எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பிற்கிடையே கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.
இந்தியாவின் காட்டு விலங்குகள், பறவைகள் தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும், அவற்றின் வாழிட மேலாண்மைக்கும், அவை வேட்டையாடப்படுவதையும், கடத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம். 1972ஆம் ஆண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டது. பின்னாட்களில் சிலமுறை இச்சட்டம் திருத்தப்பட்டது. கடைசியாக இச்சட்டம் 2006ம் ஆண்டில் திருத்தப்பட்டது.
இச்சட்டத்தில் புதிதாக பல்வேறு திருத்தங்களை கொண்டு வர நினைத்த ஒன்றிய அரசு காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா 2021ஐ கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்தது. பொதுமக்களிடையே உரிய கலந்துரையாடல் மேற்கொள்ளாமல் திடீரென அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 25ஆம் தேதி இம்மசோதாவானது அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு இந்தச் சட்டத் திருத்த மசோதா மீது பொதுமக்கள் தஙகள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு காட்டுயிர் பாதுகாப்பு அமைப்புகளும், காட்டுயிர் ஆர்வலர்களும், இந்திய வனப்பணி அதிகாரிகளும் தங்களது கருத்துகளை வழங்கியிருந்தனர். இக்கருத்துகள் அனைத்தையும் தொகுத்த நாடாளுமன்ற நிலைக்குழு தனது இறுதி அறிக்கையை 21.04.2022 அன்று மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்திருந்தது.
இந்த நிலையில் 02.08.2022 அன்று மக்களைவையில் இச்சட்டத் திருத்த மசோதாவை விவாதிக்கவும் நிறைவேற்றவும் அமைச்சர் பூபேந்தர் யாதவ் முன் வைத்தார். திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொல்,திருமாவளவன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் இச்சட்டத் திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பீ.ரவீந்தரநாத் இம்மசோதாவை வரவேற்றுப் பேசினார். மொத்தமாக 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மசோதா மீது தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியில் இச்சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இச்சட்டத்திருத்தம் குறித்து மக்களவை உறுப்பினர்கள் ஆற்றிய உரை:
WILDLIFE PROTECTION AMENDMENT BILL 2021 PASSED– செய்திப் பிரிவு