மின்னலை இயற்கைப் பேரிடராக அறிவிக்க மறுக்கும் ஒன்றிய அரசு

இந்தியாவில், மழை வெள்ளம், புயல் போன்றவற்றைவிட மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆண்டிற்கு சுமார் 2,500 பேர் மின்னல் தாக்கி மரணிக்கிறார்கள் என தேசிய பேரிடர் மீட்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு உயிரிழப்புகள் இருந்தாலும் ஒன்றிய அரசு மின்னல் தாக்குதலை இயற்கைப் பேரிடராக அறிவிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

தற்போது புயல், வறட்சி, நிலநடுக்கம், தீ, வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு, பனிச்சரிவு, மேகவெடிப்பு, பூச்சி தாக்குதல், தீவிர பனிப்பொழிவு, அதிதீவிர ஆலங்கட்டி மழை போன்றவைதான் பேரிடர்களாக கருதப்படுகின்றன. இவை மாநில பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் பேரிடர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இதைப்போன்ற பேரிடர்களுக்கான நிதியில் 75% ஒன்றிய அரசு வழங்கவேண்டும்.

பீகார் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஷாநவாஸ் ஆலம், “மின்னல் இறப்புகள் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றமே காரணம் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், ஒவ்வொரு ஆண்டும் 300 இறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் கூறினார். இவையெல்லாம், அண்மையில் நிறைவுபெற்ற “பேரிடர்களின் தாக்க மீள்திறனிற்கான தேசிய அமர்வில்” விவாதிக்கப்பட்டது.

3 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளனர்

இந்திய வானிலை நிறுவனத்தின் இயக்குனர் திரு.மொகபத்ரா தெரிவிக்கையில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம், சிக்கிம், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மின்னல் தாக்குதல் அதிகமாக இருந்தது, ஆனால், இறப்பு எண்ணிக்கை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் அதிகமாக இருந்தது என்றார்.

மின்னலின் பண்புகள் வெவ்வேறு பகுதிகளுக்கு வேறுபட்டவை, மலைப்பாங்கான பகுதிகளில் இரவிலும் அதிகாலையிலும் மற்றும் சமவெளிகளில் பகலில் அதிகமாகவும் மின்னல் தாக்குதல் இருக்கும். அதனால்தான் சமவெளிப் பகுதிகளில் மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன” என்கிறார்  மொகபத்ரா. மின்னல் தாக்குதலில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவதுடன், மழைக்காலங்களில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெறும் மின்னல் தாக்குதல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள தேவைப்படும் கட்டமைப்புகள் உள்ளன. இருந்தாலும் 2,500 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வளவு தீவிரமான ஒரு வானிலை நிகழ்வைப் பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு தயங்குவது ஏன் என்பதுதான் கவலையளிக்கும் அம்சமாகும்.

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments