கழுவெளி பறவைகள் சரணாலயம் அருகே தமிழ் நாடு மீன்வளத்துறையால் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி துறைமுகங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிறுத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணத்தில் கழுவெளி எனும் ஏரி அமைந்துள்ளது. திண்டிவனம், மரக்காணம், மற்றும் ஆரோவிலுக்கு இடைப்பட்ட 72,329 ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து வடியும் நீர் இந்தக் கழுவெளி வழியாக மரக்காணத்தில் உள்ள எடையன்திட்டு உப்பங்கழி சென்று, கடப்பாக்கம் அருகில் கடலை அடைகின்றது.
எடையன் திட்டு உப்பங்கழியின் முகத்துவாரப்பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவில் வரும் ஆலம்பரைக்குப்பத்திலும், விழுப்புரம் மாவட்டம் மரக்கணம் தாலுகாவில் வரும் அழகங்குப்பத்திலும் ஆண்டுக்கு தலா 12 ஆயிரம் டன் கையாளும் வகையில் இரண்டு மீன்பிடி துறைமுகங்களை அமைக்க தமிழ் நாடு மீன்வளத்துறை திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக 12/11/2021 அன்று தமிழ் நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதியினையும் மீன்வளத்துறை பெற்றது. இதற்கிடையில் 6.12.2021 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் மற்றும் மரக்காணம் தாலுகாக்களில் உள்ள கழுவெளி சதுப்பு நிலத்தை தமிழ்நாட்டின் 16வது பறவைகள் சரணாலயமாக அறிவித்தது தமிழ் நாடு வனத்துறை.
இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சுழல் ஆர்வலர் யுவதீபன் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதி அதிகம் கடலரிப்பு ஏற்படும் பகுதி என்பதால் துறைமுகங்கள் அமைக்கக் கூடாது, திட்டத்தால் கழுவெளியின் உயிர்ப்பன்மையத்துக்கும், ஆமைகள் முட்டையிடும் கடற்கரைப் பகுதிக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களை மீன்வளத்துறை மறைத்துள்ளது, திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தவறான மற்றும் பழைய தகவல்களையும் கொண்டுள்ளது ஆகிய காரணங்களுக்காக சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.
அலையாத்திகளையும், ஆமை முட்டையிடும் பகுதிகளையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ள இடம் CRZ IA ஆக வரையறுக்கப்பட வேண்டும் என்பதும் திட்டத்திற்கான இசைவாணை பெறுவதற்கு முன்னரே மீன்வளத்துறை கடற்கரையில் இருந்த மணல் மேடுகளை அழித்து சாலை அமைக்கத் தொடங்கியிருந்ததையும் மனுதாரர் தீர்ப்பாயத்தில் முறையிட்டிருந்தார்.
இம்மனு மீது பதிலளித்த தமிழ் நாடு மீன்வளத்துறை செங்கல்பட்டு மாவட்டத்தின் 87.2 கி.மீ. நீளமுள்ள கடற்கரையோரம் 44 மீனவ கிராமங்களும், 40.70 கி.மீ. நீளமுள்ள விழுப்புரம் மாவட்ட கடற்கரையில் 90 மீனவ கிராமங்களும் இருப்பதாகத் தெரிவித்தது. இக்கிராம மீனவ மக்களுக்கு மீன்பிடி துறைமுகம் இல்லாததால் வளர்ச்சியின்றி வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாகக் கூறியிருந்தது. அப்பகுதி மீனவ மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையைப் பரிசீலித்தே மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுத்ததாகக் கூறியது.
மேலும், வளங்குன்றா கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) துறைமுகம் அமையவுள்ள இடம் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இடமில்லை என்றும் அப்பகுதியில் கடலடித் தாவரங்கள், மணல் மேடுகள், சேற்றுப் பகுதிகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாக மீன்வளத்துறை குறிப்பிட்டது.
இவ்வழக்கில், திட்டத்தின் அமைவிடம் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ளதா என்பதை ஆராய்ந்து, ஒரு அறிக்கையை சமர்பிக்குமாறு, தீர்ப்பாயம் ஒரு விசாரணை குழுவை அமைத்தது. அக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், திட்ட அமைவிடம் CRZ 1A (கடல்சார் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த) பகுதிக்குள் இல்லை என்றும், அங்கு பங்குனி ஆமைகள் முட்டையிட்ட இடங்கள் ஏதும் தென்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. அலையாத்திக் காடுகள் திட்ட அமைவிடத்தின் எதிரே தான் உள்ளது, மணல்மேடு அருகில்தான் உள்ளது ஆனால் திட்டம் முன்மொழியப்பட்டுள்ள இடத்தில் இல்லை என்றும், சேற்றுப் பகுதிகள், கடற்புற்கள் ஏதும் அங்கு தென்படவில்லை என்றும் திட்ட அமைவிடம் கழுவெளி பறவைகள் சராணாலயத்தின் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு (Eco sensitive zone) வெளியில் அமைந்திருப்பதால், இத்திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் எந்த ஒரு சூழல் முக்கியத்துவமும் அந்த இடங்களுக்கு இல்லை என்பதால், மீன்பிடி துறைமுகங்களை தாராளமாக அங்கு அமைக்கலாம் என ஆய்வுக்குழு தெரிவித்தது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டதற்குப் பின்னர் இம்மனு மீது 24.08.2023 அன்று நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அம்ர்வு தீர்ப்பளித்தது. அதில், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி வழங்கும்போது இத்திட்டத்தால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளை முழுமையாகப் பரிசீலிக்கவில்லை என்பதாலும், ஏற்கெனவே தமிழ் நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தை (Coastal Zone Management Plan) மறுபரிசீலனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும், கடற்கரை மேலாண்மைத் திட்டத்தை (Shoreline Management Plan) உருவாக்கும் வரை அலைத் தடுப்புச் சுவர், தூண்டில் வளைவுகளை அமைக்கக் கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதையும் பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது என்பதால் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைப்பதாகக் கூறியது.
மேலும், தமிழ் நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் 2019 இறுதி செய்யப்பட்ட பின்னரே இத்திட்டத்திற்கான புதிய விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் துறை பரிசீலிக்க வேண்டும் என்றும், திட்டத்தால் கடலரிப்பு ஏற்படும் அபாயம் இருந்தால் கடற்கரை ஆய்வுக்கான தேசிய மையம்(National Centre for Coastal Research) தமிழ் நாட்டின் கடற்கரை மேலாண்மைத் திட்டத்தை இறுதி செய்த பிறகே இத்திட்டத்திற்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பின் முக்கியமான அம்சம் என்னவென்றால் தமிழ் நாட்டின் சுற்றுச்சூழல் அமைவுகளைப் பாதுகாக்க வேண்டிய சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஆகியவற்றின் அலட்சியமான நடவடிக்கைகளை சுட்டிக் காட்டியதுதான்.
திட்டத்தின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, திட்டத்தை சுற்றுச்சுழல் அனுமதிக்காக பரிந்துரைக்கும் முன்னர், திட்ட அமைவிடத்தின் உயிர்பன்மையம், வலசைப் பறவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விரிவான மதிப்பீட்டு அறிக்கையை கோரியிருக்க வேண்டும் என்று கூறிய தீர்ப்பாயம் விதிகளின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை இல்லாத நிலையில் தமிழ் நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருக்கக் கூடாதென தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தால் கடற்கரை, சேற்றுப் பகுதிகள், அலையாத்திகள், ஆமைகள் முட்டையிடும் இடம் உள்ளிட்ட சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து கவனம் கொள்ளாமல் 06.20.2022 அன்று நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு 13.02.2023 மற்றும் 24.02.2023 ஆகிய நாட்களில் மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையமும், 15.06.2020 அன்று மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆனையமும் ஒப்புதல் வழங்கிய வேகத்தைத் தீர்ப்பாயம் விமர்சித்துள்ளது.
– சதீஷ் லெட்சுமணன்
தீர்ப்பு
Judgment