு வசதிகளுக்காக 10,509 ஹெக்டேர், சாலைகளுக்கு 6,839 ஹெக்டேர், நீர்மின் நிலையங்களுக்காக 5,256 ஹெக்டேர், ரயில்வே பாதைகளுக்காக 3,280 ஹெக்டேர் பரப்பளவில் காட்டுப்பகுதிகள் நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அப்பதிலில் கூறப்பட்டிருந்தது.
2016 – 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் 7,835 ஹெக்டேர் காடுகள் மட்டுமே நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நான்கு ஆண்டுகளிலும் 17 ஆயிரம் ஹெக்டேருக்கு குறையாமல் காட்டுப்பகுதிகள் நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டில் மட்டும் 19,627 ஹெக்டேர் காடுகள் நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திட்டங்களுக்கான அனுமதி பெறுவதை எளிதாக்கவும் சில திட்டங்களுக்கு இச்சட்டத்தில் இருந்து விலக்களிக்கவும் காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1970ல் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இத்திருத்தங்கள் அமலாகினால் காடுகள் நிலப்பயன்பாடு மாற்றம் வேகமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
-சதீஷ் லெட்சுமணன்
காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக